Published:Updated:

ஷேர்லக்: சந்தையில் களமிறங்கிய இளைஞர்கள்!

ஷேர்லக்: சந்தையில் களமிறங்கிய இளைஞர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: சந்தையில் களமிறங்கிய இளைஞர்கள்!

ஓவியம்: அரஸ்

ஷேர்லக்: சந்தையில் களமிறங்கிய இளைஞர்கள்!

ஓவியம்: அரஸ்

Published:Updated:
ஷேர்லக்: சந்தையில் களமிறங்கிய இளைஞர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: சந்தையில் களமிறங்கிய இளைஞர்கள்!

வெள்ளிக்கிழமையன்று சென்செக்ஸ் 400 புள்ளிகள் இறக்கம் கண்டிருந்தது. அடுத்த வாரம் சந்தை மேலேயா அல்லது கீழேயா என நாம் யோசித்துக் கொண்டிருக்க, நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். வழக்கம்போல கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லையே?

‘‘இது எதிர்பார்த்ததுதான். கடந்த சில வருடங் களாகக் குறைந்துகொண்டிருந்த பணவீக்கம் தற்போது மீண்டும் உயரத்தொடங்கியிருக்கிறது. பணவீக்கம் குறைந்துகொண்டிருந்தபோது ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தைக் குறைத்து வந்தது. நடப்பு நான்காம் காலாண்டில், பணவீக்கம் 5.1 சதவிகிதமாக உயரலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணவீக்கம் உயர்வதால் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை.

ஆனால், வட்டி விகிதத்தையும் உயர்த்தவில்லை என்பது ஆறுதலான விஷயம். கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் பணவீக்கம் உயர வாய்ப்பிருப்ப தால், பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைவாசி உயரும் வாய்ப்புள்ளது. அது, நிறுவனங்களின் நிதிநிலைக்குச் சாதகமாக மாறினால், அந்த நிறுவனப் பங்குகள் ஏற்றமடைய வாய்ப்புள்ளது.’’

ஜி.எஸ்.டி-யால் பாதிக்கப்பட்ட எம்.எஸ்.எம்.இ. களுக்கு நல்ல செய்தி வந்திருக்கிறதே?

‘‘ஜி.எஸ்.டி  நடைமுறைக்கு வந்தபின் சிறு, குறு  மற்றும் நடுத்தரத் தொழில்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. இந்தப் பாதிப்பைச் சரிசெய்யும் வகையில், எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில், வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் வாங்கிய ரூ.25 கோடி வரையிலான கடன்களுக்கான நிலுவைத் தொகையைச் செலுத்தும் கால அவகாசத்தை ரிசர்வ் வங்கி, 90 நாள்களிலிருந்து 180 நாள்களாக உயர்த்தியிருக்கிறது.’’

ஷேர்லக்: சந்தையில் களமிறங்கிய இளைஞர்கள்!

ரிசர்வ் வங்கியின் இன்னொரு முடிவு எதிர்மறையாக மாறிவிடும் போலிருக்கிறதே?

‘‘வங்கிகள் அனைத்தும் தங்களின்  அடிப்படை வட்டி விகிதத்தை (பேஸ் ரேட்) மார்ஜினல் காஸ்ட் அடிப்படையிலான வட்டி விகிதத்துடன் இணைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தர விட்டிருக்கிறது. 2018 ஏப்ரல் 1 முதல் இது அமல் படுத்தப்பட இருக்கிறது. இது எதற்காக என்றால், வட்டி விகிதம் குறையும்போது ஏற்கெனவே கடன் வாங்கியவர்களும் பயனடைய வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், ரிசர்வ் வங்கி இந்த முடிவைத் தவறான நேரத்தில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. வட்டி விகிதம் குறைந்துகொண்டிருந்த போது இந்த முடிவை எடுக்காமல், தற்போது வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ள சமயத்தில் இந்த முடிவை எடுத்திருக்கிறது. இதனால், கடன் வாங்கியிருப்பவர்கள்  பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.’’

மியூச்சுவல் ஃபண்டில் ஜனவரியில் மட்டும் ரூ.1 லட்சம் கோடி குவிந்துள்ளதே!

‘‘ஆம்ஃபி வெளியிட்ட விவரப்படி, கடந்த ஜனவரியில் மட்டும் ரூ.1.06 லட்சம் கோடி முதலீடு மியூச்சுவல் ஃபண்டில் குவிந்திருக்கிறது. தற்போதைய இளம் தலைமுறையினர் பெரும்பாலும் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றில்   முதலீடு செய்வதைக் காட்டிலும் நிதிசார்ந்த முதலீடு களில் முதலீடு செய்வதையே விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக, பங்குச் சந்தையிலும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடுகளைக் குவித்து வருகிறார்கள். மேலும், பிற முதலீடுகள் பெரிய அளவில் லாபம் தராமல் இருப்பதும் முக்கியக் காரணம்.  முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வுக் கூட்டங்கள் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்ததும் ஒரு காரணம்.

தொடர்ந்து முதலீடுகள் குவிந்ததால், மியூச்சுவல் ஃபண்டில் தற்போது ரூ.22.41 லட்சம் கோடி நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கால இளைஞர்கள் அதிக வருமானம் சம்பாதிக்க அதிக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.  அண்மையில், இந்திய பங்குச் சந்தை விழுந்தபோது ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகள் மிகவும் விலை வீழ்ச்சியைச் சந்தித்தன. இந்த வீழ்ச்சியைப் பயன்படுத்தி ஏராளமான முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேலாக இறக்கம் கண்டிருந்த நிலையில், ஸ்மால்கேப் இண்டெக்ஸ் 50 புள்ளிகள் ஏற்றம் கண்டிருந்தது. இது, சந்தையில் இளைஞர்கள் அதிக ரிஸ்க் எடுத்து  முதலீடு செய்து வருவதைக் குறிக்கிறது என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.’’   

வங்கிப் பங்குகள் இறக்கம் கண்டிருக்கின்றனவே?

‘‘ரிசர்வ் வங்கியின் முடிவுதான் வங்கிப் பங்குகள் இறக்கமடைவதற்குக் காரணம். வட்டியில் மாற்றம் செய்யப் படாதது மட்டுமல்ல, வட்டி உயர்வதற் கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது. மேலும், வங்கிகள் தங்களுடைய  அடிப்படை வட்டி விகிதத்தை மார்ஜினல் காஸ்ட் அடிப்படையிலான வட்டி விகிதத்துடன் இணைக்க வேண்டும் என்று கூறியிருப்பதும் வங்கிப் பங்குகளின் விலை இறக்கத்துக்குக் காரணமாக இருக்கிறது. பி.என்.பி 2.18%, யெஸ் பேங்க் 1.58% இறக்கம் கண்டுள்ளன. ஆக்சிஸ் பேங்க், இண்டஸ்இண்ட் பேங்க் மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகியவை முறையே 0.96%, 0.52% மற்றும் 0.42% இறக்கம் கண்டுள்ளன.’’ 

சந்தை இறக்கத்திலும் ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல் துறைகள் ஏற்றம் கண்டிருக்கின்றனவே!

‘‘கடந்த வாரத்தில் சென்செக்ஸ்   5 சதவிகிதத்துக்கு மேல் இறக்கம் கண்டது. ஆனாலும், ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோமொபைல் துறை பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ரியாலிட்டி குறியீடு 1.54% ஏற்றம் கண்டது. ரியல் எஸ்டேட் துறையில் யுனிடெக் 4.24 சதவிகிதமும், கோத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ் 3.94 சதவிகிதமும், போனிக்ஸ், இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் மற்றும் ஒபராய் ரியல் எஸ்டேட் ஆகியவை 2 சதவிகிதத்துக்கு மேலும் ஏற்றம் கண்டன. ஆட்டோமொபைல் துறையில் அசோக் லேலாண்ட் 4.77 சதவிகிதமும், குமின்ஸ் இந்தியா, எய்ஷர் மோட்டார்ஸ் ஆகியவை 1 சதவிகிதத்துக்கு மேலாகவும் ஏற்றம் கண்டன. சந்தை இறக்கத்தில் இருந்த நிலையிலும், இவற்றின் நிதிநிலை முடிவுகள் பாசிட்டிவாக இருந்ததால் இந்த ஏற்றம் சாத்தியமாகியிருக்கிறது.’’

ஃபண்ட் நிறுவனங்களுக்கு செபி புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளதே?

‘‘ஃபண்ட் நிறுவனங்கள், எக்ஸ்பென்ஸ் ரேஷியோ விவரங்களை மெயில், எஸ்.எம்.எஸ் மூலமாக முதலீட்டாளர் களுக்குத் தினமும் தெரிவிக்க வேண்டும் என்று செபி கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இணையதளம் மூலமாகவும் அப்டேட் செய்யுமாறு கூறியுள்ளது.  ஏனெனில், அடிக்கடி ஃபண்ட் நிறுவனங்கள் கட்டணங்கள் பிடித்து வருவது தெரிய வந்துள்ளது. ஆனால், அது முதலீட்டாளர்களுக்குத் தெரியப்படுத்தப்படுவதில்லை என்பது அறிந்த பிறகே இந்த முடிவை செபி எடுத்துள்ளது.

சந்தையின் போக்கு எப்படியிருக்கிறது? 

‘‘சர்வதேச காரணங்களான அமெரிக்காவில் வட்டி விகித அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு போன்றவற்றால் சந்தையில் ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்யும். இந்த இறக்கத்திலும் பல தனிப்பட்ட பங்குகள் விலை ஏறிக்கொண்டிருக்கின்றன. நீண்ட கால முதலீட்டாளர்கள், அதிகமாக விலை இறங்கி இருக்கும் பங்குகளைத் தாராளமாக வாங்கி போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்ளலாம்” என்றபடி கிளம்பினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐ.பி.ஓ வரும் ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ்!

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் துணை நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ், புதிய பங்கு வெளியிடுவதற்கான (ஐ.பி.ஓ) அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. செபி, அதற்கான ஒப்புதலை வழங்கியிருக்கிறது. அதன் 20 சதவிகிதப் பங்குகள் அதாவது, 64,428,280 பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.  இந்த ஐபிஓ-வின் மதிப்பு ரூ.3,000 கோடி முதல் ரூ.4,000 கோடி வரையில் இருக்கலாம்.

டிரேடர்ஸ் பக்கங்கள் பகுதியைப் படிக்க: http://bit.ly/2FZcTDP

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism