Published:Updated:

ஷேர்லக்: சந்தையைச் சறுக்க வைத்த டிரேட் வார்!

ஷேர்லக்: சந்தையைச் சறுக்க வைத்த டிரேட் வார்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: சந்தையைச் சறுக்க வைத்த டிரேட் வார்!

ஓவியம்: அரஸ்

ஷேர்லக்: சந்தையைச் சறுக்க வைத்த டிரேட் வார்!

ஓவியம்: அரஸ்

Published:Updated:
ஷேர்லக்: சந்தையைச் சறுக்க வைத்த டிரேட் வார்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: சந்தையைச் சறுக்க வைத்த டிரேட் வார்!

“ஜில்லுன்னு ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் பண்ணுங்க... அரை மணி நேரத்தில் அங்கே இருப்பேன்” என வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிய ஷேர்லக், மிகச் சரியாக ஐந்து மணிக்கு  வந்துசேர்ந்தார். நாம் அக்கறையாகக் கொடுக்க, வாங்கிக் கொஞ்சம் குடித்தவர், “அடுத்த 20 நிமிடங்களுக்குள் நாம் பேசி முடித்தாக வேண்டும்’’ என்றார். நாம் சரசரவெனக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

ஷேர்லக்: சந்தையைச் சறுக்க வைத்த டிரேட் வார்!

புதுத் திருப்பமாக, பினானி சிமென்ட்டை அல்ட்ராடெக் வாங்கப் போகிறதாமே?

“மும்பையைச் சேர்ந்த பினானி சிமென்ட், திவா லானதாக அறிவிக்கப்பட்ட பின் அந்த நிறுவனத்தை ரூ.6,350 கோடி தந்து வாங்கு வதாக முன்னணி சிமென்ட் நிறுவனமான டால்மியா பாரத் சிமென்ட் ஒப்பந்தம் போட்டது. இந்த நிலையில், யாரும் எதிர்பாராதவகையில், அதனுடைய போட்டி நிறுவனமான ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த அல்ட்ரா டெக், பினானி சிமென்ட் நிறுவனத்தின் வங்கிக் கடன் களை அடைப்பதற்காக, அதன் முதன்மை நிறுவனமான பினானி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு ரூ.7,266 கோடி அளிப்பதன்மூலம், பினானி சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 98.43%  பங்குகளை வாங்க முடிவெடுத்தது. தற்போது, கொல்கத்தா பெஞ்ச் நேஷனல் கம்பெனி லா ட்ரிபியூனலில், பினானி சிமென்ட்ஸ் திவாலானதாக அறிவிக்கப்பட்டதைத் திரும்பப் பெறும்படி விண்ணப்பித்துள்ளது. இந்த நிலையில், நேஷனல் கம்பெனி லா ட்ரிபியூனலின் ரெசொலியூஷன் ப்ரபசனல்ஸ் கமிட்டியானது, பினானி சிமென்ட் நிறுவனப் பங்குகளை வாங்க டால்மியா சிமென்ட் நிறுவனத்திற்கே பச்சைக் கொடி காட்டியுள்ளது. ஒரு நிறுவனமானது, அது போட்ட ஒப்பந்தத்தை மீறி, பங்குகளை இன்னொரு நிறுவனத்திற்குக் கூடுதல் தொகைக்கு விற்பது செல்லுபடியாகுமா என்பது சிக்கலில் உள்ளது. இந்த விஷயத்தில், டால்மியா பாரத் நிறுவனம் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தாலும், அடுத்த வாரம் என்ன புதுச் சிக்கல் வருமோ  என்று தெரியவில்லை.’’

ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி பங்கின் விலை ஒரே நாளில் 17% வீழ்ச்சி கண்டுள்ளதே!


“மும்பையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி (ஹெச்.சி.சி)-யின் துணை நிறுவனமான லாவசா கார்ப். திவாலாகி உள்ளதாக தகவல் வெளியானதும், ஹெச்.சி.சி பங்குகள் வியாழக்கிழமை 17% வீழ்ச்சி கண்டது. துணை நிறுவனம் திவாலானது, ஹெச்.சி.சி-ஐப் பெரிதாகப் பாதிக்காது என அனலிஸ்ட் கள் பலரும் கருத்துத் தெரிவிக்க, இன்று  வெள்ளிக் கிழமையே பங்கின் விலை 3% ஏற்றம் கண்டது.”  

பந்தன் பேங்க் ஐ.பி.ஓ-வுக்கு ஆதரவு எப்படி?

“பந்தன் பேங்க் ஐ.பி.ஓ-வுக்கு 14.63 மடங்கு  ஆதரவு கிடைத்துள்ளது. மொத்தம் 122.15 கோடி பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்துள்ளன.  தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் 38.67 மடங்குக்கு அதிகமாகவும், நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில் 13.89 மடங்குக்கு அதிகமாகவும், சிறு முதலீட்டாளர்கள் 1.20 மடங்கும் பங்குகள் வேண்டி விண்ணப்பித்து உள்ளனர்.”

லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ் ஐ.பி.ஓ-வுக்கு செபி ஒப்புதல் கிடைத்துள்ளதே?

“லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ், நேபாளம் போன்ற வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தும் நோக்கோடு, 18.5 கோடி பங்குகளை ஆஃபர் ஃபார் சேல் (ஓ.எஃப்.எஸ்) முறையில் விற்பனை செய்ய செபி ஒப்புதல் தந்துள்ளது. ஒரு பங்கின் விலைப்பட்டை ரூ.54-56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கு விற்பனை மார்ச் 26 முதல் மார்ச் 28 வரை மூன்று நாள்கள் நடக்கவுள்ளது. இந்தப் பங்குகள் விற்பனை  மூலம் மொத்தம் ரூ.1,038 கோடி திரட்டப்படுகிறது.”

ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீடு அதிகரிக்கப்படுகிறதே?


“ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனத்தில் வெளி நாட்டு முதலீட்டு நிறுவனங்கள், 24% முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனை 49 சதவிகிதமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.’’

மாரிகோ பங்கின் விலை ஒரே நாளில் அதிகரித்துள்ளதே?

“இந்தியப் பங்குச் சந்தை மந்தமாக இருந்தபோதிலும், மாரிகோ நிறுவனப் பங்குகள் கடந்த செவ்வாயன்று ஒரே நாளில் 5% உயர்ந்தது. பிஎஸ்இ-ல் மாரிகோவின் பங்கு விலை 5.48% உயர்ந்து, ரூ.318.45-ஆக வர்த்தகமானது. மூன்றாவது காலாண்டில், இந்த நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் நன்றாக உள்ளன. மேலும், பங்கின் மதிப்பீடு கவர்ச்சிகரமாக இருப்பதால், முதலீடு செய்பவர்கள் அதிகரித்து, பங்கின் விலை உயர்ந்துள்ளது.”

அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகப் போர் ஆரம்பித்திருக்கிறதே?

“சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள்மீது குறைந்தபட்சம் 50 பில்லியன் டாலர் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க வர்த்தக அமைப்பைக் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை அதிகரிக்கும்.இதனையடுத்து வியாழக்கிழமை, அமெரிக்க பங்குச் சந்தை அதிக இறக்கத்தைச் சந்தித்தது. இதன் எதிரொலியாக இன்று சென்செக்ஸ் 500 புள்ளிகள் இழந்தது. நிஃப்டி 116 புள்ளிகள் இறங்கி 9998 புள்ளிகளில் முடிந்தது. 

நிஃப்டியானது 10020 புள்ளிகளுக்குக் கீழே இறங்கினால், 2008-ம் ஆண்டில் ஏற்பட்ட நிலை மீண்டும்  ஏற்படலாம் என்கிறார்கள்.

இன்று சந்தையில் ஏற்பட்ட இறக்கத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. நீண்ட கால மூலதன ஆதாய வரியைக் கணக்கிடும் முதலீட்டுக் காலம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆரம்பிக்கிறது என்பதால், லாபத்தில் இருக்கும் பல பங்குகளைப் பெரும் பணக்கார முதலீட்டாளர்கள் விற்று வருகிறார்கள். இந்த நிலை மார்ச் 30 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு சந்தை ஏற்றம் காணத் தொடங்கும் என்கிறார்கள் சில அனலிஸ்ட்கள்.’’

சந்தையின் இந்த இறக்கத்தை முதலீட்டாளர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

‘‘அண்மையில் ஏற்பட்டிருக்கும் சந்தைச் சரிவில், பல லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளின் விலை இறங்கவில்லை. அதே நேரத்தில், பல மிட் கேப் பங்குகளின் விலை இறக்கம் கண்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்தி, அடிப்படையில் வலுவாக உள்ள மிட் கேப் பங்குகளை வாங்கினால், நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் மோதிலால் ஆஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் கௌதம் சின்ஹா ராய்.

தவிர, அமெரிக்கா மற்றும் சீனாவில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளினால் நம் சந்தை சரிந்துள்ளது. இந்தப் பிரச்னையினால் நம் பொருளாதார வளர்ச்சி, கொஞ்சம் பாதிப்படையும் என்றாலும், இந்தப் பிரச்னை சரியானபின் நம் சந்தை வேகமாக உயரத் தொடங்கும். எனவே, நல்ல பங்குகளை நீண்ட கால நோக்கில் கொஞ்சம் கொஞ்சம் தொடர்ந்து வாங்கிப்போடுவது நல்லது.’’

சட்ட விரோதமாக நிதி திரட்டிய நிறுவனங்கள்மீது செபி நடவடிக்கை எடுத்துள்ளதே?

“ரெமாக் ரியால்டி (Remac Realty) நிறுவனம், சட்ட விரோதமாக நிதி திரட்டியது செபி  விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அந்த நிறுவனத்தையும்  அதன் ஐந்து இயக்குநர்களையும் நான்கு ஆண்டுகளுக்கு செபி தடை செய்துள்ளது. செபியின் இந்த அறிவிப்பின்படி,  ரெமாக் ரியல்டி நிறுவனமானது, தனது சொத்துகளை விற்கவோ அல்லது புதிதாக வாங்கவோ தடை செய்திருப் பதுடன், முதலீட்டாளர்களுக்கு அவர்களது முதலீட்டுத் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கு மட்டும் அனுமதிக்கிறது” என்றவர், வலது கையில் கட்டியிருந்த வாட்சைப் பார்த்தார்.

‘‘அடுத்த வாரம் சந்தை, முதல் மூன்று நாள்கள் மட்டுமே. வியாழன்று மஹாவீர் ஜயந்தி, வெள்ளியன்று புனித வெள்ளி வருவதால், சந்தை விடுமுறை. என்ஜாய் லாங்க் ஹாலிடே’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் ஐ.பி.ஓ-வைக் காப்பாற்றிய எல்.ஐ.சி!

மத்திய அரசைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ்,  புதிய பங்கு வெளியீடு மூலம் மொத்தம் ரூ.4,200 கோடியைத் திரட்டத் திட்டமிட்டது. சந்தை இறங்கும் இந்தச் சமயத்தில், இந்த ஐ.பி.ஓ-வுக்குப் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. கடைசி நேரத்தில் பொதுத் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி, ரூ.3,000 கோடி அளவுக்கு முதலீடு செய்து, இந்த ஐ.பி.ஓ.வுக்கு உயிர் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 3.41 கோடி பங்குகள் விற்பனைக்கு இருந்த நிலையில்,  3.36 கோடி  பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்துள்ளன.  தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து 1.73 மடங்கு, அதிக சொத்து மதிப்புள்ள தனிநபர்களிடமிருந்து 0.03 மடங்கு, சிறு முதலீட்டாளர்களிடமிருந்து 0.38 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.