Published:Updated:

வாட்ஸ்அப் வதந்தியால் வீழ்ந்த இன்ஃபிபீம்! - கற்கவேண்டிய பாடங்கள் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வாட்ஸ்அப் வதந்தியால் வீழ்ந்த இன்ஃபிபீம்! - கற்கவேண்டிய பாடங்கள் என்ன?
வாட்ஸ்அப் வதந்தியால் வீழ்ந்த இன்ஃபிபீம்! - கற்கவேண்டிய பாடங்கள் என்ன?

பிரச்னை

பிரீமியம் ஸ்டோரி

ந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இ-காமர்ஸ் நிறுவனம் என்ற பெருமையை இன்ஃபிபீம் நிறுவனம் பெற்றது. இந்த நிறுவனப்  பங்கு விலை கடந்த 28.9.2018 அன்று வர்த்தகத்தின் இடையே 71% வரை வீழ்ச்சியைச் சந்தித்தது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனப் பங்கு வீழ்ச்சிக்குப்பிறகு நேரிட்ட இரண்டாவது மிகப்பெரிய சரிவு கண்ட நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிதி நிர்வாகம் குறித்த ஒரு வாட்ஸ்அப் வதந்திதான் இதற்குக் காரணம் என்று முதலில் சொல்லப்பட்டது.

இந்த வாட்ஸ்அப் வதந்தியை முற்றிலுமாக மறுத்துள்ள நிறுவனம், நடப்பு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நிறுவனம் நிர்வகிக்கப்படுவதாகவும், உரிய தகவல்கள் அனைத்தும் பங்குச் சந்தைகளுக்கு முன்பே வழங்கப்பட்டுவிட்டன என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பங்கு விலை வீழ்ச்சி காணும் எல்லா நிறுவனங்களும் முதலில் தங்களிடம் எந்தப் பிரச்னையும் இல்லை என்றுதான் சொல்கின்றன.
ஆனால், நாள்கள் செல்லச் செல்ல, சந்தேகப் புகை நெருப்பாகத் தீப்பற்றத் தொடங்குகிறது. தற்போது சந்தேக வளையத்துக்குள் வந்திருக்கும் இன்ஃபிபீம் நிறுவனம்,  இன்னொரு வக்ராங்கி ஆகுமா அல்லது மீண்டெழ வாய்ப்புக்கள் உள்ளனவா என்பதுதான் அதில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் எழுப்பும் முக்கிய கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம். 

வாட்ஸ்அப் வதந்தியால் வீழ்ந்த இன்ஃபிபீம்! - கற்கவேண்டிய பாடங்கள் என்ன?

வருடாந்திர பங்குதாரர்கள் கூட்டமும், வாட்ஸ்அப் வதந்தியும் 

இன்ஃபிபீம் நிறுவனத்தின் பங்குதாரர்களின் வருடாந்திரக் கூட்டம் (29.9.2018) ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததற்கு முந்தைய வர்த்தக தினமான 28.9.2018-ல் பங்குச் சந்தை வட்டாரத்தில் ஒரு வாட்ஸ்அப் வதந்தி வேகமாக வலம் வந்தது.

சில மாதங்களுக்குமுன், ஒரு பங்குத் தரகு நிறுவனம் தனது வாடிக்கை யாளர்களை எச்சரிக்கை செய்வதற்காக உள்ளீடாக வெளி யிட்ட அந்த வாட்ஸ் அப் வதந்தியில், இன்ஃபிபீம் நிறுவனம் தனது நிகர சொத்து நெகட்டிவ்வாக உள்ளதொரு உப நிறுவனத் திற்கு ஏராளமான வட்டியில் லாக் கடனை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த நிறுவனத்தின் நிறுவனத் தலைவரான விஷால் மேத்தாவின் அந்தஸ்து புர மோட்டர் என்ற நிலையி லிருந்து சாதா ரண முதலீட் டாளர் என்ற ஸ்தானத்திற்கு மாற்றப்பட்டதாகவும் குறிப் பிடப்பட்டிருந்தது.

இந்தத் தகவலை வெளி யிட்டதாகக் கூறப்படும் ஈக்வரஸ் கேப்பிட்டல் என்ற பங்குத் தரகு நிறுவனம், இத்தகைய வாட்ஸ்அப் செய்தி எதையும் தாங்கள் வெளியிடவில்லை என்று மறுத்ததாகச் சொல்லப் பட்டாலும், இந்த வாட்ஸ்அப் வதந்தி பங்குச் சந்தையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், இன்ஃபிபீம் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.9,200 கோடி சரியும்படி செய்துவிட்டது.

சில நிறுவனங்களின் காலாண்டு நிதியறிக்கை குறித்த தகவல்கள் முறையாக வெளியாவதற்கு முன்னரே, வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங் களில் சுற்றுக்கு விடப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களைப் பயன்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை செபி கடந்த ஆண்டு செப்டம் பரில் விதித்தது. ஆனால், மேற்சொன்ன வாட்ஸ் அப் வதந்தி, செபியின் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதை புடம்போட்டுக் காட்டுகிறது.

வாட்ஸ்அப் வதந்தியால் வீழ்ந்த இன்ஃபிபீம்! - கற்கவேண்டிய பாடங்கள் என்ன?

பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக்

மும்பை பங்குச் சந்தைக்கு (பி.எஸ்.இ்) வழங்கப் பட்டுள்ள தகவல்களின்படி இன்ஃபிபீம் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ.306 கோடி மற்றும் நிகர லாபம் ரூ.13 கோடி ஆகும்.  இதன்படி, ஒரு பங்கு வருவாய் (இ.பி.எஸ்) ரூ.0.21 மட்டுமே. ஆனால், இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்போ, இவ்வளவு பெரிய வீழ்ச்சிக்குப் பிறகும்கூட ரூ.4,454 கோடி (01.10.2018-ன்படி). சந்தை வீழ்ச்சிக்குமுன் இந்த நிறுவனத்தின் 52 வார அதிகபட்ச சந்தை மதிப்பு சுமார் ரூ.16,100 கோடி. சந்தை மதிப்பு / வருவாய் விகிதம் 50-க்கும் மேல். பங்கு விலை / பங்கு வருவாய் விகிதமோ 1,214-ஆக இருந்தது.

என்னதான் இ-காமர்ஸ் நிறுவனம் என்றாலும், இன்ஃபிபீம் நிறுவனத்திற்கு முதலீட்டாளர்கள் வழங்கிய சந்தை மதிப்பு மிக அதிகமே.

காசேதான் கடவுளடா

நவம்பர் 2016-ல் நடை முறைபடுத்தப்பட்ட பண மதிப்பிழப்பிற்குபின், இந்திய நுகர்வோர்கள் பலரும் மின்னணு முறையில் வர்த்தகப் பரிமாற்றங்களை நிகழ்த்துவார்கள் என்ற நம்பிக்கை இருந்ததால், இன்ஃபிபீம் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் பெருமளவு பயன் பெறும் என்று பல முதலீட்டாளர்கள் நம்பினர்.  ஆனால், நடந்ததோ வேறு. சமீபத்திய ரிசர்வ் வங்கி தகவல்களின்படி, இந்தியாவின்  ரொக்கப் பணப்புழக்கம், நவம்பர் 2016 பண மதிப்பிழப்பு காலத்திற்கு முந்தைய அளவைவிட தற்போது அதிகரித்துள்ளது.

வரலாறு முக்கியம் முதலீட்டாளர்களே

பொதுவாக, ஒரு பங்கின் விலையில் இயல்புக்கு மாறான ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்போது, பங்குச் சந்தைகள் ‘சர்க்யுட் ஃபில்டர்’ எனப்படும் வர்த்தகத் தடையை அமலாக்குகின்றன. வதந்திகள் காரணமாக சிறு பங்குகள் அதிகம் பாதிக்கப்படாமலிருக்கவும், முறையற்ற வர்த்தகத்தைத் தடுப்பதற்கும் இந்த ஏற்பாடு. ஆனால், இன்ஃபிபீம் போன்ற பங்குகள் மிக சென்சிட்டிவ் ஆனவை என்றாலும், அவை டெரிவேட்டிவ் வர்த்தகத்தில் இயங்கி வருவதால், இந்தக் கட்டுப்பாடு அமலில் இல்லை. இன்ஃபிபீம் அனுபவம் செபி மற்றும் பங்குச் சந்தை எக்ஸ்சேஞ்சுகளுக்குக் கண்டிப்பாகப் புதியதொரு பாடத்தைக் கற்றுத் தந்திருக்கும்.

அதாவது, இனிமேல் ஒரு பங்கை டெரிவேட்டிவ் வர்த்தகத்தில் அறிமுகப்படுத்துவதற்குமுன், அந்த நிறுவனத்தின் அடிப்படைக் காரணிகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

மேலும், டெரிவேட்டிவ் வர்த்தகத்திற்கு அனுமதிக்கப் பட்டுள்ள பங்குகளில் கூட (நிஃப்டி 50 போன்ற மிகப் பெரும் நிறுவனங்களைத் தவிர்த்து) சில கட்டுப்பாடுகளை செபி மற்றும் பங்குச் சந்தைகள் நிர்ணயிப்பது நல்லது.  மேலும், ஒரு புதிய பங்கில் முதலீடு செய்வதற்குமுன், அந்தப் பங்கு டெரிவேட்டிவ் வர்த்தகத்தில் உள்ளதா அப்படியென்றால், அந்தப் பங்கின் வர்த்தக வரலாற்றில் ஏற்றத் தாழ்வுகள் அதிகம் உள்ளதா என்பதை சிறு முதலீட்டாளர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்வது அவசியம். இன்ஃபிபீம் பங்கினைப் பொறுத்தவரை, டெரிவேட்டிவ் வர்த்தகம் மிக அதிகம் என்பதுடன் வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ப்பரேட் கவர்னென்ஸ் அவசியம்

பங்கு முதலீடு குறித்து முடிவெடுப்பதில், ஒரு நிறுவனத்தின் தலைமை மீதான நம்பகத்தன்மை முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒருபக்கம், வாட்ஸ்அப் வதந்திகள் தவறானவை என்று கூறிவரும் இன்ஃபிபீமின் நிர்வாகம், மறுபக்கம் மும்பை பங்குச் சந்தைக்கு 28.9.2018 அன்று அளித்துள்ள அறிக்கையில், இன்ஃபிபீம் நிறுவனம் அதன் துணை நிறுவனமான என்.எஸ்.ஐ  இன்ஃபினியம் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு ரூ.135 கோடி வட்டியில்லாக் கடனாக வழங்கியிருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டுள்ளது. அந்தத் துணை நிறுவனத்தின் மதிப்பு பூஜ்யத்திற்கும் கீழே என்பதையும் ஏற்றுக்கொண்ட நிர்வாகம், இன்ஃபிபீம் நிறுவனத்தில் புரமோட்டர்களின் ஒட்டுமொத்த முதலீடு குறைந்துள்ளது என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளது.

ஆக மொத்தத்தில், எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய பிசினஸ் மாடல், வெளிப்படையான நிர்வாகத் தலைமை, தொடர்ச்சியான பண வருவாய், வர்த்தகப் போக்கு போன்ற அடிப்படை காரணிகளை முறையாக ஆராய்ந்த பின்னர் முதலீடுகளை மேற்கொள்வது நல்லது.

- சுமதி மோகனப் பிரபு 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு