Published:Updated:

கம்பெனி அலசல் - கோல்கேட் பாமோலிவ்!

நிறுவனம்

கம்பெனி அலசல் - கோல்கேட் பாமோலிவ்!

காலையில் எழுந்தவுடனேயே அனைவரும் பயன்படுத்தும் புராடெக்ட்டை தயாரிக்கும் கம்பெனியான கோல்கேட் பாமோலிவ் (இந்தியா) நிறுவனத்தைதான் இந்த வாரம் அலசப் போகிறோம். இந்நிறுவனம் இதன் தொழிலில் நம்பர் ஒன். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்டது. கோல்கேட் பல் பராமரிப்பு, உடல் பராமரிப்பு, வீட்டு பராமரிப்பு போன்ற மூன்று விஷயங்களுக்கு உதவும் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ல் பராமரிப்பு தயாரிப்புகள் மட்டுமே மொத்த விற்பனையில் 90 சதவிகிதப் பங்களிப்பைத் தருகிறது. பற்பசை சந்தையில் கிட்டத்தட்ட 53.1 சதவிகித மார்க்கெட் ஷேரையும், பல்பொடி சந்தையில் கிட்டத்தட்ட 46.4 சதவிகித மார்க்கெட் ஷேரையும் கொண்டு ஒரு வெற்றிகரமான கம்பெனியாகச் செயல்பட்டு வருகிறது கோல்கேட். டூத் பிரஷ் செக்மென்டிலும் 40.3 சதவிகித மார்க்கெட் ஷேரை தன்னிடத்தே கொண்டுள்ளது கோல்கேட். இதையெல்லாம் வைத்துப் பார்த்தாலே கோல்கேட்டின் சிறப்பு உங்களுக்கு நன்றாகப் புரியும்.

தொழில் எப்படி?

கோல்கேட் இருக்கும் தொழில் மக்கள் தொகையுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட விஷயம். இந்தியா போன்ற மக்கள் தொகை நிறைந்த நாட்டில் வியாபாரத்திற்குப் பஞ்சமில்லை. வசதிவாய்ப்புகள் பெருகப் பெருக உடற்பராமரிப்பு என்பதற்கு அதிக கவனம் எப்போதுமே செலுத்தப்படும் என்பது தான் நிஜம். இதுபோன்ற பராமரிப்பு கவனத்தின் அளவை எப்படி கணக்கிடுவது என்று கேட்பீர்கள். உதாரணத்திற்கு, பற்பசை விற்பனை இந்தியாவில் எவ்வளவு தூரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது? ஏற்கெனவே, அனைவரும் பற்பசை பயன்படுத்துவதால்  அதுதானே மேக்ஸிமம் விற்பனை அளவு என நீங்கள் கேட்கலாம்!

ஒரு நாளைக்கு ஒருமுறையிலிருந்து இரு முறைக்குப் பல் துலக்குவது மாறலாம். அதையும் தாண்டி வாய்ப்பில்லையே என்பீர்கள். விற்பனை எல்லையைத் தெரிந்துகொள்ள  பயன்பாட்டு அளவினை அளவுகோலாக வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு வருடத்திற்கான தனிமனித (பெர் கேப்பிட்டா) பற்பசை உபயோகம் அமெரிக்காவில் 542 கிராம், சீனாவில் 255 கிராம், மலேசியாவில் 304 கிராம், பிலிப்பைன்ஸில் 244 கிராம், இந்தியாவில் 127 கிராம் அளவில் இருக்கிறது. இப்படி இந்தியாவில் குறைந்த அளவில் இருப்பது என்பதே இன்னும் வியாபாரம் அதிகரிக்கத் தேவையான அளவு ஸ்கோப் இருக்கின்றது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.  

கம்பெனி அலசல் - கோல்கேட் பாமோலிவ்!

இத்தொழிலில் நாம் பார்க்க வேண்டிய மற்றொரு விஷயம், கிராமப்புறங்களில் பற்பசை உபயோகிப் பாளர்களின் எண்ணிக்கை. பொதுவாக கிராமப்புறங்களில் பற்பசை உபயோகம் குறைவாக இருக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும்போது கிராமங்களிலும் பற்பசை வியாபாரம் அதிகமாக வாய்ப்புள்ளது. அப்படி அதிகமாகும்போது ஏற்கெனவே கிராமங்களில் நன்கு அறிமுகமான பிராண்டுகளே நன்றாக வியாபாரமாக வாய்ப்பிருக்கிறது. கோல்கேட்டின் தயாரிப்புகள் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சரியானதொரு விகிதாச்சாரத்தில் 46 லட்சத்திற்கும் மேற்பட்ட கடைகள் வாயிலாக வாடிக்கையாளர்களைச் சென்றடைகிறது.

கம்பெனி எப்படி?

பல் பராமரிப்பு பிரிவில் டூத் பேஸ்ட், டூத் பிரஷ், டூத் பவுடர், பற்களை வெள்ளையாக பளீரிட வைக்கும் தயாரிப்புகள், மவுத் வாஷ் போன்ற வற்றையும், தனிநபர் பராமரிப்பு பிரிவில் பாடி வாஷ், லிக்யுட் ஹேண்ட் வாஷ், ஷேவிங் கிரீம்கள், தோல் பராமரிப்பு,  கேசப் பராமரிப்பிற்கான பொருட்களையும், வீட்டு பராமரிப்பில் தரையைச் சுத்தம் செய்வதற்கு உதவும் பொருட்களையும், பல் பிரச்னைகள் வரும்போது பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சென்சிட்டிவிட்டி ட்ரீட்மென்ட், புளூரைட் தெரபி, மவுத் அல்சர் பாதுகாப்பு, பல் சுத்தம் செய்தல் போன்றவற்றிற்கான பொருட் களையும் செய்து விற்பனை செய்யும் கம்பெனி இது.

கடந்த பத்து வருடங்களாக அகில இந்திய ரீதியாக மிகவும் நம்பகமான வீட்டு உபயோகப் பொருட் களுக்கான பிராண்ட் என்ற வரிசையில் டாப் 3-க்கு உள்ளேயே இருந்து வருகிறது கோல்கேட். இந்த ஒரு பிராண்ட்தான் இந்த தரவரிசையில் தொடர்ந்து டாப்-3-க்குள் பத்து வருடங்களாக இருந்து வருகிறது.

விலை ரீதியாக சாதாரண குறைந்த விலை பற்பசையிலிருந்து பிரீமியம் செக்மென்டில் அதிகபட்ச விலை வரை பல்வேறு வகையான பொருட்களைத் தருவது கோல்கேட்டின் தனிச் சிறப்பு. மிகவும் நூதனமான பொருட்களான கோல்கேட் ஃபிளாக்ஸ் மவுத் வாஷ் மற்றும் கோல்கேட் சென்சிட்டிவ் டூத் பேஸ்ட் போன்றவை வாடிக்கையாளர்களுடைய ஸ்பெஷல் தேவை களைப் பூர்த்தி செய்வதாக அமைவதால் அவர் களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றுள்ளது.

சாதாரண பற்பசை என்றிருந்தது போக அதில் கோல்கேட் டெண்டல் கிரீம், கோல்கேட் ஆக்டிவ் சால்ட், கோல்கேட் டோட்டல், கோல்கேட் மேக்ஸ் ஃபிரெஷ், கோல்கேட் ஃபிளாக்ஸ் என பல்வேறு விதமான வெரைட்டிகளை அறிமுகப்படுத்தி பற்பசை சந்தையையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருப்பதோடு போட்டியாளர்களை சிறிதளவும் அதனருகே நெருங்கவிடாமல் தொடர்ந்து முந்தி முன்னேறி வருகிறது கோல்கேட்.

ஏன் முதலிட வேண்டும்?

உங்களுக்குத் தெரிந்த சில டூத் பேஸ்ட் கம்பெனிகளின் பெயரைச் சொல்லுங்க என்று யாரிடமாவது கேட்டால் சட்டென கோல்கேட் பேரைச் சொல்வார்கள். பிராண்ட் ரீகால் செய்வதில் இந்த தயாரிப்பு எப்போதும் டாப் 1 பிராண்ட்-ஆக இருக்கிறது.  ஹிந்துஸ்தான் சீபா கெய்கி (சிபாகா டூத்பேஸ்ட் உங்களுக்குச் சட்டென நினைவுக்கு வருமே! அதுதான் பிராண்ட் ரீகால்!) என்ற கம்பெனியை 1994-ல் டேக் ஓவர் செய்து அந்த பிராண்டை மலிவு விலை டூத்பேஸ்டிற்கும், கோல்கேட் பிராண்டை பிரீமியம் செக்மென்டிற்கும் உபயோகிப்பதால் டூத் பேஸ்ட்டின் இரண்டு செக்மென்டிலும் நிலைபெற்றுள்ளது இந்த கம்பெனி.

கம்பெனி அலசல் - கோல்கேட் பாமோலிவ்!

பேஸ்ட்டுகள் பல அவுட்சோர்ஸிங் முறையில் தயாரிக்கப்படுவதால் காஸ்ட் அட்வான்டேஜ் நிறையவே கோல்கேட்டிற்கு உண்டு. இப்படி அவுட்சோர்ஸிங்கிற்கு பேஸ்ட் தயாரிக்கும் கம்பெனிகளிலும் கோல்கேட் முதலீடுகளைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேஷ் ஃப்ளோ பிரமாதமாக இருந்ததாலும், வளர்ச்சிக்குத் தேவையான அளவு கேப்பிட்டல் செலவுகளை ஏற்கெனவே செய்துவிட்டதாலும் ஷேர் கேப்பிட்டலை குறைத்துவிட்டது. 10 ரூபாய் முக மதிப்பு 1 ரூபாயாக மாற்றப்பட்டு மீதி 9 ரூபாய் ஷேர் ஹோல்டர்களுக்குத் திருப்பி அளிக்கப்பட்டுவிட்டது. கேப்பிட்டல் ரிடக்ஷனுக்குப் பின்னால் அதிகரித்துவரும் கேஷ் ஜெனரேஷன் மற்ற ரேஷியோக்களை எல்லாம் மிகவும் உறுதியான உயரத்திற்கு எடுத்துக் கொண்டு செல்கிறது.

ரிஸ்க் ஏதேனும் உண்டா?

90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட விற்பனை ஒரே தயாரிப்பிலிருந்து வருவதால் இது ஒரே ஒரு பொருளின் (பல் பராமரிப்பு பொருட்கள்) விற்பனையைச் சார்ந்திருக்கிற கம்பெனியாக இருக்கிறது. பெர்சனல் கேர் மற்றும் ஹோம் கேர் புராடெக்ட்கள் நன்றாக விற்பனையான போதும்கூட பெரும்பான்மை விற்பனை பல் பராமரிப்பு பொருட்களில் இருந்து வருவதால் எப்போதும் ஒரு சிக்கல் இருந்துகொண்டே இருக்கிறது. 1995-ல் ஆரம்பித்து விற்பனையில் கணிசமானதொரு சரிவை சந்தித்த கோல்கேட் கம்பெனியால் மீண்டும் அந்த எல்லையைத் தொடவே முடியவில்லை.

தவிர, டாபர், பல்சாரா, ஆங்கர், பெப்ஸோடன்ட் என பல்வேறு போட்டி பிராண்டுகள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கின்றன. ஏதாவது, ஒரு பிராண்ட் வெகுவாக பிரபலமானால் கோல்கேட்டின் லாபம் பாதிக்கப்படலாம். டூத் பவுடர் செக்மென்டில் கோல்கேட் கிராமங்களையே பெரும்பாலும் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. பெரும்பாலான கஸ்டமர்கள் லோக்கல் பிராண்டி லிருந்து இந்த பிராண்டிற்கு மாறியவர்கள். கிராமப்புற பொருளாதாரம் ஏதாவது ஒரு காரணத்தால் (உ.ம். மழையில்லை) சுணங்கினால் மீண்டும் அவர்கள் விலை குறைந்த லோக்கல் பிராண்டை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது.

விளம்பரச் செலவு அதிகமுள்ள கம்பெனி. புதுப்புது புராடெக்ட்களை அறிமுகப்படுத்தும் போது அதிக விளம்பரங்களைச் செய்ய வேண்டி இருக்கும். புராடெக்ட் தோல்வி அடைந்தால் செலவழித்த பணம் வீணாகப் போகும் வாய்ப்பு உள்ளது. வழக்கம்போல் மூலப் பொருள் விலை மாறுதல்களும் லாபத்தைப் பதம் பார்க்க வாய்ப்புள்ளது.

என்னதான் பிரச்னைகள் இருந்தாலும் டூத் பேஸ்ட் என்றவுடன் நினைவுக்கு வருவது கோல்கேட்தானே! பொருளாதார சூழ்நிலைகள் மந்தமாக இருக்கும்போது இதுபோன்ற எப்.எம்.சி.ஜி. கம்பெனி கள்தானே முதலீட்டாளருக்கு கை கொடுக்க வேண்டும். அந்த வகையில் கோல்கேட்டை வாசகர்கள் தங்களுடைய போர்ட்ஃபோலியோவில் சிறிதளவு சேர்த்துக் கொள்வதில் தவறேதும் இல்லை என்பதுதான் எங்கள் டீமின் பரிந்துரை.

-நாணயம் டீம்.