மியூச்சுவல் ஃபண்ட்
பங்குச் சந்தை
Published:Updated:

ஃபண்ட் ரிசர்ச்!

மியூச்சுவல் ஃபண்ட்

ஃபண்ட் ரிசர்ச்!

ரிலையன்ஸ் எம்.ஐ.பி.

##~##
கு
றைவான ரிஸ்க், பணவீக்கத்திற்கு மேல் வருமானம், ஈட்டும் வருமானத்திற்குக் குறைவான வருமான வரி, எப்போது வேண்டுமானாலும் பணமாக்கும் வசதி, வெளிப்படையான தன்மை போன்ற வசதிகளுடன் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் கிடைத்தால் எத்தனை சௌகரியமாக இருக்கும் என்று நீங்கள் அடிக்கடி நினைப்பீர்களா?

யெஸ்  எனில், உங்க ளுக்கு நூறு சதவிகிதம் பொருந்தி வரக் கூடியது ரிலையன்ஸ் எம்.ஐ.பி. திட்டம். நாம் சில வாரங்களுக்கு முன்பு ஹெச்.டி.எஃப்.சி. எம்.ஐ.பி. - எல்.டி.பி. குறித்து விரிவாகப் பார்த்தோம். அதே வகையைச் சார்ந்த ஃபண்டுகளில் ஒன்றான ரிலையன்ஸ் எம்.ஐ.பி. பற்றி இந்த வாரம் காண்போம்.

பல கோணங்களில் பார்க்கும்போது எம்.ஐ.பி. வகையைச் சார்ந்த ஃபண்டுகளில் இந்த இரு ஃபண்டுகளும் தொடர்ந்து நன்றாகச் செயல்படுகின்றன. நாம் ஏற்கெனவே சொன்ன மாதிரி, மிகக் குறைவான ரிஸ்க், பணவீக்கத்துக்கு மேல் வருமானம், ஈட்டும் வருமானத் துக்கு  குறைவான வருமான வரி என்கிற மாதிரியான நல்ல விஷயங்களோடு, இந்த ஃபண்டில் நீங்கள் போடுகிற பணத்தை எப்போது வேண்டுமானாலும் பணமாக்கிக் கொள்ளலாம். தவிர, இந்த ஃபண்ட் எப்படி இயங்குகிறது என்பதை அறிய எளிதில் புரிந்துகொள்கிற மாதிரி இதில் வெளிப்படைத்தன்மை அதிகம்.

ஃபண்ட் ரிசர்ச்!

இந்த வகை ஃபண்டின் நன்மை, தீமைகள் பற்றி கடந்த சில வாரங்களுக்கு முன்பே விரிவாகப் பார்த்துவிட்டதால், இந்த ஃபண்டின் வேறு சில முக்கிய விஷயங்கள் பற்றி பார்ப்போம்.

இந்த ஃபண்டின் மேனேஜர் அஷ்வனிகுமார் ஆவார். இத்திட்டத்தின் ஃபண்ட் மேனேஜராக கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேல் இருந்து வருகிறார். இத்திட்டம் ரூ.5,182 கோடியை நிர்வகித்து வருகிறது. எம்.ஐ.பி. வகையில் இதை ஒரு கன்ஸர்வேட்டிவ் திட்டம் எனக் கூறலாம். நிர்வகிக்கும் மொத்தத் தொகையில் அதிகபட்சமாக 20 சதவிகிதத் தொகையை பங்கு சார்ந்த முதலீடுகளிலும், மீதி 80 சதவிகித தொகையைக் கடன் சார்ந்த முதலீடுகளிலும் முதலீடு செய்கிறது. இந்த ஃபண்டின் ஆவரேஜ் கிரெடிட் ரேட்டிங் ஏஏ ஆகும்.

போர்ட்ஃபோலியோவில், என்.சி.டி. (NCD – Non Convertible Debenture) உபகரணங்களில் 40 சதவிகிதமும், அரசாங்க பாண்டுகளில் 16 சதவிகிதமும், பி.டி.சி-யில் (PTC – Pass Through Certificate)) 13 சதவிகிதமும், பிற கடன் திட்டங்களில் 13 சதவிகிதமும், பங்குகளில் 18 சதவிகிதத்தையும் முதலீடு செய்துள்ளது.

ஃபண்ட் ரிசர்ச்!

தனது பங்கு சார்ந்த முதலீடுகளில், 28 பங்குகளில் முதலீடு செய்துள்ளது - அவற்றில் பெரும்பாலும் மிட்கேப் பங்குகளே இடம் பெற்றுள்ளன.

குரோத் ஆப்ஷனில் ஒருவர் சுமார் 8 வருடங்களுக்கு முன்னால் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அது இன்று ரூ.2,29,876-ஆக இருக்கும். இது ஆண்டொன்றிற்கு கணக்கிடுகையில் கூட்டு வருமானமாக 10.77% ஆகும். வருமான வரியின் உச்சவரம்பில் இருப்பவர்களுக்கு, முதியோர்களுக்கு, குறைந்த ரிஸ்க்கை நாடுபவர்களுக்கு நீண்ட கால நோக்கில் இது ஒரு நல்ல வருமானம்!

ஹெச்.டி.எஃப்.சி. எம்.ஐ.பி. - எல்.டி.பி-யுடன் ஒப்பிடும்போது இந்த ஃபண்ட் சிறிது ரிஸ்க் குறைவு. காரணம், ஹெச்.டி.எஃப்.சி.

எம்.ஐ.பி.-ல் பங்கு சார்ந்த முதலீடுகள் அதிகபட்ச மாக 25% வரை உண்டு. ஆனால், ரிலையன்ஸ் எம்.ஐ.பி-யில் அதிகபட்சமாக 20% வரைதான்.

ஃபண்ட் ரிசர்ச்!

இதன் வரலாற்றில் குறிப்பிட்ட ஆண்டில் அதிகபட்சமாக 21.17%-ஐயும் (2009), குறைந்தபட்சமாக நெகட்டிவ் 0.24% (2011) வருமானத்தையும் கொடுத்துள்ளது. இத்திட்டத்தில் குரோத் ஆப்ஷனுடன், மாதாந்திர மற்றும் காலாண்டு டிவிடெண்ட் ஆப்ஷன்களும் உள்ளன. வருமான வரியின் உச்சவரம்பில் இருந்து மாதாந்திர வருமானத்தை விரும்புபவர்கள் டிவிடெண்ட் ஆப்ஷனில் செல்லலாம்.

எம்.ஐ.பி. திட்டங்களின் சிறப்பு அம்சமே குறைவான வருமான வரிதான். டிவிடெண்ட் ஆப்ஷனில் முதலீட்டாளர் வரி ஏதும் தங்கள் கையில் இருந்து செலுத்த வேண்டாம். குரோத் ஆப்ஷனிற்குச் செல்லும்போது, நீண்ட கால முதலீட்டு லாப வரியாக 10.3% (அல்லது 20.6% இன்டக்சேஷனுடன்) செலுத்த வேண்டும்.

ஃபண்ட் ரிசர்ச்!

இந்த ஃபண்டின் மேனேஜர் கடன்     பத்திரங்களை வட்டி விகிதங்களுக்கு ஏற்ப வாங்கி விற்பார். வட்டி விகிதம் குறையும் காலங்களில் நீண்ட கால மெச்சூரிட்டி உள்ள கடன் பத்திரங்களில் முதலீடு செய்வார். வட்டி விகிதம் ஏறும் காலங்களில் தனது கடன் சார்ந்த போர்ட்ஃபோலியோவின் மெச்சூரிட்டியைக் குறைத்துக் கொள்வார். இவ்வாறு சுழற்சி செய்யும்போது தவறான முறையில் மாட்டிக் கொள்வதும் உண்டு. ஆகவே, மிகக் குறுகிய கால முதலீட்டாளர்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்யக் கூடாது. குறைந்தது மூன்று வருட கால முதலீட்டு நோக்குடன் முதலீடு செய்தால் நன்மை பயக்கும்.

அதிக வருமானத்திற்கு ஆசைப்படாதவர்களுக்கு இது ஒரு சிறந்த ஃபண்ட். மேலும், உச்ச வருமான வரம்பில் உள்ள இளைஞர்கள்கூட தங்களின் குறுகியகாலத் தேவைகளுக்கு எஸ்.ஐ.பி. மூலமாகவும் மற்றும் மொத்தமாகவும் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். பல சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ஃபண்டிற்கு நமது மதிப்பெண் 86/100.