பிரீமியம் ஸ்டோரி
ஃபண்ட் ரிசர்ச்!


பிர்லா சன் லைஃப் 95

சற்று குறைவாக ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர்கள், நடுத்தர காலத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதன்முறையாக முதலீடு செய்பவர்கள், சீரான வேகத்தில் செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள்  - இது மாதிரியானவர்களுக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஏதும் உண்டா என்று கேட்கிறீர்களா?

ஃபண்ட் ரிசர்ச்!

மேற்படி முதலீட்டா ளர்களுக்கு பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்தான் சரியாகப் பொருந்தி வருபவை. சில வாரங்களுக்கு முன்பு ஹெச்.டி.எஃப்.சி. புரூடன்ஸ் ஃபண்ட் என்கிற பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் பற்றி பார்த்தோம். அந்த கேட்டகிரியைச் சேர்ந்த இன்னொரு திட்டம்தான் பிர்லா சன் லைஃப் 95 ஃபண்ட். இந்த ஃபண்டை பற்றி இந்த வாரம் பார்ப்போம்.

இந்த ஃபண்டை நிர்வகிப்பது ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சார்ந்த பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இன்று இந்தியாவில் நான்காவது பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. கனடா நாட்டைச் சேர்ந்த சன் லைஃப் ஃபைனான்ஷியல் சர்வீஸஸ் நிறுவனமும், ஆதித்யா பிர்லா குரூப் நிறுவனமும் இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் சரிபாதி பங்குகளை வைத்துள்ளன. இந்த மியூச்சுவல் ஃபண்டின் சி.இ.ஓ. ஏ.பாலசுப்ரமணியன் ஆவார்.

ஃபண்ட் ரிசர்ச்!
##~##
இதன் ஃபண்ட் மேனேஜர் நிஷித் தொலாக்கியா ஆவார். இந்த ஃபண்ட் ரூ.502 கோடி தொகையை நிர்வகித்து வருகிறது. இந்தியாவில்        17 வருடங்களுக்கும் மேலாக நடப்பில் இருக்கும் ஃபண்டுகள் குறைவே. அவற்றில் இதுவும் ஒன்று. பிப்ரவரி 1995-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்டில் பங்கு சார்ந்த முதலீடுகள் 50 - 75 சதவிகிதம், கடன் சார்ந்த முதலீடுகள் 25 - 50 சதவிகிதம் இருக்கும். தற்போது இதன் போர்ட்ஃபோலியோவில் பங்கு சார்ந்த முதலீடுகள்    68 சதவிகிதமும், கடன் சார்ந்த முதலீடுகள் 29 சதவிகிதமும், கேஷ் 3 சதவிகிதமும் உள்ளது.

இந்த ஃபண்டின் பங்கு சார்ந்த முதலீடுகள் பெரும்பாலும் லார்ஜ்கேப் நிறுவனங்களிலேயே உள்ளது. எந்த ஒரு பங்கிலும் தான் நிர்வாகம் செய்யும் தொகையில் 5 சதவிகிதத்திற்கு மேல் முதலீடு செய்யவில்லை. இதன் தற்போதைய டாப் ஹோல்டிங் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ், ஹெச்.டி.எஃப்.சி. பேங்க், இன்போஃசிஸ், டி.சி.எஸ். போன்ற நிறுவனங்கள் ஆகும்.

ஃபண்ட் ரிசர்ச்!

இதன் டாப் துறை முதலீடு நிதித்துறை (19.4%) ஆகும். இதன் கடன் சார்ந்த முதலீடுகள் ஐ.டி.பி.ஐ. பேங்க், எல்.ஐ.சி. ஹவுஸிங் ஃபைனான்ஸ், டாடா சன்ஸ், ஹெச்.டி.எஃப்.சி., பவர் ஃபைனான்ஸ் போன்ற நிறுவனங்களின் டிபஞ்சர்ஸ்/பாண்டுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபண்ட் தனது கடன் சார்ந்த முதலீடுகளையும் வட்டி விகித ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப ஆக்டிவ்-ஆக மேனேஜ் செய்கிறது.

மேலும், பங்கு முதலீடு மற்றும் கடன் சார்ந்த முதலீடுகளின் சதவிகிதத்தையும் ஃபண்ட் மேனேஜர் தனது பார்வைக்கு ஏற்ப துரிதமாக மாற்றிக் கொள்கிறார். அதேபோல், பங்கு முதலீட்டிலும் சில ஆண்டுகளில், மிட்கேப் பங்குகளில் அதிகமாக இத்திட்டம் முதலீடு செய்தது (2003 - 2007). அதற்கு பின்பு லார்ஜ்கேப் பங்குகளிலேயே ஃபோக்கஸ் செய்து வருகிறது. தற்போது இந்த ஃபண்ட்                           56 நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளது. இதில் கிட்டத்தட்ட 78 சதவிகிதம் லார்ஜ்கேப் பங்குகளாகும். மீதமுள்ளவை மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் ஆகும்.

ஃபண்ட் ரிசர்ச்!

மிளகு சிறிது என்றாலும் காரம் அதிகம் என்பதுபோல, இந்த ஃபண்ட் மேனேஜ் செய்யும் தொகை குறைவாக இருந்தாலும், அள்ளித் தந்திருக்கும் வருமானம் ஏராளம். இந்த ஃபண்ட் ஆரம்பித்த நேரத்தில் (1995) ஒருவர் ரூபாய் 1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதன் இன்றைய மதிப்பு ரூபாய் 30 லட்சத்திற்கும் மேல். இந்த ரிட்டர்ன் ஆண்டிற்கு 22.39% வட்டிக்குச் சமம். இந்த வருமானம் பல நல்ல, 100 சதவிகித ஈக்விட்டி ஃபண்டுகள் கொடுத்த வருமானத்திற்குச் சமமாக உள்ளது.

நீண்ட காலத்தில் இந்த அளவு வருமானத்தை அள்ளி கொடுத்துள்ள போதிலும், சந்தை சரியும்போது, சந்தையைவிட குறைவாகவே சரியும். ஆகவே, ஈக்விட்டி ஃபண்டுகளைவிட சற்று குறைவாக ரிஸ்க் எடுக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு அருமையான முதலீடு.

ஃபண்ட் ரிசர்ச்!

சந்தை உச்சத்தில் இருக்கும்போது, இந்த ஃபண்டின் வருமானம் 100% பங்குகளில் முதலீடு செய்யும் ஃபண்டுகளைவிட சற்று குறைவாகத்தான் இருக்கும்.

இந்த ஃபண்டின் நெகட்டிவ் என்று பார்த்தால் - மேனேஜ் செய்யும் தொகை குறைவாக இருப்பதால், செலவு விகிதம் சற்று அதிகம் (2.29%). இதனுடைய போட்டித் திட்டமான ஹெச்.டி.எஃப்.சி. புரூடன்ஸ் திட்டத்தின் செலவு விகிதம் 1.79 சதவிகிதம்தான். மேலும், போர்ட்ஃபோலியோவில் உள்ள பங்குகளின் எண்ணிக்கை சற்று அதிகமாகத் தோன்றினாலும், அதனால் வருமானம் குறைந்ததாகத் தெரியவில்லை.

17 ஆண்டுகளுக்கு மேல் நடைமுறையில் உள்ள இத்திட்டத்திற்கு நமது மதிப்பெண்கள் 88/100.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு