Published:Updated:

கம்பெனி அலசல் - டாடா பவர்!

கம்பெனி அலசல் - டாடா பவர்!

பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி அலசல் - டாடா பவர்!

இந்த வாரம் நாம் அலசப் போகும் கம்பெனி பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையான ஒன்றைத் தயாரிக்கும் கம்பெனி. இது இருந்தால்தான் நகரமோ, மாநிலமோ, நாடோ நல்லதொரு வளர்ச்சியை அடைய முடியும். இன்றைக்கு இது சரியாக கிடைக்காததால்தான் பல வகையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். மின்சாரத்தை உற்பத்தி செய்கிற கம்பெனியைதான் இந்த வாரம் அலசப் போகிறோம் என்பது புரிந்திருக்குமே!

மின் உற்பத்தியில் 1915-ல் காலடி எடுத்து வைத்த டாடா பவர்தான் இந்தியாவின் முதல் பவர் பிளான்ட்டை நிறுவியது. இன்றைக்கும் இந்தியாவில் தனியார் மின் உற்பத்தியில் நம்பர் ஒன் இடத்தைப் பெற்றிருப்பதும் இந்நிறுவனம்தான்.  

தொழில் எப்படி?

##~##
மின்சார உற்பத்தியின் முக்கியத்துவம் குறித்து நம்மவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தினமும் அதை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியாவில் ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் மின் பற்றாக்குறை. ஆனால், புதிய புராஜெக்ட்களை நிறுவுவதில் பெரும் சிக்கல். புதிதாக அமையும் புராஜெக்ட்டிற்குத்  தேவையான எரிபொருட்கள் தங்கு தடையில்லாமல் கிடைப்பதிலும் சிக்கல்.

தவிர, வெற்றிகரமாக மின்சாரத்தைத் தயாரித்தாலும் விற்கும்போது இன்ன விலைக்குத்தான் விற்க வேண்டும் என்கிற கட்டுப்பாடும் உண்டு. டிமாண்ட் ஓவரா இருக்கு என்று விலையை இஷ்டத்திற்கு ஏற்றிவிட முடியாது.

கம்பெனி எப்படி?

மின் உற்பத்தித் தொழிலில் நிறைய கிளைத் தொழில்கள் உண்டு. பவர் ஜெனரேஷன், டிரான்ஸ்மிஷன் மற்றும் டிஸ்ட்ரிப்யூஷன், பவர் சப்ளை, டிரேடிங், மின்சார நுகர்வோர்களுக்குத் தேவையான சில அத்தியாவசிய சர்வீஸ்கள், ஸ்ட்ராட்டஜிக் எலெக்ட்ரானிக்ஸ் டிவிஷன் என ஆறு வெவ்வேறு விதமான தொழில்களில் செயல்பட்டு வருகின்றது டாடா பவர்.

இந்தத் தொழிலில் இருக்கும் சவால்கள் அத்தனையையும் சமாளிக்கக்கூடிய திறமை கொண்ட கம்பெனி இது. புதிய புராஜெக்ட்களை போட்டால் சரியான நேரத்தில் நூல் பிடித்தாற்போல முடிக்கத் தெரிந்த கம்பெனி இது. இவை இத்தொழிலில் ஜெயிக்க மிகவும் தேவையான குணாதிசயம். அடுத்தபடியாக, போட்ட பணத்துக்கான சரியான ரிட்டர்னை எடுப்பதிலும் திறமை வாய்ந்த கம்பெனி. இதுவும் இத்தொழிலில் சிரமமான காரியம்தான்.

கம்பெனி அலசல் - டாடா பவர்!

சரி, தயாரித்த மின்சாரத்தை விற்பதற்கான ஏற்பாடுகளை எப்படி செய்து வைத்திருக்கிறது? இந்தியாவிலுள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களில் மிகப் பெரிதான டாடா பவர்  மின்சாரத்தை விற்க அதிகபட்ச லாங் டேர்ம் பவர் பர்ச்சேஸ் ஒப்பந்தங்களை மின்சாரம் வாங்குபவர்களிடம் செய்து வைத்துள்ளது. இதன் மின் உற்பத்தியில் 70 சதவிகிதத்திற்கும் மேல் பத்து ஆண்டுகளுக்கு விற்பனை செய்வதாக ஒப்பந்தம் போட்டிருக்கிறது டாடா பவர்.  

முந்த்ரா மற்றும் மைத்தான் என்ற இரண்டு இடங்களில் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் இரண்டு மிகப் பெரிய புராஜெக்ட்களுமே காலதாமதமின்றி சரியான நேரத்தில் சரியான வேகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு புராஜெக்ட்களும் முடிவடைந்தால், இந்நிறுவனத்தின் லாபமும் அதிகரிக்கவே செய்யும்.

எரிபொருள் தட்டுப்பாடு இத்தொழிலில் தலைவிரித்தாடுகிறதே என்று நீங்கள் கேட்கலாம்.  டாடா பவர் இந்த புதிய புராஜெக்ட்களுக்குத் தேவையான நிலக்கரியை இந்தோனேஷியாவில் இருந்து வரவழைக்கத் தேவையான ஒப்பந்தங்களைப் போட்டு வைத்துள்ளது. ஒருவேளை இந்த ஒப்பந்தம் முறிந்துவிட்டால்..? அங்கே இருக்கும் நிலக்கரி சுரங்க கம்பெனிகளில் 30 சதவிகித ஷேரை டாடா பவர் தன்வசம் வைத்துள்ளது. அடுத்த இரண்டு, மூன்று வருடத்தில் இந்தோனேஷிய சுரங்கங்களில் நிலக்கரி எடுக்கும் அளவை மேலும் அதிகமாக்கத் திட்டம் வைத்துள்ளது.

தவிர, ஒடிஷா மாநிலத்தில் உள்ள மந்தாகினி கோல் பிளாக்கில் 33 சதவிகித ஷேரையும், ஜார்கண்டிலும் சில நிலக்கரி சுரங்கங்களின் உரிமைகளையும் வைத்துள்ளது இந்நிறுவனம்.  தன் உற்பத்திக்குத் தேவையான அளவு நிலக்கரியை பெற்றுக் கொள்வதில் டாடா பவருக்கு எந்தவிதமான சிக்கலும் இருக்க வாய்ப்பில்லை.

வளர்ச்சிக்கான திட்டம்!

ஒரு புராஜெக்ட்டை நிர்மாணம் செய்வதற்கு மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரையிலுமே ஆகலாம். எனவே, தொடர்ந்து திட்டங்கள் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

அதேசமயம் அசுர சாதனைகளைப் படைக்க நினைக்கும் திட்டங்களை தீட்டக்கூடாது. ஏனென்றால், அரசாங்கம் நிர்ணயிக்கும் விலை, நிலக்கரி சப்ளை மற்றும் மாறுகின்ற அதன் விலை, திட்டத்துக்குத் தேவையான பணத்தினை திரட்டுவது என ஏகப்பட்ட ஏரியாக்களில் இடைஞ்சல்கள் வந்துவந்து போகும் தொழில் இது. டாடா பவர் திட்டமிடுதலில் திடமானதாகவும், திட்டத்தைச் செயல்படுத்துவதில் விவேக மானதாகவும், செயல்படுத்தும் வேகத்தில் நிதானத்தைக் கொண்டதாகவும் இருப்பதால், மிகச் சரியாக செயல்பட்டு வருமானத்தைச் சம்பாதிக்கும் ஒரு கம்பெனியாக இத்துறையில் இருக்கிறது.

கம்பெனி அலசல் - டாடா பவர்!


ரிஸ்க் ஏதும் உண்டா?

இந்தோனேஷியாவில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தி லிருந்து வரும் வருமானம் மாறுதலுக்கு உட்பட்டது. டாடா பவர், எரிபொருளாக உபயோகிப்பதும் இந்த நிலக்கரியைத்தான். நிலக்கரியின் விலைக்கு ஏற்றாற்போல் லாப/நஷ்டங்கள் மேலும் கீழும் போக வாய்ப்புள்ளது. இந்தோனேஷிய அரசின் நிலக்கரி ஏற்றுமதி கொள்கையில் மாறுதல்கள்  வந்தாலும், வருமானம் மற்றும் எரிபொருள் என்ற இரண்டு ஏரியாவிலும் டாடா பவருக்கு பிரச்னை எழ வாய்ப்புள்ளது.

எரிபொருள் விஷயத்தில், இந்தியாவில் இதுவரை நிலக்கரியைத் தோண்டி எடுக்க தனியாருக்கு அனுமதி இல்லை. இருப்பினும் நிலக்கரியை சொந்தமாக உபயோகிப்பவர்கள் நிலக்கரியைத் தோண்டி எடுக்கலாம் என்ற அனுமதி இருக்கிறது. 2017 வாக்கில் நிலக்கரித் தட்டுப்பாடு மிக அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் அரசாங்கம் நிலக்கரியை தனியார் தோண்டி எடுக்க அனுமதிக்கலாம்.

நிறைய பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விஷயங்கள் இருந்தபோதும், இந்தியாவைப் பொறுத்தவரை மின்சாரத் தட்டுப்பாடு என்பது கிட்டத்தட்ட 15 சதவிகித அளவுக்குத் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது. இந்தத் தட்டுப்பாடு இந்தியா முழுவதுமாக ஒரே அளவில் இல்லை. இப்படி இருக்கும்போது ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டுசெல்ல டிஸ்ட்ரிப்யூஷன் மற்றும் டிரான்ஸ்மிஷன் கட்டுமானங்கள் செம்மைப் படுத்தப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.

இந்த கம்பெனியில் முதலீடு செய்வது ரொம்பவுமே ரிஸ்க்காகத் தெரிகிறதே என்கிறீர்களா? இவ்வளவு பிரச்னைக்கு நடுவிலும் பிரகாசமாகத் தெரிவது டாடா பவர் தயாரிக்கும் மின்சாரத் திற்கான டிமாண்ட்தான். எத்தனை பிரச்னைகள் வந்தாலும், ஒரு கம்பெனி தயாரிக்கும் பொருளுக்கு டிமாண்ட் குறையாமல் இருக்கும் வரை அந்நிறுவனத்தால் வெற்றிகரமாக நிச்சயம் செயல்பட முடியும்.

அந்த வகையில் என்றுமே டிமாண்ட் குறையாத பொருளாகிய மின்சாரத்தைத் தயாரிக்கும் கம்பெனியாக இருப்பதால், வாசகர்கள் தங்களுடைய போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதுதான் எங்கள் டீமின் பரிந்துரை.

-நாணயம் டீம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு