Published:Updated:

நீங்களும் அனலிஸ்ட்தான்!

டெக்னிக்கல் அனாலிசிஸ்

பிரீமியம் ஸ்டோரி
நீங்களும் அனலிஸ்ட்தான்!
நீங்களும் அனலிஸ்ட்தான்!

இந்த வாரம் நாம் அலசப் போகும் இண்டிகேட்டர் 'டிமாண்ட் இண்டெக்ஸ்’ என்னும் டூல் ஆகும். இந்த டூலை கணக்கிடுவது எப்படி என்பதை விளக்குவதற்கு 21 காலம் கொண்ட ஒரு பேப்பர் வேண்டியிருக்கும். பேப்பரைத் தேடி காலம் போட்டு கணக்கிட வேண்டிய வேலை உங்களுக்கில்லை. அந்த வேலையை கம்ப்யூட்டரே செய்துவிடும். டிமாண்ட் இண்டெக்ஸை வைத்து சந்தையை எப்படி கணிப்பது என்பதை மட்டும் நாம் புரிந்துகொண்டால் போதுமானது. டிமாண்ட் இண்டெக்ஸை வைத்து எப்படி உபயோகிப்பது என்பதைப் புரிந்துகொள்வதே கொஞ்சம் சிரமமான காரியம்தான். ஆனால், கொஞ்சம் மெனக்கெட்டால் நிறைய சம்பாதிக்கலாமே!

நீங்களும் அனலிஸ்ட்தான்!

மேலே கொடுக்கப் பட்டுள்ள           எல் அண்ட் டி-யின் கேண்டில் ஸ்டிக் சார்ட்டையும், டிமாண்ட் இண்டெக்ஸ் சார்ட்டையும் பாருங்கள். டிமாண்ட் இண்டெக்ஸ் என்பது ஒரு அட்வான்ஸ்ட் இண்டிகேட்டர். அதாவது, வருவதை முன்பே கூறுகிற வகை இண்டிகேட்டர். டிசம்பர் 2011 இறுதி வரை இறங்கிய எல் அண்ட் டி ஜனவரி மாத வாக்கில் ஏற ஆரம்பித்துள்ளது. இது கேண்டில் ஸ்டிக் சார்ட்டில் தெளிவாகத் தெரிகிறது.

கேண்டில் ஸ்டிக் சார்ட்டில் மேலேயுள்ள டிமாண்ட் இண்டெக்ஸ் சார்ட்டை பாருங்கள். டிமாண்ட் இண்டெக்ஸ் லைன் (நீல நிற லைன்) முதலில் மேல்நோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளது. அதன் பின்னரே                   எல் அண்ட் டி-யின் விலை வேகமாக ஏற ஆரம்பித்துள்ளது. அதேபோல் மார்ச் மாத இறுதியில் முதலில் டிமாண்ட் இண்டெக்ஸ் இறங்க ஆரம்பித்த பின்னரே விலை வேகமாக இறங்க ஆரம்பித்துள்ளது என்பதையும் பார்க்க முடியும்.

இந்த சார்ட் சொல்வது எல்லாம் நடந்து முடிந்த கதைதானே! இனி நடக்கப் போவதை இந்த டிமாண்ட் இண்டெக்ஸ் வைத்து கண்டுபிடிக்க முடியுமா?, அதை எந்த அளவுக்கு நம்ப முடியும்? என்ற இரண்டு கேள்விகளையும் நீங்கள் கேட்பது எனக்குத் தெரிகிறது. நடந்து முடிந்த கதையை வைத்து, என்ன நடக்கும் என்று கணிப்பதுதானே டெக்னிக்கல் அனாலிசிஸ். இந்த நடக்கப் போகும் கதையைக் கணிக்கும்போது முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. அதுதான் செய்தி மற்றும் செய்தியால் மாறுபடும் சந்தையின் சூழ்நிலைகள்.

நீங்களும் அனலிஸ்ட்தான்!
##~##
டெக்னிக்கல் அனாலிசிஸ் என்பது நேற்றைய, இன்றைய மற்றும் நாளைய செய்திகள் அத்தனையையும் உள்ளடக்கியதுதான். இன்றைய விலை என்ற அடிப்படையில் தான் செயல்படுகிறது என்ற ஒரு கருத்தும் சந்தையில் இருக்கிறது. ஒரு வாதத்திற்காகப் பேசுவோம். இன்றைய விலை என்பது நேற்றைய, இன்றைய மற்றும் நாளைய செய்திகளை உள்ளடக்கியது என்றால், ஒரு ஷேருமே இன்றைவிட நாளை விலை உயரவேக்கூடாதே! ஏனென்றால் நாளை வெளிவரப்போகும் செய்தியின் பிரதிபலிப்புதான் இன்றைய விலையிலேயே இருக்கிறதே! என்று வாதம் செய்யலாம் இல்லையா?

டெக்னிக்கல் அனாலிசிஸை டிரேடிங்கிற்கு பிராக்டிகலாக உபயோகிக்கும் ஒருவர், அவரிடம் வைக்கப்படும் இந்த வாதத்தைத் தவிர்க்க மற்றும் தடுக்க இது குறித்த முக்கியமான ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். டெக்னிக்கல் அனாலிசிஸைக் கொண்டு நாளை (எதிர்காலத்தை) கணிக்க முயற்சிக்கும்போது, சந்தையைப் பாதிக்கும் விஷயங்கள் அடங்கிய சூழ்நிலையிலும் நாளை என்பது இன்றைய சூழ்நிலையை ஒட்டியோ அல்லது இன்றைய சூழ்நிலையைவிட கொஞ்சம் மேலோ/கீழோ இருந்தால் மட்டுமே முழுவதுமாகச் செல்லுபடியாகும்.

அப்படி இல்லாமல் நாளைய கிளைமேட் இன்றிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டதாக இருந்தால் சந்தையின் நடவடிக்கையும் இன்றிலிருந்து மொத்தமாக மாறுபட்டதாகவே அமையும். இப்படிப்பட்ட சூழலில் டெக்னிக்கல் அனாலிசிஸை குறை சொல்வதில் அர்த்தமில்லை. நாம் டெக்னிக்கல் அனாலிசிஸை புரிந்துகொள்வதில்தான் தவறு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, ஓரளவுக்கு சீரான சந்தைச் சூழ்நிலையில்தான் வரும் காலத்தை டெக்னிக்கல் அனாலிசிஸை வைத்துக் கொண்டு துல்லியமாக கணிக்க முடியுமே தவிர, எல்லா காலகட்டத்திலும் அவ்வாறு கணிப்பது சுலபமாக இருக்காது.

நீங்களும் அனலிஸ்ட்தான்!
நீங்களும் அனலிஸ்ட்தான்!

டெக்னிக்கலில் வரும் கணிப்புகளை சூழ்நிலையின் மீது ஒரு கண்ணை வைத்துக் கொண்டேதான் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். உதாரணத்திற்கு, பட்ஜெட் வருகிறது. பட்ஜெட்டிற்கு முதல் நாள் வரை சந்தை கடுமையான இறக்கத்தைச் சந்தித்துள்ளது. எல்லா டெக்னிக்கல் இண்டிகேட்டர்களும் சந்தை நன்றாக இறங்குமென்றே பட்ஜெட்டுக்கு முந்தைய நாள் சந்தையின் முடிவில் அனலைஸ் செய்யும்போது காட்டுகின்றன என்று வைத்துக் கொள்வோம். பட்ஜெட் அன்றைக்கு அதை நம்பி ஒருவர் முழுவதுமாக ஷார்ட் சைடில் பொசிஷன் எடுக்க முடியுமா? பட்ஜெட் தினத்தன்று யாருமே எதிர்பார்க்காத மற்றும் கணிக்காத முன்னேற்றம் தரும் விஷயங்கள் பட்ஜெட்டில் தரப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். சந்தை தடாலடியாக ஏறத்தானே செய்யும்! டெக்னிக்கலை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு ஷார்ட் போனவரின் கதி என்ன வாகும் என்று நினைத்துப் பாருங்கள்.

பட்ஜெட் மட்டுமல்ல, எந்த ஒரு நல்ல செய்தியோ அல்லது கெட்ட செய்தியோ திடீரென வரப் போகிறது என்பது டெக்னிக்கல் சார்ட்டில் தெரிய வாய்ப்பேயில்லை. விலை என்பது தொடர்ந்து வருகிற செய்திகளின் தீவிரத்தையும் விளைவுகளையும் உள்ளடக்கி மாறிக்கொண்டே போகிறதே தவிர, அடுத்து வரப்போகும் செய்தி என்னவென்று தெரிந்துகொண்டு மாறுவது இல்லை. இதுபற்றி அதிகம் தெரிந்துகொள்ள வேண்டுமெனில், நீங்கள்   'எஃபீசியன்ட் மார்க்கெட் தியரி’ என்ற தியரியைப் பற்றி தனியே படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

சரி. நாம் இப்போது டிமாண்ட் இண்டெக்ஸின் பலனிற்கு வருவோம்.  டிமாண்ட் இண்டெக்ஸை வைத்து ஆறு விதமான கணிப்புகளை கணிக்கலாம்.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

1. டிமாண்ட் இண்டெக்ஸிற் கும் விலைக்கும் இடையே டைவர்ஜன்ஸ் வந்தால் (டைவர்ஜன்ஸ் என்பது டிமாண்ட் இண்டெக்ஸ் லைன் கீழ்நோக்கிப் போகும்போது விலை லைன் மேல் நோக்கிப் போவது - அதாவது இரண்டும் எதிர்திசையில் போவது) அப்போது நடக்கும் விலை ரொம்ப நேரம்/நாட்களுக்கு நிற்காது என்று அர்த்தம். அதாவது, விலையில் பலவீனம் வந்துவிட்டது என்று அர்த்தம். ஏறிக் கொண்டிருந்தால் இறங்கிவிடலாம் என்றும், இறங்கிக் கொண்டிருந்தால் ஏறிவிடலாம் என்றும் அர்த்தம்.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

2. டிமாண்ட் இண்டெக்ஸ் புதிய உச்சத்தைத் தொட ஆரம்பிக்கும்போது விலையும் புதிய அளவைத் தொடுவதை நோக்கி ஏற ஆரம்பிக்கும். விலை ஏற்றத்தின்போது டிமாண்ட் இண்டெக்ஸ் மேல் நோக்கிப் போய் புதிய எல்லையைத் தொட்டால் விலையை அடைய வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

3. விலை உச்ச எல்லையையும், டிமாண்ட் இண்டெக்ஸ் புதிய இறக்கத்தையும் தொட்டால் அந்த விலை உச்சம்தான் கொஞ்ச காலத்திற்குப் புதிய ஹை விலை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

4. டிமாண்ட் இண்டெக்ஸ் '0’ லைனிற்கு மேலேயும் கீழேயும் கிராஸ் செய்யும்போது புதிய டிரெண்ட் உருவாகிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

5. டிமாண்ட் இண்டெக்ஸ் '0’ லைனிற்கு அருகிலேயே நெடுநாள் அல்லாடினால் டிரெண்ட் மிகவும் டைரக்ஷன் லெஸ்ஸாக இருக்கப் போகிறது என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.

6. முதல் பாயின்டில் சொன்ன டைவர்ஜன்ஸ் வெகுநாட்களுக்குத் தொடர்ந்து இருந்தால் ஒரு மேஜர் டாப் லெவலை நோக்கியோ அல்லது மேஜர் பாட்டம் லெவலை நோக்கியோ சந்தை நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம் கொள்ள வேண்டும். அந்த லெவலினை விட்டு இறங்கினாலோ ஏறினாலோ வெகுநாட்களுக்கு அந்தப் பக்கம் விலை வரவே வராது என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.

டிமாண்ட் இண்டெக்ஸ் என்பது எல்லா கம்ப்யூட்டரைஸ்டு சார்ட்டிங் சாஃப்ட்வேர்களிலும் இருக்கும். மேலே சொன்ன குறிப்புகளை வைத்துக்கொண்டு 3 வருட சார்ட்டை டிமாண்ட் இண்டெக்ஸுடன் போட்டுப் பார்த்து, ஒத்துவருகிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

மற்றுமொரு முக்கியமான டெக்னிக்குடன் அடுத்த வாரம் பார்ப்போம்.

(வளரும்)

அதிக சம்பளம், அதிக வேலை!

நீங்களும் அனலிஸ்ட்தான்!

மெரிக்காவில் உருக்குத் தயாரிப்பில் முதல் இடம் வகிப்பது நுகர் கார்ப்பரேஷன் (Nucor Corporation). இந்நிறுவனம் ஜெயித்தது எப்படி தெரியுமா?

கம்பெனியின் முக்கிய நிர்வாகி சொன்னார்:

'மற்ற கம்பெனிகள் பத்து பேரை வேலைக்கு அமர்த்தும் வேலைகளுக்கு நாங்கள் ஐந்தே ஐந்து மகா திறமைசாலிகளை நியமிக்கிறோம். அவர்களுக்கு எட்டுபேரின் சம்பளம் கொடுக்கிறோம். பத்துபேரையும் மிஞ்சும் உற்பத்தியை அவர்கள் தருகிறார்கள்.'

அதிக சம்பளம் தந்தால் அதிக வேலை வாங்க முடியும் என்பது சரிதானே?

- அத்வைத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு