Published:Updated:

கம்பெனி அலசல் - டாடா ஸ்டீல்!

கம்பெனி அலசல் - டாடா ஸ்டீல்!

பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி அலசல் - டாடா ஸ்டீல்!

இந்த வாரம் நாம் அலசப் போகும் டாடா ஸ்டீல் நிறுவனம் 1907-லேயே ஆரம்பிக்கப்பட்ட, மிகுந்த பாரம்பரியம் மிக்க ஒரு ஸ்டீல் தயாரிக்கும் கம்பெனி. உலக அளவில் ஆறாவது பெரிய ஸ்டீல் தயாரிப்பு நிறுவனம் என்ற புகழைக் கொண்டுள்ளது டாடா ஸ்டீல் கம்பெனி. 26 நாடுகளில் செயல்பாட்டையும், 50 நாடுகளில் வியாபாரத்தையும் கொண்டுள்ள டாடா ஸ்டீல் உலகத்தில் உள்ள நாடுகளில் பரந்து விரிந்து செயல்படும் கம்பெனிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தினால் இரண்டாவது இடத்தைப் பிடிக்கிற கம்பெனியாக இருக்கிறது.

##~##
மீபத்தில் டாடா ஸ்டீல் வாங்கிய ஐரோப்பாவின் கோரஸ் (தற்போது டாடா ஸ்டீல் யூரோப்), தாய்லாந்தின் மில்லினியம் ஸ்டீல் (தற்போது டாடா ஸ்டீல் தாய்லாந்து) மற்றும் சிங்கப்பூரின் நேட் ஸ்டீல் ஏசியா போன்ற கம்பெனிகளால் இன்றைக்கு டாடா ஸ்டீல் ஐரோப்பாவிலும், தென் கிழக்காசிய நாடுகளிலும், பசிபிக் ரிம் (அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான் உள்பட 44 நாடுகள் இதில் அடக்கம்!) நாடுகளிலும் வெற்றிகரமாக கால்பதித்து செயல்பட ஆரம்பித்துள்ளது.

தொழில் எப்படி?

ஸ்டீல் தயாரிப்புத் தொழில் உலக அளவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுடன் நேரடியாகத் தன்னுடைய வாழ்வையும் தாழ்வையும் கொண்டுள்ள ஒரு தொழிலாகும். இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் இத்தொழிலில் இருக்கிற கம்பெனியின் வளர்ச்சியும்/சரிவும், தொழில் செய்யும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றாற்போலவே  இருக்கும். ஏனென்றால், அரசாங்கத்தின் கட்டுமான வசதி மேம்படுத்துக் கொள்கையும், ஏனைய தொழில்களின் தயாரிப்புத் திட்டங்களுமே ஸ்டீல் தொழிலின் வியாபார எல்லையாக இருக்கும்.  பொருளாதாரத்தின் ஏற்ற இறக்கத்தினால் உடனுக்குடன் பாதிக்கப்படக்கூடிய தொழில் களின் பட்டியலைப் போட்டால், அதில் ஸ்டீல் தொழில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கும்.

சரி, ஸ்டீலுக்கானத் தேவை குறித்து கொஞ்சம் அலசி ஆராய்ந்தால் இத்தொழிலின் சூட்சுமம் உங்களுக்கு நன்றாகவே புரியும். உலகளாவிய அளவில் ஸ்டீல் உபயோகிக்கும் நாடுகளை கணக்கெடுத்தால் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரியவரும். 2000-ம் வருடத்தில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் (27 நாடுகள்) சேர்ந்து கிட்டத்தட்ட 38 சதவிகிதமும், ஜப்பான் 10 சதவிகிதமும், சீனா 16.3 சதவிகிதமும், இந்தியா 3.6 சதவிகிதமும் உபயோகிக் கின்றன.

இதே கணக்கெடுப்பில் 2005-ல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சேர்ந்து கிட்டத்தட்ட 26 சதவிகிதமும், ஜப்பான் 7 சதவிகிதமும், சீனா 32 சதவிகிதமும் இந்தியா 3.8 சதவிகிதமும் உபயோகித்தன. 2009-ல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவும் சேர்ந்து 16 சதவிகிதமும், ஜப்பான் 5 சதவிகிதமும், சீனா 48 சதவிகிதமும், இந்தியா 5 சதவிகிதமும் உபயோகித் திருந்தன. 2009-க்குப் பிறகு மெள்ள மெள்ள வளர்ந்து இன்று உலக அளவில் நான்காவது பெரிய உபயோகிப்பாளராக மாறியுள்ளது இந்தியா.

இத்தொழிலுக்குத் தேவையான மூலப் பொருள், வளர்ச்சிக்கு ஈடான வேகத்தில் கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். பிரேசில், ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா என ஒவ்வொரு நாடாக இந்த கம்பெனிகள் மூலப் பொருள் தேவைக்காக வலைவிரித்துக் கொண்டே போகின்றன. ஆப்பிரிக்காவில் மூலப் பொருள் நன்றாக கிடைத்தாலும், அங்குள்ள போக்குவரத்து கட்டுமான குறைபாட்டால் பெரிய அளவில் இன்றளவில் அது உதவிகரமாக இல்லை.

கம்பெனி அலசல் - டாடா ஸ்டீல்!

எனவே, பொருளாதார சைக்கிளுக்கு ஏற்றாற்போல் லாபம், எப்போதும் தயாரான நிலையில் உற்பத்தித் திறன் (அதிக முதலீடுகள் தேவைப்படும் பிளான்ட்களை நிறுவி காத்திருத்தல்) மற்றும் உலக ஸ்டீல் தேவைக்கு ஏற்றாற்போல் வேகமாக மாறும் மூலப் பொருள் விலை என பல இடர்பாடுகளைக் கொண்ட தொழில் இது.

ஆனால், ஸ்டீல்தான் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையும்கூட. அப்படிப்பட்ட தொழிலில் முதலீடு,  நீண்ட காலத்தில் நிச்சயம் லாபம் தர வாய்ப்பு உள்ளது.

கம்பெனி எப்படி?

இடர்பாடுகள் உள்ள தொழில்; பெரிய அளவில் முதலீட்டை போட்டு நடத்த வேண்டிய தொழில்; தொழிலாளர்கள் நிறைந்த தொழில் (சென்ற வருட இறுதியில் கிட்டத்தட்ட 81,000 பேர்). உலக அளவில் கட்டாயம் செய்ய வேண்டிய தொழில். இப்படி பல நிபந்தனைகளைப் போட்டால், அந்தத் தொழிலை நடத்தும் நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும்? அனுபவஸ்தர் களாக, நீண்ட பாரம்பரியம் கொண்டவர்களாக, நீண்ட காலநோக்கத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டவர் களாக இருக்க வேண்டும் இல்லையா? இந்த அனைத்து குணங்களையும் ஒன்றாகக் கொண்ட கம்பெனிதான் டாடா ஸ்டீல்.

ஸ்டீல் தயாரிப்பில் ஹாட் ரோல்ட் காயில்கள், செக்ஷன்கள், பிளேட்கள், வயர்கள் என வெறும் ஸ்டீல் என இல்லாமல் பல்வேறுவிதமான மதிப்பு கூட்டிய தயாரிப்புகளையும் தயாரித்து விற்கிறது. தன்னுடைய தயாரிப்பில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் வரை இந்தியா மற்றும் ஐரோப்பாவில் விற்கிறது. மீதமுள்ள 30 சதவிகிதத்தை ஆசியாவில் உள்ள பிற நாடுகளிலும் அமெரிக்காவிலும் விற்கிறது. கன்ஸ்ட்ரக்ஷன், ஆட்டோமொபைல், ஏரோஸ்பேஸ், கன்ஸ்யூமர் குட்ஸ், மெட்டீரியல் ஹேண்ட்லிங் மற்றும் பல பொதுவான இன்ஜினீயரிங் தொழில்கள்தான் டாடா ஸ்டீலின் வாடிக்கை யாளர்களாக உள்ளன.

கம்பெனி அலசல் - டாடா ஸ்டீல்!


ஏன் வாங்க வேண்டும்?

இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்டீல் கம்பெனி. மூலப் பொருள் கிடைப்பதிலிருந்து விற்பனை வரை அனைத்திலும் இந்தியாவைப் பொறுத்தவரை நம்பர் ஒன் கம்பெனியாக இருக்கிறது. ஏற்கெனவே சொன்ன கணக்கீட்டில் 2000-2010-ம் வருடங்களில் சீனா, ஸ்டீல் உபயோகிப்பதில் கண்ட வளர்ச்சியை எதிர்வரும் காலத்தில் இந்தியா நிச்சயமாகச் சந்திக்கும். அச்சூழ்நிலையில் நல்ல லாபம் பார்க்க வாய்ப்புள்ளதொரு கம்பெனி.

ஐரோப்பாவில் கோரஸ் ஸ்டீலை வாங்கியதன் மூலம் உலக வியாபாரத்தில் பெரியதொரு இடத்தை தக்கவைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், பெரியதொரு உற்பத்தித் திறனையும் லேட்டஸ்ட் தொழில் நுட்பத்தையும் கொண்ட ஒரு கம்பெனி என பலவிதமான நல்ல விஷயங்களை உள்ளடக்கி உள்ளது இந்நிறுவனம். இதையும் தவிர, எதிர்காலத்திற்கான நல்ல பல திட்டங்களையும் கைவசம் வைத்துள்ள திறமையான நிர்வாகத்தினையும் கொண்டுள்ளது இந்நிறுவனம்.

என்ன ரிஸ்க்?

ரிஸ்க் இல்லாமலா! ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி தலைக்கு மேல் தொங்கும் கத்தி போல இந்த கம்பெனியின் வளர்ச்சிக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. ஐரோப்பிய நெருக்கடி சரியாக தீர்க்கப்படாமல் பெரிதானால் ஐரோப்பிய ஸ்டீல் உபயோகம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. ஸ்டீல் தொழில் நிரந்தர முதலீட்டை விரும்பிச் சாப்பிடும் தொழில். எனவே, ஓரளவுக்கு கடனையும் கொண்டுள்ளது இந்த கம்பெனி. வட்டித் தொல்லைகளும் லாபத்தை ஓரளவு பதம் பார்க்கலாம்.

எல்லாத் தொழில்களிலும் இருக்கும் ரிஸ்க்கான மூலப் பொருள் விலை மாற்றம் இத்தொழிலுக்கு கொஞ்சம் அதிகமானதாகவே இருக்கும். டாடா ஸ்டீல் மூலப் பொருள் கிடைப்பதற்கான வழிவகைகளை கூடுமான அளவு செய்துவந்து கொண்டே யிருந்தாலும், தேவை வேகமாக அதிகரித்தால் அதற்குண்டான விலை ஏற்றத்தைச் சந்தித்தேயாக வேண்டிய கட்டாயத்தில் இன்றைய சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறது.

இப்படி ரிஸ்க்குகள் பல இருந்தாலும், இந்நிறுவனத்திற்கு இருக்கும் பல சௌகரியங்கள் எத்தனை ரிஸ்க்குகள் வந்தாலும் முறியடித்துவிடும் என்ற எதிர்பார்ப்போடு வாசகர்கள் டாடா ஸ்டீலின் பங்குகளை, விலை நன்கு குறையும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி தங்கள் போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக் கொள்ளலாம் என்பது தான் எங்கள் டீமின் பரிந்துரை.

- நாணயம் விகடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு