Published:Updated:

இனி கொண்டாட்டம்தான்!

இனி கொண்டாட்டம்தான்!

பிரீமியம் ஸ்டோரி
இனி கொண்டாட்டம்தான்!

பெரிய ஏற்றம் அல்லது இறக்கம் என்று இல்லாமல் கொஞ்சம் ஏறி, கொஞ்சம் இறங்கி போக்கு காட்டிக் கொண்டிருக்கிறது பங்குச் சந்தை. ரிசர்வ் வங்கி வட்டி (ரெபோ) விகிதத்தைக் குறைத்தவுடன் சந்தை கொஞ்சம் உயர்ந்தாலும், அடுத்த நாளே பெரிய ஏற்றம் இல்லாமல் முதலீட்டாளர்களைக் குழப்பியது.

இனி கொண்டாட்டம்தான்!

ந்நிலையில் சந்தை இனி எப்படித்தான் செல்லும் என்கிற கேள்வியை டெக்னிக்கல் அனலிஸ்ட் ஸ்ரீராமிடம் கேட்டோம். சந்தை அடுத்து எத்திசையில் செல்லும் என்றும், அதற்கான காரணங்களையும் விளக்கிச் சொன்னார் அவர்.

''சந்தை தினமும் மெள்ள மெள்ள உயர்வது நல்ல அறிகுறி தான். எவ்வளவு வேகமாக சந்தை உயருகிறதோ, அவ்வளவு வேகமாக கீழே சரியவும் வாய்ப்பு இருக்கிறது. மார்ச் மாதத்துக்குப் பிறகு சந்தையில் ஒரு 'கன்சாலிடேஷன்’ நடக்க வாய்ப்பிருக்கிறது என ஏற்கெனவே நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். அதுதான் இப்போது நடக்கிறது.

இது இன்னும் சில வாரங் களுக்கு நடந்த பிறகு, ஒரு ஏற்றத்தைச் சந்தை சந்திக்க வாய்ப்பிருக்கிறது. அதுவரைக்கும் அமைதியாக சந்தையை வேடிக்கைப் பார்ப்பதே நல்லது அல்லது நீண்ட கால நோக்கத்துக்குச் சிறிது சிறிதாக வாங்கலாம். ஆனால், ஷார்ட் போவது மட்டும் வேண்டவே வேண்டாம்.

தற்போதைய நிலையில் நிஃப்டியில் 5450 என்பது ஒரு பெரிய ரெசிஸ்டன்ஸாக இருக்கிறது. அந்த நிலையை தாண்டும்போது 5600 என்ற புள்ளியை அடையும். அதை தாண்டியபிறகுகூட சந்தை உடனே மேலே செல்லுமா என்றால், கிடையாது. அங்கேயே சிறிது காலம் நிலை பெறும். அப்போது சந்தையின் சப்போர்ட் நிலை 5450 என்ற நிலையில் இருக்கும். அதன்பிறகு மீண்டும் சந்தை மேலே செல்லும்போது 6000 புள்ளியை தாண்ட வாய்ப்பிருக்கிறது.

தற்போதைய நிலையில் சந்தை இன்னும் காளையின் பிடியில் இல்லை என்றாலும் அதை நோக்கித்தான் செல்கிறது. ஆனால், இதற்கு மாறாக பேங்க் நிஃப்டி காளையின் பிடியில் வந்துவிட்டது. பேங்க் நிஃப்டியின் சார்ட்டை பார்த்தால் ஏ,பி,சி, மூன்று முறை (வட்டம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது) சந்தை ஏறி இறங்கி இருக்கும். ஒருவேளை சரிவதாக இருந்தால், இந்த மூன்று தடவைகளில் எப்போதாவது சரிந்திருக்கும். ஆனால், சரியாமல் இருப்பதால் இனி மேலே செல்லவே வாய்ப்பு அதிகம். அந்த ஏற்றம் கடந்தமுறை நடந்த ஏற்றத்தின் அளவாக இருக்கலாம்.

அதாவது, 8000 புள்ளியில் இருந்து 11000 வரை ஏறியது போல (டிசம்பர் 11--பிப் 12 வரை) 3000 புள்ளிகள் உயரலாம்.

அல்லது தற்போது சதவிகித அடிப்படையில் பார்த்தால் 40 சதவிகித ஏற்றம் இருக்கலாம். எப்படி பார்த்தாலும் பேங்க் நிஃப்டி தற்போதைய 10,500 என்ற புள்ளியில் இருந்து குறைந்தபட்சம் 3,000 புள்ளிகள் வரை ஏற்றம் பெறலாம். ஆனால், பேங்க் நிஃப்டி மேலே சென்றால், நிஃப்டியும் மேலே செல்லும் என்று நினைக்க வேண்டாம். எதிர்மறையாகவும் நடக்க வாய்ப்பிருக்கிறது.

இனி கொண்டாட்டம்தான்!

ஒருவேளை சந்தை சரிந்தால் 5100 புள்ளிகள் வரை அதிகபட்சமாக சரியக்கூடும். அதை உச்சபட்ச சப்போர்ட் நிலையாக வைத்துக்கொண்டு முதலீடு செய்யலாம். பணவீக்கம், வர்த்தகப் பற்றாக்குறை, ரூபாய் மதிப்பு சரிவு போன்ற பல பிரச்னைகள் நாட்டில் இருந்தாலும், அந்த பிரச்னைகள் அனைத்தையும் மார்க்கெட் உள்வாங்கி கொண்டது. மேலும், சார்ட்டுகளும் சந்தை மேலே செல்வதற்கான அறிகுறிகளையே காட்டுகிறது.

இந்நிலையில், மூன்று பங்குகள் உடனடி ஏற்றத்துக்குத் தயாராக இருக்கிறது. முதலாவது, ஐ.டி.சி. காரணம், ரிலையன்ஸ் மீதும் இன்ஃபோசிஸ் மீதும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. இதன் காரணமாக அந்த பங்குகளில் இருந்து முதலீட்டை திரும்ப எடுத்து ஐ.டி.சி.யில் முதலீடு செய்வதாகவே தெரிகிறது. அதனாலேயே அந்த பங்கு மேலே போய்க் கொண்டிருக்கிறது. தற்போதைய விலையிலிருந்து 100 ரூபாய் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

அடுத்து, எல்.ஐ.சி. ஹவுஸிங் ஃபைனான்ஸ் மற்றும் ஹெச்.யூ.எல். பங்குகளிலும் முதலீட்டாளர்கள் ஒரு கண் வைக்கலாம். இந்த பங்குகளும் புல்லிஷாகவே இருக்கிறது.

பங்குச் சந்தை முதலீட்டாளர் கள் கடந்த சில ஆண்டுகளில் அனுபவித்த கஷ்டங்கள் இனி இருக்காது. அடுத்த ஐந்தாண்டுகள் முதலீட்டாளர்களுக்கு கொண்டாட்டமான ஆண்டு களாகவே இருக்கும் என்பது என் நம்பிக்கை'' என்று நச்சென பேசி முடித்தார் ஸ்ரீராம்.

சந்தை உயர ஆரம்பிக்கத் தயாராகி வருகிறது என்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது. இந்த ஏற்றத்தில் பங்கெடுத்துக் கொள்ள நம்மையும் தயார் படுத்திக் கொள்வோம்.  

-வா.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு