Published:Updated:

நீங்களும் அனலிஸ்ட்தான்!

டெக்னிக்கல் அனாலிசிஸ்

பிரீமியம் ஸ்டோரி
நீங்களும் அனலிஸ்ட்தான்!
நீங்களும் அனலிஸ்ட்தான்!

சென்ற வாரம் 'ட்ரிக்ஸ்’ சார்ட்டுகள் எந்த அடிப்படையில் போடப்படுகிறது என்று பார்த் தோம். இந்த வாரம் 'ட்ரிக்ஸ்’ சார்ட்டுகளை உபயோகிப்பது எப்படி என்று பார்ப்போம்.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

எம்.ஏ.சி.டி. (மூவிங் ஆவரேஜ் கன்வர்ஜன்ஸ் - டைவர்ஜன்ஸ்) சார்ட்டும், ட்ரிக்ஸ் சார்ட்டும்  கிட்டத்தட்ட ஒரே அடிப்படையைக் கொண்டு செயல்படுத்தப்படுவதுதான். இந்த இரண்டுமே மொமென்டம் ஆஸிலேட்டர்களாகும். '0’ லைனிற்கு மேலும் கீழுமாகப் போய் வருபவை இவை. எம்.ஏ.சி.டி.யை பற்றி கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்வோம்.

பொதுவாக, எம்.ஏ.சி.டி. சொல்லும் விஷயங்களை வைத்துக்கொண்டு எப்படி சந்தையின் போக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எம்.ஏ.சி.டி.யை கணக்கிட கீழே கொடுக்கப்பட்டுள்ள கணக்கீடுகளை செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.

1. முதலில் ஒவ்வொரு நாளின் விலைக்கான 12 நாள் எக்ஸ்போனென்ஷியல் மூவிங் ஆவரேஜை (இ.எம்.ஏ.-வை) கணக்கிட வேண்டும்.

2. இரண்டாவதாக  ஒவ்வொரு  நாளின் விலைக்கான 26 நாள் இ.எம்.ஏ.வை கணக்கிட வேண்டும்.

3. ஒவ்வொரு நாளின் விலைக் கான 26 நாள் இ.எம்.ஏ.-வை அந்த நாளின் விலைக்கான 12 நாள் இ.எம்.ஏ.விலிருந்து கழித்தால் ஒரு நம்பர் வரும். அந்த நம்பரைக் கொண்டு ஒரு சார்ட்டில் தொடர்கோடுடைய லைன் ஒன்றைப் போட வேண்டும். இதன் பெயர் எம்.ஏ.சி.டி. பாஸ்ட் லைன்.

4. இந்த எம்.ஏ.சி.டி. பாஸ்ட் லைனிற்கு (12 நாள் இ.எம்.ஏ.விலிருந்து 26 நாள் இ.எம்.ஏ.வை கழித்துவரும் தினசரி வித்தியாசத்திற்கு)       9 நாள் இ.எம்.ஏ. கண்டுபிடிக்க வேண்டும். இந்த 9 நாள் இ.எம்.ஏ.-வை ஒரு புள்ளியிட்ட கோடாக அதே சார்ட்டில் வரைந்தால் அதைத்தான் 'ஸ்லோ சிக்னல் லைன்’ என்பார்கள்.

அடுத்த பக்கம் கொடுக்கப் பட்டுள்ள நிஃப்டியின் எம்.ஏ.சி.டி. சார்ட்டில் கறுப்பு நிற லைன், 'எம்.ஏ.சி.டி. பாஸ்ட் லைன்’. சிவப்பு நிற லைன் 'ஸ்லோ சிக்னல் லைன்’. அடுத்த பக்கம் கொடுக்கப்பட்டுள்ள நிஃப்டியின் 'ட்ரிக்ஸ்’ சார்ட்டில் கறுப்பு நிறத்தில் இருப்பது 'ட்ரிக்ஸ் லைன்’. சிவப்பு நிறத்தில் இருப்பது சிக்னல் லைன். என்ன? இரண்டு சார்ட்டும் ஒரே மாதிரிதானே இருக்கிறது என்கிறீர்களா?

நீங்களும் அனலிஸ்ட்தான்!
##~##
பார்வைக்கு இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தாலும் எம்.ஏ.சி.டி. சார்ட்டில் நிறையவே நெளிவுகள் இருக்கிறது. அதே நேரத்தில் 'ட்ரிக்ஸ்’ சார்ட் மிகவும் நேரானதாக, அதாவது நெளிவுகள் குறைவானதாக இருக்கிறது. 'ட்ரிக்ஸ்’ லைன் நெளிவுகள் குறைவாக இருப்பதால் திருப்பங்கள் சற்று லேட்டாகத்தான் வரும். சார்ட்டுகள் எப்படி ஒரே மாதிரி இருக்கிறதோ, அதேபோல்தான் அது தரும் சிக்னல்களும் பலன்களும்.

'ட்ரிக்ஸ்’ சார்ட்டில் மூன்று முக்கிய சிக்னல்களை கண்காணிக்க வேண்டியிருக்கும். முதலாவது சிக்னல், சிக்னல் லைன் (சிவப்பு லைன்) ட்ரிக்ஸ் லைனை கிராஸ் செய்யும் தருணங்கள் - சிக்னல் லைன் கிராஸ் ஓவர் என்று சார்ட்டில் காட்டப்பட்டுள்ளது. இப்படி சிக்னல் லைன், ட்ரிக்ஸ் லைனை கிராஸ் செய்யும்போது ட்ரிக்ஸ் லைனின் திசையும் விலை மாறுதலில் இருக்கும் வேகமும் மாறுபட்டுக் கொண்டிருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

ட்ரிக்ஸ் லைன் சிக்னல் லைனை கீழிருந்து மேலாக கிராஸ் செய்கிறதா அல்லது மேலிருந்து கீழாக கிராஸ் செய்கிறதா என்பதைக் குறித்து சந்தையின் போக்கிலிருக்கும் மாற்றத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். சிக்னல் லைனைத் தாண்டி ட்ரிக்ஸ் லைன் மேலே போனால் சந்தை புல்லிஷாக மாறிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம் செய்துகொள்ள வேண்டும். சிக்னல் லைனைத் தாண்டி ட்ரிக்ஸ் லைன் கீழே போனால் சந்தை பியரிஷாக மாறிக் கொண்டுள்ளது என்று அர்த்தம் செய்து கொள்ள வேண்டும்.

இரண்டாவது சிக்னல், ட்ரிக்ஸ் லைன் சென்டர் லைனை மேலும் கீழுமாக கிராஸ் செய்யும்போது கிடைப்பது. நிஃப்டி - ட்ரிக்ஸ் சார்ட்டில் சென்டர் லைன் பச்சை நிறத்தில் தரப்பட்டுள் ளது. ட்ரிக்ஸ் லைன் (கறுப்பு நிறம்) இந்த சென்டர் லைனைத் தாண்டி மேலே போகும் போதெல்லாம் சந்தை ஏற்றத்தைச் சந்தித்துள்ளதையும், இறங்கும் போதெல்லாம் சந்தை இறக்கத்தைச் சந்தித்துள்ள தையும் நிஃப்டி-தினசரி லைன் சார்ட்டில் பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறதல்லவா?

மூன்றாவது சிக்னல், புல்லிஷ் மற்றும் பியரிஷ் டைவர்ஜன்ஸ்கள் (விலகிச் செல்லுதல்) ஆகும்.

முதலாவது சிக்னலான ட்ரிக்ஸ் லைன் சிக்னல் லைனை கிராஸ் செய்வது மிக முக்கியமான மற்றும் அடிக்கடி நடக்கும் நிகழ்வாகும். சிக்னல் லைன் என்பது ட்ரிக்ஸ்ஸின் ஒன்பது நாள் எக்ஸ்போனென்ஷியல் மூவிங் ஆவரேஜ் (இ.எம்.ஏ.). சிக்னல் லைன் ஒரு மூவிங் ஆவரேஜ் லைனாக இருப்பதால், எப்போதுமே அது ட்ரிக்ஸ் லைனை பின்பற்றியே செல்வதாக (ட்ரெயிலிங்) இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் நிலைமை மாறினால் நிலைமை எந்த மாதிரி மாறுகிறது என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் சுலபமானதாக இருக்கும்.

உதாரணத்திற்கு, சந்தை ஒரு உயரத்தை அடைந்த பின்னர் இறங்க ஆரம்பித்தால் சிக்னல் லைன் மேலேயும் ட்ரிக்ஸ் லைன் கீழேயுமாக சென்று கொண்டிருக்கும். ஏனென்றால் ட்ரிக்ஸ் உடனடி விலை மாறுதல்களை எடுத்துக் கொள்ளும். ஆனால், சிக்னல் லைனோ ஒன்பது நாள் ஆவரேஜை (இ.எம்.ஏ.) எடுத்துக் கொண்டு போடப்படுவதாகும். எனவே, இன்றைக்கு விலை தாறுமாறாக இறங்கி ட்ரிக்ஸ் லைன் கீழே இருந்தால் கடந்த ஒன்பது நாள் இருந்த விலைகளைக் கொண்டு போடப்படும் சிக்னல் லைன் மேலேயேதான் இருக்கும்.

இப்படி கொஞ்சம்         கொஞ்சமாக கீழே போகும் சிக்னல் லைன் திடீரென்று மேலே திரும்பி சிக்னல் லைனைத் தாண்டிப் போன தென்றால், இறக்க நிலை மாறி சந்தை மேலே போகக்கூடிய ஒரு திருப்ப நிலையை அடைந் துள்ளது என்று சொல்லலாம் இல்லையா? அதனால்தான் சிக்னல் லைனைத் தாண்டி ட்ரிக்ஸ் லைன் மேலே போனால் அதை புல்லிஷ் கிராஸ் ஓவர் என்றும், சிக்னல் லைனைத் தாண்டி ட்ரிக்ஸ் லைன் கீழே போனால் அதை பியரிஷ் கிராஸ் ஓவர் என்றும் சொல்கின்றோம்.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

இதுபோன்று நடக்கும் கிராஸ் ஓவர்கள் சில நாட்களுக்கோ அல்லது சில வாரங்களுக்கோ கிராஸ் செய்து போன திசையி லேயே (புல்லிஷாகவோ/பியரிஷாகவோ) இருந்து விடலாம். எவ்வளவு நாட் களுக்கு அந்த கிராஸ் ஓவர் ஆன ட்ரெண்ட் தொடரப் போகிறது என்பது எந்த அளவுக்கு வேகமான மற்றும் திடமான கிராஸ் ஓவர் நடந்தது என்பதைப் பொறுத்தே அமைவதாக இருக்கும். எனவே, அடிக்கடி சிக்னல் லைனைத் தாண்டி ட்ரிக்ஸ் லைன் போய் வந்தால் கொஞ்சம் எச்சரிக்கையுடன் சந்தையில் பொசிஷன்களை எடுக்க வேண்டியிருக்கும். ஏனென்றால், ஒவ்வொரு கிராஸ் ஓவரும் எந்த அளவு பலத்துடன் நடந்துள்ளது என்பதைக் கணித்த பின்னரே பொசிஷன்கள் எடுக்கப்பட வேண்டும். ஒரு ஷேர் மிகவும் வாலட்டைலாக இருந்தால் அந்த ஷேரில் அடிக்கடி இந்த கிராஸ் ஓவர்கள் நடந்தபடியே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சென்டர் லைன் கிராஸ் ஓவர் என்பது '0’ லைனைத் தாண்டிச் செல்வதைக் குறிக்கும். இந்த சென்டர் லைன் என்பது கிட்டத்தட்ட புல்-பியர்கள் இடையே நடக்கும் சண்டையில் இருவரின் பலமும் சமமாக இருக்கும் நிலைமையில் அமைவது. இந்த சமபல சூழ்நிலையைத் தாண்டி மேலே போனால் புல்களின் கை ஓங்குகிறது என்றும், கீழே போனால் பியர்களின் கை ஓங்குகிறது என்றும் அர்த்தம். சிக்னல் லைனைப் போலவே இந்த கிராஸ் ஓவரிலும் சில தவறான சிக்னல்கள் கிடைக்கலாம். அதாவது, ஒரு வாலட்டைல் ஷேரில் அடிக்கடி '0’ லைன் கடக்கப்படலாம்.

டைவர்ஜன்ஸ் என்பது ஷேரின் விலை புதிய தொரு குறைவான விலை யில் முடிவடைந்தும், இண்டிகேட்டர் ஏற்கெனவே குறைவாக இருந்த லெவலைவிட சற்று அதிகமாகவும் இருந்தால் வருவதாகும். இச்சூழ்நிலையை 'புல்லிஷ் டைவர்ஜன்ஸ்’ என்று அழைப்பார்கள். அதாவது, ஷேரின் விலைதான் இறங்குகிறதே தவிர அந்த இறக்கத்திற்கான பின்புலம் பலமானதாக இல்லை. எந்த நேரமும் அந்த ஷேரின் விலை ஏறிவிடலாம் என்று அர்த்தம் செய்து கொள்ள வேண்டும்.

அதேபோல் ஷேரின் விலை தற்போதைய சூழலில் புதிய ஹை-யையும், இண்டிகேட்டர் தற்போதைய சூழலில் இருந்த ஹை-யைவிட குறைவாகவும் காண்பித்தால் அதற்கு 'பியரிஷ் டைவர்ஜன்ஸ்’ என்று அர்த்தம். அதாவது, ஷேரின் விலைதான் ஏறுகிறதே தவிர அதன் பின்புலம் ஒன்றும் பலமானதாக இல்லை. எனவே, எப்போது வேண்டுமென்றாலும் விலை இறங்கலாம் என்று அர்த்தம் செய்து கொள்ள வேண்டும்.

இந்த மூன்று சிக்னல்களிலுமே சில சமயம் வலுவில்லாத ஒரு சூழ்நிலை வந்துவிடலாம். வலுவில்லாத ஒரு சிக்னலை நம்பி பொசிஷன் எடுத்துவிடும் வாய்ப்பு ஒவ்வொரு டிரேடருக்கும் எப்போதும் இருக்கவே செய்கிறது. ஒரு பொறுப்பான டிரேடராக ஸ்டாப்லாஸை சரியாகப் போட்டு, குறைந்த நஷ்டத்தில் வெளிவரத் தெரிந்தால் மட்டுமே ஷேர் டிரேடிங்கில் வெற்றி காண முடியும். மற்றுமொரு முக்கியமான டெக்னிக்குடன் அடுத்த வாரம் சந்திப்போம்.

(வளரும்)

நீங்களும் அனலிஸ்ட்தான்!
நீங்களும் அனலிஸ்ட்தான்!

எட்டாத விஷயத்துக்கு கனவு காணுங்கள்!

சி.என்.என். உலகின் பிரபலச் சானல். இதை நிறுவிய டெட் டர்னர்-ன் பிஸினஸ் தத்துவம் இதுதான்.

'நம்மால் முடியவே முடியாது என்கிற விஷயங்களைப் பற்றித்தான் கனவு காண வேண்டும். அபோதுதான் மேலும் மேலும் முன்னேற முடியும். நினைத்தது நடந்துவிட்டால், மனம் திருப்தி அடைந்துவிடும். இந்த திருப்தி தொடர் முன்னேற்றத்துக்கான உந்துதல் சக்தியின் எதிரி.''

- அத்வைத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு