Published:Updated:

கம்பெனி அலசல் - கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா!

கம்பெனி அலசல் - கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா!

பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி அலசல் - கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா!

இந்த வாரம் நாம் அலசப்போகும் கம்பெனி, கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (கெயில்). நவரத்னா அங்கீகாரம் பெற்ற அரசு நிறுவனம் இது. 1984-ல் 1,700 கோடி ரூபாய் செலவில் ஹசிரா, விஜய்பூர், ஜெக்திஷ்பூர் என்ற ஊர்களுக்கு நடுவே 1,800 கிலோமீட்டர் தூரத்திற்கு நிறுவப்பட்ட திட்டத்தில், இயற்கை எரிவாயுவை எடுத்துச் செல்லும் பைப் லைனை நிர்வகிக்கும் பொறுப்பு கெயில் வசம் ஒப்படைக்கப்பட்டது.

##~##
ந்த திட்டம்தான் இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் பயன்பாட்டிற்கு  அடித்தளமிட்டது. எண்பதுகளில் இப்படி இயற்கை எரிவாயுவை எடுத்துச் செல்லும் பைப்களை நிர்மாணித்து நிர்வகிப்பதற்காக நிறுவப்பட்ட கெயில் இன்றைக்கு 8,500 கி.மீ தூரத்திற்கான இயற்கை எரிவாயுவை எடுத்துச்செல்லும் பைப் லைன்களையும், 1,900 கி.மீ தூரத்திற்கான எல்.பி.ஜி. எடுத்துச் செல்லும் பைப் லைன்களையும், ஏழு எல்.பி.ஜி. பிராஸஸிங் பிளான்டையும், கேஸை எரிபொருளாகக் கொண்ட பெரியதொரு பெட்ரோகெமிக்கல் காம்ப்ளெக்ஸையும் தன்னிடத்தே கொண்டு பெரியதொரு ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது .

இதுவும் தவிர கேஸ் டிஸ்ட்ரிபியூஷன், கிராக்கிங் மற்றும் பாலிமர் தயாரிப்புக்காக பல துணை நிறுவனங்களை சொந்தமாகவும், பல கம்பெனிகளுடன் சேர்ந்து கூட்டாகவும் அமைத்து கேஸ் தொடர்பான பல தொழில்களை செய்து வருகிறது.

தொழில் எப்படி?

இந்தியாவைப் பொறுத்த வரை கேஸ் சப்ளை என்பது கடுமையான தட்டுப்பாடு என்ற நிலைமை, கிருஷ்ணா, கோதாவரி பேசின் நடைமுறைப்படுத்தப் பட்டதிலிருந்து மாறி வந்துள்ளது. தற்போதிருக்கும் கேஸ் எடுத்துச் செல்லும் பைப் லைன் நெட்வொர்க்குகள் குஜராத் மற்றும் மஹாராஷ்ட்ரா விலேயே இருக்கின்றன. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள், இந்த இரண்டு மாநிலங்களும் கேஸ் கிடைக்கும் இடத்திற்கு மிக அருகாமையில் இருப்பதும், அதிக உபயோகிப்பாளர்களைக் கொண்டிருப்பதுமாகும். இதையும் தவிர்த்து இரண்டு எல்.என்.ஜி. டெர்மினல்களும் மேற்கு கடற்கரையிலேயே இருப்பதாலும்  இந்த இரண்டு மாநிலங்களிலும் கேஸ் உபயோகம் மிக அதிகளவில் இருந்து வருகிறது.

நாட்டின் மத்திய, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கேஸ் நெட்வொர்க்கும் இல்லை; அதனால் உபயோகமும் அவ்வளவாக இல்லை.  இந்தியாவில் எல்.என்.ஜி-யை மிக அதிகளவில் (சுமார் 70%) உபயோகப்படுத்துவது உரம் தயாரிக்கும் நிறுவனங்களும்,  மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுமே ஆகும். உரம், மின்சாரத்துக்கான தேவை அதிகரித்துக் கொண்டே போவதால் எல்.என்.ஜி-யின் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

கே.ஜி. பேசினில்

கிடைக்கும் கேஸ் அளவு அதிகரிக்க அதிகரிக்க கெயிலிற்கு கேஸை ஓரிடத் திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லும் வாய்ப்பு களும் அதிகரித்தே தீரும். இதை கருத்தில் கொண்டே கேஸ் பைப் லைன்களை நிர்வகித்து வரும் கம்பெனிகள் அடுத்த இரண்டு வருடத்தில் வேகமானதொரு வளர்ச்சிக்குத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.

கம்பெனி எப்படி?

கெயில் நிறுவனமானது இயற்கை எரிவாயுவை  எடுத்துச் செல்வது மற்றும் வர்த்தகம், பெட்ரோ கெமிக்கல் தயாரிப்பு, எல்.பி.ஜி. மற்றும் திரவநிலை ஹைட்ரோகார்பன்கள் உற்பத்தி, நகர்ப்புற கேஸ் டிஸ்ட்ரிபியூஷன் என்ற நான்கு முக்கிய பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. தற்சமயம் கிட்டத்தட்ட 8,500 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்.என்.ஜி. கேஸ் எடுத்துச் செல்லும் பைப் லைன்களை நிர்மாணித்து நிர்வகித்துவரும் கெயில் அடுத்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட 14,000 கிலோ மீட்டர் என்ற இலக்குடன் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் 4,10,000 டன் பாலிமர்களை உற்பத்தி செய்யும் வசதிகளைக் கொண்டுள்ள கெயில் இன்னும் 1,00,000 டன் உற்பத்தியை அதிகரிக்க தேவையான விரிவாக்கங்களைச் செய்து வருகிறது. வாகனங்களுக்குத் தேவையான சி.என்.ஜி. (கம்ப்ரைஸ்டு நேச்சுரல் கேஸ்) மற்றும் வீடுகளில் உபயோகிக்கப்படும் பி.என்.ஜி. (பைப்டு நேச்சுரல் கேஸ்) போன்றவற்றிலும் முக்கிய அங்கம் வகித்து வருகிறது.

கம்பெனி அலசல் - கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா!

இதுவும் தவிர, டெல்லியில் செயல்பட்டுவரும் இந்திர பிரஸ்தா கேஸ், மும்பையில் மஹாநகர் கேஸ், ஆந்திரப் பிரதேசத்தில் பாக்யாநகர் கேஸ், மத்திய பிரதேசத்தில்  அவந்திகா கேஸ், உத்தரப்பிரதேசத்தில் இரண்டு கம்பெனிகளான சென்ட்ரல் யூ.பி. மற்றும் கிரீன் கேஸ், புனேயில் மஹாராஷ்ட்ரா நேச்சுரல் கேஸ், திரிபுராவில்  திரிபுரா நேச்சுரல் கேஸ் போன்ற கம்பெனிகளிலும் முக்கிய முதலீடுகளைச் செய்துள்ளது கெயில்.

மேலும், சீனா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடு களிலும் விரிவாக்கங்களைச் செய்து வரும் கெயில் நிறுவனம் தனது விற்பனையிலும் லாபத் திலும் முறையே 13 மற்றும் 14 சதவிகித ஆண்டு கூட்டு வளர்ச்சியை கடந்த பத்து ஆண்டுகளில் தொடர்ந்து கண்டு வந்திருக்கிறது.

இயற்கை எரிவாயுவை  ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டுசெல்லும் தொழிலில் கிட்டத்தட்ட        80 சதவிகித மார்க்கெட் ஷேரை வைத்துள்ளது. முதலீடுகள் மிகவும் அதிகம் தேவைப்படும் இத்தொழிலில் இரண்டாவதாக ஒரு நெட்வொர்க்கை நிறுவி தொழில் செய்வது சாத்தியம் இல்லாத விஷயமாகும். எனவே, கெயிலிற்கு போட்டி என்பது அவ்வளவு சுலபமாக வர வாய்ப்பில்லை.

கெயிலிற்கு இருக்கும் முக்கிய அனுகூலம் கேஸ் டிரான்ஸ்மிஷன் மற்றும் டிஸ்ட்ரிபியூஷன் தொழிலில் அனைவருக்கும் முன்னதாகவே இறங்கி, அதிகபட்ச மார்க்கெட் ஷேரை தக்க வைத்துக் கொண்டிருப்பதே.  இதைக் கொண்டு புதிய, பெரிய புராஜெக்ட்களைப் போட்டு லாபம் பார்க்க இந்நிறுவனத்துக்கு வாய்ப்புகள் அதிகம்.

கம்பெனி அலசல் - கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா!


ரிஸ்க் ஏதும் உண்டா?

உலக அளவில் யுட்டிலிட்டி தொழில் (மின்சாரம், போக்குவரத்து, கேஸ் போன்றவை) எல்லா கால கட்டத்திலுமே அரசாங்க கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட தாகவே இருக்கும்.  அந்த வகையில் கெயிலின் தொழிலாகிய நேச்சுரல் கேஸ் டிரான்ஸ்மிஷன்  அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டே நடத்தப்பட வேண்டும். அரசாங்கம் மற்றும் ரெகுலேட்டர்களால் லாபத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டால், இத்தொழிலில் நல்ல லாபம் பார்க்க முடியாது.

கேஸ் டிரான்ஸ்மிஷன் பைப் லைன்களை நிறுவுவது என்பது நீண்ட நாட்களில் செய்து முடிக்க வேண்டிய விஷயம். புராஜெக்ட் வேலைகளில் கால தாமதமானால், ஏகப்பட்ட சிக்கல்களும் லாபக் குறைவு களும் வரலாம்.

போட்டி கம்பெனிகளின் வரத்தும் லாபத்தைக் குறைக் கலாம். உதாரணமாக, ரிலையன்ஸ்  இண்டஸ்ட்ரிஸ் கே.ஜி. பேசினிலிருந்து எடுக்கும் கேஸை கொண்டு செல்ல ஈஸ்ட்-வெஸ்ட் பைப் லைனை நிறுவிக் கொண்டது. இருப்பினும் இந்த ஒரே ஒரு ஏரியாவில் மட்டுமே ரிலையன்ஸ் இருப்பதால் பெரியதொரு இழப்பு இல்லை.

இந்தியன் ஆயில் போன்ற கம்பெனிகள் இத்தொழிலில் இறங்கினால் நிச்சயம் போட்டி அதிகரிக்கவே செய்யும்.  தவிர, பொருளாதார மந்த நிலை வந்தாலும் கெயிலின் தொழிலுக்கு நேரடி பாதிப்பு  ஏற்படவே செய்யும்.

ஆனாலும், தொழில்  திறமையும், நீண்ட அனுபவமும் இந்நிறுவனத்துக்கு இருப்பதால் வாசகர்கள் இந்த பங்கினை தங்கள் போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதுதான் எங்கள் டீமின் பரிந்துரை.

-நாணயம் டீம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு