Published:Updated:

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் அபார உயர்வு!

விகடன் விமர்சனக்குழு
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ்  புள்ளிகள் அபார உயர்வு!
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் அபார உயர்வு!
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ்  புள்ளிகள் அபார உயர்வு!

மும்பை: மும்பை பங்குச் சந்தையில், இன்று மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 108 புள்ளிகள் ஏற்றத்துடன், 21,141 என்ற புதிய உச்சத்தை எட்டியது.

அமெரிக்க நிலவரம் மற்றும் அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு அதிகரிப்பு போன்ற காரணங்களால், நேற்று வரலாறு காணாத அளவிற்கு, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 21,034 புள்ளிகளாக உயர்ந்தது.

அதேப்போன்று தேசியப்பங்குச் சந்தையிலும் நிஃப்டி 30 புள்ளிகள் அதிகரித்து, 6,251 புள்ளிகளில் நிலைகொண்டது.

கடந்த 2010 நவம்பர் 5 ஆம் தேதி 'சென்செக்ஸ்' அதுவரை இல்லாத அளவிற்கு 21,004.96 புள்ளிகளாக அதிகரித்து இருந்தது. நேற்று ‘சென்செக்ஸ்’ இந்த சாதனை அளவையும் விஞ்சியது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முன்னேற்றத்தால் சென்ற மூன்று மாதங்களாக நாட்டின் ஏற்றுமதியில் இரட்டை இலக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 30 மாதங்களில் இல்லாத அளவிற்கு 676 கோடி டாலராக குறைந்தது.

எனவே, நடப்பு 2013–14–ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 7,000 கோடி டாலராக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயரலாம் என்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு உயர்ந்து வருகிறது.

இதுபோன்ற காரணங்களால் மருந்து, நுகர்பொருள், மின்சாரம், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது.

சென்செக்ஸ் புள்ளிகளை கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள்  அதிக பங்களிப்பை கொண்டுள்ள ஐ.டி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பார்தி ஏர்டெல், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், பி.எச்.இ.எல். ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை மிகவும் உயர்ந்தது.

##~~##
இந்நிலையில் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாகவும், மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் ஏற்றமுடன் காணப்பட்டது.

வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே ஏறுமுகமாக காணப்பட்ட சென்செக்ஸ், மாலையில் வர்த்தகம் முடிவடையும்போது 108 புள்ளிகள் ஏற்றத்துடன் 21,141 ல் நிலைகொண்டது. இது நேற்றைய சாதனையை முறியடித்த புதிய உச்சமாகும்.

அதேப்போன்று தேசியப்பங்குச் சந்தையில் நிஃப்டி 47 புள்ளிகள் உயர்வுடன், 6,299 ல் நிலைகொண்டது.