டெக்னிக்கல் அனாலிசிஸ்


ஒவ்வொரு டிரேடரின் மனதிலும் இருக்கும் கேள்வி, ஒரு டிரேடிங் தினத்தில் ஒரு ஷேரை எந்த நேரத்தில் வாங்கி எந்த நேரத்தில் விற்க வேண்டும் என்பதுதான். நாள் முழுவதும் ஷேர்கள் பல விலைகளில் வியாபாரமாகின்றன.
##~## |
நல்ல டிரேடர் என்பவர் ஒரு தினத்தின் ஹை-யில் வாங்கி லோ-வில் விற்பவரோ அல்லது ஹை-யில் விற்று லோ-வில் வாங்குபவரோ அல்ல. ஏனென்றால் விலைகள் எப்படிப் போகும் என்பதை ஒருவராலும் சுலபமாகக் கணித்துவிட முடியாது. அதிலும் ஒரு நாளைய ஹை மற்றும் லோ-வைக் கணிப்பது அதனினும் சிரமமானது. சந்தை தரும் வாய்ப்புகளை ஓரளவுக்கு கணிக்க உதவுவதுதான் டெக்னிக்கல் அனாலிசிஸ். ஓரளவுக்கு என்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாய் புரிந்து கொள்ளுங்கள்.
டெக்னிக்கல் அனாலிசிஸை வைத்துக்கொண்டு ஒரு பொதுவான டிரெண்டை அறிந்துகொள்ள முடியுமே தவிர, இதற்கு அடுத்தது இந்த விலைதான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. சந்தை என்பது ஏகப்பட்ட மாறுபட்ட செய்திகளையும் நுணுக்கமான பல டேட்டாக்களினால் ஏற்படும் பாதிப்புகளையும் உள்ளடக்கிச் செயல்படுவது. சந்தை குறித்த செய்திகள் அனைத்தும் சந்தையில் வியாபாரம் செய்யும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் தெரிவதில்லை என்பது திட்ட வட்டமான உண்மை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
உடனே இன்சைடர் டிரேடிங் என்று எடை போடாதீர்கள். உதாரணத்திற்கு, கிரீஸ் நாட்டில் நடக்கும் ஒரு விஷயம் நம்முடைய சந்தையை எந்த அளவிற்கு பாதிக்கும். அதிலும், குறிப்பாக கிரீஸினால் பாதிக்கப்படும் எஃப்.ஐ.ஐ.கள் என்னென்ன, அவை எந்தெந்த ஷேர்களில் பெரிய அளவில் முதலீடு செய்திருக்கின்றன, அதில் எந்த ஷேரை முதலில் விற்கும் என்பதெல்லாம் டெக்னிக்கல் சார்ட்டில் தெரியாது. தெரியும் என்று அனலிஸ்ட்கள் பலர் வாதிட்டாலும் அதைக் கேட்டுக்கொண்டு அமைதியாக உங்களைச் சுற்றி இருக்கும் விஷயங்களைப் புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.

சந்தையின் போக்கை அறிந்துகொள்ள டெக்னிக்கல் அனாலிசிஸ் பல்வேறுவிதமான டூல்களைத் தருகிறது. இவற்றில் பலவற்றை தனித்தனியாகவும், ஒன்றோடொன்று சேர்த்தும் உபயோகித்து ஆராய்ந்து பார்க்கலாம். டெக்னிக்கல் அனாலிசிஸில் சந்தையின் போக்கை அறிய ஒரு சிங்கிள் டெக்னிக் என்பது எந்த காலகட்டத்திலும் நிலையாக இல்லை. இன்றைக்கு மிகவும் பாப்புலராகவும், சரியானதா கவும் இருக்கிற ஒன்று நாளைக்கு உபயோகமில்லாமல் போய்விடும். இதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
என்னடா இது, 61 வாரம் கழித்து இப்படிச் சொல்கிறாரே என்று நினைக்காதீர்கள். டெக்னிக்கல் அனாலிசிஸ் என்பது சந்தையின் போக்கை அறிய உபயோகமாகும் ஒரு கலை. அதற்குண்டான மதிப்பை அதற்கு கொடுக்கத்தான் வேண்டும். அதனை எந்த அளவு நம்ப வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் இதனை அழுத்தந்திருத்தமாகச் சொல்ல வேண்டியுள்ளது.

டெக்னிக்கல் அனாலிசிஸை வைத்துக் கொண்டு உங்களுடைய டிரேடிங்கை நீங்கள் செழுமைப்படுத்திக் கொள்ளலாமே தவிர 100 சதவிகித வெற்றிக்கு வழிவகுக்க முடியாது.
வெளியூருக்கு காரில் புறப்படுகிறீர்கள். கையில் மேப் ஒன்றையும் எடுத்துக்கொண்டு போகிறீர்கள். மேப்பில் என்.ஹெச். என்று போட்டிருக்கும் ரோட்டில் வண்டியை விடுகிறீர்கள். ரோடு அடுத்த 10 கிலோ மீட்டருக்கு நேராகச் செல்கிறது என்று மேப் சொல்கிறது. நேராத்தானே போகிறது என்று கண்ணை மூடிக்கொண்டா வண்டியை ஓட்ட முடியும்? இல்லையே! கண்ணும் கருத்துமாய் ரோட்டின் மீது கவனம் வைத்துத்தானே செல்கிறோம்.
ஏனென்றால், முன்னால் செல்லும் வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கிடக்கலாம்; அன்றைக்குப் பெய்த மழையில் வந்த காட்டாற்று வெள்ளத்தில் ரோடே அடித்துச் சென்றிருக்கலாம்; ரோட்டில் மரம் விழுந்து கிடக்கலாம்; ரோடு குண்டும்குழியுமாகத் தோண்டப்பட்டு இருக்கலாம் என பலவிதமான சூழ்நிலைகளை எதிர்பார்த்துத்தானே வண்டியை ஓட்டுகிறீர்கள்.
அதேபோல்தான் சந்தையிலும். டெக்னிக்கல் என்பது மேப்பை கையில் எடுத்துக்கொண்டு சந்தைக்குள் பயணிக்கிறீர்கள். சாலைப் பயணத்தின் போது மழை, வெயில், மரம் என பலவிஷயங்களை உங்கள் கண்முன்னால் பார்த்து அதற்கேற்ப வண்டியை ஓட்ட வேண்டியிருப்பதைப் போல, சந்தைப் பயணத்திலும் பல்வேறுவிதமான சூழ்நிலைகளை அனுசரித்தே வியாபார வண்டியை ஓட்ட வேண்டியிருக்கும்.
இந்தத் தொடரில் பல்வேறு வகையான டெக்னிக்குகளை உங்களுக்குக் கொடுத்துள்ளேன். இந்த மேப்பை வைத்துக்கொண்டு மெதுவாக உங்கள் டிரேடிங் வாகனத்தை சந்தைச் சாலையில் ஓட்டிச் செல்லுங்கள். ஒரு முறைக்கு இருமுறை எல்லாத் திசைகளிலும் பார்த்து குறைவான வேகத்தில் (அளவில்) டிரேடிங் செய்து பழகுங்கள். நன்றாகப் பழகிய பின்னர் இந்த டெக்னிக்குகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து எப்படி சந்தையைக் கணிப்பது என்று பார்ப்போம்.
பழகுநராக இருக்கும் நீங்கள் அனுபவஸ்தராக மாறும்போது உங்களுக்கு இந்த டெக்னிக்குகள் ஓரளவுக்கு அத்துபடியாகி இருக்கும். அந்தச் சமயத்தில் அட்வான்ஸ்டு டெக்னிக்கல் அனாலிசிஸுடன் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.
(நிறைவு பெற்றது)