மியூச்சுவல் ஃபண்ட்
Published:Updated:

கம்பெனி அலசல் - சிட்டி யூனியன் பேங்க்!

கம்பெனி அலசல் - சிட்டி யூனியன் பேங்க்!

கம்பெனி அலசல் - சிட்டி யூனியன் பேங்க்!

நூறு ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக செயல்பட்டு வரும் வங்கியான சிட்டி யூனியன் வங்கியைத்தான் இந்த வாரம் நாம் அலசப் போகிறோம். இந்த வங்கியின் செயல்பாடு உள்ளிட்ட பல தகவல்களை பார்ப்பதற்கு முன்பு வங்கித் துறை இன்றைக்கு எப்படி இருக்கிறது என்பது பற்றி பார்த்துவிடுவோம்.

துறை எப்படி?

##~##
உலகின் எந்த பொருளாதாரத் துக்கும் ஆதாரம் வங்கிகள்தான். அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இப்போதைக்கு 27 பொதுத் துறை வங்கிகள், 22 தனியார் வங்கிகள், 31 வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் இருக்கிறது. இவை தவிர கூட்டுறவு வங்கிகள், ஊரக வங்கிகள் போன்றவை இருந்தாலும் புதிதாக தனியார் வங்கிகள் தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத் திருப்பதன் மூலம் இந்தியாவில் வங்கிகளுக்கான தேவையையும், அதற்கான எதிர்காலத்தையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.

தற்போதைய நிலையில் பாதிக்கு மேற்பட்ட இந்தியர் களுக்கு வங்கிக் கணக்கு இல்லை. அதாவது, வங்கித் துறை இன்னும் வளர்வதற்கு இந்தியாவில் நிறைய வாய்ப்பு இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

வங்கியின் வரலாறு!

சில வருடங்களைக்கூட கடக்க முடியாமல் பல நிறுவனங் கள் தடுமாறி இருக்கிறது. ஆனால், நூறு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இந்த வங்கி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கும்பகோணம் வங்கி லிமிடெட் என்கிற பெயரில் 1904-ம் ஆண்டு இந்த வங்கி ஆரம்பிக்கப்பட்டது. அதன்பிறகு காமன்வெல்த் பேங்க் லிமிடெட், தி சிட்டி பார்வேர்ட் லிமிடெட், தி யூனியன் பேங்க் லிமிடெட் என பல வங்கிகளை தன்னுடன் இணைத்து கும்பகோணம் சிட்டி யூனியன் பேங்க் என்று பெயர் மாற்றப்பட்டது. 1987-ம் ஆண்டு சிட்டி யூனியன் வங்கி என்று பெயர் மாற்றப்பட்டது.

இந்த வங்கி துவங்கி சுமார் அறுபது வருடம் வரை தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே கிளைகளைத் தொடங்கி நடத்தி வந்தது. சென்னையில் 1965-ம் ஆண்டு கிளை தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டை தவிர்த்து முதல் கிளை பெங்களூரில் 1980-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

செயல்பாடு!

தற்போதைய நிலையில் முன்னூறுக்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளும், ஐநூறுக்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.களும் இருக்கின்றன. இந்த வங்கியின் 87 சதவிகித பிஸினஸ் தென் இந்தியாவில் இருந்துதான் கிடைக்கிறது. தற்போதைய நிலையில் 3,000 பணியாளர்கள் இருக்கிறார்கள். குறைந்த பணியாளர்களை வைத்து அதிக வருமானம் ஈட்டுவதில் வங்கித் துறையில் சிட்டி யூனியன் வங்கி முன்னணியில் இருக்கிறது. மொத்த வருமானத்தில் 10 சத விகிதத்துக்குள் பணியாளர் களுக்காக செலவாகிறது.

2001-ம் ஆண்டில் இருந்து 2009-ம் ஆண்டுவரை கூடுதலாக பணியாளர்களை எடுக்காமல், ஏழு மடங்கு இந்த வங்கி வளர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சிக்குக் காரணம், இந்த இடைப்பட்ட காலத்தில் தொழில்நுட்பத்தை இந்த வங்கி நன்கு பயன்படுத்தியதே. புரமோட்டர்கள் இல்லாமல் புரபஷனல்களால் நடத்தப்படும் வங்கி இது. மேலும், இந்த வங்கியின் செயல்பாடு மற்றும் சேவை காரணமாக மூன்று தலைமுறைக்கும் மேலாக வாடிக்கையாளர்கள் கணிசமாக இருக்கிறார்கள்.

நிதி நிலைமை!

கடந்த பத்து வருடங்களில் இந்த வங்கியின் நிகர லாபம் பத்து மடங்கு அதிகரித்திருக் கிறது. இந்த ஒரு புள்ளிவிவரமே  இந்த வங்கியின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது நமக்கு தெளிவாகக் காட்டும்.

ஆரம்ப காலம் முதல் இதன் பங்குதாரர்களாக இருந்தவர்களுக்கு தலைமுறை தலைமுறையாக டிவிடெண்ட் கிடைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் ரிட்டன் ஆன் ஈக்விட்டி சராசரியாக 20 சதவிகிதம் என்ற அளவில் இருக்கிறது. அதேபோல டிவிடெண்ட் யீல்டும் 2.2 சதவிகிதம் என்ற அளவில் இருக்கிறது. கடன் கொடுக்கும் விகிதம் சராசரியாக ஆண்டுக்கு 25 சதவிகிதம் என்ற அளவில் வளர்ந்து வருகிறது.

கம்பெனி அலசல் - சிட்டி யூனியன் பேங்க்!

வங்கிகளின் இன்னொரு முக்கியமான விகிதம், நிகர வட்டி வரம்பு. (ழிமீt மிஸீtமீக்ஷீமீst விணீக்ஷீரீவீஸீ டெபாசிட்களுக்கு கொடுக்கும் வட்டிக்கும் கடனுக்கான வட்டிக்கும் உள்ள வித்தியாசம்) 3 சதவிகிதம் என்ற அளவிலே கடந்த 10 வருடங்களாக இருக்கிறது. அடுத்த சில வருடங்களுக்கும் இது தொடரும் என்பதே பல முக்கிய அனலிஸ்ட்களின் கணிப்பாக இருக்கிறது.

இந்த வங்கியின் பங்கு மூலதனத்தைவிட 15 மடங்கு அதிகமாக சொத்து இருப்பது பாசிட்டிவ்-ஆன அம்சம். மேலும், வங்கியின் வாராக் கடனும் (0.4%-2012-ம் நிதி ஆண்டு) கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. வரும் காலத்திலும் இது கட்டுக்குள் இருக்கும் என்றே தெரிகிறது. காரணம், இந்த வங்கி கொடுத்திருக்கும் கடன்களில் 20 சதவிகிதம் மட்டுமே ரிஸ்க் இருக்கும் துறைகளில் கடன் கொடுத்திருக்கிறது.

வங்கிகளின் நிதி நிலைமையை உணர்த்தும் இன்னொரு குறியீடு, மூலதன தன்னிறைவு விகிதம் (சிணீஜீவீtணீறீ கிபீமீஹீuணீநீஹ் ஸிணீtவீஷீ). 2010 மற்றும் 2011-ம் நிதி ஆண்டுகளில் மிக அதிகமாகவே (23 சதவிகிதம் என்ற அளவில்) மூலதன தன்னிறைவு விகிதத்தை வைத்திருந்தது. ஆனால், கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதி ஆண்டில் 12.57 சதவிகிதம் மட்டுமே இருக்கிறது. இருந்தாலும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி 9 சதவிகிதம் இருந்தாலே போதுமானது. அதைவிட அதிகமாகவே இந்த வங்கிக்கு இருக்கிறது. மேலும், மூலதனத்தை அதிகமாக வைத் திருப்பதைவிட அதை வெளியே கடனாக கொடுத்து லாபம் சம்பாதிப்பதும் நல்லதே.

தற்போதைய நிலையில் இந்த பங்கு 52 வார அதிகபட்ச விலையில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த நிலையில்கூட இந்த வங்கியின் பி.இ. விகிதம், விலை/புத்தக மதிப்பு மற்றும் டிவிடெண்ட் யீல்டு போன்றவை சிறப்பாகவே இருக்கிறது.

ரிஸ்க் என்ன?

இந்த வங்கியின் கடந்த கால செயல்பாடு, நிதி நிலைமை போன்றவை நன்றாகவே இருந்தாலும் பொதுவாக வங்கித் துறைக்கு இருக்கும் ரிஸ்க்குகள் இந்த வங்கிக்கும் பொருந்தும். வட்டி விகிதம் குறைக்கப்படாத வரையில் வங்கிப் பங்குகளின் வேகம் கொஞ்சம் குறைவாகதான் இருக்கும். அதற்காக இந்த பங்குகளில் இருந்து விலகி இருக்கத் தேவை இல்லை.

தற்போதைய நிலையில் அதிகமான விலையில் வர்த்தக மாவதால் விலை குறையக் குறைய வாங்கி நீண்ட கால அடிப்படையில் உங்கள் போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக் கொள்வது நல்லது என்பதே எங்கள் டீமின் பரிந்துரை.

- நாணயம் டீம்
படம்: வி.செந்தில்குமார்