Published:Updated:

செபி அதிரடி: ஆரம்பம் அமர்க்களம்! முடிவு..?

செபி அதிரடி: ஆரம்பம் அமர்க்களம்! முடிவு..?

பிரீமியம் ஸ்டோரி
செபி அதிரடி: ஆரம்பம் அமர்க்களம்! முடிவு..?
செபி அதிரடி: ஆரம்பம் அமர்க்களம்! முடிவு..?

மீண்டும் நுழைவுக் கட்டணத்தைக் கொண்டு வரலாமா, எக்ஸ்பென்ஸ் ரேஷியோவை அதிகரிக்கலாமா, இல்லை வேறு என்ன செய்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது என்பது குறித்து கடந்த சில மாதங்களாகவே பலவிதமான கருத்துகள் உலாவி வந்தது. அத்தனை கருத்துக்கும் ஆறு பக்க அறிக்கையில் பதில் சொல்லி இருக்கிறது செபி.

மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தையில் இருக்கும் சிறு முதலீட்டாளர்களின் நலன் காக்க  என்ன செய்யலாம் என்பது குறித்து இந்த அறிக்கை விளக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறது. முதலில் மியூச்சுவல் ஃபண்டில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அத்துறை சார்ந்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்ப்போம்.

1. எக்ஸ்பென்ஸ் ரேஷியோ அதிகப்படுத்திக்கொள்ளலாம்!

சிறு நகரங்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுகள் செல்வதற்கு வசதியாக எக்ஸ்பென்ஸ் ரேஷியோ அதிகரிக்க செபி அனுமதி கொடுத்திருக்கிறது. அதாவது, ஒரு ஃபண்ட் நிர்வகிக்கும் தொகையில் 30 சதவிகித தொகை இந்தியாவின் முக்கியமான 15 நகரங்களில் இல்லாமல் இருக்கும்பட்சத்தில் 0.3 சதவிகிதம் எக்ஸ்பென்ஸ் ரேஷியோவை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

2. வெளியேறும் கட்டணம்!

##~##
ஒரு ஃபண்டில் முதலீடு செய்து ஒரு வருடத்துக்குள் வெளியேறும்பட்சத்தில் வெளியேறும் கட்டணம் விதிக்கப்படுகிறது. முன்பு இந்த வெளியேறும் கட்டணம் அந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்குச் சென்றது. இனி அந்த திட்டத்துக்கு செல்லும். ஒருவர் செலுத்தும் வெளியேறும் கட்டணம், அந்த திட்டத்தில் முதலீடு செய்திருக்கும் மற்றவர்களுக்கு சிறிதளவு லாபமாக இருக்கும். (இந்த பணத்தை இனி ஃபண்ட் நிறுவனங்கள் எடுத்துக்கொள்ள முடியாது!)

3. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் இருந்து நேரடியாக முதலீட்டாளர்கள் வாங்குவதற்கு வசதியாக டைரக்ட் பிளான்களை வெளியிடுவதற்கு செபி அனுமதி கொடுத்திருக்கிறது.

4. சேவைக் கட்டணத்தை இனி முதலீட்டாளர்களே செலுத்த வேண்டும்.

5. வங்கிக் கணக்கு மற்றும் பான் கார்டு இல்லாதவர்கள் 20,000 ரூபாய் வரை நேரடியாக ரொக்கமாகவே முதலீடு செய்யலாம். ராஜீவ் காந்தி ஈக்விட்டி திட்டத்தின் கீழ் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கும் விலக்கு அளிக்கலாம் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருப்பது என்பது உள்ளிட்ட விஷயங்களை சொல்லி இருக்கிறது செபி.

செபி அதிரடி: ஆரம்பம் அமர்க்களம்! முடிவு..?

இதுகுறித்து ஃபண்ட்ஸ் இந்தியாவின் இயக்குநர் ஸ்ரீகாந்த் மீனாட்சியிடம் பேசினோம். ''இதில் வரவேற்கத்தகுந்த நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், இது போதாது. இன்னும் பல விஷயங்கள் தேவை. எக்ஸ்பென்ஸ் ரேஷியோவை உயர்த்தியது சில சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, இரண்டாம் கட்ட நகரங்கள்/கிராமங்களில் அதிக முதலீட்டாளர்கள் இருந்ததால் நகரங்களில் இருக்கும் நாங்கள் ஏன் அதிக கட்டணத்தைச் (எக்ஸ்பென்ஸ் ரேஷியோ)  செலுத்த வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். ஆனால், அப்படி ஒரு நிலைமை வருவதற்கே இன்னும் பல காலம் ஆகும். பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்டுகளில் இந்த விகிதம் ஒற்றை இலக்கில் இருக்கும்போது ஒரே நாளில் இது நடக்காது'' என்றார்.

அவரே தொடர்ந்து பேசினார். ''சிறு முதலீட்டாளர்கள் ரொக்கமாக முதலீடு செய்யலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். இது வசதியாக இருக்கும். ஆனால், இதுவரை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை பணமாக வாங்க முடியாது. மேலும், பணமாக கொடுக்கும்போது வாங்கக்கூடிய நபர் கையாடல் செய்ய வாய்ப்பு இருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை இனி தபால் ஊழியர்கள், ஓய்வுபெற்ற வங்கிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் விநியோகம் செய்யலாம் என்று சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது. இருந்தாலும், இவற்றை எப்படி நடைமுறைப்படுத்த போகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. இது ஒரு ஆரம்பம்தான்'' என்று முடித்துக்கொண்டார்.

பங்குச் சந்தை:

1. குறைந்தபட்ச ஐ.பி.ஓ. முதலீடு ரூ.5000-7000 என்பதிலிருந்து ரூ.10,000 முதல் 15,000 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.

2. இ.ஐ.பி.ஒ.வுக்கு ஒப்புதல் கொடுத்திருப்பது.

3. சிறு முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கும் ஐ.பி.ஓ.க்கு கட்டாயம் பங்குகள் கொடுப்பது உள்ளிட்ட சில அறிவிப்புகளைச் சொல்லி இருக்கிறது செபி.

இதுகுறித்து பங்குச் சந்தை ஆலோசகர் நாகப்பனிடம் பேசினோம். ''ஐ.பி.ஓ.வுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து சிறு முதலீட்டாளர்களுக்கும் பங்குகள் கிடைக்க வேண்டும் என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், குறைந்தபட்ச தொகையை அதிகப்படுத்தி இருப்பது அனைத்து சிறு முதலீட்டாளர்களும் பங்கேற்க முடியாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது. ஆன்லைன் ஐ.பி.ஓ.வுக்கு முதலீட்டு முறைகளை எளிதாக்கி இருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயம், ஏ.எஸ்.பி.ஏ. (application supported by blocked amount) கட்டாயப்படுத்துவார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். அது நிறைவேறவில்லை. (அதாவது, ஐ.பி.ஓ.க்கு விண்ணப்பிக்கும்போது வங்கிக் கணக்கில் பணம் இருந்தால் மட்டும் போதும். பங்குகள் கிடைக்கும்போது பணத்தைச் செலுத்தலாம். ஒருவேளை கிடைக்கவில்லை என்றால், பணம் செலுத்தத் தேவையில்லை!) அனைத்து வங்கிகளும் இதற்குத் தயாரில்லை என்பதால், ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் கூட்டமைப்பில் செபி பேசி இருக்கிறது. செபியின் அறிவிப்பில் குறை ஒன்றும் சொல்ல முடியாது; செயல்படுவதில்தான் இருக்கிறது'' என்று முடித்தார் நாகப்பன்.

ஆரம்பம் நன்றாகவே இருக்கிறது. ஆனால் எப்படி முடியும் என்றுதான் தெரியவில்லை.

- வா.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு