Published:Updated:

அக்ரெஸிவ் பங்குகள் - ரிஸ்க் எடுத்தால் ஜெயிக்கலாம்!

அக்ரெஸிவ் பங்குகள் - ரிஸ்க் எடுத்தால் ஜெயிக்கலாம்!

அக்ரெஸிவ் பங்குகள் - ரிஸ்க் எடுத்தால் ஜெயிக்கலாம்!

அக்ரெஸிவ் பங்குகள் - ரிஸ்க் எடுத்தால் ஜெயிக்கலாம்!

Published:Updated:
அக்ரெஸிவ் பங்குகள் - ரிஸ்க் எடுத்தால் ஜெயிக்கலாம்!
அக்ரெஸிவ் பங்குகள் - ரிஸ்க் எடுத்தால் ஜெயிக்கலாம்!

ந்த விஷயமாக இருந்தாலும் அதை எப்படிப்பட்ட திட்டத்தோடு அணுகுகிறோம் என்பதை வைத்தே நமது வெற்றி இருக்கிறது. ஹாக்கி விளையாட்டில் இரண்டு விதமான யுக்திகளை பயன்படுத்துவார்கள். முதலாவது யுக்தி, டிபென்சிவ் ஸ்ட்ராட்டஜி (defensive strategy). அதாவது, எதிராளி சமபலத்துடன் இருந்தாலோ அல்லது அதிக பலத்துடன் இருந்தாலோ அவர்களுடன் போட்டி போட்டு ஜெயிப்பதைவிட அவர்களை முன்னேறவிடாமல் தடுப்பது. இந்த தடுப்பாட்டம் நாம் ஜெயிப்பதற்கு வழி செய்யாவிட்டாலும் நாம் தோல்வி அடைவதைத் தடுக்க உதவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரண்டாவது யுக்தி, அஃபென்சிவ் ஸ்ட்ராட்டஜி. அதாவது, எதிராளியை திக்குமுக்காட வைப்பதன் மூலம் எப்படியாவது முன்னேறி வெற்றி அடைவது. ஆட்டத்தின் அனைத்து சமயங்களிலும் இந்த யுக்தியை பயன்படுத்தமாட்டார்கள் ஆட்டம் முடிவுக்கு வருகிற சமயத்தில் இந்த யுக்தியை பயன்படுத்திப் போட்டியை வெல்ல பார்ப்பார்கள்.

##~##
இதுபோன்ற யுக்திகள் பல வகையான விளையாட்டுகளில் மட்டுமல்ல, முதலீட்டுக்கும் தேவை. சந்தையின் போக்குக்கு ஏற்ப நாமும் நமது யுக்தியை, திட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுவரையில் சந்தை இருந்த சூழ்நிலையில் சந்தையுடன் போட்டிபோட்டு ஜெயிப்பதைவிட தடுப்பாட்டம் ஆடி, ஓரளவுக்கு லாபம் பார்த்தால் போதும் என்று நினைத்தனர் முதலீட்டாளர்கள். ஆனால், இப்போது சந்தை கொஞ்சம் திரும்ப ஆரம்பித்திருப்பதால் இனியும் முதலீட்டாளர்கள் தடுப்பாட்டம் ஆடலாமா அல்லது அஃபென்சிவ்-ஆக இறங்கி, வேகமாக காய் நகர்த்தலாமா என்று சென்ட்ரம் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜி.சொக்கலிங்கத்திடம் கேட்டோம். தற்போதைய சந்தையின் சூழ்நிலை பற்றியும் முதலீட்டாளர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றியும் நமக்கு விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

''நமது முதலீட்டு யுக்தியை மாற்ற வேண்டிய நேரம் இது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்கு சில சூழ்நிலைகள் சரியாக அமைய வேண்டும். அதற்கான அறிகுறிகள் இப்போது தெரிய ஆரம்பித்திருக்கிறது. அப்படி நடக்கும்பட்சத்தில் முதலீட்டாளர்கள் தங்களது யுக்தியை மாற்றிக்கொள்ளலாம்.

இந்திய சந்தை அந்நிய நாட்டு முதலீட்டாளர்களை நம்பி இருக்கிறது என்கிற வாதம் கிட்டத்தட்ட உண்மையாக இருந்தாலும், நாம் செய்யவேண்டிய சீர்திருத்தங்களும் நிறைய இருக்கிறது. அதை செய்யும்போதுதான் சந்தையும் பொருளாதாரமும் முன்னேற்றத்தை நோக்கித் திரும்பும்.

கடந்த ஜூலை மாத நிலவரப்படி, இந்திய ஏற்றுமதி 15 சதவிகிதம் சரிந்திருக்கிறது. அதேபோல ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் அந்நிய நேரடி முதலீடு 67 சதவிகிதம் சரிந்திருக்கிறது. இந்தியாவில் பருவமழையும் சொல்லிக்கொள்வது போல இல்லை. தவிர, வட்டி விகிதம் உச்சத்தில் இருக்கிறது. இப்போதைக்கு வட்டி விகிதம் குறைவதுபோல தெரியவில்லை. உற்பத்தி குறைவாக இருக்கிறது. இதுபோன்ற பல பிரச்னைகள் இந்தியாவில் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்கட்டும்.

அக்ரெஸிவ் பங்குகள் - ரிஸ்க் எடுத்தால் ஜெயிக்கலாம்!

2008-ம் நிதி ஆண்டில் இந்திய ரூபாய் மிக வேகமாக உயர்ந்து டாலருக்கு எதிராக 38 ரூபாய் அளவுக்கு வந்தது. அப்போது ஏற்றுமதி நிறுவனங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ரிசர்வ் வங்கி 78 பில்லியன் டாலர்கள் பணத்தை வாங்கி ரூபாயின் உயர்வை தடுத்தது. இதற்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி இவ்வளவு டாலரை வாங்கியதில்லை. ஆனால், அதன்பிறகு ரிசர்வ் வங்கி இரண்டு சந்தர்ப்பங்களில் சுமார்

58 பில்லியன் டாலரை விற்றுவிட்டது. இப்போதைக்கு ரிசர்வ் வங்கி கைவசம் சுமார் 20 பில்லியன் டாலர்கள் மட்டுமே இருக்கிறது. இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், இனிமேலும் ரூபாயின் சரிவை ரிசர்வ் வங்கி தடுக்க முடியாது.

இப்போதைக்கு அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்.ஐ.ஐ.) வழியாக மட்டும்தான் டாலர் வரத்து இருக்கிறது. (இந்த வருடத்தில் இதுவரையில் 12 பில்லியன் டாலர்கள் வந்திருக்கிறது!) இப்போதைக்கு அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடு மட்டும்தான் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை சமாளித்து வருகிறது. அதைகூட சமாளிக்க முடியாமல் அந்நிய செலாவணியில் இருந்து 13 பில்லியன் டாலரை எடுத்து சமாளித்திருக்கிறார்கள். சாப்பிட வழி இல்லாதவன் சொத்தை விற்று சாப்பிடுவதற்குச்  சமமான செயல் இது.

இதுபோன்று சூழ்நிலைகள் மோசமாகிக்கொண்டே சென்றால் சர்வதேச ரேட்டிங் ஏஜென்சிகள் இந்தியாவுக்கான ரேட்டிங்கை குறைக்கும். அப்படி குறைத்தால், அந்நிய முதலீடுகள் வராமல்  ரூபாய் மதிப்பு இன்னும் குறையும். ரூபாய் சரிவதினால் அந்நிய நாட்டு நாணயத்தில் கடன் வாங்கி இருக்கும் நிறுவனங்கள் கடனை திருப்பிச் செலுத்தும்போது இன்னும் அதிக ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். அதனால்  சந்தைக்கு வரும் அந்நிய நாட்டு முதலீடும் குறையும்.

அக்ரெஸிவ் பங்குகள் - ரிஸ்க் எடுத்தால் ஜெயிக்கலாம்!

இப்படிப்பட்ட நிச்சயமற்ற தன்மை இந்திய பொருளாதாரம், அரசியல் மற்றும் மார்க்கெட் உள்ளிட்ட எதற்குமே நல்லதில்லை. இந்த பிரச்னைகளை வராமல் தடுக்க மத்திய அரசு உடனடியாக பல சீர்திருத்தங்களை கொண்டுவரும் என்றே நம்புகிறேன்'' என்றவர், சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தார்.

''குறைந்தபட்சம் நான்கு விஷயங்களையாவது மத்திய அரசு உடனடியாகச் செய்ய வேண்டும். முதலாவது, விமானத் துறையில் அந்நிய முதலீடு, ரீடெய்ல் துறையில் அந்நிய முதலீடு, பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் மற்றும் இந்தியாவில் முதலீட்டுக்கான சூழ்நிலைகளை உருவாக்குவது.

சமீபத்தில்கூட மத்திய நிதி அமைச்சர் பொதுத்துறை நிறுவனங்கள் தங்களிடம் கையிருப்பாக இருக்கும் பணத்தை முதலீடு செய்யச் சொல்லி இருக்கிறார். இன்னும் இரண்டு, மூன்று வாரத்தில் இதற்கான அறிவிப்பு வரும்பட்சத்தில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்கும். அப்போது ரூபாயின் மதிப்பு உயரும். அப்போது சந்தை உயர்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அதனால் இப்போதே நம்முடைய முதலீட்டு யுக்தியை நாம் கொஞ்சம் அக்ரெஸிவாக மாற்றிக்கொள்வதே சரி.

நம்மிடம் சில நம்பிக்கைகள் இருக்கிறது. அதாவது, பார்மா, எஃப்.எம்.சி.ஜி. போன்ற துறைகள் டிபென்சிவ் துறைகளாகவும், கேப்பிட்டல் கூட்ஸ் மற்றும் இன்ஃப்ரா துறைகள் அக்ரெஸிவ் துறைகளாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இப்போதைய நிலைமை அப்படி இல்லை. பார்மா துறை பங்குகளை இனியும் டிபென்சிவ் பங்குகள் என்று சொல்ல முடியாது. காரணம், அந்த துறையில் சில நிறுவனங்கள் 18 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை விலை உயர்ந்துவிட்டது.  

அதே சமயத்தில் இன்ஃப்ரா துறையை இப்போதைக்கு அக்ரெஸிவ் துறை என்று சொல்ல முடியாது. காரணம், அந்த துறையில் பல பிரச்னைகள் இருக்கிறது. ஆனால், தனியார் வங்கிகள் (பொதுத்துறை வங்கிகளில் நிகர வாராக் கடன் அதிகமாக இருப்பது உள்ளிட்ட சில பிரச்னைகள் இருக்கிறது!), கேப்பிட்டல் கூட்ஸ், மெட்டல், பார்மா உள்ளிட்ட நான்கு துறைகள் அக்ரெஸிவ் துறைகளாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இப்போதைக்கு நம்முடைய முதலீட்டை இந்த துறையைச் சேர்ந்த அக்ரெஸிவ் பங்குகளின் பக்கம் திசை திருப்புவதுதான் சரி. ஆனாலும், வரும் வாரங்களில் மத்திய அரசின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்துதான் இந்த துறைகளின் செயல்பாடுகள் இருக்கும் என்பதையும் மறந்துவிட வேண்டாம்'' என்று முடித்தார்.

சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளாவிட்டால் காலஓட்டத்தில் இருந்து நாம் விலகிவிடுவோம் என்று சொல்வார்கள். அதுபோல சந்தையின் போக்குக்கு ஏற்ப நம்முடைய முதலீட்டு யுக்தியையும் மாற்றிக்கொள்ளாவிட்டால் லாபம் பார்க்க முடியாது. இந்த அணுகுமுறையைப் புரிந்துகொண்டு செயல்படும் முதலீட்டாளர்கள் சந்தையில் நிலைத்து நிற்பார்கள் என்பதைச் சொல்லவே தேவையில்லை.

- வா.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism