Published:Updated:

கம்பெனி ரிசர்ச்! - அர்விந்த்!

கம்பெனி ரிசர்ச்! - அர்விந்த்!

கம்பெனி ரிசர்ச்! - அர்விந்த்!

டெக்ஸ்டைல் துறையில் தொடர்ந்து எண்பது ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் அர்விந்த் நிறுவனத்தைப் பற்றிதான் இந்த வாரம் நாம் அலசப் போகிறோம்.

துறை எப்படி?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விவசாயத்துக்குப் பிறகு இந்தியாவில் அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பை தரும் துறை இது. 3.5 கோடி மக்களுக்கு மேல் இந்த துறையில் பணிபுரிகிறார்கள். மேலும், இந்தியாவின் ஏற்றுமதி வருமானத்தில் டெக்ஸ்டைல் துறை       17 சதவிகித பங்களிக்கிறது. இந்திய ஜி.டி.பி.-யில் 4% டெக்ஸ்டைல் துறையின் பங்களிப்பாக இருக்கிறது. தவிர, இந்திய தொழில் உற்பத்தியில் 14% பங்களிப்பது டெக்ஸ்டைல் துறைதான். ஆனால், இந்த வளர்ச்சி, 'கோட்டா’ முறையை நீக்கிய பிறகுதான் நடந்தது. இப்போது டெக்ஸ்டைல் துறையில் இன்னொரு  மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அது, மல்டி பிராண்ட் துறையில் அந்நிய முதலீடு.

பெரும்பாலான டெக்ஸ்டைல் நிறுவனங்கள் உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் விற்பனையிலும் கவனம் செலுத்தி வருகிறது. இப்போது அந்த இடத்தில் அந்நிய முதலீடு வரும்பட்சத்தில் அத்துறையின் வளர்ச்சி இன்னும் அதிகமாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நகரமயமாக்கல் அதிகரிப்பது, நடுத்தர மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, இந்திய இளைஞர்களிடம் கையில் பணம் புழங்குவது போன்றவற்றால் இந்த துறைக்கு எதிர்காலம் ஓரளவுக்கு நன்றாக இருப்பது போலவே தெரிகிறது. உலகளவில் மந்த நிலைமை நீடித்த போதும், இந்திய டெக்ஸ்டைல் துறையின் ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 6 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்து வருகிறது. உலக டெக்ஸ்டைல் சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு இப்போது இருப்பதைவிட 2020-ம் ஆண்டு இரட்டிப்பாகும் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கிறது.

நிறுவனம் எப்படி?

1929/30-ம் ஆண்டு உலகின் மிகப் பெரிய பொருளாதார (great depression) நெருக்கடி வந்தது. அப்போது பல கம்பெனிகள் மூடப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் 25 லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டதுதான் அர்விந்த். சந்தையின் பல பொருளாதார ஏற்ற இறக்கங்களை இந்த நிறுவனம் சந்தித்திருக்கிறது. ஒவ்வொரு சமயமும் சந்தையில் இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வந்திருக்கிறது இந்நிறுவனம். டெனிம் (ஜீன்ஸ்) வகை துணிகளுக்கு இருக்கும் டிமாண்டினை பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்து அதில் கால் பதித்தது. இப்போது டெனிம் ஏற்றுமதியில் மூன்றாம் இடத்தில் இந்த நிறுவனம் இருக்கிறது. மேலும், 60 சதவிகித இந்திய சட்டைகளுக்கு இந்த நிறுவனம்தான் துணிகளை கொடுக்கிறது.

ஒர்க்கிங் கேப்பிட்டலை சமாளிக்க இந்த நிறுவனம் 135 ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டது. இருந்தாலும், இந்த நிறுவனத்துக்கு இன்னும் 365 ஏக்கர் நிலம் அஹமதாபாத்திலிருந்து      20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.

கம்பெனி ரிசர்ச்! - அர்விந்த்!

இதுவரை பிஸினஸ் டு பிஸினஸ், அதாவது, இந்த நிறுவனம் இன்னொரு நிறுவனத்திடம்தான் பிஸினஸ் செய்துவந்தது. இப்போது பிஸினஸ் டு கஸ்டமர் என்ற பிரிவில் அதிக கவனம் செலுத்துகிறது.

மெகாமார்ட் ஸ்டோர் இந்த நிறுவனத்தைச் சார்ந்ததுதான். முக்கிய நகரங்களில் 6 பெரிய ஸ்டோர்களும், சிறிய நகரங்களில் 205 கடைகளும் இருக்கிறது. மேலும் ரக்கர்ஸ், எலிட்டஸ், அர்பன் ஹில் உள்ளிட்ட சில வகை பிராண்டட் ஆடைகள் இங்கு மட்டும்தான் கிடைக்கிறது. அர்விந்த் ஸ்டோர் என்ற பெயரிலும் சில மாநிலங்களில் ரீடெய்ல் துறையில் இந்த நிறுவனம் இருக்கிறது. ரியல் எஸ்டேட், டெலிகாம், இன்ஜினீயரிங் உள்ளிட்ட சில சிறிய பிஸினஸ்களும் இந்த நிறுவனத்துக்கு இருக்கிறது.

நிதி நிலைமை எப்படி?

இப்போதைக்கு இந்த நிறுவனத்தின் வருமானம் ரீடெய்ல் பிரிவில்தான் கிடைக்கிறது. மொத்த வருமானத்தில் 38% ரீடெய்ல் துறையில்தான் கிடைக்கிறது. ஏற்கெனவே பார்த்ததுபோல, இது ஒரு சைக்கிளிக்கல் துறை என்பதால் இந்நிறுவனத்தின் வருமானம் தொடர்ந்து அதிகரிக்காது; லாபமும் தொடர்ந்து அதிகரிக்காது. எனவே, தொடர்ந்து டிவிடெண்ட் கொடுக்காது. இருந்தாலும், அவ்வப்போதைய பொருளாதார சூழ்நிலையைப் பொறுத்து இந்த நிறுவனத்தின் வளர்ச்சி இருக்கும். இப்போது இந்த துறை வளர்ச்சியை நோக்கி இருக்கிறது.

புரமோட்டர்கள் ஹோல்டிங் 42% என்ற அளவில் இருப்பது நம்பிக்கையை அளிக்கிறது. அதே சமயம் அந்நிய முதலீட்டாளர்கள் வசம் 15% என்ற அளவில் பங்குகள் இருக்கிறது. இதனால், இந்த பங்கின் விலைகளில் அதிக ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். இந்த பிஸினஸுக்கு அதிக கடன் வாங்கவேண்டி இருந்தாலும், இந்த நிறுவனத்தின் கடன் மூலதன விகிதம் 1 என்ற அளவில் இருக்கிறது. அதேபோல கடந்த ஐந்து வருட சராசரி கரன்ட் ரேஷியோவும் (தற்போதைய சொத்துக்கும் கடனுக்கும் உள்ள விகிதம்) 2.5 என்ற அளவில் இருப்பதும் நல்ல விஷயமே.

வாய்ப்புகள்!

டெனிம் துணி வகைகளில் கணிசமான பங்கினை வைத்திருக்கிறது. ஆரோ, வான் உசேன், யூ.எஸ்.போலோ, லீ, ராங்லர் உள்ளிட்ட பன்னாட்டு பிராண்டுகளுக்கு லைசென்ஸ் வைத்திருப்பது, சில உள்நாட்டு பிராண்டுகளில் முதலிடத்தில் இருப்பது போன்றவைகளால் இந்த நிறுவனத்துக்கு எதிர்கால வாய்ப்புகள் நன்றாகவே இருக்கிறது. ஏற்கெனவே விரிவாக்கப் பணிகளில் கவனம் செலுத்திவரும் இந்த நிறுவனம் அந்நிய முதலீடு காரணமாக இன்னும் அதிகமாக விரிவாக்கம் செய்யும் பணிகளில் ஈடுபடலாம். ஏற்றுமதி மூலம் வருமானத்தை குறைத்துக்கொண்டு உள்நாட்டு வருமானத்தில் கவனம் செலுத்தி வருவதினால் ரூபாயின் ஏற்ற இறக்கங்கள் பாதிக்காது.

ரிஸ்க்?

இந்நிறுவனத்திலும், இந்நிறுவனம் சார்ந்த துறையிலும் ரிஸ்க் என்பது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. பருத்தி விலை, உற்பத்திச் செலவு, உயர்ந்துவரும் சம்பளம், கடைகளை அமைக்க ஆகும் செலவு மற்றும் வாடகை, பங்களாதேஷ், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் போட்டி, இந்தியாவின் மற்ற முன்னணி நிறுவனங்களுடன் போட்டி போன்றவை இந்நிறுவனத்திற்கான ரிஸ்க் என்றே சொல்ல வேண்டும். மேலும், ஏற்றுமதி வருமானத்தைக் குறைத்துக் கொண்டே வந்தாலும், இந்த நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 25% ஏற்றுமதி மூலம் வருகிறது. அதனால் தற்போது உயர்ந்துவரும் ரூபாய் மதிப்பும் இன்னொரு முக்கியமான ரிஸ்க்தான்!

இருந்தாலும், இதில் முதலீடு செய்ய சில முக்கியமான காரணங்கள் இருக்கிறது. முதலாவது, அந்நிய முதலீடு வரும்பட்சத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு 15 சதவிகித வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது, இந்த நிறுவனத்திடம் இருக்கும் சொத்துகள். மூன்றாவது, முக்கியமான பிராண்ட்களை வைத்திருப்பது அல்லது உரிமம் வைத்திருப்பது போன்ற காரணத்தால் இந்த பங்கில் நடுத்தர காலத்தில் முதலீடு செய்யலாம். இருந்தாலும், உங்களின் மொத்த முதலீட்டில் 5 சதவிகிதத்துக்கு மேல் இந்த பங்கு இருக்க வேண்டாம் என்பதே எங்கள் டீமின் பரிந்துரை.

- நாணயம் டீம்.