பிரீமியம் ஸ்டோரி
ஃபண்ட் கிளினிக்!
ஃபண்ட் கிளினிக்!

டி.எஸ்.பி. பிளாக்ராக் ஸ்மால் அண்ட் மிட் கேப் ஃபண்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்தேன். நான் முதலீடு செய்தபிறகு அதன் மதிப்பு குறைந்து, இப்போதுதான் போட்ட பணம் அளவுக்கு மதிப்பு உயர்ந்திருக்கிறது. இந்த பணத்தை எடுத்துவிடலாமா? அப்படி எடுக்கலாம் என்றால் வேறு எந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்?

- ஏ.கணேசன், மின்னஞ்சல் மூலமாக.

''அன்புள்ள கணேசன்,

டி.எஸ்.பி-பி.ஆர். ஸ்மால் அண்ட் மிட் கேப் ஃபண்ட் மிட் கேப் நிறுவனப் பங்குகளில் 70%-ஐயும் மீதியை ஸ்மால் கேப் நிறுவனங்களிலும் முதலீடு செய்கிறது. இதனுடைய பெஞ்ச்மார்க்கான சி.என்.எக்ஸ். மிட் கேப் குறியீட்டுடன் ஒப்பிடும்போது நன்றாகவே செயல்பட்டுள்ளது. இதே கேட்டகிரியில் உள்ள சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஃபண்டின் செயல்பாடு சற்று ஸ்லோதான். இருந்தபோதிலும் உங்களுக்கு அந்த பணம் தற்போது தேவையில்லையெனில், சந்தை ஏறுமுகமாக இருக்கும் இச்சமயத்தில், இந்த முதலீட்டை கடன் சார்ந்த திட்டங்களுக்கு மாற்ற வேண்டாம். இதே ஃபண்டில் தொடருங்கள்.

முப்பத்தி நான்கு வயதாகும் எனக்கு அடுத்த ஆண்டு திருமணம். ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி, யூ.டி.ஐ. ஆப்பர்ச்சூனிட்டீஸ், ரிலையன்ஸ் ஸ்மால் கேப், ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ ஃபோக்கஸ்டு புளூசிப் ஈக்விட்டி ஆகிய நான்கு ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி. முறையில் மாதம் 5,000 ரூபாய் வீதம் முதலீடு செய்திருக்கிறேன். இப்போது எஸ்.பி.ஐ. மேக்னம் எமர்ஜிங் பிஸினஸ், ரிலையன்ஸ் பேங்கிங் பிஸினஸ் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி. முறையில் மாதம் 5,000 ரூபாய் முதலீடு செய்யலாம் என்று இருக்கிறேன். இதன் மூலம் 2020-ல் என் வீட்டுக் கடனை அடைக்க 10 லட்ச ரூபாய் எடுத்துக்கொள்ளலாம் என்று திட்டம். என்னுடைய இந்த யோசனை சரியா?, என் போர்ட்ஃபோலியோ சரிதானா?

- கார்த்திக், சென்னை.

##~##
''அன்புள்ள கார்த்திக்,

பேச்சுலராக இருந்தும் சேமித்து வருவது குறித்து மகிழ்ச்சி! நீங்கள் இதுவரை எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்துவந்த நான்கு ஃபண்டுகளும் நன்றாகவே செயல்பட்டுள்ளன. அந்த நான்கு ஃபண்டுகளில் ரிலையன்ஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் செயல்பட ஆரம்பித்து இரண்டு வருடங்களே ஆகிறது. பொதுவாக நீண்ட காலம் (குறைந்தது 5 ஆண்டு காலம்) நடைமுறையில் இருக்கும் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்வது நல்லது. நீங்கள் அதே ஃபண்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்வதே நல்லது. சற்று கூடுதலான வருமானம் வேண்டும் (கூடுதலான ரிஸ்க்குடன்) என்றால் ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி மற்றும் யூ.டி.ஐ. ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டுகளில் உங்களின் எஸ்.ஐ.பி. முதலீட்டை தொடர்ந்து வாருங்கள். புதிய ஃபண்டுகளுக்குச் செல்ல வேண்டாம்.

வீட்டுக் கடனை அடைப்பதற்காக எஸ்.ஐ.பி. மூலம் பங்கு சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை உங்களின் எதிர்காலத் தேவைகளுக்கென்று வைத்துக் கொள்ளுங்கள். வீட்டுக் கடனை, இ.எம்.ஐ. செலுத்துவது தவிர, உங்களுக்கு வரும் போனஸ் போன்ற தொகைகளை வைத்து அடைத்துக்கொள்ளுங்கள். சீக்கிரமாக கடனை முடிக்க வேண்டுமென்றால், உங்களின் இ.எம்.ஐ. தொகையை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள். முதலீடு மற்றும் கடனை திருப்பிச் செலுத்துவது ஆகிய இரண்டும் தனித்தனியாகச் செல்லட்டும்.''

பத்து ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி. முறையில் மொத்தம் 12,500 ரூபாய் முதலீடு செய்து வருகிறேன்.  ஐ.சி.ஐ.சி.ஐ. ஃபோக்கஸ்டு புளூசிப், யு.டி.ஐ. டிவிடெண்ட் யீல்ட், ஹெச்.டி.எஃப்.சி. மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ், ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200, ஃபிடிலிட்டி ஈக்விட்டி போன்ற ஃபண்டில் அதில் சில. இந்த ஃபண்டுகள் எல்லாம் சரியானவைதானா, இவற்றில் தொடர்ந்து முதலீடு செய்யலாமா?

- ஸ்ரீதர், மதுரை.

''டியர் ஸ்ரீதர்,

மாதம் ரூ.12,500 முதலீடு செய்ய  பத்து ஃபண்டுகள் தேவையில்லை. மூன்று அல்லது நான்கு ஃபண்டுகள் போதும். அதிக எண்ணிக்கையில் ஃபண்டுகளை வைத்துள்ளதால் பெரிய நன்மை ஏதும் இல்லை; மாறாக பராமரிப்பது கடினம். மேலே உள்ள அட்டவணையில் கண்டவாறு உங்களின் முதலீட்டை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்.

ஃபண்ட் கிளினிக்!

நான் ஐந்து ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி. முறையில் மாதம் 2,500 ரூபாய் முதலீடு செய்கிறேன். அடுத்த 15 முதல் 22 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம் என்றிருக்கிறேன். தவிர, மாதம் ஒரு யூனிட் (கிராம்) என்கிற அளவில் தங்க மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடு செய்கிறேன். ரிலையன்ஸ் குரோத், ஹெச்.டி.எஃப்.சி. ஈக்விட்டி ஃபண்டுகளில் என் மகனது கல்விக்காகவும், ஹெச்.டி.எஃப்.சி. ஈக்விட்டி, ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி ஃபண்டுகளில் என் மகளது கல்விக்காகவும், பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி, சுந்தரம் பி.என்.பி., பரிபாஸ் செலக்ட் மிட் கேப் ஃபண்டுகளில் என் மகனது திருமணத்திற்காகவும், கோல்டு பெஞ்ச்மார்க் இ.டி.எஃப்., டி.எஸ்.பி. பிளாக்ராக் ஈக்விட்டி ஃபண்டில் எனது மகளது திருமணத்திற்காகவும், ஃபிராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்டில் எனது ஓய்வுக் காலத்திற்காகவும் முதலீடு செய்து வருகிறேன். நான் முதலீடு செய்யும் இந்த திட்டங்கள் எல்லாம் சரியானவைதானா?

குணா, மின்னஞ்சல் மூலமாக.

''அன்புள்ள குணா,

தங்க முதலீட்டையும் சேர்த்து எட்டு ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறீர்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியத் தேவைக்கும் ஒரு லார்ஜ் கேப் ஃபண்டும் ஒரு மிட் கேப் ஃபண்டையும் தேர்வு செய்துள்ளீர்கள். உங்களின் அணுகுமுறை சரிதான் என்றபோதிலும், இவ்வளவு எண்ணிக்கையில் ஃபண்டுகள் தேவையில்லை. ஒவ்வொரு தேவைக்கும் ஒரு ஃபண்ட் என வைத்துக்கொள்ளுங்கள். லார்ஜ் கேப் ஃபண்டுகள் சற்று ரிஸ்க் குறைவு; மிட் கேப் ஃபண்டுகள் சற்று ரிஸ்க் அதிகம் என்றபோதிலும், நீண்டகால கண்ணோட்டத்தில் எஸ்.ஐ.பி. முறையில் தரமான ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது, பலவிதமான ரிஸ்க்குகள் குறைந்துவிடுகின்றன. மேலும், வருடத்திற்கு ஒருமுறை ரிவியூ செய்யும்போது மீதமுள்ள ரிஸ்க்கும் போய்விடுகிறது. ஆகவே, கீழ்க்கண்டவாறு உங்களின் முதலீட்டை மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொரு தேவைக்காகவும் இரண்டு ஃபண்டில் முதலீடு செய்யும் தொகையை கீழே கொடுத்துள்ள ஒரே ஃபண்டில் முதலீடு செய்துகொள்ளுங்கள்.

ஃபண்ட் கிளினிக்!

என் அம்மாவுக்காக 15,000 ரூபாயை மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்புகிறேன். இதற்கு எந்த ஃபண்டுகள் சரியானதாக இருக்கும்?

காமாட்சி சங்கரநாராயணன், மின்னஞ்சல் மூலமாக.

''டியர் காமாட்சி சங்கரநாராயணன்,

பாராட்டுக்கள்! இம்முதலீட்டை நீங்கள் உங்கள் அம்மாவின் பெயரிலேயே செய்துகொள்ளலாம். உங்கள் அம்மாவிற்கு பான் கார்டு இல்லையெனில், அப்ளை பண்ணி வாங்கிக்கொள்ளுங்கள். உங்களால் சிறிதளவு ரிஸ்க் எடுக்க முடியும் என்கிறபட்சத்தில் ரிலையன்ஸ் எம்.ஐ.பி-யில் முதலீடு செய்யுங்கள்.

இத்திட்டம் 80 சதவிகித கடன் சார்ந்த முதலீடுகளிலும் மீதியை பங்கு சார்ந்த முதலீடுகளிலும் முதலீடு செய்கிறது. நீண்ட கால நோக்கில் ஆண்டிற்கு 10 - 11% வருமானத்தை எதிர்பார்க்கலாம். ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று நினைத்தால் கீழ்க்கண்ட இன்கம் ஃபண்டுகளில் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்து கொள்ளுங்கள். இன்கம் ஃபண்டுகள் முழுக்க முழுக்க கடன் சார்ந்த திட்டங்களிலேயே முதலீடு செய்கின்றன. உங்களுக்கு நான் சிபாரிசு செய்யும் திட்டங்கள்: பிர்லா சன் லைஃப் டைனமிக் பாண்ட் ஃபண்ட், டெம்பிள்டன் இந்தியா ஷார்ட் டேர்ம் இன்கம் ஃபண்ட்

குறிப்பு: இங்கு செய்துள்ள பரிந்துரை ஒரு தனிநபரின் தேவைகளுக்காகச் செய்யப்பட்டுள்ளது. அவரவரின் தேவைகள் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனிற்கு ஏற்ப பரிந்துரை மாறும் என்பதைக் கருத்தில்கொள்ளவும்.

(மீண்டும் திறக்கும்)

ஃபண்ட் கிளினிக்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு