Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: இனி எஸ்.எம்.எஸ். போதும்!

புதிய சேவை

பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: இனி எஸ்.எம்.எஸ். போதும்!

செல்போன் மூலம் இருந்த இடத்தில் இருந்தபடி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் வசதி இப்போது வந்துவிட்டது. ரிலையன்ஸ், டி.எஸ்.பி. பிளாக்ராக், எஸ்.பி,ஐ., ஐ.டி.எஃப்.சி. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்த சேவையைத் தரத் தொடங்கி இருக்கின்றன.

##~##
ந்த வசதியை எப்படி பயன்படுத்துவது என்று ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் டி.ராஜனிடம் கேட்டோம்.

''தற்போது சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்தான் குறிப்பிட்ட சில திட்டங்களுக்கு மட்டும் இந்த வசதியைக் கொண்டு வந்திருக்கின்றன. இந்த வசதியைப் பெற நீங்கள் முதலீடு செய்துள்ள மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் அலுவலகத்துக்குச் சென்று உங்களை பற்றிய விவரங்களை அதற்கான விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். இதில் ஃபோலியோ எண், மொபைல் எண், வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இந்த விவரங்களில் தவறு எதுவும் இருக்கக்கூடாது. ஏனெனில், இதில் உள்ள மொபைல் எண்ணுக்குத்தான் பரிவர்த்தனை சார்ந்த அனைத்து தகவல்களும் உடனுக்குடன் எஸ்.எம்.எஸ். வரும். எந்த வங்கிக் கணக்கு எண்ணை கொடுக்கிறீர்களோ, அந்த எண்ணிலிருந்துதான் பணப் பரிவர்த்தனைகளைத் தொடர முடியும். நீங்கள் கொடுத்த தகவல்களில் ஏதாவது மாற்றம் இருந்தால் அதனை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திற்கு உடனடியாகத் தெரிவிப்பது அவசியம்.'' என்ற ராஜன், இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் விளக்கினார்.

''மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள் வாங்க அல்லது விற்கச் சொல்லி எஸ்.எம்.எஸ். அனுப்பினால் அதனை ரத்து செய்ய முடியாது. எனவே, எஸ்.எம்.எஸ். அனுப்பும் முன்பு நன்கு யோசித்து செயல்படுவது நல்லது. ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடமிருந்தும் இந்த வசதியைப் பெற தனித்தனி எஸ்.எம்.எஸ். எண்கள் இருக்கின்றன. கட்டணம் உங்களின் செல்போன் சேவைத் திட்டம் மற்றும் நிறுவனத்தைப் பொறுத்து இருக்கிறது.

மாலை 3 மணிக்குள் எஸ்.எம்.எஸ். அனுப்பினால் அன்றைய என்.ஏ.வி. மதிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதற்குப்பிறகு அனுப்பினால் அடுத்த நாள் என்.ஏ.வி.தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்'' என்றார் அவர்.

இனி என்ன கவலை, ஃபண்ட் முதலீட்டில் புகுந்து விளையாட வேண்டியதுதானே!

- இரா.ரூபாவதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு