Published:Updated:

பங்குச் சந்தை... தீபாவளிக்குப் பிறகு?

பங்குச் சந்தை... தீபாவளிக்குப் பிறகு?

பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை... தீபாவளிக்குப் பிறகு?

மே மற்றும் ஜூன் மாதங்களில் சந்தை 4800 மற்றும் 5000 புள்ளிகளில் இருந்தது, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 5000 முதல் 5200 புள்ளிகள் வரை சந்தை வர்த்தமானது. இப்போது 5600 முதல் 5800 புள்ளிகளுக்கிடையே சந்தை வர்த்தகமாகிறது. இதோ, தீபாவளி வந்துவிட்டது. இனி சந்தை எப்படி இருக்கும்?, அடுத்த சில மாதங்களில் சந்தையில் என்ன நடக்கும்? என்று சென்னையின் முன்னணி டெக்னிக்கல் அனலிஸ்ட்டான ஸ்ரீராமிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

பங்குச் சந்தை... தீபாவளிக்குப் பிறகு?

''சந்தை ஏற்றத்தில்தான் இருக்கிறது என்பதைக் கடந்த டிசம்பர் முதலே சொல்லி வருகிறேன். அது போலவே நடந்திருக்கிறது. பல அறிவிப்புகள் இப்போதுதானே வருகிறது, எப்படி நீங்கள் அப்போதே சொன்னீர்கள் என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். இப்போதும்கூட பல மாநிலங்கள் அந்நிய முதலீட்டை ஆதரிக்கவில்லை; இன்ஷூரன்ஸ் துறையில் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் வேண்டும் என்கிறபோது சந்தை ஏறுமுகத்தில்தான் இருக்கிறது என்பதை எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்கலாம். முன்பிருந்த நிலைமைக்கும், இப்போது இருக்கும் நிலைமைக்கும் பெரிய வித்தியாசம், அரசாங்கம் கொஞ்சம் வேகமாகச் செயல்பட ஆரம்பித்திருப்பதே. இந்த 'சென்டிமென்டுக்குத்தான்’ சந்தை ரியாக்ட் செய்திருக்கிறது.

கடந்த வருடத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அரசாங்கத்துக்கு நிறைய அழுத்தம் இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இதுபோன்ற அறிவிப்புகள் எந்த நேரம் வேண்டுமானாலும் வரக்கூடிய சூழ்நிலை இருந்தது. அதுதான் இப்போது நடந்திருக்கிறது. இந்த அறிவிப்பு காரணமாகவே சந்தை உயர்ந்து வருகிறது.

ஆனாலும், சிலர் சந்தை நெகட்டிவ்வாகத்தான் இருக்கிறது என்றும் அதற்கான காரணங்களையும் சொல்லி வருகிறார்கள். அவர்கள் சொல்வது முற்றிலும் நடக்க வாய்ப்பு இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனாலும், வாய்ப்புகள் குறைவே!

##~##
முதலாவது, சில வாரங்களுக்கு முன்பு அல்காரிதத்தில் ஏற்பட்ட பிரச்னையால் நிஃப்டி மிக வேகமாகச் சரிந்து, மீண்டும் மேலே வந்தது. சில டெக்னிக்கல் அனலிஸ்ட்கள், எழுந்த அளவு சந்தை மீண்டும் சரியும் என்று சொல்லி வருகிறார்கள். எனக்குத் தெரிந்து இதுவரை, இதுபோன்ற தவறுகளுக்காக சந்தை சரிந்ததில்லை. ஒருவேளை அப்படியே சரிய வாய்ப்பு இருந்தாலும், இனிமேலும் சரிய வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன்.

இரண்டாவது, இந்தியாவின் வளர்ச்சி குறைவு என்கிறார்கள் சிலர். உண்மைதான், கடந்த சில ஆண்டுகளாக அடைந்து வந்த வளர்ச்சி இப்போது இல்லைதான். ஆனாலும்,     6 சதவிகித வளர்ச்சி என்பது மோசமில்லை. மேலும், இந்தியாவில் நுகர்வோர்களின் தேவை இருந்துகொண்டுதான் இருக்கிறது. எந்த நிறுவனம் முதல் என்பதில் வேண்டுமானால் போட்டி இருக்குமே தவிர, தேவை குறையாது.

பங்குச் சந்தை... தீபாவளிக்குப் பிறகு?

மேலும், ஜூலை மாதம் 26-ம் தேதி ஆர்.எஸ்.ஐ. 37. அன்றைய நிஃப்டி (ஃபியூச்சர்ஸ்) முடிவு 5034, செப்டம்பர் மாதம் 5-ம் தேதி ஆர்.எஸ்.ஐ. 42, (நிஃப்டி ஃபியூச்சர்ஸ் 5240), அக்டோபர் 30-ம் தேதி ஆர்.எஸ்.ஐ. 47, நிஃப்டி ஃபியூச்சர்ஸ் முடிந்தது 5619 புள்ளிகள். ஒவ்வொரு காலகட்டத்திலும் குறைந்தபட்ச ஆர்.எஸ்.ஐ. இருக்கும் சமயத்தில் சந்தை உயர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இப்போது (வெள்ளிக்கிழமை- நவம்பர் 9) ஆர்.எஸ்.ஐ. 58 என்ற நிலையில் இருக்கிறது.

இதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது சந்தை இன்னும் மேலே செல்லத்தான் வாய்ப்பு அதிகம். ஏற்கெனவே சொன்னது போல, வருகிற மார்ச் மாதத்துக்குள் நிஃப்டி தன்னுடைய புதிய உச்சத்தைத் தொட வாய்ப்பு இருக்கிறது. இந்த சமயத்தில்கூட முதலீடு செய்யலாம். (ஸ்டாப்லாஸ் 5550). அதற்காக சந்தை சரியாது என்று சொல்ல முடியாது. 5500 புள்ளிகளுக்குக் கீழே செல்ல 40 சதவிகித வாய்ப்பு இருக்கிறது. 5000 புள்ளிகளுக்குக் கீழே செல்ல 25 சதவிகித வாய்ப்பு இருக்கிறது. ஆனால், 4800 புள்ளிகளுக்குக் கீழே செல்ல 10 சதவிகித வாய்ப்பு இருக்கிறது.                100 சதவிகிதம் நிச்சயம் இது நடக்கும், நடக்காது என்று எந்தவிதமான உத்தரவாதமும் கொடுக்க முடியாது. காரணம், மார்க்கெட் போடும் டியூனுக்கு ஏற்பதான் நாம் ஆடமுடியுமே தவிர, நாம் போடும் டியூனுக்கு மார்க்கெட் என்றும் ஆடாது. பேங்க் நிஃப்டியும் ஏறுமுகமாகவே இருக்கிறது'' என்று முடித்தார்.

நம்பிக்கையுடன் காத்திருப்போம்!

- வா.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு