பிரீமியம் ஸ்டோரி
ஃபண்ட் கிளினிக்!
ஃபண்ட் கிளினிக்!

சுந்தரம் செலக்ட் ஃபோக்கஸ் ஃபண்டில் இருமுறையும், சுந்தரம் மிட் கேப்பில் மூன்று முறையும் சுந்தரம் ஸ்மைல், சுந்தரம் ஃபைனான்ஷியல் ஆகிய ஃபண்டுகளில் முதலீடு செய்திருக்கிறேன். தவிர, ரிலையன்ஸ் ரெகுலர் சேவிங்ஸ் ஃபண்ட், ரிலையன்ஸ் பேங்கிங், எஸ்.பி.ஐ. கான்ட்ரா ஃபண்டுகளிலும் முதலீடு செய்திருக்கிறேன். இந்த ஃபண்டுகள் எல்லாம் சரியானவைதானா? ரிலையன்ஸ் ரெகுலர் சேவிங் ஃபண்டில் டிவிடெண்ட் ஆப்ஷனில் இப்போதுள்ள என்.ஏ.வி.யில் முதலீடு செய்யலாமா? நல்ல டிவிடெண்ட் தரும் சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைக் கொஞ்சம் அறிமுகப்படுத்துங்களேன். மேலும், ரிலையன்ஸ் ரெகுலர் சேவிங்ஸ் பிளானில் டிவிடெண்ட் ஆப்ஷனில் தற்போதைய விலையில் புதிதாக முதலீடு செய்யலாமா?

- எம்.என்.கிருஷ்ணா, மின்னஞ்சல் மூலமாக.

''அன்புள்ள கிருஷ்ணா,

நீங்கள் ஒரே ஃபண்ட் ஹவுஸில் அதிகமான முதலீட்டை செய்துள்ளீர்கள். இனிமேல் அதுபோன்ற தவறைத் தவிர்த்துவிடுங்கள். சுந்தரம் செலக்ட் மிட் கேப், ரிலையன்ஸ் பேங்கிங், ரிலையன்ஸ் ஆர்.எஸ்.எஃப். ஈக்விட்டி ஆகிய திட்டங்களில் உள்ள முதலீட்டைத் தொடருங்கள். பிற முதலீடுகளை விட்டு வெளியேறி, கீழே தரப்பட்டுள்ள திட்டங்களில் ஏதாவது இரண்டில் முதலீடு செய்யுங்கள். அவ்வாறு செய்யும் முதலீட்டில் உங்களுக்கு டிவிடெண்ட் ஆப்ஷன் தேவை என்பதால், அந்த ஆப்ஷனைத் தேர்வு செய்யுங்கள். இந்த ஃபண்டுகள் தொடர்ந்து நல்ல டிவிடெண்ட் தந்துவருகின்றன.

பரிந்துரை செய்யப்படும் ஃபண்டுகள்: ஃபிராங்க்ளின் இந்தியா புளூசிப், ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி, ஹெச்.டி.எஃப்.சி. புரூடென்ஸ்.

ரிலையன்ஸ் ஆர்.எஸ்.எஃப். ஈக்விட்டி டிவிடெண்ட் ஆப்ஷன் நல்ல திட்டம் என்ற போதும், ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், புதிய முதலீட்டுக்கு நீங்கள் அந்த ஃபண்டைத் தவிர்க்கலாம்.

ஃபண்ட் கிளினிக்!
##~##
தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் எனது மாதச் சம்பளம் 16,000. கடந்த இரண்டு வருடங்களாக யூ.டி.ஐ. டிவிடெண்ட் யீல்ட் ஃபண்டிலும், ரிலையன்ஸ் கோல்டு சேவிங்ஸ் ஃபண்டிலும் எஸ்.ஐ.பி. மூலம் தலா 1,000 ரூபாய் முதலீடு செய்து வருகிறேன். 38 வயதாகும் நான் ஓய்வுக் காலத்துக்காக எஸ்.ஐ.பி. மூலம் சேமிக்க விரும்புகிறேன். இதற்கேற்ற ஃபண்டையும், நான் ஏற்கெனவே முதலீடு செய்துவரும் இரண்டு ஃபண்டுகளும் சரியானவைதானா என்பதைச் சொல்லுங்கள்.

- என்.ஆறுமுக கணேசன், திருநெல்வேலி.

''டியர் ஆறுமுக கணேசன்,

பொதுவாக தங்க ஃபண்டுகளின் செயல்பாட்டில் பெரிய வித்தியாசம் இருக்காது என்பதால், நீங்கள் ரிலையன்ஸ் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் முதலீட்டை தொடருங்கள். யூ.டி.ஐ. டிவிடெண்ட் யீல்ட் ஃபண்டைவிட அதே ஃபண்ட் நிறுவனத்தால் நடத்தப்படும் யூ.டி.ஐ. ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் நன்றாகச் செயல்பட்டு வருகிறது என்பதால், அந்த ஃபண்டில் எஸ்.ஐ.பி-யை துவக்கிக்கொள்ளுங்கள். அத்துடன் ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி ஃபண்டில் ஒரு எஸ்.ஐ.பி-யை உங்கள் ஓய்வுக் காலத்துக்காகத் தொடங்கிக்கொள்ளுங்கள்.

பெங்களூருவில் உள்ள ஒரு எம்.என்.சி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் எனது மாதச் சம்பளம் 60,000 ரூபாய். எனக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவனுடைய கல்வி மற்றும் திருமணம், எங்களது ஓய்வுக் காலத்துக்கு என மாதம் 12,500 ரூபாயை ஒன்பது ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன். நான் முதலீடு செய்யும் ஃபண்டுகள்  சரியானவைதானா? தவிர, கூடுதலாக ரூ.2,500 ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யத் தயார். இந்த பணத்தை எதில் முதலீடு செய்யலாம்? மேலும், எனது ஃபண்ட் முதலீட்டை ஒரு புரோக்கர் நிறுவனத்திடமிருந்து இன்னொரு புரோக்கர் நிறுவனத்துக்கு மாற்றலாமா?

- தனபாலன், பெங்களூரு.

''அன்புள்ள தனபாலன்,

மாதம் ரூ.15,000 முதலீடு செய்யும் திறமை உள்ள நீங்கள் ரூ.500-க்கு எஸ்.ஐ.பி.யை தொடங்காதீர்கள். ஒரு ஃபண்டிற்கு மாதம் ஒரு தடவை ரூ.3,000-த்தைக் குறைந்தபட்ச எஸ்.ஐ.பி. முதலீடாக வைத்துக்கொள்ளுங்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்திற்கு மாற்ற விரும்புவதாகக் கூறியுள்ளீர்கள். ஒரு புரோக்கரிடம் இருந்து இன்னொரு புரோக்கரின் எண்ணிற்கு நீங்கள் மாற்றும்போது இரண்டு புரோக்கருக்குமே எந்தவித லாபமும் கிடைக்காது. ஆகவே, உங்களது புது புரோக்கர் நீங்கள் வைத்திருக்கும் பழைய யூனிட்டுகளை மாற்றிக்கொள்ள விரும்ப மாட்டார். எனவே, நீங்கள் வைத்திருக்கும் ஃபண்டுகளை விற்றுவிட்டு, புது புரோக்கர் மூலம் புதிதாக வாங்கிக் கொள்வது நல்லது.

இனி, நீங்கள் உங்கள் போர்ட்ஃபோலியோவில் செய்ய வேண்டிய மாற்றங்களைப் பார்ப்போம். யூ.டி.ஐ. பாண்ட் ஃபண்ட் மொத்தத்தில் நல்ல முதலீடு என்றாலும், அதன் செயல்பாட்டில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. உதாரணத்திற்கு, 2011-ம் ஆண்டு 11.17% ரிட்டர்ன்ஸையும், 2009-ம் ஆண்டு -5.01% ரிட்டர்ன்ஸையும் கொடுத்துள்ளது. உங்களுக்கு அவசரமாகப் பணம் தேவைப்படும்போது பாண்ட் மார்க்கெட் அடிபட்டு இருந்தால், நீங்கள் நஷ்டத்தில் அல்லது குறைந்த லாபத்தில் உங்கள் முதலீடுகளை வெளியில் எடுக்க வேண்டி வரும். எஸ்.பி.ஐ. டைனமிக் பாண்ட் ஃபண்டின் சமீபத்திய (ஒன்று மற்றும் மூன்று ஆண்டுகள்) செயல்பாடு நன்றாக இருந்தபோதிலும், அதன் நீண்ட கால (ஐந்து மற்றும் அதற்கு மேல்) செயல்பாடு அவ்வளவு நன்றாக இல்லை. ஆகவே, இந்த இரண்டு ஃபண்டிற்குப் பதிலாக, பிர்லா சன் லைஃப் டைனமிக் பாண்ட் ஃபண்டில் மாதத்திற்கு ரூ.3,500 முதலீடு செய்யுங்கள்.

யூ.டி.ஐ. டிவிடெண்ட் யீல்டின் கடந்த வருட செயல்பாடு சற்று ஸ்லோவாக இருப்பதால், அதில் செல்லும் எஸ்.ஐ.பி-யை நிறுத்திவிட்டு, யூ.டி.ஐ. ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டில் மாதம் ரூ.3,500-யை முதலீடு செய்துகொள்ளுங்கள். எஸ்.பி.ஐ. மேக்னம் எஃப்.எம்.சி.ஜி. ஃபண்ட் துறை சார்ந்த திட்டமாகும். துறை சார்ந்த திட்டங்களில் உங்களின் நுழைவு நேரமும் வெளியேறும் நேரமும் சரியாக இருக்க வேண்டும். இன்ஃப்ரா துறை சார்ந்த ஃபண்டுகளில் 2007-08-ல் முதலீடு செய்துவிட்டு பெரும் நஷ்டத்தில் பலர் இன்று உள்ளனர். அதைப் போன்ற தவறுகளை தவிர்ப்பதற்காக, நீங்கள் எஸ்.பி.ஐ. மேக்னம் எஃப்.எம்.சி.ஜி. திட்டத்தில் முதலீடு செய்வதை நிறுத்திக்கொள்ளலாம். அதேபோல் ஃபண்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கத்துடன் ஃபிராங்க்ளின் இந்தியா புளூசிப் மற்றும் எஸ்.பி.ஐ. எமர்ஜிங் பிஸினஸ் ஆகிய இரண்டு எஸ்.ஐ.பி-க்களையும் நிறுத்திக்கொள்ளுங்கள். போர்ட்ஃபோலியோவை மாற்றி அமைத்தபிறகு உங்களின் முதலீடுகள் கீழ்க்கண்டவாறு இருக்கும்.

ஃபண்ட் கிளினிக்!

சுந்தரம் கேப்பெக்ஸ் ஃபண்டில் ரூ.1,500-ம், ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200 ஃபண்டில் ரூ.2,000-மும் முதலீடு செய்து வருகிறேன். இந்த முதலீட்டின் மூலம் எனக்கு நல்ல லாபம் கிடைத்த மாதிரி தெரியவில்லை. நான் என்ன செய்யலாம்?

- தினகரன், புதுடெல்லி (தெற்கு).

''டியர் தினகரன்,

சுந்தரம் கேப்பெக்ஸ் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ஒரு துறை சார்ந்த திட்டமாகும். துறை சார்ந்த திட்டங்களில் ரிஸ்க்-ரிவார்டு ஆகிய இரண்டுமே அதிகம். சாதாரண முதலீட்டாளர்களுக்கு இத்திட்டங்கள் உகந்ததல்ல. ஆகவே, அதை நிறுத்திவிட்டு, பிர்லா சன் லைஃப் ஃபிரன்ட்லைன் ஈக்விட்டியில் ரூ.2,500-க்கு எஸ்.ஐ.பி-யை ஆரம்பித்துக்கொள்ளுங்கள். சந்தை கடந்த இரண்டு வருடங்களாக சற்று சுணக்கமாக இருப்பதால், உங்கள் ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200 முதலீட்டின் வருமானமும் சற்று சுணக்கமாக இருக்கும். அந்த ஃபண்டில் உங்களின் வருமானம், கடந்த இரண்டு வருட முதலீட்டில் கிட்டத்தட்ட ஆண்டிற்கு 7 சதவிகிதமாக இருக்கும். இத்திட்டம் நல்ல டிராக் ரெக்கார்டு உள்ள திட்டம் என்பதால், அந்த ஃபண்டை தொடர்ந்து வாருங்கள். உங்கள் முதலீட்டை அந்த ஃபண்டிலும் ரூ.2,500-ஆக ஆக்கிக்கொள்ளுங்கள். ஆக மொத்தம், உங்கள் மாத முதலீடு ரூ.5,000-மாக இருக்கட்டும்.

(மீண்டும் திறக்கும்)

குறிப்பு: இங்கு செய்துள்ள பரிந்துரை ஒரு தனிநபரின் தேவைகளுக்காகச் செய்யப்பட்டுள்ளது. அவரவரின் தேவைகள் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனிற்கு ஏற்ப பரிந்துரை மாறும் என்பதைக் கருத்தில்கொள்ளவும்.

ஃபண்ட் கிளினிக்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு