Published:Updated:

கம்பெனி ரிசர்ச்! - ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா!

கம்பெனி ரிசர்ச்! - ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா!

பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி ரிசர்ச்! - ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா!

சமீப காலமாக மிக வேகமான வளர்ச்சி அடைந்துவரும் என்டர்டெயின்மென்ட் துறை நிறுவனமான ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தைதான் இந்த வாரம் நாம் அலசப்போகிறோம்.

துறை எப்படி?

##~##
பெரும்பாலான இந்தியர்களின் பொழுதுபோக்கு, திரைப்படம் பார்ப்பதுதான். மொழி, கலாசார வேறுபாடு இல்லாமல் அனைவரும் திரைப்படங்களைப் பார்க்கின்றனர். உலக அளவில் இந்தியாவில்தான் ஓர் ஆண்டில் அதிகப் படங்கள் வெளியாகிறது. தவிர, படம் பார்க்கிறவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில்தான் அதிகம். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் 330 கோடி டிக்கெட்கள் இந்தியாவில் விற்பனையாகிறது. அதிக அளவிலான திரையரங்குகள் கொண்ட நாடுகளில் இரண்டாவது இடம் இந்தியாவுக்குத்தான்.  

திரைப்படத் துறை ஆண்டுக்கு 10 சதவிகிதம் என்கிறஅளவில் அடுத்த மூன்று நான்கு ஆண்டுகளுக்கு வளர்ச்சி அடைய வாய்ப்பு இருப்பதாக ஃபிக்கி மற்றும் கே.பி.எம்.ஜி. தெரிவித்திருக்கிறது. 2016-ம் ஆண்டு வாக்கில் 15,000 கோடி ரூபாய் மதிப்புடையதாக இந்திய சினிமா துறை இருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்திய திரைப்படங்கள் இப்போது வெளிநாடுகளில் அதிகளவு வெளியாவதும் இந்த துறை அதிகளவு வளர்ச்சி அடைய ஒரு காரணம்.

நிறுவனம் எப்படி?

1977-ம் ஆண்டு மும்பையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் இப்போது சர்வதேச அளவில் முக்கிய நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இப்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 50 நாடுகளில் இந்த நிறுவனத்துக்கு டிஸ்ட்ரிபியூஷன் நெட்வொர்க் இருக்கிறது. மேலும், இந்நிறுவனத்தின் வசம் 1,900 படங்களும் 700 படங்களுக்கு டிஜிட்டல் உரிமையும் இருக்கிறது. படங்களை சொந்தமாக தயாரிப்பது, இன்னொரு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து தயாரிப்பது, தியேட்டர்களில் வெளியிடுவது, படத்தின் உரிமைகளை டி.வி., ஐ.பி.டி.வி. நிறுவனங்களுக்கு விற்பது, டி.வி.டி.கள் விற்பது உள்ளிட்ட சினிமாவின் பெரும்பாலான பிஸினஸ் மாடல்களில் இந்நிறுவனத்துக்கு அனுபவம் இருக்கிறது.

கம்பெனி ரிசர்ச்! - ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா!
கம்பெனி ரிசர்ச்! - ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா!

ஐ.கியூப் ஸ்டூடியோஸ், ஐங்கரன் இன்டர்நேஷனல், பிக் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் கணிசமான பங்கினை வைத்திருக்கிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்பூரி, மராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட இந்தியாவின் பிராந்திய மொழி திரைப்படங்களை தயாரித்து வெளியிடும் பணியையும் செய்கிறது. ரா-ஒன், மாற்றான், இங்கிலீஷ் விங்கிலீஷ், தபாங், வான்டட், ஓம் சாந்தி ஓம், சீனிகம், ரெடி, மர்டர் மற்றும் அக்னிபாத் உள்ளிட்ட பல முக்கியமான படங்கள் இந்நிறுவனத்தின் தயாரிப்பு அல்லது வெளியீடுகள்தான். தீபாவளிக்கு வெளிவரும் துப்பாக்கியை இந்நிறுவனம் வெளியிடுகிறது. ரஜினி நடிக்கும் கோச்சடையான் படத்தை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

நிதி நிலைமை எப்படி?

இந்நிறுவனம் நீண்ட காலமாக பிஸினஸ் செய்து வந்தாலும், 2010-ம் ஆண்டுதான் இந்திய சந்தையில் பட்டியலிடப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் வருமானம் கிட்டத்தட்ட இரண்டு மடங்குக்கு அதிகரித்திருக்கிறது. அதேபோல, லாபமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கடந்த வருடம் அதிக வருமானம் கொடுத்த படங்களில் 40 சதவிகிதம் இந்நிறுவனத்தின் பங்குதான். இந்நிறுவனத்தின் செயல்பாட்டு லாப வரம்பு 23 சதவிகிதம் என்ற நிலையிலே இருப்பது ஓரளவுக்கு நல்ல விஷயம்தான். புரமோட்டர்களின் பங்கும் 77 சதவிகிதம் இருப்பது புரமோட்டர்களுக்கு இந்த பிஸினஸில் நம்பிக்கை இருப்பதையே காட்டுகிறது.

மேலும், அந்நிய மற்றும் இந்திய நிறுவன முதலீட்டாளர்களின் பங்கும் 8 சதவிகிதம் என்ற அளவில்தான் இருக்கிறது. ஆனால், இதுவரை இந்நிறுவனம் டிவிடெண்ட் தரவே இல்லை. தவிர, வொர்க்கிங் கேப்பிட்டல் மற்றும் புதிய முதலீடுகள் தேவைப்பட்டதால் இப்போது கொஞ்சம் இந்நிறுவனத்துக்கு கடன் அதிகரித்திருக்கிறது.

வாய்ப்புகள்?

கம்பெனி ரிசர்ச்! - ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா!

சில வருடங்களுக்கு முன்பு தூர்தர்ஷன் மட்டுமே தொலைக்காட்சி சேனலாக இருந்தது. இப்போது, பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தொலைக்காட்சி நிறுவனங்களின் முக்கியமான வருமானம் திரைப்படங்கள்தான். அதனால் இந்நிறுவனம் வெளியிடும் திரைப்படங்களை போட்டி போட்டுக்கொண்டு சேனல்கள் வாங்கத் தயாராக இருக்கிறது. மேலும், இந்தியர்கள் உலகம் முழுவதும் இருப்பதால், சர்வதேச உரிமைகள் மூலம் அதிக வருமானம் வர வாய்ப்பு இருக்கிறது. இந்நிறுவனத்திடன் இருக்கும் படங்களின் உரிமைகள் மூலம், நேரடியாக இணையதளத்தைப் பார்க்கும் வசதியை இந்நிறுவனம் செய்து வருகிறது.

தவிர, நகரங்களில் அதிகரித்து வரும் திரை அரங்குகளின் எண்ணிக்கை, இளைஞர்களின் பொழுதுபோக்கு, மார்க்கெட்டிங் யுக்திகள், இந்நிறுவனத்தின் எதிர்காலத் தயாரிப்பு ஆகியவற்றை பார்க்கும்போது வருங்காலத்தில் நல்ல வருமானம் ஈட்ட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.

ரிஸ்க் என்ன?

கம்பெனி ரிசர்ச்! - ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா!

இந்த நிறுவனம் பொருட்களை உற்பத்தி செய்யவில்லை. பொழுது போக்கு துறையில் இருப்பதால் இந்நிறுவனத்தின் வருமானத்தில் பல ரிஸ்க்குகள் இருக்கிறது. படத்தின் நடிகர்கள், வெளியாகும் தேதி, இசை, படத்தில் சொல்லப்படும் விஷயம் போன்ற பலவற்றை அடிப்படையாக வைத்துதான் வருமானம் கிடைக்கும். இதெல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் மிக அதிகமான வருமானமும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சரி இல்லாமல் போனால் அடுத்த ஒரு வாரத்தில் படம் தியேட்டரை விட்டு எடுத்துவிடவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், கடன் அதிகரித்து வருவது, பணியாளர்கள் செலவு வருடா வருடம் அதிகரிப்பது போன்றவையும் ரிஸ்க்காகவே படுகிறது.

இருந்தாலும், பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சி, இந்நிறுவனத்தின் அனுபவம், பல கட்ட பிஸினஸ்களை செய்வது, பல மொழி படங்களை கையாளுவது உள்ளிட்ட காரணங்களால் இந்த பங்கினை முதலீட்டாளர்கள் தங்களது போர்ட்ஃபோலியோவில் சிறிது சேர்த்துக்கொள்ளலாம்.

ஆனாலும், தற்போதைய விலையில் கொஞ்சமும், இன்னும் கொஞ்சம் சரிந்தபிறகு கொஞ்ச பங்குகளும் வாங்கலாம். அதே சமயத்தில், உங்களின் போர்ட்ஃபோலியோவில்         5 சதவிகிதத்துக்கு மேல் இந்த பங்கு செல்ல வேண்டாம் என்பதே எங்களின் பரிந்துரை.

- நாணயம் டீம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு