Published:Updated:

காசு தருமா கையைக் கடிக்குமா?

பங்கு வெளியீடு

பிரீமியம் ஸ்டோரி

ந்து வருடங்களுக்கு முன்பு, அதாவது 2006-07-ல் ஐ.பி.ஓ.-வில் முதலீடு செய்யாவிட்டால் அவர்களை முதலீட்டாளர்கள் என்றே யாரும் சொல்லமாட்டார்கள். அந்த சமயத்தில் மாதத்துக்கு இரண்டு, மூன்று ஐ.பி.ஓ.க்கள் வரும். சந்தை உயர்ந்துகொண்டே வந்ததால், அந்த பங்குகள் பட்டியலிடும் அன்றே நல்ல லாபம் தர, எல்லோரும் ஐ.பி.ஓ. பைத்தியம் பிடித்து அலைந்தனர்.

ஆனால், 2008-க்குப் பிறகுவந்த பெரும்பாலான ஐ.பி.ஓ.களில் முதலீடு செய்தவர்கள் தங்கள் கையைச் சுட்டுக்கொண்டதுதான் மிச்சம். (2009-க்குப் பிறகு 140 ஐ.பி.ஓ.கள் வந்திருக்கிறது. இதில் 52 பங்குகள் மட்டுமே பட்டியலிடப்பட்ட விலைக்கு மேலே வர்த்தகமாகிறது.)

காசு தருமா கையைக் கடிக்குமா?

ஆக மொத்தத்தில், ஐ.பி.ஓ. ஒரு ரவுண்ட் முடிந்து இப்போது அடுத்த ரவுண்ட் ஆரம்பித்திருக்கிறது.

காசு தருமா கையைக் கடிக்குமா?

சந்தையும் புதிய உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் இந்த வேளையில், பல்வேறு நிறுவனம் புதிதாக ஐ.பி.ஓ. வருவதற்குத் தயாராக, ஐ.பி.ஓ. சீசன் 2 அமோகமாக ஆரம்பமாகி இருக்கிறது.

தவிர, மத்திய அரசும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கப்  பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள தன்னுடைய பங்குகளில் சில சதவிகிதத்தை,  பங்கு வெளியீட்டின் மூலம் விலக்கிக்கொள்ள முடிவு செய்திருக்கிறது.  

இந்த ஆறு ஆண்டு காலத்தில் அதிகபட்ச லாபம் மற்றும் அதிகபட்ச நஷ்டம் என முதலீட்டாளர் களுக்கு இரண்டுவிதமான அனுபவங்களும் கிடைத்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ஐ.பி.ஓ. வரும்போது முதலீட்டாளர்கள் எந்த மாதிரி முடிவுகளை எடுக்கவேண்டும்? ஐ.பி.ஓ.வில் முதலீடு செய்யலாமா, வேண்டாமா? என்பது உள்ளிட்ட கேள்விகளோடு பங்குச் சந்தை ஆலோசகர் ரெஜிதாமஸை சந்தித்தோம். பல உதாரணங்களோடு நமக்கு விளக்கங்களையும் கொடுத்தார் அவர்.

''ஐ.பி.ஓ.வில் முதலீடு செய்பவர்களின் முக்கிய நோக்கமே, முதல்நாள் வர்த்தகத்தில் அதிக லாபம் பெறவேண்டும் என்பதாக இருக்கிறது. இதனால் முதல்நாளன்றே கிடைக்கும் லாபத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள பல முதலீட்டாளர்கள் நினைத்து, அன்றே விற்க நினைக்கிறார்கள். இதனால் முதல்நாளன்று இவ்வளவுதான் வர்த்தகம் நடக்கவேண்டும் என்கிற விதிமுறையைக் கொண்டுவரலாமா என செபி யோசித்து வருகிறது.

மேலும், சில நாட்களுக்கு முன்பு ஹிந்துஸ்தான் காப்பர் பங்கு ஏல முறையில் விற்கப்பட்டது. முதலீட்டாளர்களை கவர்வதற் காகச் சந்தை விலையைவிட அதிகமான தள்ளுபடியில் விற்றது. இப்போது அந்த தள்ளுபடி விலையைவிடவும் அந்தப் பங்கு குறைவாகவே வர்த்தகமாகிறது.

அதனால் அரசு வெளியிடும் மறுவெளியீடுகள் இனியும் அதிகளவு தள்ளுபடி விலையில் கிடைக்க வாய்ப்பில்லை. அதனால் இனி முதல்நாள் வர்த்தகம் அல்லது குறுகியகால ஆதாயத்துக்காக முதலீடு செய்வது லாபகரமாக இருக்காது. அது தேவை இல்லாததும்கூட.

காசு தருமா கையைக் கடிக்குமா?

அதற்காக ஐ.பி.ஓ.வில் முதலீடு செய்யவே வேண்டாம்;  தவிர்த்து விடலாம் என்ற எண்ணமும் தேவை இல்லை. உதாரணமாக, கடந்த வருட மத்தியில் எல் அண்ட் டி ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ. வந்தது. அந்த சமயத்தில் அந்த பங்கு பட்டியலிடப்பட்ட விலைக்குக் கீழேகூட சென்றது. இருந்தாலும் அதில் முதலீடு செய்தவர்கள் இன்று இரட்டிப்பு லாபத்தில் இருக்கிறார்கள். இதை நான் சொல்லக் காரணம், நல்ல நிறுவனமாக இருக்கும்பட்சத்தில் ஐ.பி.ஓ. முதலீடு செய்யாமல் இருக்க வேண்டாம் என்பதற்குதான்.

தவிர, முதல்முறையாக சந்தையில் நுழைபவர்களுக்கு ஐ.பி.ஓ.தான் சிறந்த வழியாக இருக்க முடியும். ஐ.பி.ஓ. மூலம் முதலீடு செய்யும்போதுதான் ஒருவருக்கு சந்தை எப்படி செயல்படுகிறது என்பதை ஆரம்பத்தில் இருந்து கற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

ஐ.பி.ஓ.வில் முதலீடு செய்யும் முன், ஒரு நிறுவனத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும், இந்த நிறுவனத்தின் பிஸினஸ் என்ன, பிராண்ட் என்ன, இதன் போட்டியாளர்களுடன் இந்த நிறுவனம் எப்படி சிறப்பாகச் செயல்படுகிறது, இந்த நிறுவனம் எத்தனை வருடங்களாகச் சந்தையில் இருக்கிறது, வெளியீட்டு விலை சரிதானா உள்ளிட்ட பல விஷயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த விஷயங்களை கற்றுக்கொண்டுவிட்டால், மற்ற முதலீடுகளுக்கும் இதே முறையைப் பின்பற்றலாம்'' என்று முடித்தார்.

ஐ.பி.ஓ.தான் சரி என்று கொண்டாடவும் வேண்டாம்; ஒரு சில முறை நஷ்டம் வந்தவுடன் இனி ஐ.பி.ஓ.வே  வேண்டாம் என தடாலடியாக முடிவெடுக்கவும் வேண்டாம்! நிறுவனத்தின் செயல்பாடுகள், அதன் பங்கின் மதிப்பு போன்ற வற்றைப் பார்த்து முடிவெடுப்பதே சரியாக இருக்கும்.

- வா.கார்த்திகேயன்.

ஐ.பி.ஓ.வுக்கு பாதுகாப்பு கவசம்!

செபி-யின் தலைவர் யூ.கே.சின்ஹா சொன்னபடி, 2009-லிருந்து 2012 அக்டோபர் வரை சுமார் 134 நிறுவனங்கள், சுமார் 60,000 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட செபியிடம் விண்ணப்பித்து, பங்கு வெளியீடு செய்யாமல் உள்ளன. இதில் பல நிறுவனங்கள் பங்கு வெளியீட்டிலிருந்து விலகியிருக்கின்றன. மீதமுள்ளவை செபியின் விளக்கங்களுக்குப் பதிலளிக்காமல் காலாவதியாகிவிட்டன. இதில் பல முன்னணி நிறுவனங்களும் இருக்கிறது.

ஐ.பி.ஓ. முதலீட்டுக்கு 'சேஃப்டி நெட்’  என்ற புதிய மெக்கானிஸத்தைக் கொண்டுவர செபி சர்க்குலர் வெளியிட்டிருக்கிறது என்பது குறித்து ஏற்கெனவெ சொல்லி இருந்தோம். இன்னும் சில நாட்களுக்குள் அதற்கான விதிமுறைகள் வெளியாகும் என்றும் தெரிகிறது.

இதன்படி புதிதாக சந்தையில் பட்டியலிடப்படும் பங்கு, பட்டியலிடப்பட்ட நாளிலில் இருந்து மூன்று மாதங்களுக்குள் 20 சதவிகிதத்துக்கு கீழே சரியும் (சந்தையின் சரிவைவிட) பட்சத்தில் முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திருப்பி கொடுக்க வேண்டி இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு