Published:Updated:

தொடரும் செபியின் அதிரடி:

வா.கார்த்திகேயன்.

 ##~##

முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த பலவகையான யுக்திகளை கையாளுகின்றன நிறுவனங்கள். அதில் ஒன்றுதான் பைபேக்.

அதாவது கம்பெனியே பங்குகளைத் திரும்ப வாங்கும்பட்சத்தில், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு தைரியமாக அந்தப் பங்குகளை வாங்குகிறார்கள். ஆனால், பங்குகளின் விலை தொடர்ந்து சரிவதைத் தடுக்கவே நிறுவனங்கள் இப்படி பைபேக் அறிவிக்கின்றன என்பது சாதாரண முதலீட்டாளர்களுக்குத் தெரியாத சூட்சுமம். மேலும், பைபேக் செய்வதன் மூலம் (அதாவது, சந்தையில் இருந்து பங்குகளை வாங்குவதன் மூலம்) மொத்தப் பங்குகளின் எண்ணிக்கைக் குறையும். இதனால் இ.பி.எஸ். அதிகரித்து பி.இ. விகிதம் குறையும். மொத்தத்தில் அந்தப் பங்கு கவர்ச்சிகரமான முதலீடாகத் தெரியும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த வித்தையைப் புரிந்துகொண்ட நிறுவனங்கள் பைபேக் அறிவிக்கின்றன. ஆனால், உள்ளபடி பார்த்தால், பைபேக் அறிவித்த கம்பெனிகள் சந்தையில் அதிக அளவில் பங்குகளை வாங்குவதில்லை என்பது அதிர்ச்சிதரும் தகவல். கடந்த ஐந்தாண்டுகளில் சராசரியாக 25 கம்பெனிகள் பைபேக் அறிவித்திருக்கின்றன. ஆனால், செபியின் தகவல்படி, சில நிறுவனங்கள் ஒரு பங்கினைக்கூட சந்தையில் வாங்கவில்லை என்பதுதான் உண்மை!  

தொடரும் செபியின் அதிரடி:

பைபேக் செய்வது தொடர்பாக கடுமையான விதிமுறைகள் ஏதும் இதுவரை இல்லாததால், கம்பெனிகள் வெறும் அறிவிப்பை மட்டும் வெளியிட்டுவிட்டு, முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வந்தன. நிறுவனங்களின் இந்தப் 'புத்திசாலி’த்தனமான நடவடிக்கைக்கு செபி இப்போது செக் வைத்து புதிய வழிகாட்டு விதிமுறைகளை கொண்டுவந்திருக்கிறது. இதுகுறித்து வரும் ஜனவரி 31-ம் தேதி வரை கம்பெனிகள் தங்கள் கருத்துகளைச் சொல்லலாம் என்றும் செபி சொல்லியுள்ளது.

செபியின் வழிகாட்டு விதிமுறைகள் என்னென்ன என்று பார்த்துவிடுவோம்.

ஏற்கெனவே உள்ள விதிமுறைபடி, பைபேக் அறிவிப்பை நடைமுறைப்படுத்த ஒரு வருடம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். இனி மூன்று மாதத்துக்குள் செய்து முடித்துவிட வேண்டும்.

ஏற்கெனவே உள்ள விதிமுறைகள்படி, பைபேக் செய்யும்போது கம்பெனிகள் இவ்வளவு பங்குகளை வாங்கவேண்டும் என்று எந்த கணக்கும் இல்லை. புதிய வழிகாட்டு விதிமுறைகள்படி, பைபேக் அறிவித்தத் தொகையில் குறைந்தபட்சம் 50 சதவிகிதத்தை வாங்கவேண்டும்.

தொடரும் செபியின் அதிரடி:

பைபேக் அறிவித்தத் தொகையில் 25 சதவிகித தொகையை தனியாக உள்ள 'எஸ்குரோ அக்கவுன்டில்’ வைக்கவேண்டும். பைபேக் செய்வதற்காக அறிவித்தப் பணத்தை அதற்காக செலவு செய்யவேண்டும் என்பதற்காக இந்த அக்கவுன்டில் பணத்தைப் போட்டுவைக்கச் சொல்கிறது செபி.

பைபேக் அறிவித்தப் பிறகு அடுத்த இரண்டு வருடங்களுக்கு எந்தவிதமான மூலதன நிதி திரட்டும் வேலையையும் நிறுவனங்கள் செய்ய முடியாது.

இதைவிட முக்கியமான விஷயம், நிறுவனத்தின் 'பெய்டு அப் கேப்பிட்டல்’ மற்றும் ரிசர்வ் தொகையில் 15 சதவிகிதத்துக்குமேல் பைபேக் செய்யும்போது, டெண்டர் முறையில்தான் வாங்கவேண்டும். (சந்தையில் வாங்கும்போது முதலீட்டாளர்களுக்கு நல்ல விலை கிடைக்காது. பங்குகள் எப்போது குறைவான விலைக்கு வருகிறதோ, அப்போதுதான் நிறுவனங்கள் வாங்கும். ஆனால், டெண்டர் முறையில் வாங்கும்போது தற்போது வர்த்தகமாகும் விலையைவிட அதிகமான விலையைத் தந்தே முதலீட்டாளர்களிடமிருந்தும் பங்குகளை வாங்கவேண்டும்!)

இந்த வழிகாட்டு விதிமுறைகள் குறித்து பங்குச் சந்தை ஆலோசகர் லெட்சுமண ராமனிடம் கேட்டோம். ''செபி பரிந்துரைக்கும் இந்த வழிகாட்டு விதிமுறைகள் முதலீட்டாளர்களுக்குச் சாதகமான விஷயம்தான். பல நிறுவனங்கள், பங்கு விலை சரிவதைத் தடுக்கவே இந்த பைபேக் திட்டத்தை அறிவிக்கின்றன. புதிய வழிகாட்டு விதிமுறைகள் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் நியாயமான காரணங்கள் இருந்தால் மட்டுமே இனி நிறுவனங்கள் பைபேக் செய்யும் வாய்ப்பு உண்டாகும். தவிர, முதலீட்டாளர்களுக்கு நல்ல விலையும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

அப்போதுகூட, நிறுவனமே பங்குகளைத் திரும்ப வாங்கும்போது நாம் ஏன் வாங்கக்கூடாது என்று யோசிக்காமல், எப்போதும்போல எதிர்காலத் திட்டம், வளர்ச்சி விகிதம், ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட பல சூழ்நிலைகளை வைத்தே முடிவு செய்யவேண்டும்'' என்றார்.

முதலீட்டாளர்களுக்கு நல்லதே செய்ய நினைக்கும் செபியின் அதிரடி வேட்டை தொடரட்டும்!