Published:Updated:

நேரடி முதலீட்டுத் திட்டம்...

முதலீட்டாளர்களுக்குக் கூடுதல் லாபம்..! இரா.ரூபாவதி.

##~##

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்காக இனியும் புரோக்கரைத் தேடிச் செல்லவேண்டிய அவசியமில்லை. இந்த ஜனவரி 1-ம் தேதி முதல் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடமே நேரடியாக வாங்கிக்கொள்ளலாம் என செபி அறிவித்துள்ளது. அதாவது, எந்த ஃபண்டில் முதலீடு செய்யவேண்டுமோ, அந்த நிறுவனத்திற்கு நேரடியாகச் சென்று முதலீட்டைத் தொடங்கலாம். இதுகுறித்து ஐ.டி.பி.ஐ.யின் ஃபண்ட் மேனேஜர் மற்றும் துணைத் தலைவர் வி.பாலசுப்ரமணியனிடம் பேசினோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.  

''மியூச்சுவல் ஃபண்டில் நேரடி முதலீட்டுத் திட்டம் என்பது புதிதல்ல. கடந்த 2008-லேயே செபி இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தது. அப்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு நுழைவுக் கட்டணம்  இருந்தது. நேரடியாக முதலீடு செய்பவர்களுக்கு இந்த நுழைவுக் கட்டணம் இருக்காது. 2009-ல் செபி நுழைவுக் கட்டணத்தை முழுவதுமாக எடுத்துவிட்டது. இத்திட்டத்தில் கூடுதலாக எந்தவிதமான சலுகையும் இல்லாததால் பெரிய வரவேற்பில்லை. இப்படி முதலீடு செய்வதன் மூலமாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு 'எக்ஸ்பென்ஸ் ரேஷியோ’ என்கிற செலவு விகிதம் குறையும். இதனால் நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைத்தன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நேரடி முதலீட்டுத் திட்டம்...

இப்போது முதலீட்டாளர்கள் பயனடையும் வகையில் செபி நேரடியாக முதலீடு செய்பவர் களுக்குத் தனியாக என்.ஏ.வி. தரவேண்டும் என கூறியுள்ளது. இந்தத் திட்டம் 2013 ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. நேரடியாக முதலீடு செய்யும்போது 0.5% லிருந்து 0.7% வரை கூடுதலாக வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது நீண்டகால அடிப்படையில் நல்ல பலன் அளிக்கும் என்பது பலரது கருத்தாக உள்ளது. ஆனால், இதில் கவனிக்கவேண்டிய பல விஷயங்களும் உள்ளன.

ஒரு ஃபண்டில் நேரடி மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மாதம் 5,000 ரூபாய் வீதம்

15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள். அந்தத் திட்டம் 12 சதவிகிதம் வருமானம் என்றால் உங்களுக்குக் கிடைக்கும் தொகை 24,97,901 ரூபாயாக இருக்கும். அதே நேரடியாக இல்லாதத் திட்டங்களில் முதலீடு செய்தால் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ 0.5% போக, 11.5 சதவிகிதம் வருமானம் வரும் என்றால் உங்களுக்கு 23,82,581 ரூபாய்தான் கிடைக்கும். இந்த இரண்டு திட்டங்களுக்கும் வித்தியாசப்படும் தொகை 1,15,320 ரூபாய் ஆகும்.

நேரடி முதலீட்டுத் திட்டம்...

மியூச்சுவல் ஃபண்டின் வளர்ச்சி என்பது ஒவ்வொரு ஆண்டும் மாறக்கூடியது. நேரடியாக முதலீடு செய்பவர்கள் தாங்களே ஃபண்டின் வளர்ச்சியைக் கூர்ந்து கவனிக்கவேண்டும். இதற்கெல்லாம் நேரம் உள்ளவர்கள் மட்டும்தான் இத்திட்டத்தைத் தேர்ந்தெடுக்க முடியும். ஃபண்டுகளை ஆய்வு செய்யும் திறன் இல்லாதவர்களுக்கு இது சற்று கடினம். ஒரு ஃபண்ட் ஒரு வருடம் நல்ல வளர்ச்சியைத் தரும். அதே ஃபண்ட் அடுத்த வருடம் நல்ல வளர்ச்சி தருமா, இல்லையா என்பது தெரியாது. அந்தச் சமயத்தில் நிதி ஆலோசகர்களின்  உதவி தேவைப்படும்'' என்றார்.

மேலும் ''புதிதாக நேரடித் திட்டங்களில் நுழைய விரும்புபவர்கள் அருகிலுள்ள ஃபண்ட் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்றுதான் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்துதர வேண்டியிருக்கும். ஏற்கெனவே முதலீடு செய்தவர்களும் இந்தத் திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம். இப்படி மாறும்போது உங்களின் பழைய திட்டத்திற்கு வெளியேறும் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். இது ஒவ்வொரு ஃபண்டிற்கும் வித்தியாசப்படும். அதன் காலஅளவைப் பொறுத்து மாறுவது புத்திசாலித்தனம்.

நீங்கள் உங்கள் ஏஜென்டிடம் விண்ணப்பம் பெற்றிருந்தாலும் அதில் நேரடி முதலீடு என்று எழுதி அந்த விண்ணப்பத்தை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் தரலாம். அப்போது அந்த விண்ணப்பத்தில் இருக்கும் ஏஜென்டின் தனிப்பட்ட நம்பரை அடித்துவிடவேண்டும். விண்ணப்பத்தில் எதுவும் எழுதவில்லை என்றால் அது நேரடித் திட்டத்தில் சேரும். ஒரு திட்டத் திலிருந்து இன்னொரு நேரடித் திட்டத்திற்கு மாறுவதற்கு 21 நாட்கள் ஆகும்.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் நேரடித் திட்டத்தின் கீழ்வரும். நேரடித் திட்டத்தில் இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை விற்று பணமாக்க விரும்பினால் அதனை எளிதாகச் செய்யலாம். யூனிட்களை விற்பதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் கொடுத்தால் போதும். அது கட் ஆஃப் நேரத்திற்குள் கொடுத்தால் அன்றைய என்.ஏ.வி.யையும், நேரம் முடிந்தபிறகு தந்தால் அடுத்த நாள் என்.ஏ.வி.யையும் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள்.

நேரடித் திட்டத்திற்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். முதலில், நேரடியாகச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனை பயன்படுத்த விரும்புனீர்கள் எனில் தனியாக பின்நம்பர் தருவார்கள். அதைப் பயன்படுத்தி ஆன்லைனில் பரிவர்த்தனைகளைத் தொடரலாம். இந்தத் திட்டத்திற்கு என எந்தவிதமான தனி வரிச் சலுகையும் கிடையாது. ஏற்கெனவே உள்ளது அப்படியே இருக்கும்'' என்றார்.

பங்கு, ஃபண்டுகளை ஆராயும் திறமை உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

 நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றது!

 ஸ்ரீகாந்த் மீனாட்சி,

நேரடி முதலீட்டுத் திட்டம்...

துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா

''இது முதலீட்டாளர் களுக்கு நீண்ட கால அடிப்படையில் மட்டும்தான் பயன் அளிக்கும். இப்போது அல்லது எதிர்காலத்தில் மார்க்கெட் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் பெரும்பாலும் நீண்டகால அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்டுகளை யாரும் வைத்திருப்பது இல்லை. அதோடு விஷயம் தெரிந்தவர்களுக்குதான் நேரடி முதலீட்டு திட்டம் உதவும்.

பல்வேறு ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் ஒவ்வொரு ஃபண்டுக்கும் தனித்தனியாகத் தகவல்களை தெரிந்துவைத்திருக்கவேண்டும். ஏதாவது பிரச்னை என்றால் அதற்கும் ஒவ்வொரு ஃபண்ட் நிறுவனத்தைத்தான் தொடர்புகொள்ளவேண்டியிருக்கும். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட் மூலம் முதலீடு செய்யும்போது இந்தப் பிரச்னை இருக்காது'' என்றார்.