##~## |
முதலீடு செய்யும் அத்தனைபேரின் நோக்கமும் அதிக லாபம் சம்பாதிக்கவேண்டும் என்பதே. ஆனால், அதிக லாபம் கிடைக்கவேண்டுமெனில், அதிக ரிஸ்க் எடுக்கவேண்டியிருக்கும் என பலரும் நினைக்கிறார்கள். இதனால் தங்கள் முதலீடுகளை ரிஸ்க் அதிகமுள்ள ஈக்விட்டி ஃபண்டுகளிலே பலரும் வைத்துக்கொள்கிறார்கள். ஆனால், லாபம் தரக்கூடிய ஃபண்டுகள் பங்கு சார்ந்த பேலன்ஸ்டு ஃபண்ட் (65 சதவிகிதம் ஈக்விட்டியில் முதலீடு இருக்கும் ஃபண்டுகள்.) வகைகளிலும் நிறையவே உள்ளன. இந்த வகை ஃபண்டுகள் எந்த விதத்தில் செயல்படுகின்றன, பங்கு சார்ந்த பேலன்ஸ்டு ஃபண்டுகளில் எப்படி அதிக லாபம் கிடைக்கிறது என்பது குறித்து வேல்யூ இன்வெஸ்டிங் நிறுவனத்தின் இயக்குநர் வெங்கடேஷ் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''பங்குச் சார்ந்த பேலன்ஸ்டு ஃபண்டுகள் மார்க்கெட் ஏறினாலும், இறங்கினாலும் குறைந்தபட்ச ரிட்டர்னையாவது நிச்சயம் தந்துவிடும். ஏனெனில், பங்கு சார்ந்த பேலன்ஸ்டு ஃபண்டுகளில் 65 சதவிகிதம் ஈக்விட்டியிலும், 35 சதவிகிதம் கடன் சார்ந்த ஃபண்டுகளிலும் முதலீடு செய்ய வேண்டும் என்பது செபியின் விதிமுறை. இதை அதிகபட்சம் 70 சதவிகிதம் ஈக்விட்டியிலும், 30 சதவிகிதம் கடன் சார்ந்த முதலீடுகளாகவும் இருக்கும். இதனால், பங்குச் சந்தை மற்றும் பணவீக்க விகிதம் ஏறினாலும், இறங்கினாலும் லாபம் மட்டும் நிச்சயமாக இருக்கும்.
ஆனால், இந்த லாபம் ஓராண்டு காலத்துக்குள் எதிர்பார்க்க முடியாது. நீண்ட கால அடிப்படை யில் மட்டுமே இந்த லாபம் கிடைக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் நல்ல ரிட்டர்ன் கிடைக்கும்.
பங்கு சார்ந்த பேலன்ஸ்டு ஃபண்டுகளில் 30 சதவிகிதம் எப்போதும் கடன் சார்ந்த முதலீடுகளாவே இருக்கும். இந்த 30 சதவிகிதத்திற்கு மேல் கிடைக்கும் வட்டி வருமானத்தை பங்குச் சந்தை குறையும் சமயங்களில் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்வார்கள். இதை 'அசெட் அலோகேஷன்’ என்பார்கள். இது வேறு எந்த ஃபண்டுகளிலும் செய்யமாட்டார்கள். சந்தை இறங்கும்போது முதலீடு செய்தால் அதிக யூனிட்கள் கிடைக்கும். சந்தை ஏறும்போது அதிக ரிட்டர்ன் கிடைக்க இது உதவும். அதேபோல டெட் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் 30 சதவிகித முதலீடு எப்போதுமே குறைந்தபட்ச ரிட்டர்னையாவது தந்துவிடும் என்பது உறுதி.

ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200 ஈக்விட்டி ஃபண்ட் கடந்த 10 ஆண்டுகளில் 29.13 சதவிகித வருமானம் தந்துள்ளது. அதே 70 சதவிகித பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால் 20.3 சதவிகித வருமானம் கிடைத்திருக்கும். 30 சதவிகிதப் பணத்தைக் கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்தீர்கள் எனில், 1.9 சதவிகிதமும் வருமானம் கிடைத்திருக்கும். இரண்டையும் சேர்த்தால் மொத்தம் 22.2 சதவிகிதமும் ரிட்டர்ன் கிடைக்கும். அதே 100 சதவிகிதத்தையும் ஹெச்.டி.எஃப்.சி. புரூடென்ஸ் ஃபண்ட் குரோத்-ல் முதலீடு செய்திருந்தால் கடந்த 10 ஆண்டுகளில் 25.39 சதவிகிதம் வருமானம்

கொடுத்திருக்கும். நீங்களாக ஈக்விட்டி, டெட் ஃபண்டுகளாகப் பிரித்து முதலீடு செய்வதை விடவும் பங்குச் சார்ந்த பேலன்ஸ்டு ஃபண்ட் 3.19 சதவிகிதம் கூடுதலான வருமானம் கொடுக்கும்.
இதுபோலவே, கடந்த ஐந்து ஆண்டுகளின் அடிப்படையில் அதே பங்கு சார்ந்த பேலன்ஸ்டு ஃபண்டுகளின் சராசரி வருமானம் 6.11 சதவிகிதமாக இருந்திருக்கும். அதையே 70 சதவிகிதம் ஈக்விட்டி ஃபண்டுகளிலும் 30 சதவிகிதம் கடன் ஃபண்டுகளிலும் பிரித்துப் போட்டிருந்தால் 5.95 சதவிகித வருமானம்தான் கிடைத்திருக்கும்.
பங்கு சார்ந்த பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது டாப் நிறுவனங்களின் ஃபண்டுகளில் முதலீடு இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது. எந்த ஃபண்டில் முதலீடு செய்ய போகிறீர்களோ, அந்த ஃபண்ட் கடந்த ஐந்து ஆண்டுகளில் எப்படிப்பட்ட வளர்ச்சி கண்டிருக்கிறது, அந்த நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு? என்பதை எல்லாம் கவனத்தில் வைத்துக்கொள்வது நல்லது. வெறும் ஈக்விட்டி ஃபண்டில் மட்டுமே அத்தனை முதலீட்டையும் வைத்துக்கொள்ளாமல், பேலன்ஸ்டு ஃபண்டிலும் கணிசமான தொகையை முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபம் பார்க்க முடியுமே!