Published:Updated:

ரிலையன்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்... ரிசல்ட் எப்படி?

காலாண்டு முடிவுகள்

பிரீமியம் ஸ்டோரி

நடப்பு நிதியாண்டுக்கான சில நிறுவனங் களின் இரண்டாம் காலாண்டு முடிவு களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries)

நமது நாட்டின் முதன்மையான பெரிய நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் சென்ற செப்டம்பர் காலாண்டில் 43% உயர்ந்து, ரூ.13,680 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 7% அதிகரித்து ரூ.18,735 கோடி யாக உள்ளது. இந்த நிறுவனத்தின் பெட்ரோ கெமிக்கல் துறை சார்ந்த நிறுவனங்களின் வருமானம் மிக அதிகமாக 50% என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் லாபம் 25% அதிகரித்துள்ளது.

இந்துஸ்தான் யுனிலீவர் (Hindustan Unilever)

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 11.67% அதிகரித்து, ரூ.13,046 கோடியாக உள்ளது. இதன் நிகர லாபம் 10.49% அதிகரித்து ரூ.2,181 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் லாப விகிதம் பல பங்குச் சந்தை தரகு நிறுவனங்கள் கணித்ததைவிடக் குறைவாக இருந்ததன் காரணமாக அனைத்து கன்ஸ்யூமர் துறை சார்ந்த நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

நெஸ்லே இந்தியா (Nestle India)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் 15% உயர்ந்து ரூ.617 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 12% உயர்ந்து ரூ.3,882.6 கோடியாக உள்ளது. நெஸ்லே நிறுவனம் நமது நாட்டில் ரூ.3,000 கோடி அளவுக்கு முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதில் ரூ.1,000 கோடிக்கான முதலீடு ஏற்கெனவே செய்யப் பட்டுள்ளதாக நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பங்குக்கு 110 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

ஹெச்.டி.எஃப்.சி லைஃப் (HDFC Life)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படை யில் சென்ற செப்டம்பர் காலாண்டில் 16% குறைந்து, ரூ.275.91 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 26% உயர்ந்து ரூ.20,478 கோடியாக உள்ளது. புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, வசூலிக்கப் பட்ட பிரீமியம் தொகை, இதர வருமானம் ஆகிய அனைத்துக் காரணிகளாலும் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.

ரிலையன்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ்,     ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்... ரிசல்ட் எப்படி?

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் (ICICI Bank)

நமது நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் துறை சார்ந்த வங்கி இது. இந்த வங்கியின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் சென்ற செப்டம்பர் காலாண்டில் 30% அதிகரித்து, ரூ.5,511 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் 25% அதிகரித்து ரூ.11,690 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வாராக்கடன் 12% குறைந்து ரூ.8,161 கோடியாக உள்ளது.

காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, இந்த வங்கியின் பங்கு விலை தனது உச்சபட்ச விலைக்குச் சென்றது குறிப்பிடத் தக்கது. பேங்க் நிஃப்டியும் தனது உச்சபட்ச நிலையில் வர்த்தகம் ஆனது.

ஃபெடரல் வங்கி (Federal Bank)

திருவனந்தபுரத்தைத் தலைமையகமாகக் கொண்ட தனியார்துறை சார்ந்த வங்கி இது. இந்த வங்கியின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 58.32% உயர்ந்து ரூ.499.42 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 9.87% உயர்ந்து ரூ.1,606 கோடியாக உள்ளது.

இந்த வங்கி பங்கின் இ.பி.எஸ் ரூ.1.58 என்ற சென்ற ஆண்டின் அளவிலிருந்து ரூ.2.34 ஆக அதிகரித்துள்ளது. முன்னணி முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா சென்ற காலாண்டு காலகட்டத்தில் அதிக அளவில் இந்த வங்கியில் முதலீடு செய்திருந்தது குறிப்பிடத் தக்கது.

பயோகான் (Biocon)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 5.48% உயர்ந்து ரூ.1,840 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 18.31% குறைந்து ரூ.138.30 கோடியாக உள்ளது. இதன் எபிட்டா வருடாந்தர அடிப்படையில், 35.34% உயர்ந்து ரூ.550.7 கோடி யாக உள்ளது.

ஆனால், இந்த நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் சென்ற ஆண்டின் ரூ.1.6 என்ற அளவில் இருந்து ரூ.1.43ஆகக் குறைந்து உள்ளது.

ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் (JSW Steel)

நமது நாட்டின் இரண்டாவது பெரிய ஸ்டீல் உற்பத்தி செய்யும் நிறுவனம் இது. இந்த நிறுவனத் தின் நிகர வருமானம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 350% அதிகரித்து ரூ.7,170 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 68.72% அதிகரித்து ரூ.32,503 கோடியாக உள்ளது.

சந்தை வல்லுநர்கள் கணிப்பை விட அதிகமான லாபத்தை இந்த நிறுவனம் சென்ற காலாண்டில் ஈட்டியுள்ளது. நிலக்கரி விலை அதிகரிப்பு காரணமாக ஸ்டீல் விலை அதிகரித்துள்ளது. மேலும், சில நிறுவனங்களுக்கு ஸ்டீல் சப்ளை செய்யும்போது வெளிநாடு களில் உள்ளதுபோல சர்சார்ஜ் வசூலிக்க இருப்பதாக நிறுவனத் தின் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஏசியன் பெயின்ட்ஸ் (Asian Paints)

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப் படையில், சென்ற செப்டம்பர் காலாண்டில் 32.63% அதிகரித்து ரூ.7,096 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 28.23% அதிகரித்து ரூ. 595.96 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிறுவ னர்கள் பலாடின் பெயின்ட்ஸ் என்ற நிறுவனத்தை, ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் பணத் தைக் கொண்டு சொந்த உபயோகத் துக்கு வாங்கியுள்ளதாக ‘விசில் ஃப்ளோயர்’ ஒருவர் செபிக்கு புகார் சொல்லி இருக்கிறார். இதைத் தொடர்ந்து இது பற்றிய விவரங்களை இந்த நிறுவனத்திடம் செபி கேட்டுள்ளது.

இந்த செய்திக்குப் பிறகு, இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ் (LIC Housing Finance)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 69% குறைந்து ரூ.247.86 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் 5% குறைந்து ரூ.1,173 கோடியாக உள்ளது. இதன் வாராக்கடன் அதிகரித்ததன் காரணமாக, அதிக வைப்புத் தொகையை ஒதுக்கீடு செய்தது நிறுவனத்தின் லாபம் குறைவதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. இதனால், இந்த நிறுவனத்தின் பங்கு விலை காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, 10% வரை சரிந்துள்ளது.

கோல்கேட் (Colgate)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டுடன் ஒப்பிட்டால், சென்ற செப்டம்பர் காலாண்டில் 2.83% குறைந்து ரூ.269.17 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 5% உயர்ந்து ரூ.10,881 கோடியாக உள்ளது. அதிக மூலப்பொருள்களின் விலை ஏற்றம் காரணமாக லாப விகிதம் குறைந்துள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மொத்த செலவினம் 8% உயர்ந்து ரூ.998 கோடியாக உள்ளது. ஒரு பங்குக்கு ரூ.19 டிவிடெண்டாக வழங்க உள்ளது.

டெக் மஹிந்திரா (Tech Mahindra)

தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள ஐந்து நிறுவனங்களில் ஒன்று இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற காலாண்டுடன் ஒப்பிட்டால், 1% குறைந்து ரூ.1,339 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 4% அதிகரித்து ரூ.10,881 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு சென்ற ஓராண்டில் 81% அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது.

எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் (L&T Finance Holdings)

இரு சக்கர வாகனக் கடன், பயிர் கடன் மற்றும் குறுங்கடன்கள் வழங்குவதில் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில், சென்ற செப்டம்பர் காலாண்டில் 10.45% குறைந்து, ரூ.3,051 கோடியாக உள்ளது. சென்ற ஜூன் காலாண்டுடன் ஒப்பிட்டால் லாப விகிதம் 26% அதிகரித்து ரூ.224.03 கோடியாக உள்ளது. சென்ற காலாண்டில் மிக அதிக அளவான கடன்களை, குறிப்பாக கிராமப்பகுதி மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் வழங்கியுள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு: பிரமேஷ்.எஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு