Published:Updated:

வரியைக் குறைக்கும் எஃப்.எம்.பி.!

வரியைக் குறைக்கும் எஃப்.எம்.பி.!

பிரீமியம் ஸ்டோரி

 மியூச்சுவல் ஃபண்ட்

##~##

உச்ச வரி வரம்பில் உள்ளவர்கள், ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற கடன் திட்டங்களில் முதலீடு செய்ய அஞ்சுவார்கள். காரணம், வரும் வருமானத்தில் 30 சதவிகிதத்துக்கு மேல் வருமான வரியாகப் போய்விடுமே என்பதால்தான்! எஞ்சியது பணவீக்கத்திற்குக்கூட கட்டுபடியாகாது. ரிஸ்க்கும் எடுக்க விருப்பமில்லை: ஃபிக்ஸட் டெபாசிட்டைப் போன்ற நிலையான வருமானமும் வேண்டும்: அதேசமயத்தில், வருமான வரியும் அதிகமாகச் செலுத்தக் கூடாது என்று நினைப்பவர்களுக்காக உள்ள புராடக்ட்தான் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி ப்ளான்கள் (திவீஜ்மீபீ விணீtuக்ஷீவீtஹ் றிறீணீஸீs  திவிறி).

எஃப்.எம்.பி. என்றால்..?

இவ்வகையான முதலீட்டுத் திட்டங்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் நடத்தப் படுகின்றன. இவை கடன் வகையைச் சார்ந்த குளோஸ் எண்டட் திட்டங்களாகும். பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இத்திட்டங்களை நடத்துகின்றன. இவை குறிப்பிட்ட முதிர்வுகாலம் கொண்ட கடன் உபகரணங்களில் முதலீடு செய்கின்றன. உதாரணமாக, 377 நாட்கள் எஃப்.எம்.பி. என்றால், அத்திட்டம் 377 நாட்கள் முதிர்வடையும் கடன் உபகரணங்களில் முதலீடு செய்யும்.

இப்படி செய்வதன் மூலம் அத்திட்டம் முதலீடு செய்யும் தொகைக்கான  வட்டி அக்காலகட்டத்தில் நிர்ணயம் செய்யப்படும். ஆகவே, முதலீட்டாளர்களுக்கு வட்டி சார்ந்த ரிஸ்க் எதுவும் இல்லை. ஆனால், ஃபிக்ஸட் டெபாசிட்போல எப்போது வேண்டுமானாலும் எஃப்.எம்.பி-களில் முதலீடு செய்ய முடியாது. சந்தையில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இத்திட்டத்தை அறிவிக்கும்போது மட்டுமே முதலீடு செய்யமுடியும்.  

ஏன் பிரபலம்?

நிலையான வருமானம் மற்றும் வரும் வருமானத்திற்கு மிகக் குறைவான அல்லது வருமான வரியே தவிர்க்கப்படுவதே இத்திட்டங் களின் பாப்புலாரிட்டிக்குக் காரணம். நிதி ஆண்டு இறுதியில் இவ்வகையான திட்டங்கள் அதிகமாக வெளியிடப் படும். உதாரணத்துக்கு, தற்போது சந்தையில் ஏராளமான திட்டங்கள் வெளிவந்துள்ளன.

வரியைக் குறைக்கும் எஃப்.எம்.பி.!

இதற்குக் காரணம், இத்திட்டங் களில் இருந்துவரும் வருமானத்தைக் கணக்கிடும் முறைதான். உதாரணத்துக்கு இன்று மார்ச் 17, 2013 என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் மார்ச் 18, 2013 அன்று 385 நாட்கள் முதிர்வைக்கொண்ட எஃப்.எம்.பி. திட்டம் ஒன்றில் முதலீடு செய்கிறீர்கள். ஆக, உங்களின் முதலீடு மூன்று நிதி ஆண்டுகளில் இருந்துள்ளது. அதாவது, 2012-13, 2013-14 மற்றும் 2014-15 ஆகிய மூன்று ஆண்டுகளில் உங்கள் முதலீடு இருந்துள்ளதால், இரண்டு ஆண்டுகளுக்கு உண்டான பணவீக்கத்திற்கான இண்டக்சேஷனை, நீங்கள் வருமானத்தைக் கணக்கிடும்போது எடுத்துக்கொள்ளலாம். அவ்வாறு செய்யும்போது வரும் வருமானத்திற்கு,  இன்றைக்கு உள்ள பணவீக்கத்திற்கு வரிச் செலுத்தத் தேவையிருக்காது.

வரியைக் குறைக்கும் எஃப்.எம்.பி.!

(55-ம் பக்கத்தில் தரப்பட்டுள்ள அட்டவணையில் இத்திட்டமும், ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடும் ஒப்பிடப்பட்டுள்ளது. அதைப் பார்த்தால், இத்திட்டங்களினால் உள்ள ஆதாயம் முதலீட்டாளர்களுக்குத் தெள்ளத் தெளிவாக அந்த அட்டவணை மூலம் புரியும். குறிப்பு: வரித் தாக்கல் செய்யும்போது அரசாங்கம் வெளியிடும் அந்தந்த ஆண்டின் பணவீக்க குறியீட்டை வைத்து இண்டக்சேஷன் கணக்கிடப்படவேண்டும்.)

எதில் முதலீடு செய்கின்றன?

இத்திட்டங்கள் பல தாங்கள் திரட்டும் தொகையை வங்கி டெபாசிட்களில் முதலீடு செய்கின்றன. இன்னும் சில திட்டங்கள் கார்ப்பரேட் டெபாசிட்கள், டிபெஞ்சர்ஸ், பாண்டுகளில் முதலீடு செய்கின்றன. பொதுவாக, வங்கி டெபாசிட்களில் முதலீடு செய்யும் திட்டங்கள் சற்றுக் குறைவான வருமானத்தையும், கார்ப்பரேட் உபகரணங்களில் முதலீடு செய்யும் திட்டங்கள் சற்று அதிகமான வருமானத்தையும் தரும்.

மேலும், முதலீடு செய்யும் நிறுவனங்களைப் பற்றிய நிதி நிலவரங்களை அறிந்து ஃபண்ட் மேனேஜர் முதலீடு செய்யும்போது இன்னும் ரிஸ்க் குறையும். டபுள் ஏ ரேட்டிங்கைவிட குறைவான ரேட்டிங்கொண்ட கடன் உபகரணங்களில் பொதுவாக இத்திட்டங்கள் முதலீடு செய்வதில்லை. இருந்தபோதும், முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்யும்போது ரேட்டிங் பற்றி தெரிந்துகொள்வது நல்லது.

வரி எப்படி?

இந்த ஃபண்டில் செய்யும் முதலீட்டிற்கு டி.டி.டி (டிவிடெண்ட் டிஸ்ட்ரிப்யூஷன் டாக்ஸ்) 13.52%-தான் (2012-13 நிதி ஆண்டில்). வரும் நிதி ஆண்டில் (2013-14) தனி நபர்களுக்கான டிடிடி 28.325 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டிவிடெண்ட் ஆப்ஷனிற்குச் செல்பவர்கள் தங்கள் கையில் இருந்து வரியைச் செலுத்தவேண்டாம். திட்டமே அனைத்து முதலீட்டாளர்களுக்கும் சேர்த்து வரியைக் கட்டிவிடும்.

வரியைக் குறைக்கும் எஃப்.எம்.பி.!

லாங் டேர்ம் (ஓராண்டிற்கு மேல்) கேப்பிட்டல் கெயின்ஸ் வரி, இண்டக்சேஷனுடன் 20.6%-ம், இல்லையென்றால் 10.3%-ம் ஆகும். ஷார்ட் டேர்ம் (ஓராண்டிற்குள்) கேப்பிட்டல் கெயின்ஸ் டாக்ஸ், அவரவரின் வரி வரம்பிற்கு ஏற்ப அமையும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் உள்ள இன்னுமொரு பெரிய அட்ரக்ஷன் (உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு) வங்கி டெபாசிட்களைப் போல சோர்ஸில் வரிப் பிடித்தம் செய்வதில்லை. 30% வரி வரம்பில் வருபவர்கள் குறுகியகால முதலீட்டிற்குச் செல்லும்போது, டிவிடெண்ட் ஆப்ஷனையும், நீண்டகால முதலீட்டிற்கு குரோத் ஆப்ஷனையும் தேர்வு செய்துகொள்ளலாம். குறைவான வருமான வரி வரம்பில் இருப்பவர்கள் குரோத் ஆப்ஷனை நாடிச் செல்லலாம்.

கால அளவு!

பொதுவாக இத்திட்டங்கள் வெளியிடப்படும் கால அளவுகள்: 1 மாதம், 3 மாதங்கள், 6 மாதங் கள், 9 மாதங்கள், 367 நாட்கள், 18 மாதங்கள்,

24 மாதங்கள், 36 மாதங்கள். 60 மாதங்கள் செல்லும் திட்டங்களும் சில இருக்கின்றன. 365-400 நாட்கள் அளவில் அதிகமான திட்டங்கள் வெளியிடப்படுகின்றன.

என்ன நன்மை?

பெருந்தொகைகளை முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இத்திட்டங்கள் ஒரு நல்ல வாய்ப்பு. வரும் வருமானத்திற்கு கிட்டத்தட்ட வரிச் செலுத்தத் தேவையில்லை என்பதால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு வரப்பிரசாதமே. இத்திட்டங்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் நடத்தப்படுவதால் வெளிப்படைத்தன்மை அதிகம்.  கடந்த சில ஆண்டுகளாக இத்திட்டங்களுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  

ரிஸ்க் எப்படி?

வரியைக் குறைக்கும் எஃப்.எம்.பி.!

பொதுவாக மிக மிகக் குறைவு. வட்டி விகிதம் ஏற்ற இறக்க ரிஸ்க் கிடையாது. பரவலான நிறுவன உபகரணங்களில் முதலீடு செய்வதால், ஒட்டுமொத்தமாகப் போய்விடுமோ என்ற அச்சம் தேவையில்லை. வங்கி உபகரணங்களிலேயே முழுவதுமாக முதலீடு செய்யும் எஃப்.எம்.பி-கள் பல வங்கி உபகரணங்களில் முதலீடு செய்வதால், ஒரு வங்கி கவிழ்ந்துவிட்டால்கூட நமது அசலிற்கு மோசம் வராது. கடந்தகால வரலாற்றை வைத்துப் பார்க்கும்போதும், இன்றைய செபியின் சட்டதிட்டங்களை வைத்துப் பார்க்கும்போதும் முதலீட்டாளர்கள் பயமில்லாமல் இதில் முதலீடு செய்யலாம்.

வருமானம் எப்படி?

பொதுவாக, வங்கி டெபாசிட்களின் வட்டி விகிதத்தை ஒட்டி எதிர்பார்க்கலாம். கார்ப்பரேட் நிறுவன என்.சி.டி-களைக்கொண்ட எஃப்.எம்.பி-களில் சற்று அதிகமாக எதிர்பார்க்கலாம். ரிஸ்க்கை அறவே விரும்பாதவர்கள் முழுக்க முழுக்க வங்கி உபகரணத்தைக்கொண்ட எஃப்.எம்.பி-க்களுக்குச் செல்லலாம். ஒரு வருடத்திற்கு மேல் முதலீட்டுக் காலம் இருக்கும்பட்சத்தில் குரோத் ஆப்ஷனே சிறந்தது.

கவனிக்க வேண்டியவை..!

எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதையும், எந்தெந்த நிறுவன உபகரணங்களில் முதலீடு செய்யப் போகிறோம் என்பதையும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தெரிவிக்கக் கூடாது என்ற செபியின் சட்டம் இருப்பதால், முதலீட்டாளர்கள் இத்துறையில் அனுபவம் உள்ள நிதி ஆலோசகர்கள் மூலமாக முதலீடு செய்வது நல்லது.

இத்திட்டங்கள் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் லிஸ்ட் செய்யப்பட்டாலும், லிக்விடிட்டி இருக்காது. ஆகவே, திட்டம் மெச்சூர் ஆகும்போதுதான் பணம் எடுப்பது நல்லது.  

பிற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் போலவே, இத்திட்டத்திற்கான வருமானத்தை ஃபண்ட் ஹவுஸ் கேரன்டி செய்யக்கூடாது. எனினும், இதுவரை வெளிவந்து நடைமுறையில் இருக்கும்/ இருந்த திட்டங்கள் அனைத்தும் நன்றாகவே செயல்பட்டுள்ளன.

வருமான வரி வரம்பிற்குள் வராதவர்கள் வங்கி அல்லது பெரிய நிதி நிறுவனங்களின் ஃபிக்ஸட் டெபாசிட்களிலேயே முதலீடு செய்யலாம். வருமான வரிச் செலுத்துபவர்களுக்கு, எஃப்.எம்.பி. முதலீடு ஒரு அருமையான உபகரணம். இவற்றில் நல்ல வெளியீடுகளாகப் பார்த்து முதலீட்டாளர்கள் தாராளமாக முதலீடு செய்யலாம்.

எஃப்.எம்.பி. முதிர்வடையும்போது அதே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ரோலோவர் திட்டங்களைக் கொண்டுவருகின்றன. ஆகவே, தாங்கள் எஃப்.டி. அதே ஃபண்ட் ஹவுஸில் மெச்சூர் ஆகும் தினத்திலிருந்தே மறுமுதலீடு செய்துகொள்ளலாம்

குறிப்பு: எஃப்.எம்.பி. திட்டங்களின் அட்டவணையை மார்க்கெட் இண்டிகேட்டர் பகுதியில் பார்க்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு