Published:Updated:

பங்குச் சந்தை டிரேடிங்!

பணத்தைப் பறிக்கும் பவர் ஆஃப் அட்டர்னி! - சி.சரவணன்.

பங்குச் சந்தை டிரேடிங்!

பணத்தைப் பறிக்கும் பவர் ஆஃப் அட்டர்னி! - சி.சரவணன்.

Published:Updated:

உஷார்

##~##

அண்மையில் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் நமக்கு போன் செய்தார். ''சார், என் டீமேட் கணக்கில் இருந்த பங்கை எல்லாம் புரோக்கர் விற்று காலி செய்துவிட்டார். எனக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் நஷ்டம் சார்'' என்றார், அழாதக் குறையாக..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுரேஷை நேரில் சந்தித்துப் பேசினோம். ''நான் பங்குகளை விற்கச் சொல்லவே இல்லை. என் பங்குகளை விற்ற தகவலைக்கூட எனக்குச் சொல்லவில்லை. தற்செயலாக என் டீமேட் கணக்கில் எவ்வளவு பங்கு இருக்கிறது என்று பார்க்க புரோக்கர் அலுவலகத்துக்குப் போனால், அதிர்ச்சியில் மயங்கி விழுந்துவிட்டேன். அந்த புரோக்கர் அலுவலகத்தினர் என்னை ஏமாற்றிவிட்டார்கள்'' என்றார்.

அவர் குறிப்பிட்ட தரகு நிறுவனத்தில் நாம் விசாரணை மேற்கொண்டோம். அவர்கள் காட்டிய ஆவண ஆதாரங்களின்படி பார்த்தால், எல்லாம் சட்டப்படி சரியாகவே நடந்திருக்கிறது. அப்படி எனில், எங்கே தப்பு நடந்திருக்கிறது என்கிறீர்களா?

எந்தக் கேள்வியும் கேட்காமல் தரகு நிறுவனத் தினர் சொன்னதை அப்படியே நம்பி, 'பவர் ஆஃப் அட்டர்னி’ விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டுத் தந்ததுதான் சுரேஷ் செய்த தப்பு!

அந்தத் தரகு நிறுவனத்தில் புதிதாகப் பணிக்குச் சேர்ந்த இரு இளைஞர்களுக்கு மாதத்துக்கு இவ்வளவு தொகைக்கு பங்கு வர்த்தகம் நடக்க வேண்டும் என்று இலக்கு தரப்பட்டிருக்கிறது. அந்த இலக்கை எட்டுவது எப்படி என்று யோசித்த அந்த இளைஞர்கள், சுரேஷின் தலையில் மிளகாய் அரைக்கத் துணிந்தார்கள். ''சார், பங்குகளில் டிரேட் செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குகளை வேகமாக வாங்கி விற்று டிரேட் செய்ய பவர் ஆஃப் அட்டர்னி எங்களுக்குத் தரவேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார்கள்.

பங்குச் சந்தை டிரேடிங்!

வெறும் பெயர் மட்டும் எழுதப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் காட்டிய இடத்தில் எல்லாம் சுரேஷ் கையெழுத்து போட்டுத் தந்திருக்கிறார். இப்போது அந்த பவர் ஆவணத்தை வாங்கிப் பார்த்தால், இ மெயில் முகவரி தொடங்கி பல விஷயங்கள் தவறாக நிரப்பி, கண்டபடி பங்குகளை வாங்கி, விற்றிருக்கிறார்கள்; விற்று, வாங்கி இருக்கிறார்கள். இதனால், பெரும் நஷ்டம் ஏற்படவே கணக்கில் இருக்கிற பங்குகளை விற்று ஈடுகட்டி இருக்கிறார்கள். காட்டிய இடத்தில் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு கையப்பம் போட்டதால் அவருக்கு ஆறே மாதத்தில் 1.5 லட்சம் ரூபாய் நஷ்டம்.

பங்குச் சந்தை டிரேடிங்!

இதேபோல், விவரம் தெரியாமல் பவர் ஆஃப் அட்டர்னி தந்து ஏமாந்தவர்கள் தமிழகம் முழுக்க பலர். வெளியில் சொன்னால் அசிங்கம் என அவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதைப் பற்றி பேசுவதில்லை.  

இந்த மாதிரி சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? இந்த பவர் ஆஃப் அட்டர்னி ஏன் தேவை? இதனை சிக்கல் இல்லாமல் முதலீட்டாளர்கள் எப்படி பயன்படுத்துவது? என்கிற கேள்விகளுடன் பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பனைச் சந்தித்து பேசினோம்.

''புதிதாக டீமேட் கணக்குத் தொடங்கி பங்கு முதலீடு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிடம் பல பங்கு தரகு நிறுவனங்கள் முதலில் கேட்பது 'பவர் ஆஃப் அட்டர்னி’ விண்ணப்பத்தில் கையெழுத்துதான். அப்போதுதான் நினைத்தவுடன் பங்குகளை வாங்கி, விற்று கூடுதல் லாபம் பார்க்க முடியும் என்று சொல்வதை புரோக்கர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதை நம்பி பல முதலீட்டாளர்கள், பெருக்கல் குறிபோட்ட இடத்தில் எல்லாம் கையப்பம் போட்டுத் தந்துவிடுகிறார்கள். இதுதான் சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது’ என்றவர் சற்று நிறுத்தி, பங்கு முதலீட்டில் பவர் ஆஃப் அட்டர்னி எப்படி பயன்படுகிறது என்பதை விளக்கிச் சொன்னார்.

''பங்கை விற்கும்போது, விற்ற பங்கை நமது டீமேட் கணக்கிலிருந்து புரோக்கரின் டீமேட் கணக்குக்கு மாற்றவேண்டும். இதை முதலீட்டாளர் 'டெலிவரி இன்ஸ்ட்ரக்ஷன் சிலிப்’ தருவதன் மூலம் செய்யமுடியும். அதற்கு பதில், நம் டீமேட் கணக்கை நிர்வகிக்கும் 'டெபாசிட்டரி பார்டிசிபன்ட்’ என்கிற டி.பி.யிடம், எனக்குப் பதில் என் புரோக்கரே அவரின் டீமேட் கணக்கிற்கு பங்குகளை மாற்றிக்கொள்ள அதிகாரம் அளிக்கிறேன் என்று கையப்பம் போட்டுத் தரவேண்டும். இதன்படி புரோக்கர் நம் கணக்கிலிருந்து அவரது டீமேட் கணக்குக்குப் பங்குகளை மாற்றி மார்க்கெட்டில் டெலிவரி தந்துவிடுவார். அதன்பிறகு புரோக்கர், முதலீட்டாளருக்கு அவர் விற்ற பங்குகளுக்கான பணத்தைக் கணக்கில் வரவு வைப்பார் அல்லது காசோலையாகத் தருவார்.

இப்படி விற்கும் பங்குகளை டி 2 என்கிற கணக்கில், அதாவது இன்று விற்றால் நாளை மறுநாள் காலை 10.30 மணிக்குள் டெலிவரி தந்துவிடவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், பங்கை விற்றவருக்கு அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் என்பது சந்தையிலிருந்து பங்குகளை வாங்கி, டெலிவரி தர கூடுதலாக செலவு செய்யவேண்டியிருக்கும். இந்தச் செலவைத் தவிர்க்கத்தான் பவர் ஆஃப் அட்டர்னி வாங்கப்படுகிறது.

பங்குச் சந்தை டிரேடிங்!

பவர் ஆஃப் அட்டர்னி என்பது முதலீட்டாளர், டி.பி. மற்றும் புரோக்கர் இடையே போடப்படும் முத்தரப்பு ஒப்பந்தம். இதன்படி ஒரு பங்கை விற்றால்தான் டெலிவரி எடுக்கமுடியும். மேலும், பங்குகளை தனிப்பட்ட நபர்களின் டீமேட் கணக்குக்கு நேரடியாக மாற்ற முடியாது. புரோக்கரின் மொத்த டீமேட் கணக்கிற்கு மாற்றி, அதிலிருந்துதான் மார்க்கெட்டுக்கு டெலிவரி தரமுடியும்'' என்றவர், சற்று நிறுத்தி தொடர்ந்தார்.

''பவர் ஆஃப் அட்டர்னி பிரச்னையில் ஒரேயடியாக புரோக்கர்களை மட்டுமே குற்றம் சொல்லிவிட முடியாது. சில புரோக்கர்கள், டிரேட் செய்யுங்கள் அப்போதுதான் உங்களுக்கு லாபம் கிடைக்கும் என்பார்கள். ஆசை யாரை விட்டது? முதலீட்டாளரும் சரி என்று தலை ஆட்டுவார். புரோக்கர் சொன்னபடி ஒன்றிரண்டு முறை லாபம் கிடைக்கும். பிறகு நஷ்டம் வரும். இந்த நஷ்டம் பெரிதாகும்போதுதான் முதலீட்டாளர்கள் புரோக்கர் மீது புகார் செய்கிறார்கள். லாபம் வந்தால், அதைப் பற்றி வாயே திறப்பதில்லை.

இதற்கு மாறாகவும் சில சமயங்களில் நடக்கிறது. தரகுக் கட்டணத்துக்காக சில பங்கு தரகு நிறுவனங்களில் அடிக்கடி பங்குகளை வாங்கி விற்பதும், விற்று வாங்குவதும் நடக்கிறது. இங்குதான் முதலீட்டாளர்கள் மிகவும் உஷாராக இருக்கவேண்டும்'' என்றவர், பவர் ஆஃப் அட்டர்னி தருபவர்கள் முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயங்கள் குறித்து சொன்னார்.

''பங்கு முதலீடு மற்றும் வர்த்தகம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உங்கள் கைப்பட நிரப்பித் தாருங்கள். புரோக்கர் நிறுவனங்களைச் சேர்ந்தவர் களை நிரப்பவிடாதீர்கள். நீங்களே நிரப்பித் தரும்போது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத் தும் போலியான இ மெயில் முகவரி, செல்போன் எண்கள் இடம் பெறுவதைத் தவிர்க்கலாம். உங்கள் பெயரில் போலியான

இ மெயில் மற்றும் செல்போன் எண் தந்திருந்தால், உங்கள் டீமேட்டில் பங்குகள் வாங்கி விற்கும்போது அதுபற்றிய தகவல் அந்த போலியான இ மெயிலுக்கும், செல்போனுக்கும்தான் போகும். அதனால் உங்களுக்குத் தெரியாமலே உங்கள் கணக்கில் பங்கு வாங்கி விற்பது நடக்கும்.

பங்குச் சந்தை டிரேடிங்!

பங்கு வர்த்தகம் தொடர்பாக உங்களுக்கு வரும் இ மெயிலை தினசரி மாலையில் பார்ப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் டீமேட் கணக்கில் பங்குகள் விற்கப்பட்டிருந்தால் உடனடியாக உஷாராக முடியும். இ மெயில் முகவரி இல்லை; கான்ட்ராக்ட் நோட்டை தபால் மூலம் அனுப்பச் சொல்லியிருக்கும்பட்சத்தில், வீட்டு முகவரி மாறியிருந்தால் அதனை தரகு நிறுவனத்துக்கு உடனடியாகத் தெரிவியுங்கள். உங்களது செல்போனுக்கு, பங்குச் சந்தையிலிருந்து பங்கு முதலீடு தொடர்பாக எஸ்.எம்.எஸ். வந்தால், அது நீங்கள் மேற்கொண்டதுதானா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் அதுகுறித்த புகாரை புரோக்கர் அலுவலகத்துக்கு நேரில் சென்று எழுத்து மூலம் தெரிவியுங்கள் அல்லது இ மெயில் மூலம் புகாரை அனுப்புங்கள்.

பலரும் இந்த இடத்தில்தான் தவறு செய்கிறார்கள். நேரில் சென்றோ அல்லது போனிலோ புரோக்கரிடம் புகார் சொல்கிறார்கள். புரோக்கர் நடவடிக்கை எடுக்காதபோதுதான் செபியிடம் புகார் தெரிவிக்கிறார்கள். ஆனால், அப்போது சம்பந்தப்பட்ட முதலீட்டாளர் இது தொடர்பாக தங்களிடம் எந்தப் புகாரும் தரவில்லை என்று சொல்லி தப்பித்துவிடுகிறார். எனவே, எந்தப் புகாராக இருந்தாலும் அதை எழுத்து மூலம் பதிவு செய்வது அவசியம். அந்தப் புகாருக்கு அவர்களிடமிருந்து திருப்தியான பதில் ஒரு மாத காலத்துக்குள் வரவில்லை எனில், பங்குச் சந்தை அல்லது செபியிடம் புகார் தெரிவிக்கவேண்டும்'' என்றவர் சற்று நிறுத்தி, இந்தப் பிரச்னையில் சிக்காமல் இருக்க சில விஷயங்களைக் குறிப்பிட்டார்.

''பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் சேமிப்பு கணக்கு, டிரேடிங் கணக்கு, டீமேட் கணக்கு போன்றவற்றை தனித்தனி நிறுவனத்தில் ஆரம்பிப்பது நல்லது. காரணம், முதலீட்டாளருக்குத் தெரியாமல், அவருடைய ஒரு கணக்கிலிருந்து மற்ற கணக்கிற்கு பணம் எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரியாமல் செய்கிறார்கள். இது புரோக்கிங் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சில ஊழியர்களுக்கு தெரியும் போது அவரை ஏமாற்றத் துணிந்துவிடுகிறார்கள். எனவே, குடும்பத்துக்குத் தெரியாமல் பங்குச் சந்தை முதலீட்டை மேற்கொள்வதைத் தவிருங்கள்..!

அடுத்து, டீமேட் விண்ணப்பப் படிவத்தில் ஜாயின்ட் அக்கவுன்ட் என்கிற இடத்தில் கோடுபோட்டு அடித்துவிடுங்கள். இல்லை எனில், அந்த இடத்தில் பங்கு தரகு நிறுவனத்தில் பணிபுரியும் யாராவது ஒருவர் அவரது பெயரைச் சேர்த்துவிட்டு மோசடி செய்ய வாய்ப்பு இருக்கிறது.

கடைசியாக ஒரு வார்த்தை, நீங்கள் அடிக்கடி பங்கில் வர்த்தகம் செய்யாத முதலீட்டாளர் எனில், பங்குகளை வாங்கவோ, விற்கவோ போன் மூலம் ஆர்டர் கொடுங்கள் அல்லது பங்கு தரகு அலுவலகத்துக்குச் சென்று டெலிவரி சிலிப் நிரப்பி கொடுங்கள்.

போனில் ஆர்டர் கொடுத்தால், அன்று மாலை அல்லது மறுநாள் காலையில் பங்கு தரகர் அலுவலகத்துக்குச் சென்று டெலிவரி சிலிப் கொடுங்கள். உங்கள் முதலீடு பாதுகாப்பாக இருக்கும்..!'' என்றார்.

இனியாவது பங்கு, பவர் விஷயத்தில் முதலீட்டாளரான நீங்கள் உஷாராக இருப்பீர்கள் இல்லையா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism