Published:Updated:

வேண்டாத கிரெடிட் கார்டு : ரத்து செய்யாவிட்டால் நஷ்டம்!

- இரா.ரூபாவதி.

பிரீமியம் ஸ்டோரி

எச்சரிக்கை

##~##

கிரெடிட் கார்டு மோகம் இன்றளவும் குறைந்தபாடு இல்லை. 2012-13-ல் மட்டும் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் மொத்தம் 1.96 கோடி கிரெடிட் கார்டை வழங்கியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  இது கடந்த ஆண்டைவிட 11 சதவிகிதம் அதிகம்.

கிரெடிட் கார்டு வைத்திருந்தால் பணத்துக்குப் பிரச்னையே இல்லை என்று நினைத்துதான் பலரும் அதை வாங்கு கிறார்கள். ஆனால், வாங்கியபிறகு, எக்கச்சக்கமாக செலவு செய்ய ஆரம்பித்து, பெருங்கடனாளியாக மாறி, நிறைய வட்டி கட்டி, இது நமக்கு சரிப்பட்டு வராது என்று ஓய்ந்துவிடுகிறார்கள். அதோடு அந்த கிரெடிட் கார்டை தூக்கி எங்கேயோ போட்டுவிடுகிறார்கள். இப்படி செய்வது சரியா, இதனால் நமக்கு என்ன பாதிப்பு வரும் என்பது குறித்து பேங்க்பஜார் டாட்காமின் சி.இ.ஓ. அதில்ஷெட்டி விளக்குகிறார்.

''கிரெடிட் கார்டினால் எந்த பிரயோஜனமும் இல்லை; தொல்லைதான் வருகிறது என்று பலரும் முடிவு செய்துவிட்டு, அந்த கார்டை பயன்படுத்தாமல் அப்படியே போட்டு வைத்துவிடுகிறார்கள். சிலர் அந்த கார்டை உடைத்துக்கூட போட்டுவிடுவார்கள்.

இப்படி செய்வது தவறு. ஏனெனில் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் கார்டின் தன்மைக்கு ஏற்ப கட்டணங்களை வசூலிக்கின்றன. அதாவது, சில கார்டுகளுக்கு ஆண்டுக் கட்டணம் இருக்கும். இந்த கார்டை நீங்கள் பயன்படுத்தாத ஒவ்வொரு ஆண்டுக் கும் பராமரிப்புக் கட்டணம் போடும். அதோடு அந்தத் தொகைக்கு சேவை வரி, கல்வி வரி வசூலிக்கும். இப்படி சேரும் தொகைக்கு வட்டி போடும். இது உடனடியாக உங்களுக்கு தெரியவராது. ஓராண்டு கழித்து, ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டச் சொல்லி உங்களுக்கு கிரெடிட் கார்டு வங்கிகள் கடிதம் அனுப்பும். இந்தப் பணத்தைக் கட்டாமல் விட்டால், தொடர்ந்து உங்களுக்கு போன் செய்து வற்புறுத்துவார்கள். இந்தத் தொகையை நீங்கள் கட்டவே இல்லை என்றால் உங்கள் பெயர் சிபில் டேட்டாவில் சேர்ந்து விடும்.

வேண்டாத கிரெடிட் கார்டு : ரத்து செய்யாவிட்டால் நஷ்டம்!

நீங்கள் வைத்திருக்கும் கிரெடிட் கார்டு இனிமேல் தேவை இல்லை எனில், அந்த கார்டின் நிலுவைத் தொகை முழுவதையும் கட்டியபிறகுதான் அந்த கார்டை ரத்து செய்ய முடியும். எனவே, நீங்கள் கார்டு வைத்திருக்கும் வங்கியின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவுக்கு போன் செய்து நிலுவைத் தொகை எவ்வளவு உள்ளது என்பதைத் தெரிந்துகொண்டு, அதை கட்டி முடித்த பிறகு கார்டை ரத்து செய்வதற்கான கடிதத்தை எழுதித் தருவது அவசியம். இதை தபாலிலோ அல்லது இ-மெயிலிலோ அனுப்பலாம். இப்படி கடிதம் அனுப்பும்போது அதை ஒரு நகல் எடுத்து வைப்பது அவசியம்.

வேண்டாத கிரெடிட் கார்டு : ரத்து செய்யாவிட்டால் நஷ்டம்!

கடிதம் கிடைத்த சில வாரங்களில் வங்கியானது உங்களுக்குத் தந்த கிரெடிட் கார்டை ரத்து செய்துவிடும். அப்படி ரத்து செய்திருக்கிறதா என்பதை வங்கியின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவுக்கு போன் செய்து உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம்.  கார்டு ரத்து செய்யப்பட்டது உறுதியான பிறகு உங்களின் கார்டை நான்கு துண்டுகளாக உடைத்து வங்கிக்கு அனுப்ப வேண்டும்.

சில வங்கிகள், ஏற்கெனவே கிரெடிட் கார்டு வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே இரண்டாவதாக ஒரு கிரெடிட் கார்டை அனுப்பி வைக்கிறது. நீங்கள் அந்த கார்டை கேட்கவில்லை என்பதை வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு போன் செய்து தெரிவிப்பது முக்கியம். அவர்கள் அந்த கார்டை எதற்காகத் தந்தோம் என்பதையும், அந்த கார்டை ரத்து செய்ய என்ன செய்யவேண்டும் என்பதையும் தெளிவாகச் சொல்வார்கள்.  

சிலர் ஆர்வத்தோடு கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பார்கள். கார்டு வந்தபிறகு அது தேவை யில்லை என்று நினைப்பார்கள். இப்படிப்பட்ட கார்டை எப்படி ரத்து செய்வது?

கார்டு உங்கள் கைக்கு கிடைத்த வுடன் அந்த கார்டை பயன்படுத்த விரும்பவில்லை என்பதை வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். அதை எப்படி ரத்து செய்யவேண்டும் என்பதை வங்கி உங்களுக்குச் சொல்லும். இந்த சமயத்தில் கிரெடிட் கார்டை பயன்படுத்தவே கூடாது. கார்டை ரத்து செய்யும் போது உங்கள் கார்டின் நிலுவைத் தொகை பூஜ்ஜியமாக இருக்கவேண்டும்.

கிரெடிட் கார்டை ரத்து செய்வதற்கு எந்த கட்டணமும் இல்லை என்பதால், தேவை இல்லை என்று நீங்கள் முடிவெடுத்தால், காலம் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி, கிரெடிட் கார்டை ரத்து செய்துவிடுவது அவசியம்'' என்றார்.  

கிரெடிட் கார்டை வாங்கும்முன் அதற்கான கட்டணம் என்ன என்பதை ஒருமுறைக்கு இருமுறை நன்றாகப் படித்துவிட்டால், நிச்சயம் பரணில் தூக்கிப் போடாமல், கையோடு கணக்கை கச்சிதமாக முடிப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு