Published:Updated:

வங்கிப் பங்குகள்: வாங்கும் தருணமா?

வங்கிப் பங்குகள்: வாங்கும் தருணமா?

பிரீமியம் ஸ்டோரி
##~##

பொதுத் துறை வங்கிப் பங்குகளின் விலை ஏகத்துக்கு குறைந்துகிடக்கிறது. கடந்த காலத்தில் இந்தப் பங்கை வாங்கத் தவறியவர்கள், தற்போது விலை குறைந்திருப்பதைப் பார்த்து முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்கள். விலை இன்னும் இறங்கிவிடுமோ என்கிற தயக்கமும் இருக்கவே செய்கிறது. வங்கிப் பங்குகளை வாங்க இது சரியான நேரமா? என்கிற கேள்வி எல்லா முதலீட்டாளர்களின் மனதிலும் இருக்கவே செய்கிறது.

 இக்கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ளும் முன், வங்கிப் பங்குகளின் விலை இந்த அளவுக்கு சரிய என்ன காரணம் என்பதை முதலில் பார்ப்போம். அப்போதுதான் கேள்விக்கான சரியான பதில் நமக்குக் கிடைக்கும்.

அதிரவைக்கும் வாராக்கடன்!

வங்கிகளின் வாராக்கடனைப் பற்றிய அதிரவைக்கும் செய்திகள் தினசரி வந்த வண்ணம் உள்ளன. பல வங்கி உயரதிகாரிகள் சொல்வதைவைத்துப் பார்த்தால், இந்தப் பிரச்னை இன்னும் பெரிதாகும் என்றே படுகிறது. வங்கிகள் இந்த வாராக்கடன் பிரச்னையில் திடீரென எப்படி மாட்டிக் கொண்டன?

வங்கிப் பங்குகள்: வாங்கும் தருணமா?

எந்த ஒரு பொருளாதாரமும் தொடர்ந்து மந்தநிலையில் இருக்கும்போது வாராக்கடன் பிரச்னை அதிகரிக்கவே செய்யும். மின் உற்பத்தி, பிற உள்கட்டமைப்புத் துறை சார்ந்த நிறுவனங்கள், ரியல்

வங்கிப் பங்குகள்: வாங்கும் தருணமா?

எஸ்டேட், விவசாயம், விமானத் துறை, டெக்ஸ்டைல் துறை, மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள், ஸ்டீல் என இன்னும் பல சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக கடினமான பொருளாதார நெருக்கடி நிலையைச் சந்தித்து வருகின்றன.

கடந்த ஐந்து வருடங்களாக இன்ஃப்ரா துறை கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. நம் நாட்டில் போதுமான அளவு நிலக்கரி இருந்தும், அதை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இது மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசாங்கம் உள்கட்டமைப்புகளில் போதுமான அளவு புதிய திட்டங்களை அறிவிக்கவில்லை. அதனால் அத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு போதுமான அளவு வேலை இல்லை.

நம் நாட்டில் விவரமான தொழிலதிபர்கள் என பலராலும் பாராட்டப்பட்டவர்கள்கூட, வெளிநாட்டு கரன்சியில் கடன்கள் மலிவாகக் கிடைக்கின்றன என்று பறந்து சென்று வாங்கினார்கள். ஆனால், இன்றைக்கு ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60-க்கு மேல் சரிந்து இருக்கும்  நிலையில் எப்படி வாங்கிய கடனை கட்டமுடியும்?  

எல்லாவற்றுக்கும் மேலாக ரிசர்வ் வங்கியும் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கவே இல்லை. இதுபோல் பல துறைகளைச் சார்ந்த நிறுவனங்களும் பலவகைகளில் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும்போது, அதன் விளைவு பேலன்ஸ்ஷீட்டில் தெரியத்தானே செய்யும்? அதனால்தான் வங்கிகளின் பேலன்ஸ்ஷீட்களில் நாம் இவ்வளவு வாராக்கடனைப் பார்க்கிறோம்.

என்.பி.ஏ. என்றால் என்ன?

ஒரு கடனிற்கு ஒவ்வொரு காலாண்டிற்கும் கட்டவேண்டிய வட்டி, அடுத்த 90 நாட்களுக்குள் கட்டப்படாவிட்டால் அந்தக் கடனானது வாராக்கடன் (ழிறிகி = ழிஷீஸீறிமீக்ஷீயீஷீக்ஷீனீவீஸீரீ கிssமீt) என்கிற பட்டியலில் வங்கிகள் சேர்த்துக் காட்டவேண்டும். ஒரு கடன் தொடர்ந்து 12 மாதத்திற்கு என்.பி.ஏ-வாக இருந்தால் 'சப்-ஸ்டாண்டர்டு அசெட்’ என்கிற பட்டியலில் சேர்க்கவேண்டும். ஒரு கடன் 12 மாதத்திற்கு 'சப்-ஸ்டாண்டர்டு அசெட்’-ஆக இருந்துவிட்டால், 'டபுட்புஃல் (சந்தேகத்திற்கு இடமான) அசெட்’-ல் சேர்க்கவேண்டும். அந்தக் கடன் உறுதியாக வராது என்று தெரிந்துவிட்டால் நஷ்டசொத்தில் சேர்க்கவேண்டும்.

இந்த வகைப்படுத்துதலில் 'ரீஸ்ட்ரக்ஷரிங்’ (restructuring)என்று சொல்லப்படும் கடனை மாற்றி அமைக்கும் விஷயமெல்லாம் இதுவரை கணக்கில் வராமலே இருந்தது. இனி ஏப்ரல் 2015-லிருந்து, கடனை மாற்றி அமைத்தாலும் வாராக்கடன் என்று அறிவிக்கவேண்டும் என ரிசர்வ் வங்கி புதிய விதிமுறையைக் கொண்டுவந்திருக்கிறது. இதனால் நமது வங்கிகளின் மொத்த வாராக்கடன் சதவிகிதம் வெகுவாக உயரும்.  

தனியார் வங்கிகளுக்கு எப்படி?

சரி, பொதுத் துறை வங்கிகளுக்குத்தான் இந்தப் பிரச்னையா, தனியார் வங்கிகளுக்கு இந்தப் பிரச்னை இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். பொருளாதாரம் மந்தமாக இருக்கும்போது, அனைத்து வங்கிகளுக்குமே இந்தப் பிரச்னை வரவே செய்யும். ஆனால், தனியார் வங்கிகளைவிட பொதுத் துறை வங்கிகளுக்கு இந்தப் பிரச்னை சற்று பெரிதாகவே வந்துவிட்டது.

இதற்கு பல காரணங்கள். பொதுத் துறை வங்கிகளின் மெஜாரிட்டி சொந்தக்காரர் நம் மத்திய அரசாங்கம். எனவே, அரசாங்கத்தை அனுசரித்தே செல்லவேண்டிய கட்டாயம் பொதுத் துறை வங்கிகளுக்கு. தவிர, கடன் களை வழங்குவதிலும், மேற்பார்வை செய்வ திலும், அதைத் திருப்பி வசூலிப்பதிலும் பொதுத் துறை வங்கிகள் சற்று மெத்தனமாக இருந்துவிட்டன. ஆனால், தனியார் வங்கிகள் கடன் விண்ணப்பங்களை வடிகட்டுவதிலும், மேற்பார்வையிடுவதிலும், வசூலிப்பதிலும் கறாராக உள்ளன. அதனால் ஹெச்.டி.எஃப்.சி. போன்ற சில தனியார் வங்கிகளின் வாராக்கடன் குறைவாகவே இருக்கிறது. ஆனால், சரியான நிர்வாகம் இல்லாதபோது தனலட்சுமி வங்கி போன்ற தனியார் வங்கிகளும் வாராக்கடனால் படாதபாடுபடவே செய்கின்றன.  

வங்கிப் பங்குகள்: வாங்கும் தருணமா?

மீண்டு எழுமா?

வங்கித் துறையில், அதிலும் பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் பிரச்னை இந்த அளவுக்கு இருக்கிறதே; இனி அத்துறை மீண்டு வருமா என்று நீங்கள் கேட்கலாம். எந்த ஒரு தொழிலிற்கும் ஏற்ற இறக்கம் இருக்கவே செய்யும். அந்த நிலைமை இப்போது வங்கித் தொழிலுக்கும் வந்துள்ளது. அதனால்தான், வங்கிப் பங்குகள், அதிலும் குறிப்பாக, பொதுத் துறை வங்கிப் பங்குகளின் விலை பெருவாரி யாகக் குறைந்துள்ளது.

நம் நாட்டின் ஜி.டி.பி. வளர்ச்சி 5 சதவிகிதத்தை ஒட்டி இருக்கும்போது, வங்கிகள் மட்டும் அதிகமான தொழில் வளர்ச்சியைக் காண்பித்துவிட முடியாது. அப்படி என்றால் அந்த வங்கிகள் அதிகமாக ரிஸ்க் எடுத்து தொழில் செய்கின்றன. அதனாலும் வங்கிகளின் வாராக்கடன் அதிகமாக இருக்கலாம். நம் நாட்டின் ஜி.டி.பி. அதிகரிக்கும் அதேநேரத்தில், வங்கிகளின் இந்த வாராக்கடன் பிரச்னையையும் நாம் சரி செய்துவிட்டால், வங்கிப் பங்குகளின் விலை உயரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

கவனிக்க வேண்டியவை..!

பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பலரும் தனியார் துறை வங்கிப் பங்குகளையே வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். என்றாலும், பொதுத் துறை வங்கிப் பங்குகள் பற்றி அவசியம் கவனிக்கவேண்டிய சில பாசிட்டிவ் அம்சங்களும் இருக்கவே செய்கின்றன.

1. பிற நிறுவனங்களைப்போல் அல்லாமல், இந்த இக்கட்டான தருணத்திலும் நிகர லாபத்தைப் பொதுத் துறை வங்கிகள்  ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

2. புத்தக மதிப்பு, டிவிடெண்ட் யீல்டு, பி/இ போன்ற மதிப்புகள் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளன.

3. மெஜாரிட்டி ஷேர் ஹோல்டர் மத்திய அரசாங்கம் என்பதால் வங்கிகள் கவிழ்வதற்கு சாத்தியக்கூறு மிகக் குறைவு.

4. ஹெச்.டி.எஃப்.சி., ஐ.டி.எஃப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. போன்ற மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும், அதன் ஃபண்ட் மேனேஜர்களும் பொதுத் துறை வங்கிப் பங்குகள் கவர்ச்சிகரமான விலையில் கிடைப்பதைப் பார்த்து மெதுவாக வாங்க ஆரம்பித்து உள்ளனர்.

நீங்கள் ஒரு நீண்ட கால முதலீட்டாளராக இருக்கும்பட்சத்தில் (குறைந்தபட்சம் 10 ஆண்டு கள்) பொதுத் துறை வங்கிப் பங்குகளை மெதுவாக வாங்கத் தொடங்கலாம். அப்படி வாங்கும்பட்சத்தில் பிற மதிப்பீடுகளுடன், வாராக்கடனையும் ஒரு முக்கிய மதிப்பீடாக எடுத்து ஆராய்ந்து முடிவெடுங்கள்.  

முதலீடு செய்யலாமா?

உங்கள் பங்கு சார்ந்த போர்ட்ஃபோலியோ வில் நிதி சார்ந்த நிறுவனங்களின் விகிதம் 30 சதவிகிதத்தைவிட சற்று கூடவோ அல்லது குறையவோ இருப்பது நல்லது. சிறு முதலீட்டாளர்கள் தங்கள் ரிஸ்க்கை குறைத்துக்கொள்ள விரும்பினால், நிதித் துறையில் முழுக்கமுழுக்க முதலீடு செய்யும் வங்கி / நிதி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில், அவரவரின் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து முதலீடு செய்யலாம். பேங்க் பீஸ், பி.எஸ்.யூ. பேங்க் பீஸ், ரிலையன்ஸ்  பேங்க், கோட்டக் பி.எஸ்.யூ. பேங்க் போன்ற இ.டி.எஃப். திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, ஆழம் அறிந்து காலைவிடுவது அவசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு