நடப்பு
தொடர்கள்
பங்குச் சந்தை
Published:Updated:

இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், டெல்டா கார்ப்... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

நடப்பு நிதி ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு முடிவுகளை முன்னணி நிறுவனங்கள் வெளியிடத் தொடங்கியிருக்கின்றன. அண்மையில் முடிவுகளை வெளியிட்ட சில நிறுவனங்கள் குறித்துப் பார்ப்போம்.

ஹெச்.டி.எஃப்.சி பேங்க் (HDFC Bank)

நமது நாட்டின் முதன்மையான தனியார் துறை சார்ந்த வங்கி இது. இந்த வங்கியின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 18.5% அதிகரித்து, ரூ.12,259 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 25% அதிகரித்து, ரூ.22,988 கோடியாக உள்ளது. சிறப்பான காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, இந்த வங்கியின் பங்குகள் தற்போதைய விலையில் இருந்து 20% வரை அதிகரிக்கும் என்று பல பங்குத் தரகு நிறுவனங்கள் இந்த வங்கியின் பங்குகளை வாங்க பரிந்துரை செய்துள்ளன.

இன்ஃபோசிஸ்,  ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ்,  டெல்டா கார்ப்... ரிசல்ட் எப்படி..?

ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் (HCL Technologies)

தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த மூன்றாவது பெரிய நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 19% அதிகரித்து, ரூ.4,096 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 20% அதிகரித்து, ரூ.26,700 கோடியாக உள்ளது. சென்ற காலாண்டில் அதிகபட்சமாக 2.35 பில்லியன் டாலர் அளவுக்கு புதிய ஒப்பந்தங்களை இந்த நிறுவனம் செய்துகொண்டுள்ளது.

இன்ஃபோசிஸ் (Infosys)

நமது நாட்டின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட அதிகரித்துள்ளது. நிகர வருமானம் டிசம்பர் காலாண்டில் 20.2% அதிகரித்து, ரூ.38,318 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் லாபமும் 13.4% அதிகரித்து, ரூ.6,586 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்துக்கு சென்ற காலாண்டில் மட்டும் 3.3 பில்லியன் டாலர் அளவுக்கு இரண்டு ஆண்டுகளில் இல்லாத உச்சபட்ச அளவாக புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

அமெரிக்காவின் பணவீக்க விகித பிரச்னை காரணமாகத் தகவல் தொழில்நுட்பத்துறை அதிக பாதிப்புக்கு ஆளாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், இன்ஃபோசிஸ் உட்பட முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சிறப்பாக உள்ளபடியால், இந்த ஆண்டு தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்கள் நல்ல லாபத்தை முதலீட்டாளர்களுக்குக் கொடுக்கும் என்று பெரும்பாலான சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஃபெடரல் பேங்க் (Federal Bank)

கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி தனியார் துறை வங்கி இது. இந்த வங்கியின் நிகர லாபம் 54% அதிகரித்து, ரூ.804 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வட்டி வருமானமும் 27.14% அதிகரித்து, ரூ.1,956 கோடி யாக உள்ளது. தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வரும் இந்த வங்கிப் பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 45% ஏற்றம் கண்டுள்ளது. தற்போது ரூ.140 என்ற அளவில் வர்த்தகமாகும் இந்த வங்கியின் பங்குகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.180 வரை அதிகரிக்கும் என்று பல பங்குத் தரகு நிறுவனங்கள் இந்த வங்கியின் பங்குகளை வாங்கப் பரிந்துரை செய்துள்ளன.

ஆனந்த் ரதி வெல்த் (Anandh Rathi Wealth)

முதலீடு சார்ந்த சேவைகள் வழங்கும் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 35% அதிகரித்து, ரூ.43 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 29% அதிகரித்து, ரூ.140.2 கோடி யாக உள்ளது.

சென்ற ஆண்டில் மட்டும் குறைந்தபட்சம் ரூ.10 லட்சத் துக்கும்மேல் முதலீடு செய்த 1,292 புதிய முதலீட்டாளர் களை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் தற்போது நிர்வகிக்கும் பெரும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 8,202-ஆக அதிகரித்துள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்டு ஜெனரல் இன்ஷூரன்ஸ் (ICICI Lombard General Insurance)

முன்னணி தனியார் துறை சார்ந்த பொதுக் காப்பீடு வழங்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிடக் குறைவாக கடந்த டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 11.6% அதிகரித்து, ரூ.352.5 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் காப்பீட்டு பிரீமியம் 17% அதிகரித்து, ரூ.5,493 கோடியாக உள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் (ICICI Prudential Life Insurance)

ஆயுள் காப்பீடு வழங்கும் முன்னணி தனியார் துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 29% குறைந்து, ரூ.221 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 78% அதிகரித்து, ரூ.17,535 கோடியாக உள்ளது. 2019-ம் ஆண்டு இந்த நிறுவனம் நான்கு ஆண்டுகளில் அதன் புதிய காப்பீட்டு பிரீமியம் அளவை இரண்டு மடங்காக உயர்த்தப்போவதாக அறிவித் திருந்தது.

தற்போது 2023-ம் நிதி ஆண்டு முடிவடையும் தருவாயில் ஏறக்குறைய அந்த இலக்கை இந்த நிறுவனம் எட்டிப்பிடிக்கும் நிலையில் உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக முதலீட்டாளர் களுக்கு நஷ்டத்தை வழங்கி இருக்கிறது. தற்போது ரூ.480 என்கிற விலையில் வர்த்தக மாகும் இந்தப் பங்குகள் 600 ரூபாய் வரை ஏற்றம் காணும் என்று கணித்துள்ள பல பங்குத் தரகு நிறுவனங்கள் இந்த நிறுவனப் பங்கை வாங்க பரிந்துரை செய்துள்ளன.

இன்ஃபோசிஸ்,  ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ்,  டெல்டா கார்ப்... ரிசல்ட் எப்படி..?

டிமார்ட் (DMart)

சூப்பர் மார்க்கெட்டுகளை நிர்வகிக்கும் ரீடெய்ல் துறை சார்ந்த முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 9% அதிகரித்து, ரூ.641 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 25% அதிகரித்து, ரூ.11,305 கோடி யாக உள்ளது. மேலும், சென்ற காலாண்டில் நான்கு புதிய சூப்பர் மார்க்கெட் கிளை களைத் திறந்துள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

டெல்டா கார்ப் (Delta Corp)

ஹாஸ்பிடாலிட்டி துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 11.7% அதிகரித்து, ரூ.337 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 3% அதிகரித்து, ரூ.96 கோடியாக உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தத் துறை கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகப் பெரிய பின்னடைவைக் கண்டிருந்தது. தற்போது அதிலிருந்து மீண்டு கொரோனாவுக்கு முந்தைய நிலையை இந்தத் துறை அடைந்து வருவதை இந்த நிறுவனத்தின் முடிவுகள் காட்டுவதாக இருக்கின்றன.

விப்ரோ (Wipro)

நமது நாட்டின் நான்காவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 2.8% அதிகரித்து, ரூ.3,050 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானமும் 14.3% அதிகரித்து, ரூ.23,229 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு வருமானம் (EPS) சென்ற ஆண்டின் அளவுடன் ஒப்பிட்டால் 2.6% அதிகரித்து, ரூ.5.57-ஆக உள்ளது. மேலும், ஒரு பங்குக்கு ரூ.1 டிவிடெண்டாக வழங்க இருக்கிறது.

எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங் (L&T Finance Holdings)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலண்டில் வருடாந்தர அடிப்படை யில் 39% அதிகரித்து ரூ.454 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் 23.5% அதிகரித்து ரூ.1,932 கோடி யாக உள்ளது.

மேலும், ரீடெய்ல் பிரிவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவில் சென்ற ஆண்டோடு ஒப்பிட்டால் 53% அதிகமாக ரூ.11,607 கோடி ரூபாய் அளவுக்கு கடன்களை வழங்கியுள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழு இந்த நிறுவனத்துடன் எல் & டி இன்ஃப்ரா கிரெடிட் லிமிடெட் மற்றும் எல் & டி மியூச்சுவல் ஃபண்ட் டிரஸ்டி லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்களை இணைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தொகுப்பு: பிரமேஷ்.எஸ்