Published:Updated:

ஏசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி ரிசல்ட் எப்படி? நான்காம் காலாண்டு முடிவுகள்...

Q 4 R E S U L T S

பிரீமியம் ஸ்டோரி

நான்காம் காலாண்டு (2020-21-ம் நிதியாண்டின்) முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. சில முக்கிய நிறுவனங்களின் மார்ச் காலாண்டு முடிவுகள் இங்கே...

டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரி (Dr Reddys Laboratory)

முன்னணி பார்மா நிறுவனம். இந்தியாவில் ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து மூன்றாவது கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்த நிறுவனம்தான் சந்தைப்படுத்துகிறது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் நான்காம் காலாண்டில் 28% குறைந்து, ரூ554 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 7% உயர்ந்து, ரூ.4,278 கோடி ரூபாயாக உள்ளது. ஒரு பங்குக்கு ரூ.25 டிவிடெண்ட் வழங்குகிறது.

2021-ம் ஆண்டு இறுதிக்குள் 23 கோடி ஸ்புட்னிக் தடுப்பூசிகள் தயாரிக்கும் முனைப்பில் இந்த நிறுவனம் உள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக்கு வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் 2 டிஜி என்ற மருந்து தயாரிக்கும் உரிமத்தையும் இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இதன் காரணமாக வரும் ஆண்டு இந்த நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த நிறுவனத்தின் பங்குகள் கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தில் உள்ளது.

ஏசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி 
ரிசல்ட் எப்படி? நான்காம் காலாண்டு முடிவுகள்...

ரானே பிரேக்லைனிங் லிமிடெட் (Rane Brake Lining Limited)

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி ஆட்டோமொபைல் துறை நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற காலாண்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் 27.1% உயர்ந்து, ரூ.152.4 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 53.1% உயர்ந்து, ரூ14.3 கோடி யாக உள்ளது. இதன் எபிட்டா ரூ.71.6 கோடியாக உள்ளது. ஒரு பங்குக்கு ரூ.25 டிவிடெண்ட் வழங்குகிறது.

ஏசியன் பெயின்ட்ஸ் (Asian Paints)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற காலண்டுடன் ஒப்பிட்டால், 3 1% குறைந்து ரூ.870 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் ரூ.6,551 கோடியாக உள்ளது. பெரும் பாலான சந்தை வல்லுநர்களின் கணிப்பைக் காட்டிலும் சிறப்பான முடிவுகளை வெளியிட்டுள்ளதால், கடந்த வாரம் இந்தப் பங்கின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

கனரா பேங்க் (Canara Bank)

கடந்த காலாண்டில் இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 68.4% உயர்ந்து, ரூ.5,589 கோடியாக உள்ளது. வங்கியின் லாபமானது கடந்த காலாண்டில் ரூ.1,010.87 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டுகளில் அதிக வாராக்கடன் காரணமாக கனரா வங்கி நஷ்டத்தை சந்தித்தது. ஆண்டு அடிப்படையில் மொத்த லாபமாக ரூ.2,557 கோடியை இந்த வங்கி எட்டியுள்ளது. நிகர வட்டி வருமானமும் கடந்த ஆண்டை விட 19% அதிகரித்து ரூ.24,062 கோடியாக உள்ளது.

வேதாந்தா (Vedanta)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.6,432 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இந்த நிறுவனம் இதே காலாண்டில் ரூ.12,521 கோடி இழப்பைச் சந்தித்திருந்தது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற காலாண்டில் கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் 24% உயர்ந்து ரூ.20,382 கோடியாக உள்ளது.

யுனைடெட் பாஸ்பரஸ் லிமிடெட் (UPL)

விவசாயம் சார்ந்த உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தயாரிக்கும் முன்னணி நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 74% உயர்ந்து, ரூ1,361 கோடியாக உள்ளது. நிகர வருமானமும் 14.8% உயர்ந்து, ரூ.12,296 கோடியாக உள்ளது. மேலும், இந்த நிறுவனம் ஒரு பங்குக்கு 10 ரூபாய் டிவிடெண்ட் வழங்குகிறது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டில் ரூ.3,140 கோடி அளவுக்குக் கடனைக் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சிப்லா (CIPLA)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இருந்த ரூ.239 கோடி என்ற அளவில் இருந்து இந்த காலாண்டில் ரூ. 411.5 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் 7% உயர்ந்து, ரூ.4,606 கோடியாக உள்ளது. கொரோனா கால கட்டத்தில் பார்மா துறை பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. என்றாலும், முன்னணி பார்மா நிறுவனமான சிப்லாவின் காலாண்டு முடிவுகள் பெரும்பாலான சந்தை வல்லு நர்களின் முடிவைவிட சற்று குறைந்தே உள்ளது.

கிளாண்ட் பார்மா (Gland Pharma)

இந்த நிறுவனத்தின் லாபம் 34% உயர்ந்து, ரூ.260.4 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் ரூ.887.7 கோடியாக உள்ளது. பல வல்லுநர்களின் எதிர்பார்ப்பைவிட சிறப்பான காலாண்டு முடிவுகளை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்கு விலை 10% வரை காலாண்டு முடிவுக்குப் பிறகு உயர்ந்துள்ளது.

எல் அண்ட் டி (L&T)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,293 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் ரூ.48,087 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்துக்கு கடந்த ஆண்டில் மிக அதிகமாக புதிய தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்தியாவில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் மிக அதிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. ஒரு பங்குக்கு ரூ.18 டிவிடெண்ட் வழங்குகிறது.

பார்தி ஏர்டெல் (Bharti Airtel)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த காலாண்டைவிட 11% குறைந்து, ரூ.759.2 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் ரூ.25,747 கோடி யாக உள்ளது. வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து கிடைக்கும் வருமானம் ரூ.166 என்ற அளவில் இருந்து 145 ரூபாயாகக் குறைந்துள்ளது. சென்ற ஆண்டில் இந்த நிறுவனம் அலைக் கற்றை ஏலத்தை எடுத்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வரும் காலங்களில் பெரிதும் உயரும் என அந்த நிறுவனம் தெரிவித் துள்ளது.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors)

இந்த நிறுவனத்தின் நிகர நஷ்டமாக ரூ. 7,605 கோடி உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 42% உயர்ந்து, ரூ.88,628 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் சொத்துகளைக் கணக்கியியல் ரீதியாகத் தள்ளுபடி செய்திருக்கிறது. இதனால் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. எபிட்டா முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து 4.9 சதவிகித மாக உள்ளது.

உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் லிமிடெட் (Ujjivan Small Finance Limited)

சிறு கடன்கள் வழங்கும் முன்னணி நிதி நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற காலாண்டில் கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் இரண்டு மடங்கு உயர்ந்து ரூ.137 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் 16% குறைந்து, ரூ.618 கோடியாக உள்ளது.

தொகுப்பு: பிரமேஷ்.எஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு