`இவற்றில் எதுவும் நடக்கலாம்!' - ஐ.பி.ஓ முதலீடு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

ஏதேனும் ஓர் நல்ல ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்யலாம் எனத் திட்டமிட்டிருக்கிறீர்களா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள் இதோ...
பொது பங்கு வெளியீடுகள் (ஐ.பி.ஓ) பங்குச் சந்தையில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. இவ்வாண்டு செப்டம்பர் முதல் இதுவரை 10 நிறுவனங்கள் மொத்தம் ரூ.14,000 கோடிக்கு மேல் புதிய பங்குகளை வெளியிட்டு திரட்டியுள்ளன. ஐ.பி.ஓ-க்குப் பிறகு, நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்படுறது. இந்த ஐ.பி.ஓ-க்களில் முதலீடு செய்யும் முன்பு கவனிக்க வேண்டியவை என்ன?
1. ஐ.பி.ஓ வகைகள்
ஐ.பி.ஓ-க்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
முதல் வகை, நிறுவனம் புதிய பங்குகளை பொது மக்களுக்கு வெளியிட்டு மூலதனம் திரட்டுவது. இது புதிய பங்கு வெளியீடு (Fresh Issue) ஆகும். இம்முறையில், பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட பணம் நிறுவனத்துக்குச் செல்கிறது. நிறுவனத்தின் மொத்த செலுத்தப்பட்ட மூலதனம் அதிகரிக்கும். தற்போதுள்ள பங்குதாரர்கள் வைத்திருக்கும் பங்குகளின் எண்ணிக்கை மாறாமல் இருக்கும். ஆனால், மொத்த மூலதனத்தில் அவர்களின் % குறையும்.
இரண்டாம் வகையில், தற்போதுள்ள பங்குதாரர்கள் தங்கள் பங்குகளின் ஒரு பகுதியையோ, முழுமையாகவோ விற்க விரும்புவார்கள். இது கையிருப்பு பங்கு விற்பனை (Offer For Sale) அல்லது ஓஃப்ஸ் (OFS). இதில் நிறுவனத்தின் மொத்த மூலதனம் மாறாமல் இருக்கும்; ஆனால் தற்போதுள்ள பங்குதாரர்களின் % குறையும்.
மூன்றாம் வகையானது கலப்பு வெளியீடு (Hybrid Offer). இதில் புதிய பங்கு வெளியீடும் கையிருப்பு பங்கு விற்பனையும் கலந்து இருக்கும். இம்முறையில், நிறுவனத்தின் மொத்த மூலதனம் புதிய பங்கு வெளியீடு காரணமாக அதிகரிக்கும். தற்போதுள்ள பங்குதாரர்கள் வைத்திருக்கும் பங்குகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் % குறையும். சமீப காலத்தில் வெளிவந்த நிறைய ஐ.பி.ஓ-க்கள் இந்த வகையைச் சார்ந்தவை.
2. ஐ.பி.ஓ வெளியீட்டு நேரம்
புதிய பங்கு வெளியீடு பற்றி வாரன் பஃபெட், ``எப்போது பங்கு வெளியிட வேண்டும் என்பதை நிறுவனம் முடிவு செய்யும். அது முதலீட்டாளருக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை" எனச் சொல்வார்.
பங்குகளை பொது மக்களுக்கு வெளியிட முடிவு செய்த நிறுவனம், சரியான நேரத்துக்குக் காத்திருக்கும். பங்கு வெளியீட்டுக்கு அதிகபட்ச விலை கிடைக்கும் சூழ்நிலை இருந்தால்தான் பங்குகளை வெளியிட முன்வரும். அதனால்தான் பெரும்பாலான ஐ.பி.ஓ-க்கள் பங்குச் சந்தை உச்சநிலையில் இருக்கும்போது வெளி வருகின்றன. 2020 ஏப்ரல்-ஜூன் மாதங்களில் கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பங்குச்சந்தை பாதிக்கப்பட்டு இருந்தது. அச்சமயம் பங்கு வெளியீடு எதுவும் நடை பெறவில்லை. ஊரடங்கு படிப்படியாகத் தளர்க்கப்பட்டு பங்குச் சந்தை புத்துயிர் பெற்ற பிறகு, செப்டம்பர் முதல் இதுவரை சுமார் 10 ஐ.பி.ஓ-க்கள் வந்துள்ளன.

3. ஐ.பி.ஓ-க்களின் பிரபலத்திற்கு என்ன காரணம்?
மேற்கூறிய காரணங்கள் பல இருந்தாலும், ஐ.பி.ஓ-க்கள் ஏன் முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன? காரணம் ஐ.பி.ஓ கம்பெனி பங்குச் சந்தையில் அனுமதிக்கப்பட்டவுடன் கிடைக்கும் லாபம். இதை லிஸ்டிங் கெயின்ஸ் (listing gains) என்பார்கள்.
பல முதலீட்டாளர்கள் இக்குறுகிய லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு ஐ.பி.ஓ-வுக்கு விண்ணப்பம் செய்கின்றனர். (உ.ம்.) ஹேப்பியஸ்ட் மைண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஐ.பி.ஓ-க்கு 151 மடங்கு அதிக ஆதரவு பெற்றது. ரூ.166-க்கு வெளியிடப்பட்ட பங்கு, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாள் ரூ.371-க்கு அதிகரித்தது. இதனால், மிக குறுகிய காலத்தில் 124% லாபம் கிடைத்தது.
சில பங்குகளில் இத்தகைய பெரிய ஆதாயம் கிடைப்பதால், பெரும்பாலான முதலீட்டாளர்கள் ஒவ்வோர் ஐ.பி.ஓ-வையும் விரைவான லாபத்துக்கான `லாட்டரிச் சீட்டு' என்று எண்ணுகின்றனர். ``விரைவாகப் பணக்காரர் ஆகிவிட வேண்டும்” என்ற இத்தகைய அணுகுமுறையை ஐ.பி.ஓ வரவிருக்கும் நிறுவனங்கள், அவற்றின் முதலீட்டாளர்கள், முதலீட்டு வங்கியாளர்கள் மற்றும் தரகர்கள் திறமையாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

4. ஐ.பி.ஓ-வும் மிக அதிக அளவு விண்ணப்பமும்
ஹேப்பியஸ்ட் மைண்ட் டெக்னாலஜிஸ் போன்ற ஐ.பி.ஓ-க்கள் அதிக அளவில் வரவேற்பைப் பெற்று, பங்குச் சந்தையின் ஆரம்ப நாளிலேயே கணிசமான லாபத்தையும் ஈட்டித் தருகின்றன. அத்தகைய ஐ.பி.ஓ-வில் பங்கு ஒதுக்கீடு பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு; விண்ணப்பதாரருக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டாலும், ஒதுக்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும்.
எனவே, குவியும் விண்ணப்பங்கள் அதிகமாய் இருந்தால், பங்கு கிடைக்கும் வாய்ப்பும், அவ்வாறு ஒதுக்கப்படும் பங்குகளின் எண்ணிக்கையும், விற்பனை லாபமும் குறைவாகவே இருக்கும்.
5. ஐ.பி.ஓ-வும் குறைந்த அளவு விண்ணப்பமும்
எல்லா ஐ.பி.ஓ-க்களும் மகத்தான வரவேற்பைப் பெறுவதில்லை. சிலவற்றுக்கு குறைந்த வரவேற்புதான் கிடைக்கிறது. சில தோல்வி அடைகின்றன. இத்தகைய ஐ.பி.ஓ பங்குகள் முதல் நாளிலிருந்தே ஐ.பி.ஓ விலைக்கும் குறைவாகவே பங்குச் சந்தையில் விலை போகின்றன. (உ.ம்) யு.டி.ஐ.
ஏ.எம்.சி சமீபத்தில் ஓஃப்ஸ் முறையில் ஐ.பி.ஓ செய்தது. ஒரு பங்கின் விலை ரூ.554. குவிந்த விண்ணப்பங்கள் 230% மட்டுமே. முதல் நாளன்று இப்பங்கு ரூ.490-க்கு தொடங்கி ரூ.477-க்கு முடிந்தது. முதல் நாள் இழப்பு ஒரு பங்குக்கு ரூ.77. முதலீடு செய்யப்பட்ட தொகையில் 14% இழப்பு. யு.டி.ஐ. ஏ.எம்.சி. இதுவரை ஐ.பி.ஓ விலையைத் தாண்டவில்லை!

இதேபோல், 2019-ம் ஆண்டில் ஸ்டெர்லிங் & வில்சன் சோலார் ஐ.பி.ஓ ஒரு பங்குக்கு ரூ.780 என்ற விலையில் வந்தது. இதற்கு 0.92 மடங்கு மட்டுமே விண்ணப்பங்கள் வந்தன. முதல் நாள் இது ரூ.700-ல் தொடங்கி ரூ.725 க்கு முடிந்தது. இதன் விளைவாக ஒரு பங்குக்கு ரூ.55 (7% முதலீடு) இழப்பு ஏற்பட்டது. இப்பங்கின் தற்போதைய விலை ரூ.220 மட்டுமே. இந்தப் பங்கின் அதிகபட்ச விலை ஐ.பி.ஓ விலையைவிடக் குறைவானதே!
எனவே அடுத்தமுறை ஐ.பி.ஓ-வில் மொத்தமாக முதலீடு செய்யலாம் என நினைக்கும்போது இந்த விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு முடிவு எடுங்கள்.
- எஸ்.வெங்கட்ராமன், நிறுவனர், 6sigmawealth.com