Published:Updated:

நீங்களும் அனலிஸ்ட்தான்!

டெக்னிக்கல் அனாலிசிஸ்

பிரீமியம் ஸ்டோரி
நீங்களும் அனலிஸ்ட்தான்!
நீங்களும் அனலிஸ்ட்தான்!


நம்ம ஊர் கபடி போல அமெரிக்காவில் 'ரெட் ரோவர்’ என்று ஒரு விளையாட்டு இருக்கிறது. கபடியில் இருப்பதுபோலவே இரண்டு டீம்கள். கபடி விளையாட்டில், எதிரணியின் எல்லைக்குள் 'தம்’ கட்டிக் கொண்டு நுழைந்து எத்தனை ஆட்களைத் தொட முடிகிறதோ, அத்தனை பேரையும் தொட்டுவிட்டு, மூச்சு விடாமல் திரும்ப வந்து நம் எல்லைக்குள் வந்து சேர்ந்தால், நாம் தொட்ட அத்தனைபேரும் அவுட்டாகி விடுவார்கள்.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

னால், அமெரிக்காவின் 'ரெட் ரோவர்’ கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு அணியினர் கைகோத்து ஒரு லைனில் வரிசையாக நிற்பார்கள். எதிர் அணியில் இருந்து ஒருவர் சென்று அந்த அணியில் கைகோத்து நிற்கும் டீமை முட்டித்தள்ளி, கையால் செய்யப்பட்ட வேலியை உடைத்து முன்னேற வேண்டும். அப்படி ஒருவர் உடைத்து முன்னேறினார் என்றால் அவர் செலக்ட் செய்யும் ஒரு நபர் எதிரணியிலிருந்து அவருடைய அணிக்கு போய்விட வேண்டும். ஒருவேளை நீங்கள் வேலியை உடைத்து விட்டால், எதிர் டீமிலிருந்து யாரை உங்கள் டீமிற்கு கேட்பீர்கள். எதிர் டீமில் இருப்பதிலேயே பலசாலியைத்தானே?

இந்த விளையாட்டின் லாஜிக்கும் சார்ட்டுகளின் லாஜிக்கும் மிகவும் ஒத்துப்போகும் அம்சங்கள் கொண்டவை. அதேபோலத்தான் டிரேடர்களும்.  சக்தி வாய்ந்த டிரேடர்கள் காளையாகவும் கரடியாகவும் சந்தையில் பங்கெடுத்து பணம் சம்பாதிக்க முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள். 'ரெட் ரோவர்’ கேம் ஆடுகிறவர்களைப்போல. ஒரு காளை டிரேடர், கரடி டிரேடர்களின் கோத்த கைகளை தன்னுடைய பலம் அத்தனையையும் பிரயோகித்து உடைத்து போக முயற்சிப்பார். கரடிகளின் கைகோப்பு (ரெசிஸ்டன்ஸை) பலமாக இருக்கும் பட்சத்தில் அவரால் விலையை ஒரு ரூபாய்கூட மேலே ஏற்றிச் செல்ல முடியாது. அவருடைய பலம் கூட்டத்தில் கைகோப்பவர்களின் பலத்தைவிட அதிகமாக இருக்கும்போது விலையை வெற்றிகரமாக ஏற்றிவிடுகிறார்.

'ரெட் ரோவர்’ விளையாட்டில் கோத்த கைகளை உடைக்க எனர்ஜி தேவைப்படுகிறது. சந்தையில் பணம் தேவைப்படுகிறது. ஏனென்றால், காளைகள் ஏற்ற முயற்சி செய்யும்போது கரடிகள் அந்த ஷேரை விற்றுத் தள்ளுவார்கள். அவை அத்தனையும் வாங்கிப்போட்டு கரடிகள் இனி விற்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலைக்கு வரும்போதுதான் விலையை ஏற்ற முடியும். அதனால்தான் ஒரு சப்போர்ட் அல்லது ரெசிஸ்டன்ஸை தாண்டி விலை செல்லும்போது வால்யூம் மிக அதிகமாக நடக்கிறது. அப்படி நடக்காவிட்டால் 'சம்திங் ராங்’ என்றே கொள்ள வேண்டும்.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

இதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்... ஒரு பங்கு 45 முதல் 50 ரூபாய் வரை உள்ள ரேஞ்சில் டிரேட் ஆகி கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நாட்கள், வாரங்கள், மாதங்கள் என அந்த ரேஞ்சிலேயே விலை நடக்கிறது. அப்படியானால் 45 ரூபாய்க்குப் போனால் பலர் ஓடிவந்து 50 ரூபாய் வரை அந்த பங்கை வாங்குகிறார்கள் என்பதுதானே அர்த்தம்.

திடீரென்று அந்த கம்பெனி பற்றி ஒரு நல்ல செய்தி வருகிறது. 50-ல் இருந்து விலை 55-க்கு போகிறது. இந்த சூழ்நிலையில் 45-ல் வாங்கியவர்களில் கொஞ்சம் பேர், '10 ரூபாய் ஏறிடுச்சே! கொஞ்சம் விற்று லாபம் பார்க்கலாம்’ என்று விற்பார்கள் இல்லையா? இப்படி விற்கும்போது 55-லிருந்து மீண்டும் 50-க்கே வருகிறது.

நீங்களும் அனலிஸ்ட்தான்!
##~##
அந்த கம்பெனி பற்றி நல்ல செய்தி வருவதற்குப் பதிலாக கெட்ட செய்தி வருகிறது என்று வைத்துக் கொள்வோம். என்னவாகும்? 50-லிருந்து விற்க ஆரம்பித்து 45 வரை வரும். 50-லிருந்து 48-க்கு வரும்போது 48-ல் ஏற்கெனவே வாங்கியவருக்கு ஒன்றும் பிரச்னையில்லை. அது 45-க்கு போகும். பிறகு 50-க்கு வரும். 'இதைத்தான் நான் மாசக்கணக்காக பார்த்துக் கொண்டிருக்கிறேனே!’ என்று நினைத்து கேஷ§வலாக இருப்பார். 45-ஐயும் தாண்டி கீழே போக ஆரம்பிக்கும் போதுதான், 'அய்யோ, நம்ம நெனைச்ச மாதிரி நடக்கலையே!’ என்று நினைப்பார். 'இன்னும் கீழே (40 வரைக்கும்) போகுமோ! இப்ப வித்துட்டு 40 வந்தால் வாங்கிக்கலாமே!’ என்றும் நினைப்பார்.

அது மட்டுமல்ல, பலர் 45 தாண்டியவுடன் விற்கவும் ஆரம்பிப்பார்கள். இப்படி விற்க ஆரம்பிப்பதால் 45-50 ரேஞ்சில் சப்போர்ட்டை கொண்டிருந்த அந்த பங்கு தடாலென இறங்கி 40-க்கு வருகிறது. கெட்ட செய்தியின் எஃபெக்ட் இன்னும் குறையாது என்று சந்தையில் பெரும்பான்மையானவர்கள் நினைக்கும்போது மேலும் அதிகமாக விற்பனை நடக்கிறது. அதனால், நிறைய எண்ணிக்கையில் அந்த பங்கு வியாபாரமாகிறது.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

விலை இறக்கமானது ஒரு சப்போர்ட் லெவலை உடைத்து,  வால்யூமுடன் நடக்கும்போது நிச்சயமாக அந்த பங்கு நன்றாக விலை இறங்கும் என்று அர்த்தம் செய்து கொள்ளலாம். அதேபோல் ஒரு ரெசிஸ்டன்ஸ் லெவலை உடைத்து ஒரு ஷேரின் விலை மேலே செல்லும்போது அந்த பங்கில் அதிகப்படியான வால்யூம் நடந்தால் விலை நன்றாகவே மேலே செல்ல வாய்ப்புள்ளது என்றும் புரிந்து கொள்ளலாம்.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

பங்கில் சாதாரணமாக நடக்கும் வால்யூமைவிட குறைந்த வால்யூமில் சப்போர்ட் உடைக்கப்பட்டாலோ அல்லது ரெசிஸ்டன்ஸ் உடைக்கப்பட்டாலோ அது பொய்யான ஒரு விலை, எல்லை தாண்டும் நிகழ்வு என்று உணர்ந்து கொள்வது அவசியம். இப்படி சப்போர்ட்டை தாண்டியும் ரெசிஸ்டன்ஸை தாண்டியும் செல்வதை ஆங்கிலத்தில் 'பிரேக் அவுட்’ என்று சொல்வார்கள். அந்த பிரேக் அவுட் உண்மையானதா (காரண காரியத்தோடு ஆகியிருக்கிறதா?) இல்லை, பொய்யான (காரண காரியமில்லாத) பிரேக் அவுட்டா என்பதை வால்யூமைப் பார்த்து மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

முன்பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ள ரிலையன்ஸ் கேப்பிட்டலின் சார்ட்டை பாருங்கள். சார்ட்டில் தினசரி விலைகள் வால்யூமுடன் தரப்பட்டுள்ளது. 595.47 லெவல் ஒரு ரெசிஸ்டன்ஸாக ஜனவரி மாத பாதியிலிருந்து மார்ச் இறுதிவரை இருந்துள்ளது. பிப்ரவரி இரண்டாவது வாரத்திலிருந்து மார்ச் மாத மூன்றாவது வாரம் வரை நடந்த வால்யூமை பாருங்கள். ரெசிஸ்டன்ஸிற்கு மிகவும் கீழே வால்யூம் வரிந்து கட்டிக்கொண்டு நடந்திருக்கிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் அந்த ரெசிஸ்டன்ஸ் விலையையும் தாண்டியுள்ளது. அந்த விலை தாண்டுதலுக்கு பின்பு வால்யூம் குறைய ஆரம்பித்து விட்டது. வால்யூம் குறைந்த காரணத்தால் ரெசிஸ்டன்ஸ் லெவலை வெற்றிகரமாகத் தாண்டியது போல் காண்பித்தாலும் ரொம்ப நாட்கள் தாக்கு பிடிக்க முடியாமல் மீண்டும் அந்த லெவலுக்குக் கீழே தடாலென சரிந்து விட்டது.

மேலே தரப்பட்டுள்ள பாட்டா இந்தியாவின் சார்ட்டை பாருங்கள். 421.25 என்ற லெவலை மே மாதம் முதல் வாரத்தில் உடைத்து வால்யூமுடன் மேலே சென்றதால் அந்த லெவலுக்கு மேலேயே கிட்டத்தட்ட ஒருமாதம் இருந்து வந்துள்ளது. எனவே, ஒரு சப்போர்ட்டையோ ரெசிஸ்டன்ஸையோ ஒரு ஸ்டாக் உடைக்கும்போது வால்யூமை ஃபாலோ செய்து, அது உண்மையான பிரேக் அவுட்டா அல்லது பொய்யானதா என நீங்கள் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும்.

தேவையான அளவுக்கு சப்போர்ட் மற்றும் ரெசிஸ் டன்ஸை அலசி ஆராய்ந்து விட்டோம். அடுத்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் டிரெண்ட். அதைப் பற்றி அடுத்த வாரம் ஆரம்பிப்போம்!

.. வளரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு