Published:Updated:

சிக்கலில் சகுந்தலா... செபி தந்த தீர்வு!

சிக்கலில் சகுந்தலா... செபி தந்த தீர்வு!

சிக்கலில் சகுந்தலா... செபி தந்த தீர்வு!

சிக்கலில் சகுந்தலா... செபி தந்த தீர்வு!

Published:Updated:
பங்குகள்
சிக்கலில் சகுந்தலா... செபி தந்த தீர்வு!
 

 

சிக்கலில் சகுந்தலா...செபி தந்த தீர்வு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிக்கலில் சகுந்தலா... செபி தந்த தீர்வு!

‘‘வ ணக்கம் சார்... என் பெயர் சகுந்தலா! பங்குச் சந்தையில் முதலீடு செய்து வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறேன். இப்போது ‘செபி’ வெளியிட்டிருக்கும் அறிவிப்பால் என் பான் கார்டில் ஒரு சிக்கல் எழுந்திருக்கிறது. எனக்கு ஒரு தீர்வு சொல்ல முடியுமா?’’ என்று தொலை பேசியில் வேண்டுகோள் விடுத்தார் ஒரு வாசகி.

அவர் சந்தித்திருக்கும் பிரச்னைக்குச் செல்லும் முன் சமீபத்தில் செபி அமைப்பு வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கையைப் பற்றி பார்த்து விடலாம்.

‘பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அனைவரும் வருமான வரித்துறையால் வழங்கப்படும் பான் கார்ட் வைத்திருக்க வேண்டும். இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பெற்றுக்கொண்டு, அதுபற்றிய தகவல்களை உடனே அவர்களது டிமேட் கணக்கை நிர்வகிக்கும் ‘டெபாசிட்டரி பார்டிசிபன்ட்’ (டி.பி - Depository Participant ) நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். இதற்கு செப்டம்பர் 30-ம் தேதி வரையே அவகாசம். அக்டோபர் 1-ம் தேதி முதல் பான் கார்ட் இல்லாமல் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முடி யாது’ என்பதுதான் செபி வெளியிட் டுள்ள சுற்றறிக்கை.

இந்த அறிவிப்பால், பான் கார்ட் வைத்திருக்கும் சிலரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் சகுந்தலா. இனி, அவருக்கு நேர்ந்த சிக்கல் பற்றி...

சகுந்தலாவின் தந்தை பெயர் சாத்தப்பன். கணவர் பெயர் ராமனாதன். திருமணத்துக்குப் பிறகு தன் ஆவணங்களில் எல்லாம் சகுந்தலா ராமனாதன் என்று கணவர் பெயரைச் சேர்த்து குறிப்பிடத் தொடங்கினார். டீமேட் கணக்கையும் சகுந்தலா ராமனாதன் என்றே தொடங்கினார். அவரது வங்கிக் கணக்கும் ஆர்.சகுந்தலா என்ற பெயரிலேயே இருந்தது.

இதற்கிடையில், வருமான வரி கணக்கு சமர்ப் பிக்கத் தேவைப்படுகிறது என்று பான் கார்ட் பெற்றிருந்தார். அந்தக் கார்ட் பெறும்போது தன் பெயரோடு தந்தை பெயரைத்தான் கொடுக்க வேண்டும். கார்டில் இடம்பெற வேண்டிய பெயர் என்று சகுந்தலா, தன் கணவர் இனிஷியலை சேர்த்துக் கொடுத்திருந்தாலும் வருமான வரித்துறை தன் வழக்கப்படி, ‘சகுந்தலா சாத்தப்பன்’ என்ற பெயரில் விவரங்களைப் பதிவு செய்துகொண்டது. கார்டில் ஆர்.சகுந்தலா என்று இருந்ததால் இவரும் மற்ற விஷயங்களில் அக்கறை காட்டவில்லை.

இப்போது ‘செபி’யின் சுற்றறிக்கையை அடுத்து, தன்னுடைய பான்கார்ட் விவரங்களை டி.பி அலுவலகத்தில் கொடுக்க, அங்கே டீமேட் கணக்கில் உள்ள பெயரும் பான்கார்ட் எண்ணுக்குரிய வருமான வரித்துறை அலுவலக குறிப்பில் உள்ள பெயரும் வேறுவேறாக இருந்ததால் ஏற்க மறுத்துவிட்டார்கள். இதுதான் சகுந்தலாவின் பிரச்னை.

‘‘இனி செய்வதற்கு எதுவுமில்லை. சகுந்தலா சாத்தப்பன் என்ற பெயரில் ஒரு டீமேட் கணக்கைத் தொடங்கி விடுங்கள் என்று சொல்கிறார்கள். நான் சரியான தகவல்களைத்தானே கொடுத்தேன். அப்படி இருக்கும்போது புது டீமேட் கணக்கு தொடங்க, நான் ஏன் வீணாக பணம் செலவு செய்யவேண்டும். என் பான் கார்டில் பெயரை மாற்றித் தர வழியில்லையா?’’ என்றார் சகுந்தலா.

இதுபோல் ஒன்றிரண்டு அல்ல... பலருக்கும் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது என்பதால் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தோம்.

நாம் செபியின் சென்னை கிளை அலுவலகத்தில் இதுபற்றிய விசாரணையில் இறங்கினோம்.

‘‘தலைமை அலுவலகம் முடிவு எடுக்கவேண்டிய விஷயம் இது. எங்களால் எந்த பதிலும் சொல்ல முடியாது. இந்த விவரங்களை இமெயிலில் அனுப்புங்கள். தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கிறோம்’’ என்று தகவல்களை கேட்டு வாங்கிக்கொண்டார்கள்.

சிக்கலில் சகுந்தலா... செபி தந்த தீர்வு!

அடுத்து, வருமான வரித்துறை சார்பாக பான் கார்ட் வழங்க அனுமதி பெற்றுள்ள யூ.டி.ஐ நிறுவனத்தை அணுகினோம். அந்நிறுவனத்தில் பான் கார்ட் தயாரித்து வழங்கும் பிரிவுக்குப் பொறுப்பேற்றுள்ள ‘யூ.டி.ஐ டெக்னாலஜி சர்வீஸ’ஸீன் தென் பிராந்திய மேலாளர் அருண்ராஜிடம் பேசினோம்.

‘‘வருமான வரித்துறை நடைமுறைப்படி இந்தியக் குடிமகன் யாராயிருந்தாலும் அவர் பெயருடன், தந்தை பெயரையும் சேர்த்துதான் பான் கார்ட் வழங்கப்பட வேண்டும். விண்ணப்பத்திலேயே இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஒரு பெண்மணி தன் கணவர் பெயரில் பான் கார்டைப் பெறு கிறார் என்று வைத்துக் கொள்வோம். பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் பிரியக்கூடிய சூழ்நிலை வந்தால் அந்த பான் கார்டில் இருக்கும் பெயர் அர்த்தமில்லாமல் போய்விடும். ஆனால், தந்தை பெயர் எப்போதும் மாறாதது. அதனால்தான், தந்தை பெயரைக் குறிப்பிடச் சொல்கிறோம்.

முகவரி மாறி இருந்தாலோ, எழுத்துக்கள் தவறாக அச்சடிக்கப்பட்டிருந்தாலோ அதை நிச்சயமாக மாற்றித் தருவோம். ஆனால், தந்தையின் பெயருக்குப் பதில் வேறு பெயர்களை மாற்றித் தர முடியாது’’ என்றார்.

‘‘அப்படியானால் சம்பந்தப்பட்டவர் வேறு டீமேட் கணக்குதான் தொடங்க வேண்டுமா?’’ என்றோம்.

‘‘பான் கார்ட் வழங்குவது வருமானவரித்துறையின் பணி. அவர்களுக்கு நாங்கள் உதவிதான் செய்கிறோம். மேல் விவரங்களுக்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் கேட்டுக் கொள்ளுங்கள்’’ என்று சொல்லிவிட்டார்.

நாம் வருமான வரித்துறை அலுவலகத்தில் பல மட்டத்திலும் விசாரித்தோம். ‘‘நடைமுறையில் ஒரு நபருக்கு ஒரு பான் கார்ட், ஒரு பான் எண்தான் இருக்கவேண்டும். அதனால், கார்டை மாற்றித் தர இயலாது. குழப்பங்களைத் தவிர்ப்பதற்காகத்தான் தந்தையின் பெயரைச் சேர்த்துக்கொடுக்கிறோம்’’ என்று சொல்லிவிட்டார்கள்.

இந்த நிலையில், ஜூலை 20\ம் தேதி டி.பி நிறுவனங்களுக்கு செபி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறது. அதில், ‘திருமணமான பெண்கள் இதுபோல பெயர் குழப்பங்களில் சிக்கியிருந்தால், அது தொடர்பான ஆவணங்களைச் சரிபார்த்துவிட்டு அவர்களுடைய பான் கார்ட் தகவலை ஏற்றுக் கொள்ளலாம்’ என்று குறிப்பிட்டிருக்கிறது.

இதன்மூலம் சகுந்தலா போன்ற பெண்களின் சிக்கலுக்கு தீர்வு கிடைத்துவிட்டது. கூடவே, பான் கார்ட் போன்ற அதிமுக்கியமான அடையாள அட்டைகளைப் பெறும்போது சரியான தகவல்களைக் கொடுக்கவேண்டும், அதை முறையாக சரிபார்த்துக் கொள்ளவும்வேண்டும் என்ற பாடமும் கிடைத்திருக்கிறது.

அருண்ராஜ் தரும் அட்வைஸ்!

‘ப தினைந்தே நாட்களில் பான் கார்ட் பெற்றுத் தருகிறோம்’ என்றெல்லாம் சிலர் பத்திரிகைகளில் விளம்பரம் தருகிறார்கள். இதற்காக ரூபாய் 500, 1,000 என பணம் கேட்பவர்களும் உண்டு. அவர்களிடம் சென்று ஏமாறவேண்டாம். புதிதாக பான் எண் கேட்டு தேவையான ஆவணங்களோடு விண்ணப்பித்தால், 10 நாட்களில் பான் கார்ட் வீட்டுக்கே வரும்.

ஏற்கெனவே பெற்ற பழைய கார்ட்களில், சில திருத்தம் அல்லது பழைய அதே பான் எண்ணுடன் புதிய கார்ட் கோருபவர்களுக்கு சற்று தாமதமாகலாம். ஏனென்றால், அவர்கள் தகவல்களை வருமான வரித்துறையிடம் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ள சிறிது கால அவகாசம் தேவைப்படும். இதற்கான கட்டணம் வெறும் 65 ரூபாய் மற்றும் சேவை வரிதான். தமிழகம் முழுக்க உள்ள எங்கள் அலுவலகங்களில் இதைப் பெறலாம்.

அத்துடன், விண்ணப்பித்த கார்ட் குறித்து விசாரிக்க, எங்களின் சென்னை அலுவலகத்தின் 2534 1224, 25340781 போன்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism