பங்குகள் |

ஆண்டு
இறுதியில் அள்ளுங்க பணத்தை! |
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


‘‘ப லரும் சொல்வதைப் போல இப்போதைய நிலவரத்தை வைத்து, பங்குச் சந்தை கரடியின் பிடியில் மாட்டிக்கொண்டுள்ளதாக நான் நினைக்கவில்லை. ஓட்டப்பந்தயத்தில் எவ்வளவு தூரம் ஓடிக்கொண்டே இருக்கமுடியும்? குறிப்பிட்ட தூரம் ஓடியபின் கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்வோம் இல்லையா? அதுதான் பங்குச் சந்தையில் நடக்கிறது’’ என நம்பிக்கையோடு சொல்கிறார் ‘ஜியோஜித் ஃபைனான்ஸ்’ பங்குத் தரகு நிறுவனத்தின் அசிஸ்டென்ட் வைஸ் பிரசிடென்ட் சனில்குமார். சென்னையின் 17 கிளைகள் உட்பட, தமிழகத்தில் 30 இடங்களில் செயல்படுகிற ஜியோஜித், மேலும் 30 இடங்களில் கிளைகளை அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. ‘‘இப்போது காணப்படும் நிலை, இன்னும் 2 முதல் 3 மாதங்களுக்காவது தொடரும். சென்செக்ஸ் 9400 முதல் 11000 புள்ளிகளுக்கு இடையே ஊஞ்சலாடிக் கொண்டேதான் இருக்கும். தீபாவளியை நெருங்கும்போது இது கொஞ்சம் சூடு பிடிக்கத் தொடங்கும். அதன்பிறகு, இந்த நிதியாண்டு முடிவில் சந்தை 14000 புள்ளிகளை எளிதாகத் தொட்டுவிடும் என்று நம்புகிறேன். நான் உறுதியாக நம்புவது இன்னும் 4 ஆண்டுகளில் சென்செக்ஸ் 25 ஆயிரம் புள்ளிகளை எட்டும் என்பதைத்தான். ‘இந்தியா குரோத் ஸ்டோரி’யில் எந்தவிதமான இடைஞ்சலும் இல்லாதபோது உள்நாட்டு விஷயங்கள் எதுவும் சந்தையைப் பெரிதாகப் பாதிக்காது என்றே தோன்றுகிறது. மத்திய அரசின் தள்ளாட்டம், கம்யூனிஸ்ட் களின் கண்ணாமூச்சிகளும்கூட பங்குச் சந்தையைப் பெரிதாகப் பாதிக்கப் போவ தில்லை. கச்சா எண்ணெயின் சர்வதேச விலை, போர் அபாயம் போன்ற அசாதாரண மான காரணங்கள் வெளியில் இருந்து தாக்கினால் மட்டும்தான், இந்தக் கணிப்பில் சறுக்கல் வரும். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டு பங்குச் சந்தை நோக்கிப் பாயும் பணத்தின் மடங்கு, கிட்டத்தட்ட 3 மடங்கு என்பது எங்களது கணக்கு. இப்போது இளைஞர்கள் வாங்கும் மிக அதிக சம்பளம், அதையட்டி மாறும் அவர்களது வாழ்க்கைத் தரம், அதனால் சேமிப்பு உள்ளிட்ட வகைகளில் ஏற்பட்டு வரும் மனமாற்றம், பங்குச் சந்தை மற்றும் அதைச் சார்ந்த சேமிப்புகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது... போன்ற எல்லாமே நீண்டகாலப் போக்கில் நம்பிக்கை தருவதாகத்தான் இருக்கிறது. அதனால், இடைப்பட்ட காலங்களில் ஏற்படும் ஒவ்வொரு சரிவையும் பங்குகள் வாங்கிக் குவிக்க சரியான நேரமாகக் கருதலாம். கடந்த ‘புல் ரன்’னில் வாய்ப்பு இழந்ததாகக் கருதும் எல்லாரும் இப்போதே அதற்குத் தயாராகலாம். இரண்டு மாதங்களுக்குப் பிறகு சந்தை ரேஸில் இறங்கிய பிறகு, அதைத் துரத்திக் கொண்டு ஓடுவதைவிட, இப்போது நாய்க்குட்டி மாதிரி வாலாட்டிக் கொண்டு நம் முன்னால் வந்து நிற்பதை தூக்கி உள்ளே போடுவதுதான் புத்திசாலிகளுக்கு அழகு’’ என்று முடித்தார்.
|