Published:Updated:

உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!

உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!

பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்
உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!
 

 

மூன்றெழுத்து மந்திரம்!

உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!
உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!
உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!

‘மூ ன்றெழுத்து மந்திரத்தைச் சொல்லவா... என் மன்னவா!’ என மூன்று நாட்களாகப் பாடிக்கொண்டிருந்தாள் என் மனைவி! அது என்ன மூன்றெழுத்து?

பங்குச் சந்தையின் வீழ்ச்சியில் இருந்து நம் முதலீட்டைப் பாதுகாத்துக்கொள்ள முடியாமல் ஒருவேளை சிக்கிக்கொண்டால்கூட, அதில் இருந்து பாதுகாப்பாக வெளிவரவும், வீழ்ச்சியையே நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவும் ஒரு மூன்றெழுத்து உத்தி உள்ளது எனச் சொல்லி இருந்தேன். அதைத்தான் தெரிந்துகொண்டு விட்டதாக சூசகமாகச் சொல்கிறாள் அவள்.

இப்போதெல்லாம் சிஸ்டம் மாறிவிட்டது. கொஞ்ச நாளாக அவள்தான் எனக்கு கிளாஸ் எடுக்கிறாள்! சொந்தக்காரர் ஒருவர் வீட்டுக்குச் செல்வதற்காகக் கிளம்பி வண்டியில் சென்று கொண்டிருந்தோம். பில்லியனில் என் தோள் பற்றிக் கொஞ்சிக்கொண்டு வந்தவளிடம் ‘‘மூன்றெழுத்து மந்திரம் தெரிஞ்சுடுச்சு போலிருக்கே! என் மனைவியா... கில்லாடியா..!’ என்று கிடைத்த சந்தர்ப்பத்தில் ஒரு பத்து மார்க் ஸ்கோர் பண்ணினேன்.

படபடவென லெக்சரை ஆரம்பித்துவிட்டாள்!

கொஞ்ச நாள் முன்னால வெங்காயம், தக்காளினு காய்கறி விலை எல்லாம் ஏறினபோது என்ன செய்தோம்? காய் வாங்கற அளவைக் கொஞ்சம் குறைச்சுக்கிட்டோம். அதுக்கு மேலும் ஏறினபோது மிக மிகக் குறைவாக, அவசியத்துக்காக மட்டும் வாங்கினோம். கன்னா பின்னானு விலை தறிகெட்டு ஏறினபோது, ‘தக்காளியாவது... ஒன்னாவது..? ஏன் தக்காளி இல்லாம சமைக்க முடியாதா என்ன?’னு வாங்காமல் தவிர்த்தவர்களும் உண்டல்லவா?’’ எனக் கேள்வி கேட்டாள்.

‘‘எதுக்கு இப்போ தக்காளி கதை..?’’ என்றேன் அவளைச் சீண்டும் விதமாக.

‘‘சொல்றேன். அவசரப்படாம, வண்டிய நிதானமா ஓட்டிட்டே கேளுங்க! அதே தக்காளி, விலை குறையத் தொடங்குச்சு. நாம் வாங்கற அளவும் உயர்ந்தது. ஒரு கட்டத்தில் விலை கிடுகிடுவென இறங்கி ஒரு ரூபாய்க் கும் கீழே போனபோது சில சாமர்த்தியசாலிகள் தக்காளித் தொக்கு, ஜாம், ஊறுகாய்னு பல வெரைட்டி களைப் போட்டு ஸ்டாக் பண்ணினோம் இல்லையா...?’’ என பேசிக்கொண்டே போனாள்.

அவளுடைய சாமர்த்தியமான பேச்சைக் கேட்கக் கேட்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உச்சி குளிர ‘உம்’ கொட்டிக் கொண்டிருந்தேன்.

“இதிலே இருந்து என்ன தெரியுது... என்னதான் நல்ல பொருளா இருந்தாலும், அதன் விலை அதிகரிக்க அதிகரிக்க வாங்கும் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதேபொருள் விலை மலிவாகக் கிடைக்கும்போது அதிக அளவில் வாங்கிச் சேமித்து வைத்துக் கொள்ளவேண்டும். சிம்பிளாகச் சொல்லவேண்டு மானால், இதுதான் ‘எஸ்.ஐ.பி’ எனும் தாரக மந்திரம் கண்ணாளா!” எனக் கொஞ்சினாள்.

சிக்னலுக்குக் காத்திருந்த நேரத்தில் கொஞ்சம் சீரியஸாக அந்த மூன்றெழுத்து மந்திரம் பற்றி அசைபோட்டேன்.

எஸ்.ஐ.பி என்பது சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் ப்ளான்! அதாவது ஒழுங்காகத் திட்டமிட்டு முதலீடு செய்வதற்கு வழிசொல்லும் திட்டம். ரெக்கரிங் டெபாசிட் மாதிரி மாதாமாதம் முதலீடு செய்வ தற்கென ஒரு சிறு தொகையை ஒதுக்கிவிட்டால் போதும். ஆயிரக் கணக்கில் முதலீடு செய்யவேண்டும் என்பதெல்லாம் இல்லை. அது 500 ரூபாயாகக்கூட இருக்கலாம். யூனிட்களின் அப்போதைய விலைக்குக் கணக்கிட்டு, 500 ரூபாய்க்கான யூனிட்களை நம் கணக்கில் வரவு வைத்துவிடுவார்கள். பின்னர், அந்த யூனிட்களின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப நம் முதலீட்டு மதிப்பும் மாறும்.

உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!

யூனிட்களின் விலை குறைவாக இருக் கும்போது முதலீடு செய்தால் 500 ரூபாய்க்கு அதிக யூனிட்கள் கிடைக்கும். அதேசமயம் யூனிட்களின் விலை அதிகமாக இருக்கும்போது குறைவான யூனிட்களே கிடைக்கும். இதன் விளைவு என்ன தெரியுமா? மொத்தத்தில் பார்த்தால், சந்தை வீழ்ச்சியின்போது நம் கணக்கில் இருக்கும் யூனிட்களின் மதிப்பில் அதிக பாதிப்பு இருக்காது. முதலீடு ஓரளவுக்கு பாதுகாப்பாக இருக்கும். என்ன... வீழ்ச்சியின்போதும் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து அதே தொகையை முதலீடு செய்ய வேண்டும்.

அந்தக்கால ரெக்கரிங் டெபாசிட்டின் இடத்தை மெள்ள மெள்ளப் பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது எஸ்.ஐ.பி! அதுபோல, சிறுகச் சேமித்துப் பெருக வாழ்வோம். ஒன்றே ஒன்று... ரெக்கரிங் டெபாசிட்டைப் போல இதில் வருமானம் உறுதி அளிக்கப்படுவதில்லை. சந்தை நிலவரத்தைப் பொறுத்தே முதலீட்டின் வளர்ச்சி அமையும்.

எஸ்.ஐ.பி என்பது தனி முதலீட்டுத் திட்டமல்ல. ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் அல்லது புதிதாக சந்தைக்கு வரும் ஏதாவது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்ய கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நடைமுறை. அது முழுவதும் பங்குச் சந்தை சார்ந்த திட்டமாகவும் இருக்கலாம். அல்லது கடன் பத்திரங்கள் சார்ந்த திட்டமாகவும் இருக்கலாம். இரண்டும் கலந்த கதம்ப நிதியாகக் கூட இருக்கலாம். டைவர்சிஃபைடு ஃபண்ட், செக்டோரல் ஃபண்ட் இவற்றில் ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுத்துகூட எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாம்!

வழக்கம்போல வரிச்சலுகைகளும் உண்டு! டிவிடெண்டுக்கு முழு வரிவிலக்கு. பங்குச் சந்தையைச் சார்ந்த திட்டமாக இருந்தால், ஓராண்டுக்குப்பின் விற்கும்போது கிடைக்கும் ஆதாயத்துக்கு வரி விலக்கு உண்டு. ஆரம்ப முதலீடு 5,000 ரூபாய். பின்னர் மாதா மாதமோ, காலாண்டுக்கு ஒருமுறையோ, ரெகுலராக எவ்வளவு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம்.

எஸ்.ஐ.பி தொடர்பான யோசனையோடு சிக்னலைக் கோட்டை விட்டுவிட்டு பச்சை ஒளிரும் போதும் நின்றுகொண்டே இருந்த என்னை விலாவில் குத்திய என் மனைவி, ‘‘என்ன... தூங்கிட்டீங் களா?’’ என்றாள். விருட்டென்று வண்டியை நகர்த்தினேன்.

‘‘நீ சொன்ன திட்டத்தைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டு இருந்தேன். அந்த மூன்றெழுத்து மந்திரத்தின் அடிப்படை மந்திரம் ஒன்று இருக்கிறது தெரியுமா?’’ என்றேன்.

‘‘என்ன?’’ என்றாள் ஆர்வமாக.

‘‘இது பங்குச் சந்தையில் வெற்றிபெறச் சொல்லப்படும் அடிப்படை சூத்திரம் - ‘அடிமட்ட விலையில் பங்குகளை வாங்குங்கள்... உச்ச விலையில் விற்றுவிடுங்கள்’- இதுதான் ஃபார்முலா. சொல்வது எளிது. ஆனால், நம்மில் எத்தனை பேருக்கு இது சாத்தியம்? இதுதான் குறைந்தபட்ச விலை, இதற்குக் கீழ் இப்பங்குகளின் விலை இறங்கவே இறங்காது என்றோ, இதுதான் உச்ச விலை, இதற்கு மேல் ஏறவே ஏறாது என்றோ யாராலும் அறுதியிட்டுக் கூறமுடியாது.

அப்படிக் காத்திருந்து நல்ல நேரம் பார்த்து வாங்குவதற்கும் விற்பதற்கும் ‘டைமிங் த மார்க்கெட்’ ( Timing the market ) என்று பெயர். நன்கு தேர்ந்த வல்லுநர்களுக்கே கண்ணைக் கட்டும் வித்தை இது! ஆனால், எஸ்.ஐ.பி மூலமாக சாமானியர்கள்கூட இந்த சூத்திரத்தைச் சாதிக்கமுடியும். இதில் உள்ள சிக்கலான விஷயம், நல்ல முதலீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது மட்டும்தான். அதை ஒழுங்காகச் செய்துவிட்டால், மற்றதைத் தானே பார்த்துக்கொள்ளும் திட்டமிது. நல்ல முதலீட்டுத் திட்டத்தின், எதிர்பாராத விலை ஏற்ற இறக்கத்தை சமாளிக்கத்தான் இது உதவும்; தவறான திட்டத்தைத் தேர்ந்தெடுத் தால், எஸ்.ஐ.பி-யால்கூட நம்மைக் காப்பாற்ற முடியாது’’ என்றேன்.

‘‘சரிங்க சார்... மனசுல வெச்சுக்கறேன்’’ என்று நாடக பாணியில் நெஞ்சில் கைவைத்து பாவனை காட்டினாள். வீடு வந்திருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு