பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்
சிகரம் தொடுவோம்!
 

 

பங்குகளில் கிடைக்கும் லாபப் பங்கு!

சிகரம் தொடுவோம்!

ரா மனாதனின் ஆலோசனையின்படி முதன்முதலாக செந்தில் வாங்கிய இந்திரப்ரஸ்தா மெடிக்கல் நிறுவனத்தின் பங்குகளுக்கு 12.5% டிவிடெண்ட் கொடுக்கப்படும் என அறிவிப்பு வந்திருந்தது. அப்போதுதான் செந்திலுக்கு டிவிடெண்ட் என்றால் என்ன? என்ற சந்தேகம் வந்தது. ‘‘நம்முடைய பங்கு போடும் குட்டிதானே இது?’’ என்ற அர்த்தத்தில்தான் ராமனாதனிடம் கேட்டார்.

“சரியாகச் சொன்னீர்கள்’’ என்று உற்சாகப் படுத்திய ராமனாதன் டிவிடெண்ட் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொண்டு வருமாறு செந்திலுக்கு ஹோம்வொர்க் கொடுத்திருந்தார். அடுத்த சந்திப்பு அந்த ஹோம்வொர்க் கேள்வியில் இருந்தே ஆரம்பித்தது.

‘‘சொல்லுங்க செந்தில்... என்ன தெரிஞ்சுக்கிட்டீங்க?’’

‘‘பங்குகள் மூலம் திரட்டிய பணத்தை தொழிலில் போட்டு, அதன்மூலம் கிடைக்கும் லாபம் அடைகிறார்கள். அந்த லாபத்தை, பங்கு வைத்து இருப்போருக்குப் பிரித்துக் கொடுப்பதுதான் டிவி டெண்ட்... சரிதானே சார்..?’’ என்றார் செந்தில்.

‘‘ஓர் உதாரணத்தோடு இதை விளக்குகிறேன். பத்து பேர் சேர்ந்து ஒரு கடை நடத்துவதாக வைத்துக் கொள்வோம். அதற்குத் தேவையான 10 லட்ச ரூபாய் முதலீட்டை பத்து பேரும் சமமாகப் போட்டிருக் கிறார்கள். அந்தத் தொழில் நன்றாக நடந்து வருட முடிவில் ஒரு லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது. அதை பத்து பேரும் சரிசமாக அதாவது, ஆளுக்கு பத்தாயிரம் ரூபாய் என்ற கணக்கில் பிரித்துக் கொள்கிறார்கள். அதுதான் டிவிடெண்ட்...’’ என்றார் ராமனாதன்.

‘‘பத்து பேர்... ஆளுக்கு பத்தாயிரம் ரூபாய்... கணக்கு நன்றாகவே புரிகிறது’’ என்றார் செந்தில்.

‘‘சரி, இந்தக் கணக்கையே கொஞ்சம் மாற்றுகிறேன்’’ என்ற ராமனாதன், ‘‘அதே பத்து லட்ச ரூபாயை ஒன்பது பேர் முதலீடு செய்திருக்கிறார்கள். அதாவது எட்டு பேர் ஆளுக்கு ஒரு லட்சமும், ஒருவர் இரண்டு லட்சமும் போட்டிருக்கிறார்கள். இப்போது அந்த ஒரு லட்ச ரூபாய் லாபத்தைப் பிரிப்பதில் ஆள் கணக்கா வரும்?’’ என்றார்.

‘‘அதெப்படி... ஒரு லட்ச ரூபாய் போட்டவர்களுக்கு ஒரு பங்கு, இரண்டு லட்சம் போட்டவருக்கு இரண்டு பங்கு கிடைக்கும்’’ என்றார் செந்தில் அவசரமாக.

‘‘அப்படியானால் ஆள் கணக்கு இல்லை, முதலீட்டுக்கு ஏற்ற சதவிகிதக் கணக்கில் லாபம் பிரித்துக் கொடுக்கப் படுகிறது... சரிதானே... அதேதான் இங்கேயும்... நீங்கள் எத்தனை பங்குகள் வைத்திருக்கிறீர்களோ அதற்கு கணக்குப் போட்டு குறிப்பிட்ட சதவிகிதத்தை டிவிடெண்டாகக் கொடுப் பார்கள். உங்களுக்கு 12.5% என்றால் ஒரு பங்கு பத்து ரூபாய் என்பதால், பங்குக்கு ரூபாய் 1.25 கிடைக்கும்’’ என்றார்.

‘‘என்னது... பத்து ரூபாயா..? நான் இந்திரபிரஸ்தா பங்குகளை 35 ரூபாய்க்கு மேல் கொடுத்தல்லவா வாங்கினேன்?’’ என்று பதறினார் செந்தில்.

ராமனாதனுக்கு சிரிப்பு பொங்கியது.

‘‘வாங்கிய விலையைக் கணக்கிட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்த அளவுக்கு பங்கின் முகமதிப்புதான் கணக்கு. அதன்மீதுதான் டிவிடெண்ட் கொடுப்பார்கள். வாங்கிய விலையின் மீது கொடுப்பதாக இருந்தால் 770% டிவிடெண்ட் அறிவித்த இன்ஃபோசிஸ் நிறுவனம் 23 லட்ச ரூபாய்க்கு மேல் கொடுக்கவேண்டி வரும். ஏனென்றால் அந்த பங்குகள் 3,000 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகிறது. ஆனால், 5 ரூபாய் முகமதிப்புள்ள இன்ஃபோசிஸ் பங்குக்கு ரூ.38.50 டிவிடெண்ட் கிடைக்கும்’’ என்றார்.

‘‘அது என்ன சார் முகமதிப்பு?’’ என்றார் செந்தில்.

‘‘ஒரு நிறுவனம் தொடங்கும்போது, அதன் பங்குகள் என்ன மதிப்பில் தரப்படுகிறதோ அந்த மதிப்புதான் முக மதிப்பு. சாதாரணமாக இது 10 ரூபாய் மதிப்பில்தான் இருக்கும். சிலர் தங்கள் சௌகரியத்துக்காக 5 ரூபாய், 2 ரூபாய் என வேறு முக மதிப்பிலும் வெளியிடுவது உண்டு. சிலசமயம் பத்து ரூபாய் முக மதிப்பில் வெளியிடப்பட்ட பங்குகளை பின்னர் முதலீட்டாளர்களின் நலன் கருதி 5 ரூபாய் அல்லது அதற்குக் குறைவாகவோ கூட மாற்றி வெளியிடுவார்கள். முக மதிப்பு குறைக்கப் படும்போது அதற்கு ஈடுசெய்யும்வகையில் கையில் வைத்திருக்கும் பங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொடுப் பார்கள்.”

ராமனாதன் சொல்லிக் கொண்டிருக்க செந்திலின் கவனம் டிவிடெண்ட் மீதுதான் சுற்றிக் கொண்டிருந் தது. ‘‘சார்... அந்த டிவிடெண்ட் அடிக்கடி கிடைக்குமா... இதை எப்போதெல்லாம் அறிவிப் பார்கள்?’’ என்ற அடுத்த சந்தேகத்தைக் கேட்டார்.

‘‘சாதாரணமாக ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப் படும். பொதுவாக ஏப்ரல் தொடங்கி மார்ச் 31-ம் தேதியோடு முடிவடைந்த நிதியாண்டுக்கு அதே ஆண்டு செப்டம்பருக்குள் டிவிடெண்ட் வழங்குவதும் பொதுக்குழு கூடுவதும் நடக்கும். நன்கு செயல்பட்டு வரும் பல நிறுவனங்கள், முதலீட்டாளர்களை ஆண்டு இறுதி வரை காத்திருக்க வைக்காமல் இடையில் ஒரு சிறு தொகையைக் கொடுப்பார்கள். இதற்கு ‘இன்ட்டரிம் டிவிடெண்ட்’ என்று பெயர். கேஸ்ட்ரால், கோல்கேட் போன்ற நிறுவனங்கள் முன்பெல்லாம் ஒரே ஆண்டில் பல முறை டிவிடெண்ட் வழங்கியுள்ளன! ஆண்டுக்கடைசியில் ஃபைனல் டிவிடெண்ட் கொடுக்கும்போது முன்பு கொடுத்தை எல்லாம் கழித்துக்கொண்டு மீதியைக் கொடுப்பார்கள். வேறு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?’’ என்றார்.

செந்திலுக்கு இன்னும் கேள்விகள் இருந்தன.

‘‘இந்த டிவிடெண்ட் எப்படி என்கைக்கு வரும்?’’ என்றார்.

‘‘டிவிடெண்ட் அறிவித்த கையோடு ‘புக் குளோசர் டேட் அல்லது ரெக்கார்ட் டேட்’ தேதியையும் அறிவிப்பது நிறுவனங்களின் வாடிக்கை. எந்தத் தேதியில் பங்குகளைக் கையில் வைத்திருந்தால் டிவிடெண்ட் கிடைக்கும் என்பதைச் சொல்லும் தேதிதான் அது. அதேபோல போனஸ் பங்கு, ரைட்ஸ் பங்கு வழங்குவதற்கு முன்பும் அதற்கான ரெக்கார்ட் தேதிகள் அறிவிக்கப்படும்.

அந்தத் தேதியில் பங்குகள் வைத்திருப்பவர்களுக்கு டிவிடெண்ட் வாரன்ட், வீட்டு விலாசத்துக்கு நேரடியாக அனுப்பப்படும். இந்த வாரன்ட் இரண்டு பகுதிகளாக இருக்கும். ஒன்று வங்கியில் டெபாசிட் செய்யும் வகையில் செக் வடிவத்தில் இருக்கும். மற்றொன்று, அதன் கவுன்ட்டர் ஃபாயில். நம் கணக்கு வழக்குக்காக ஃபைல் செய்து வைத்துக்கொள்வதற்கு வசதியாக இருக்கும்’’ என்ற ராமனாதன் லேட்டஸ்ட் நடவடிக்கை பற்றிச் சொன்னார்.

‘‘இப்போதெல்லாம் நகரங்களில் ஈ.சி.எஸ் எனப்படும் எலெக்ட்ரானிக் கிளியரிங் சர்வீஸ் ( Electronic Clearing Service ) வந்துவிட்டது. அதற்கான படிவத்தைப் பூர்த்திசெய்து அனுப்பிவிட்டால் நம் வங்கிக் கணக்கில் நேரடியாகவே வரவு வைத்துவிடுவார்கள். ஒவ்வொரு வருடமும் அந்த ஆண்டுக்கான பாலன்ஸ் ஷீட்டுடன் இதற்கான படிவத்தை அந்தந்த நிறுவனமே அனுப்புவார்கள். அதில் நம் ஃபோலியோ எண், வங்கிக் கணக்கு எண், வங்கியின் பெயர், முகவரி, காசோலையின் கீழ் இருக் கும் ஒன்பது இலக்க எம்.ஐ.சி.ஆர் எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு கையெழுத்திட்டு அனுப்பினால், பிரச்னை தீர்ந்தது!’’ என்றார்.

ஆனால், செந்திலுக்கு பிரச்னை தீரவில்லை.

‘‘அப்படியானால் அந்த புக் குளோசர் தேதியைப் பார்த்து பங்குகளை வாங்கி டிவிடெண்ட் கிடைத்த பிறகு விற்றுவிடலாமா... அது லாபமாக இருக்குமா?’’ என்றார்.

‘‘இன்னிக்கு முழுக்க டிவிடெண்ட் சந்தேகங்கள் தானா?’’ என்று சிரித்த ராமனாதன், ‘‘டிவிடெண்ட் லாபத்துக்காக பங்குகளை வாங்கும்போது இரண்டு விஷயங்களைக் கவனிக்கவேண்டும். புக் குளோசர் அல்லது ரெக்கார்ட் தேதிக்கு முன்னதாக நம் கணக்குக்கு பங்குகள் வந்துவிடும் வகையில் வாங்குவதை ‘கம் டிவிடெண்ட்’ என்பார்கள். அதற்கு பிறகு வாங்கினால் ‘எக்ஸ் டிவிடெண்ட்’ என்று பெயர். இதைக் கவனித்து வாங்கவேண்டும்’’ என்ற ராமனாதன்,

‘‘இதிலேயே டிவிடெண்ட் ஸ்ட்ரிப்பிங் ( Dividend Stripping ) என்று ஒருவிஷயம் இருக்கிறது. சில முதலீட்டாளர்கள், உடனடியாக டிவிடெண்ட் கிடைக்கக் கூடிய நிறுவனங்களாகத் தேர்ந்தெடுத்து அவற்றின் பங்குகளை கம் டிவிடெண்டாக வாங்கிவிட்டு, பணம் கைக்கு வந்தவுடன் எக்ஸ் டிவிடெண்டில் விற்று விடுவார்கள்.

இதனால் இரண்டு விதமான லாபம். டிவிடெண்ட் தொகைக்கு வருமான வரி இல்லை. எக்ஸ் டிவிடெண்டில் பங்குகளின் விலை சற்றே குறைவாக இருக்கும். அந்த விலைக்கு விற்கும்போது ஏற்படும் நஷ்டத்தை, வேறு பங்குகள் மூலம் கிடைத்த லாபத்தில் கழித்துக் கொள்ளலாம்! இப்படித் திட்டமிட்டு அரசின் வருமானம் பறிபோவதை உணர்ந்த அரசு, இம்மாதிரி தில்லுமுல்லுகளை தவிர்க்க, வாங்கிய பங்குகளை குறைந்தபட்ச காலம் வைத்திருக்கவேண்டும் என்பது உட்பட சில விதி முறைகளைக் கொண்டுவந்துவிட்டது’’ என்று நீளமாகச் சொல்லிவிட்டு மூச்சு விட்டுக் கொண்டார்.

பிறகு, ‘‘இன்னும் டிவிடெண்ட் புராணம் முடியவில்லை. ஒரு சின்ன பிரேக்குக்குப் பின் ‘டிவிடெண்ட் ஈல்ட்’ பற்றிச் சொல்கிறேன்’’ என்று எழுந்து வீட்டுக்குள் போனார்.

என்.எஃப்.ஓ புதிய வெளியீடு!

சிகரம் தொடுவோம்!

ப்டிமிக்ஸ், ஜூலை 10 முதல் 31-ம் தேதி வரை பணம் செலுத்த ஏற்ற வகையில், புதிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.

அதன்பின்னரும்கூட நிகரச் சொத்து மதிப்பில் யூனிட்கள் வாங்க ஏற்ற ஓபன் எண்டட் திட்டம் இது. ‘ஆப்டிமிக்ஸ் அசட் அலக்கேட்டர் - மல்டி மேனேஜர் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்’ எனக் குறிப்பிடப்படும் இந்தத் திட்டம், மற்ற நிறுவனங்களின் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்யப்போகிறது. இதில் திரளும் தொகை முழுவதும் பங்குகளிலோ, கடன் திட்டங்களிலோ முதலீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், அதிகபட்சம் 10% வரைதான் நிதிச் சந்தை சார்ந்தவற்றில் முதலீடு செய்யப்படும்.

குறைந்தபட்ச முதலீடு 5 ஆயிரம் ரூபாய். நுழைவு கட்டணம் 2.25%. வெளியேறும் கட்டணம் எதுவும் இருக்காது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு