Published:Updated:

இண்டஸ்ட்ரி - உயரே பறக்குது எஃப்.எம்.சி.ஜி கோடி!

இண்டஸ்ட்ரி - உயரே பறக்குது எஃப்.எம்.சி.ஜி கோடி!

பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்
இண்டஸ்ட்ரி - உயரே பறக்குது எஃப்.எம்.சி.ஜி கோடி!
 

 

உயரே பறக்குது எஃப்.எம்.சி.ஜி கொடி!

இண்டஸ்ட்ரி - உயரே பறக்குது எஃப்.எம்.சி.ஜி கோடி!

கா லையில் எழுந்ததும் காபி, டீ குடிக்கணும். பல் தேய்க்கணும். சோப்புபோட்டு குளிக்கணும், பவுடர், சென்ட் பூசிக்கணும். பிஸ்கட், பழரசம் சாப்பிடணும். நல்ல துணிமணி போட்டுக்கணும். இவை எல்லாமே எஃப்.எம்.சி.ஜி துறையில்தான் வருகிறது. சிகரெட், ‘பாட்டில்’ கூட இதிலேதான் வருகிறது. அதனால், ‘எஃப்.எம்.சி.ஜி துறைதான் சமூக நாகரிகத்தின் அடையாளம்’ என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். ஜனத்தொகை விஷயத்தில் உலகின் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில், எஃப்.எம்.சி.ஜி துறையின் கொடி உயரப் பறக்கிறது.

இந்தியாவில் இச்சந்தையின் இன்றைய மொத்த மதிப்பு 60 ஆயிரம் கோடி ரூபாய்! அந்த அளவுக்கு நாட்டின் நான்காவது மிகப்பெரிய தொழில்துறையாக இருக்கிறது எஃப்.எம்.சி.ஜி! மக்கள்தொகை, அவர்களது வாழ்க்கைத்தரம் போன்ற அம்சங்களைச் சார்ந்தே இத்துறை இருப்பதால் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் மற்ற எந்த துறைகளைக் காட்டிலும் இந்தத் துறையின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அதனால் இன்று 8% உள்நாட்டு வளர்ச்சியைப் பெற்றுள்ள இந்தியாவில் இந்தத் துறையின் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் அதிகம்.

இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 50% பேர் இளைஞர்கள். இவர்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகரித்து, அவர்களின் சராசரி வருமானம் உயர்ந்துள்ளதும் இத்துறைக்கான வளர்ச்சி வாய்ப்புகளைக் காட்டுகின்றன.

இண்டஸ்ட்ரி - உயரே பறக்குது எஃப்.எம்.சி.ஜி கோடி!

நேரடியாகவும், மதிப்பு கூட்டி பேக்கேஜ் வடிவத்திலும் விற்கப்படும் உணவுப் பொருட்கள்தான் இந்தச் சந்தையின் முக்கியப் பங்களிப்பு. எனவே, நாட்டின் விவசாயப் பொருள் உற்பத்தி, பருவ மழையளவு இவையெல்லாம் இந்தத் துறை வளர்ச்சி, வீழ்ச்சியை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகள். அதில் இந்தியாவைப் பொறுத்தவரையில் பரவலாக பருவ மழை பெய்துவருவதால் அடுத்த ஆண்டும்கூட இந்த துறையின் வளர்ச்சிக்கு பாதிப்பு இல்லாத நிலைதான் தென்படுகிறது.

உள்நாட்டுத் தேவைகளுக்கு பங்களிப்பது மட்டுமின்றி, இந்திய எஃப்.எம்.சி.ஜி கம்பெனிகள் பலவும் வெளிநாட்டுத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஏற்றுமதி தரம் கொண்டவையாக இருக்கின்றன. குறிப்பாக, பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றங்கள் வந்த பின் மற்ற துறைகள் போலவே, இந்தத் துறையிலும் சர்வதேச சந்தை ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் இந்தத் துறையின் ஏற்றுமதியும் அதிகரிக்க வாய்ப்புகள் பெருகுகின்றன. இந்திய வம்சாவழியினர் அதிகம் வசிக்கும் நாடுகளுக்கு நமது பொருட்கள் அதிக அளவில் செல்லக்கூடும். இது இத்துறை முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி.

இது ஒருபுறமிருக்க இவ்வகை நுகர்வோர் பொருட்களை கொண்டு சென்று மக்களிடம் சேர்க்கும் ரீ\டெய்ல் துறையில் அண்மைக்காலமாக பெரிய மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. ‘கிரானா ஸ்டோர்ஸ்‘ எனப்படும் அண்ணாச்சி மளிகை கடைகளாக இருந்த பலவும் இப்போது டிபார்ட்மென்ட் ஸ்டோர்களாக நவீன அரிதாரம் பூசிக்கொண்டதைத் தாண்டி, இப்போது ஒரே இடத்தில் அனைத்துப் பொருட்களையும் வழங்கும் ஷாப்பிங் மால்கள், ஹைப்பர் மால்கள் என விஸ்வரூபமெடுக்கின்றன. ரிலையன்ஸ் போன்ற ஜாம்பவான்கள் கூட இந்தத் துறை வாய்ப்புகளைத் தவறவிடக்கூடாது என மெகா திட்டங்களுடன் களம் இறங்குவதால் மிகப்பெரிய புரட்சி நடப்பதற்கான எல்லா சாத்தியங்களும் இந்த துறையில் உருவாகி உள்ளன.

இண்டஸ்ட்ரி - உயரே பறக்குது எஃப்.எம்.சி.ஜி கோடி!

ப்படி சாதகமான அம்சங்கள் பல இருந்தாலும், கூடவே சில சவால்களும் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக, இந்தத் துறையில் குறைந்த, நடுத்தர மற்றும் உயர்ந்த வருவாய் பிரிவினர் என எந்த தரப்பை எடுத்துக்கொண்டாலும் அந்தந்த தரப்பினருக்கு ஏற்ற விலையில் பொருட்களைக் கொடுக்க பல போட்டியாளர்கள் சிறிதும், பெரிதுமாக இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால், கடும்போட்டி நிலவும் துறையாக இது உள்ளது. எனவே, நிகர லாப விகிதம் என்பது சொற்பமானதாகவே உள்ளது. அதனால் அதிக அளவு விற்பனை செய்பவரால் மட்டுமே சந்தையில் நிற்கமுடியும். இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு அம்சம் - அதிக அளவு பொருட்கள் விற்பனையாக வேண்டும் என்றால், ஒரு பிராண்ட் தனது இருப்பைத் தொடர்ந்து மக்களிடம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. அதற்கு, தொடர்ந்து விளம்பரச் செலவுகள் செய்யவேண்டிய கட்டாயமும், அதற்கான பட்ஜெட், திட்டமிடல் போன்றவையும் அவசியமாகிறது. இது இந்தத்துறை நிறுவனங்களின் வருமானத்தில் கணிசமான ஒருபகுதியை உறிஞ்சிவிடுகிறது. இதனால் நிறுவன லாப விகிதங்கள் சுருங்கிவிடுகின்றன.

இன்னொருபக்கம், பொதுவாக அந்நியப் பொருட்களுக்கு இருக்கும் மாயையை ஒட்டி அண்மைக்காலமாக சீனாவில் பெருந்தொழிற் கூடங்களில் உற்பத்தியாகும் பல பொருட்கள் குறைவான விலையில் இந்திய சந்தையில் இறங்கத் தொடங்கி உள்ளன. இதுபோன்ற வெளிநாட்டுச் சந்தை போட்டியாளர் களையும் சமாளித்தாகவேண்டிய கட்டாயம் இத்துறை நிறுவனங்களுக்கு உள்ளது.

இண்டஸ்ட்ரி - உயரே பறக்குது எஃப்.எம்.சி.ஜி கோடி!

அடுத்தவிஷயம், இந்தத் துறை பொருட்கள் மீதான வரி வதிப்பு முறை.இந்தத்துறையின் பெரும்பாலான பொருட்கள் மத்திய மற்றும் மாநில பட்ஜெட் என இரு தரப்பிலும் வரிவிதிப்பை சந்திக்க வேண்டி இருக்கிறது. அதனால், இத்துறையைப் பொறுத்தவரை வரிவிதிப்பு கொள்கையில் ஆண்டுக்காண்டு மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. இந்தத் துறைக்கு தேவைப்படும் மூலப் பொருட்களுக்கான வரியில் தொடங்கி, உற்பத்தி வரி, விற்பனை வரி என பல அம்சங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கவனத்துடன் பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது. சிலவகை பொருட்களுக்கு வரி விகிதம் அதிகமாக இருந்தால் அதனால் உடனடி பாதிப்பு ஏற்படுகிறது. அதையட்டி இந்த நிறுவனங்கள் தங்களது யுக்திகளை வடிவமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. எனினும் கடந்த ஆண்டில் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வாட் என்ற வரிமுறை இத்துறை நிறுவனங்களுக்கு சற்றே ஆறுதல் அளித்துள்ளது.

கடந்த காலங்களில் சிறு தொழில் துறைக்கு என ஒதுக்கப்பட்ட பல தொழில்களில் அரசின் கொள்கை மாறியிருப்பது, இந்தத் துறைக்கு இன்னும் பல புதிய வாய்ப்புகளை திறந்துள்ளன. அதேபோல சிறு தொழிலுக்கான முதலீட்டு உச்ச வரம்பு அதிகரிப்பு போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளும் இந்தத் துறைக்குச் சாதகமாக உள்ளது.

குறிப்பாக, சிகரெட் தயாரிப்பே முக்கிய தொழிலாக வைத்திருந்த ஐ.டி.சி நிறுவனம் பல அக்ரோ பொருட்கள் தொழிலில் இறங்கியது... மூலிகை சார்ந்த உணவு மற்றும் அழகு சாதனப் பொருட்கள் துறையில் கோத்ரெஜ் மிகப்பெரிய அளவில் இறங்கியது... என பலவும் வெற்றியடையத் தொடங்கியிருப்பது அண்மைக்கால நடப்புகள்!

இது போன்ற அம்சங்கள் எஃப்.எம்.சி.ஜி துறை முதலீட்டாளர் களிடையே மேலும் நம்பிக்கையை வளர்க்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு