Published:Updated:

இனியும் தொடரும் ‘இந்திய கனவு’!

இனியும் தொடரும் ‘இந்திய கனவு’!

பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்
இனியும் தொடரும் ‘இந்திய கனவு’!
 

 

இனியும் தொடரும் ‘இந்திய கனவு’!

இனியும் தொடரும் ‘இந்திய கனவு’!

தோ ற்றத்தில் இளமை, பேச்சில் முதிர்ச்சி என்று சுவாரஸ்ய கலவை ஏ. பாலசுப்பிர மணியன்... ‘பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்’ நிறுவன தலைமை முதலீட்டு அதிகாரி. மும்பையில் பணிபுரியும் இந்த தஞ்சாவூர் தமிழர் சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அவரிடம் சில கேள்விகளை வைத்தோம்.

‘‘சந்தையில் அதீத ஏற்ற இறக்கங்கள் இப்போது இயல்பாகிவிட்டதே... இது கவலைக்குரிய விஷயமா?’’

‘‘நீண்டகாலம், குறுகியகாலம் என இரண்டு விதமாகப் பார்த்துதான் சந்தையின் போக்கு குறித்து பதில் சொல்லவேண்டும். நிறுவனங்களின் அடிப்படை வலு, அரசுத் திட்டங்கள் பற்றிய அணுகுமுறை, உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, மாத சம்பளக்காரர்களின் செலவழிக்கும் மனோநிலை, பருவமழையின் தாக்கம் போன்றவற்றை வைத்துதான் சந்தையின் போக்கைப் பார்க்க வேண்டியுள்ளது. இதில் எந்த அம்சத்திலும் கடந்த மே மாதத்துக்கு முன்பிருந்த கணிப்புகளில் மாற்றங்கள் வந்துவிடவில்லை. அதனால், மே மாதச் சரிவை, ஓர் உலக அளவிலான நடப்பின் சாரல் மற்றும் அதனால் ஏற்பட்ட திருத்தம் என்றுதான் பார்க்க வேண்டியுள்ளது.

இதுதவிர, உள்நாட்டுத் தேவைகள் அதிகரிப்பதில் தொடர் முன்னேற்றம்தான் இருந்து வருகிறது அதனால் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி நன்றாகத்தான் இருக்கும். எனவே, நீண்டகால அடைப்படையில் பார்க்கும்போது அடுத்த 2 ஆண்டுகளுக்கு கட்டாயமாக வளர்ச்சி இருக்கும் என்று நம்பலாம். எனவே, இது கவலை கொள்ளும் விஷயமில்லை.

அதோடு, இந்திய கம்பெனிகளின் 2006-07 முதல் காலாண்டு நிதிநிலையறிக்கைகள் வரத்தொடங்கிவிட்டன. உற்பத்தி தொழில்கள் சிறப்பான வளர்ச்சியைக் காட்ட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சேவைத் தொழில் நிறுவனங்களிலும் கூட குறைவுக்கான அடையாளங்கள் தெரியவில்லை. அதனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ‘அந்த வளமான இந்திய’ கனவு அப்படியே தொடரும் என்றுதான் சொல்லவேண்டும்.’’

‘‘அமெரிக்க ஃபெடரல் வட்டி விகித அறிவிப்பால் பொதுவாக எல்லா பங்குச் சந்தையிலும் பாதிப்புகளும், அமெரிக்க எஃப்.ஐ.ஐ நிறுவனங்கள் வெளியேறுவதால் இந்தியச் சந்தையில் மேலும் வீழ்ச்சியும் ஏற்படும் என்று எதிர்பார்த்த நேரத்தில் சந்தை சற்று முன்னேற்றம் காட்டுகிறதே..?’’

‘‘ஃபெடரல் ரிசர்வ் 0.5% உயர்வை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதற்கு மாறாக ஜூன் இறுதியில் வெளியான அறிவிப்பில் 0.25% அதிகரிப்பு மட்டுமே இருந்தது. அத்துடன் கடந்த காலங்களில் அதிகரித்த வட்டி விகிதங்களின் நிஜமான தாக்கம் இனிவரும் நாட்களில்தான் தெரியும் என்ற நம்பிக்கையூட்டும் வரிகள் அந்த அறிக்கையில் இருந்தன.

இன்னொரு பக்கம் கடந்த காலங்களில் ஓரளவு கண்மூடித்தனமான முதலீடுகள் கணிசமாகவே செய்யப்பட்டு வந்தன. ஆனால், இப்போது அந்த நிலை மாறி, ரிஸ்க் அதிகமுள்ள இடங்களில் முதலீட்டின் அளவு குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால்தான் முன்பிருந்த எதிர்பார்ப்புக்கு எதிரான திசையில் சந்தை நகரத் தொடங்கியுள்ளது.

ஆனால், சர்வதேச அளவில் தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்க விகிதம், கச்சா எண்ணெய் விலை, விவசாய உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு போன்ற சில விஷயங்களால் இன்னும் கொஞ்சம் அச்சம் இருக்கத்தான் செய்கிறது.’’

‘‘அண்மையில் சிறு முதலீட்டாளர்களும் ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்ய உதவும் வகையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தொடங்க வழிமுறைகளை செபி அறிவித்துள்ளதே..?’’

‘‘இது, செபி எடுத்திருக்கும் மிக முக்கிய நடவடிக்கை. பொதுவாக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய, மிகப்பெரிய தொகை தேவைப்படும் என்பதால் சிறு முதலீட்டாளர்கள் அதில் பங்கேற்பதில்லை. செபி இப்போது அறிவித்திருக்கும் இந்த வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் வெற்றி பெற்றால், குடியிருப்பு, வர்த்தக கட்டுமானம் என எல்லாவற்றிலும் சிறு முதலீட்டாளர்களும் கூட பங்கேற்க வாய்ப்பு அதிகரிக்கும்..

செபியின் அறிவிப்புப்படி, இது குளோஸ்டு எண்டட் திட்டமாக இருக்கும் என்பதால் நிறுவனங்களும் ‘எப்போது முதலீட்டாளர்கள் பணத்தைத் திரும்பக் கேட்பார்களோ’ என்ற கவலையில்லாமல் சொத்துகளில் முதலீடு செய்யலாம். பங்குகள் எலெக்ட்ரானிக் வடிவத்தில் இருந்து ‘டீமேட்’ முறைக்கு மாறிவிட்டதுபோல வீடு, மனை, நிலம் போன்ற சொத்துகளும் எலெக்ட்ரானிக் வடிவில் ‘டீமேட்’ வடிவம் பெறும் நாள் மிக அதிக தொலைவில் இல்லை.’’

‘‘இன்றுள்ள சந்தைச் சூழலில் பங்குச் சந்தையின் பல்வேறு துறை நிறுவனங்களில் எந்தெந்த துறை நிறுவனங்கள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன? எந்தத் துறைகள் குறித்து எச்சரிக்கை தேவை?’’

‘‘எஃப்.எம்.சி.ஜி, ஆட்டோமொபைல், சிமென்ட், மின் உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறை ஆகியவை வரும் நாட்களில் சிறப்பாக இருக்கும். வங்கித்துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் இருக்காது என்றுதான் தோன்றுகிறது. கொஞ்சம் எச்சரிக்கையுடன் கவனித்துப் பார்க்கவேண்டிய துறைகள் என்றால் எண்ணெய் மற்றும் எரிவாயு, ரசாயனங்கள், உலகச் சந்தைக்குத் தேவைப் படும் விவசாய உற்பத்திப் பொருட்கள் துறை எனப் பட்டியலிடலாம்.’’

‘‘ரியல் எஸ்டேட் மியூச்சுவல் ஃபண்ட் போலவே தங்கத்தில் முதலீடு செய்யும் திட்டமும் தொடங்கியுள்ளதே! இதனால், தங்கம், வெள்ளியின் விலை இன்னும் அதிகரித்துவிட வாய்ப்புகள் இருக்கிறதா?’’

‘‘இத்திட்டத்தால் தங்கம், வெள்ளி விலை அதிகரித்துவிடாது. பல நாடுகளில் பணவீக்க விகிதத்தைச் சமாளிக்க உதவும் என்ற வகையில்தான் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் செய்த தங்க முதலீடு வேண்டுமானால் இன்றைய விலையில் மிகப்பெரிய அளவு வருமானம் ஈட்டியதாகச் சொல்லலாம். ஆனால், வரலாற்று ரீதியாகப் பார்க்கப் போனால், இது அளித்திருக்கும் அதிகபட்ச சராசரி வருமானம் 5 முதல் 6% என்ற அளவில்தான் உள்ளது. அத்துடன் பணவீக்கம் குறித்த அச்சம் விலகும் சூழலில் பெரிய அளவில் தங்கத்தை வாங்கிக் குவித்து வைத்திருக்கும் நபரோ, வங்கியோ, நாடோ அதைச் சந்தையில் இறக்கத் தொடங்கி, அப்போது வாங்க ஆள் இல்லாத சூழல் வரவும் கூடும். அப்போது தங்கத்தின் விலை கடுமையாக விழத்தான் செய்யும்.’’

‘‘புதிதாகத் தொடங்கும் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் மியூச்சுவல் ஃபண்ட்கள் எந்த அளவுக்கு வருமானம் தர வாய்ப்புள்ளது?’’

‘‘நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தோடு பணவீக்க விகிதத்தையும் சேர்த்து, அத்துடன் ரிஸ்க் பிரீமியமாக 3 முதல் 4% என்பதுதான் பொதுவாக முதலீட்டுக்குக் கிடைக்கவேண்டிய வருமான மாகக் கணக்கிடப்படுகிறது. அதன்படி பார்த்தால் இன்றைக்கு 5 முதல் 10 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 15 முதல் 20% வளர்ச்சி என்பதை எதிர்பார்க்கலாம். அதைவிடக் குறைவாகக் கிடைத்தால் அந்த முதலீட்டால் பலன் இல்லை. அதைவிட அதிகமாக கிடைக்கும்போது மகிழ்ச்சிதான்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு