Published:Updated:

சிகரம் தொடுவோம்!

சிகரம் தொடுவோம்!

சிகரம் தொடுவோம்!

சிகரம் தொடுவோம்!

Published:Updated:
பங்குகள்
சிகரம் தொடுவோம்!
 


சிகரம் தொடுவோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிகரம் தொடுவோம்!

பின்னோக்கி ஒரு கண்ணோட்டம்!

தொ லைபேசியில் செந்திலின் குரல் கலவரமாக ஒலித்தது. ‘‘என்ன சார் இது... நான் கால் வெச்ச நேரம், இப்படி மார்க்கெட்டே விழுந்துடுச்சு... இப்போ என்ன பண்ணலாம்? வந்த விலைக்கு எல்லாத்தையும் தள்ளிவிட்றலாமா..?’’

சிகரம் தொடுவோம்!

ராமனாதன் பதற்றமே இல்லாமல், ‘‘நல்ல விஷயம் நடந்திருக்கு. ஏன் இப்படிப் பயப்படறீங்க... நம்ம பிளான்படி சாயங்காலம் சந்திக்கலாம். அவசரப்பட்டு எதையும் செய்திடாதீங்க...’’ என்று சொல்லி போனை வைத்தார்.

சாயங்காலம் செந்தில் வந்த கோலத்தைப் பார்த்தபோது, அன்று முழுக்க எந்த வேலையும் செய்திருக்கமாட்டார் என்பது தெரிந்தது. ‘‘நானே நொந்து போயிருக்கேன். ஆறுதலாக நாலு வார்த்தை சொல்வீங்கனு பார்த்தா, நல்ல விஷயம்தான்னு சொல்றீங்களே சார்..?’’ என்றபடி வந்து உட்கார்ந்தார்.

‘‘சொல்றது மட்டுமல்ல... ஸ்வீட்டே வாங்கி வெச்சிருக்கேன். பங்குச் சந்தையின் ஏற்றம் கற்றுத் தருவதைவிட, வீழ்ச்சி கற்றுத்தரும் விஷயம், விலை மதிப்பில்லாதது செந்தில்.

நல்ல கம்பெனி பங்குகள் குறைவான விலைக்குக் கிடைக்க, இதைவிட நல்லநேரம் இருக்க முடியாது. வாங்கிய பங்குகளை விற்பதற்கான நேரம் இது இல்லை. நீங்கள் வாங்கிய பங்குகளின் விலைகளை எடுத்து வந்திருக்கிறீர்களா... ஒரு கண்ணோட்டம் பார்த்து விடலாம்’’ என்றபடி, செந்திலை சகஜ நிலைக்குக் கொண்டுவந்தார்.

‘ராமனாதன் சொன்னால் நியாயமாகத்தான் இருக்கும்’ என்று நினைத்த செந்திலும் பங்குப் பட்டியலை எடுத்துப் பிரித்தார்.

வா சகர்களே... ஏப்ரல் 17 அல்லது 18\ம் தேதியில் இந்தப் பங்குகளை வாங்கியிருப்பீர்கள். நீங்களும், அந்தப் பட்டியலை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ராமா நியூஸ் பிரின்ட்: நீங்கள் வாங்கிய அன்று ஒரு பங்கின் விலை சுமார் ரூ.11.66. செய்தித்தாள் அச்சடிக்கத் தேவையான பேப்பர் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நிறுவனமான இது, மற்றொரு பெரிய நிறுவனமான வெஸ்ட் கோஸ்ட் பேப்பரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனப் பங்குகள் மே 12\ம் தேதி வரையுள்ள காலகட்டத்தில் ரூ.15 வரை சென்றது. 3 ரூபாய்தானே அதிகரித்தி ருக்கிறது எனச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். முதலீட்டின்மீது 20% ஆதாயம்! எப்படி என்று ஆராய்ந்தால் அதன் காரணம் புரியும்.

ஏப்ரல் 26\ம் தேதி இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த காலாண்டறிக்கையும் ஆண்டு அறிக்கையும் வெளியானது. சென்ற ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டைவிட, இந்த வருடம் அதே காலாண் டில், இந்நிறுவனத்தின் விற்பனை 33% அதிகரித்திருக்கிறது என்ற நல்ல செய்தி அதில் கூறப்பட்டுள்ளது.

அதோடு, எரிசக்தி செலவைக் கட்டுப்படுத்தி யதாலும், குறைவான ரசாயன மூலப்பொருட்கள் விலையினாலும் ரூ.6.45 கோடி மிச்சமும், உற்பத்திப் பொருட்களுக்கு அதிக விற்பனை விலை கிடைத்ததால் ரூ3.05 கோடி உபரி லாபமும் கிடைத்திருக்கிறது. இதனால், இந்த நிறுவனப் பங்குகளை வாங்கப் பலரும் ஆர்வம் காட்ட, விலை உயர்ந்துள்ளது.

இதுமாதிரி விளக்கங்களினால் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். அடுத்தமுறை ரசாயனப் பொருட்களின் விலை குறைவதாக செய்தித்தாளில் படிக்கும்போது, ‘இதனால் ராமா நியூஸ் பிரின்ட் நிறுவனத்தின் விலை ஏறலாம்’என யோசியுங்கள்!

சமீபத்திய பங்குச் சந்தை வீழ்ச்சியின்போதுகூட இதன் விலை அவ்வளவாக இறங்கவில்லை. மே 26 அன்று இதன் விலை ரூ.12.35. நீங்கள் வாங்கியதைவிட 5% அதிகமான மதிப்பில் உள்ளது.

இந்திரபிரஸ்தா மெடி: நீங்கள் வாங்கிய அன்று ஒரு பங்கின் விலை சுமார் ரூ.35. அதன் பிறகு அதிகபட்சமாக ரூ.40 வரை சென்றுள்ளது. அப்போலோ குழுமத்தின் தொடர்புடைய மருத்துவமனை. புதுடெல்லியில் உள்ளது. உயர்ந்த மருத்துவ சிகிச்சைத் தரத்துக்கான ஐ.எஸ்.ஐ தரச் சான்றிதழ் பெற்ற மருத்துவமனை. ஆண்டுக்கு 15% வளர்ச்சியைக் கண்டுவரும் மெடிக்கல் டூரிஸம், இனி 20 முதல் 30% வளர்ச்சியைக் காணும் என்று சி.ஐ.ஐ\மெக்கின்சி ஆய்வு தினசரிகளில் வெளியானது இந்தப் பங்குகளின் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். சமீபத்திய வீழ்ச்சியில் ரூ.29 வரை சென்றபின், இப்போது வாங்கிய விலையைத் தொட்டு ரூ.35-க்கு வர்த்தகமாகிறது.

சிகரம் தொடுவோம்!

செயில்: நீங்கள் வாங்கிய அன்று ஒரு பங்கின் விலை சுமார் ரூ.82. இதன் மதிப்பு மே 12\ம் தேதி 95 ரூபாயைத் தொட்டது. நீங்கள் வாங்கிய மூன்று வாரத்தில், இந்த பங்கின் மதிப்பு ரூ.13 உயர்ந்தது. இது கிட்டத்தட்ட 15% உயர்வு. இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும். இந்த 15% லாபம் போதும் என்று நீங்கள் முடிவெடுத்தால், அந்தப் பங்குகளை விற்றுவிட்டு வெளியில் வந்துவிடவும். அல்லது மதிப்பு ஏற்றத்துக்காக இன்னும் காத்திருங்கள்.

செயில் ஸ்டீல் உற்பத்தி செய்யும் நிறுவனம். ஸ்டீலின் விலையேற்றம் மற்றும் நாட்டில் ஸ்டீலின் தேவை அதிகரிப்பு, அதோடு மற்ற ஸ்டீல் கம்பெனிகளின் பங்கு மதிப்பு உயர்வு என்ற சூழ்நிலை இருந்தால், உடனே விற்காமல் மேலும் விலையேற்றத்துக்காக கொஞ்சகாலம் காத்திருக்கலாம். இந்த மதிப்பு உயர்வே போதுமென்று நினைத்தால் வெளியே வந்துவிடலாம். முடிவு செய்யவேண்டியது நீங்கள்!

ஆனால், இதேவேகத்தில் போனால், ஆண்டுக்கு சுமாராக 288% வளர்ச்சி வரும் என்று பேராசைப்பட்டு காத்திருப்பது சரியானதல்ல...

பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சியின்போதும் இந்தப் பங்குகள் ரூ.82.70 என்ற அளவில், லாபத்தில்தான் உள்ளது என்பதைக் கவனியுங்கள்.

யூகோ வங்கி: ஒரு பங்கின் விலை ரூ.26.50. மே 8\ம் தேதி இதன் மதிப்பு ரூ.27.75 ஆக இருக்கிறது. மதிப்பில் பெரிதாக மாற்றமில்லை. இது பொதுத்துறை வங்கி. சென்ற ஆண்டில் இதன் செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்றாலும், வரும் காலாண்டில் சரிசெய்யப் படலாம் எனத் தெரிகிறது. சென்ற ஆண்டு ரூ. 346 கோடி லாபம் ஈட்டிய இந்த வங்கி, இந்த ஆண்டில் (2005-06) ரூ. 197 கோடிதான் லாபம் ஈட்டியுள்ளது. லாபத்தில் 43% வீழ்ச்சியைச் சந்தித்துள்ள போதிலும், வர்த்தகத்தில் 18.86% வளர்ந்துள்ளது.

சுமாரான ரிசல்ட்டாக இருந்தும், விலை அவ்வளவாக இறங்காததற்கு என்ன காரணமாக இருக்கமுடியும்? பிர்லா நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை தங்கள் கிளைகள் மூலம் விநியோகிக்க ஒப்பந்தமிட்டுள்ளது இந்த வங்கி. முக்கியமாக, கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பின்னர் வங்கியின் நிர்வாக அமைப்பை மேலும் செம்மைப்படுத்தும் முயற்சியில், பாஸ்டன் கன்சல்டிங் குரூப்பின் உதவியுடன் இறங்கியுள்ளது. புதிதாக ஆட்களை வேலைக்கு எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறது. பலன் அளிக்குமா எனக் காத்திருந்துதான் பார்க்க வேண்டும். பங்குச் சந்தை வீழ்ச்சியின்போது இதன் மதிப்பு ரூ24. பங்குச் சந்தை நார்மலாகும் போது நஷ்டம் இல்லாத நிலையை எட்டலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

டாடா டெலி: நீங்கள் வாங்கிய அன்று ஒரு பங்கின் விலை ரூ 24.50. அடுத்த சில நாட்களில் இதன் மதிப்பு 27 ரூபாயைத் தாண்டியுள்ளது. இது 10% வளர்ச்சி! மகாராஷ்டிரா மாநிலத்தில் அடிப்படை தொலைபேசி வழங்கும் டாடா நிறுவனம், வடகிழக்கு மாநிலங்களில் சுமார் 600 கோடி ரூபாயை முதலீடு செய்து விரிவாக்கத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருப்பதே இந்த வளர்ச்சிக்குக் காரணம். வீழ்ச்சிக்குப் பின் ரூ.22 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

இதில் சந்தோஷமான சமாசாரம்... நம் பயிரில் இதுவரைக்கும் களை ஏதும் இல்லை என்றுதான் தோன்றுகிறது! சந்தோஷமாக முன்னேறலாம். நீங்கள் வாங்கி வைத்திருக்கும் பங்குகளைப் பற்றியும் அந்த கம்பெனிகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

தினமும் பிஸினஸ் பத்திரிகைகள் படிக்கும்போது, இந்த கம்பெனிகள் அல்லது இந்த கம்பெனிகள் உள்ள துறை பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படியுங்கள். நண்பர்களிடமும் பங்குத் தரகரிடமும் இது குறித்து விவாதியுங்கள்.

இந்த கம்பெனிகளின் லாப நஷ்டக் கணக்குகளைப் பார்க்க new.bseindia.com சென்று பாருங்கள். ஒளிவு மறைவில்லாமல், ஆதார பூர்வமான முழு விவரமும் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கும்.

நல்ல விஷயம்தான் நடந்திருக்கிறது. நம்மை நாமே தட்டிக் கொடுத்துக்கொண்டு அடுத்த கட்டத்திற்குச் செல்வோம், வாருங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism