Published:Updated:

பங்குப் பரிந்துரை

பங்குப் பரிந்துரை

பங்குப் பரிந்துரை

பங்குப் பரிந்துரை

Published:Updated:
பங்குகள்
பங்குப் பரிந்துரை
 

மே 28-ம் தேதி நிலவரப்படி பரிந்துரை செய்யப்படும் பங்குகள் இவை!

கார் வாங்குங்கள்... வங்கியும் வாங்குங்கள்!

மாருதி உத்யோக்

( MARUTI ) ரூ.791.70

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பங்குப் பரிந்துரை

ந்திய அரசும், ஜப்பான் நாட்டின் சுசூகி மோட்டார் கார்ப்பரேஷனும் சேர்ந்து தொடங்கிய நிறுவனம் மாருதி உத்யோக். கார் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் இந்நிறுவனம் இந்தியாவில் ஏற்கெனவே இருந்த கார் கலாசாரத்தையே மாற்றிவிட்டது என்றால் மிகையாகாது.

1980-களின் தொடக்கத்தில் உருவான இந்த கம்பெனி, 1983-ல் ‘மாருதி 800’ மூலம் சந்தையில் கால் ஊன்றியது. அடுத்த ஆண்டே மாருதி ஆம்னி, அதற்கு அடுத்தாண்டில் மாருதி ஜிப்ஸி என தொடர்ந்த இதன் வாகன அறிமுகப் பயணத்தில், சில ஆண்டுகளிலேயே ஏற்றுமதியும் செய்யத் தொடங்கியது.

இதற்கிடையில் மாருதி கம்பெனியில் சுசூகியின் பங்கு குறைவாக இருப்பதாக கருதியதால், 1992-ல் இந்திய அரசிடம் இருந்த பங்குகளை வாங்கி அது 50% ஆக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு ஜென், எஸ்டீம் போன்ற பல மாடல்கள் அறிமுகப்படுத்தப் பட்டன. கார்களுக்கான சர்வீஸ் வழங்குவதிலும் இந்நிறுவனம் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தது. 2005 ஏப்ரல் வரை இந்த நிறுவனம் 50 லட்சம் கார்களை விற்றுள்ளது.

பெட்ரோலை எரிபொருளாகப் பயன்படுத்தும் கார்கள் மட்டுமின்றி, டீசல் கார்களையும் அறிமுகப்படுத்தி, மாருதி தன் போட்டியாளர்களை சமாளித்தது. இதுவரை 11 மாடல்களில் கார்களை அறிமுகம் செய்துள்ளது மட்டுமின்றி, பல அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ததிலும் மாருதி முன்னணி இடத்தில் இருக்கிறது.

அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் இது தனது விரிவாக்கத் திட்டங்களுக்கு ஹரியானாவில் 6 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. அண்மையில் இந்நிறுவனத்தில் இந்திய அரசு வைத்திருக்கும் பங்குகளில் 8 சதவிகிதத்தை பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு விற்றது. மேலும் 20% பங்குகளை இந்நிறுவனப் பணியாளர்களுக்கு வழங்க முடிவு செய்திருக்கிறது.

கடந்த ஓராண்டில் இதன் பங்குகள் அதிகபட்சமாக 974.95 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 431.55 ரூபாய்க்கும் கை மாறி வந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இது 12143.07 கோடிக்கு விற்பனை செய்து 1219.12 கோடி ரூபாயை நிகர லாபமாகப் பெற்றுள்ளது. இதன்மூலம் அதன் ஒருபங்கு வருமானம் ரூபாய் 42.20. இதன் பி/இ விகிதம் 18.76.

மாறிவரும் மக்களின் வாழ்க்கைமுறை, அதையட்டி பெருகி வரும் கார் தேவை போன்றவற்றைக் கருத்தில்கொண்டு பார்க்கையில், இந்நிறுவனப் பங்கு ஓராண்டில் மிக நல்ல வளர்ச்சியைக் காணும் என நம்பிக்கை வருகிறது.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்

( NEYVELILIG ) ரூ. 80.7 5

பங்குப் பரிந்துரை

நெ ய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், இந்தியாவின் மிகப்பெரிய திறந்தவெளி சுரங்க நிறுவனம். தமிழகத்தில் உள்ள இந்தச் சுரங்கத்திலிருந்து பழுப்பு நிலக்கரி வெட்டி எடுப்பதும், அதைக்கொண்டு அனல் மின்சாரம் தயாரிப்பதும்தான் இதன் முக்கியப் பணிகள்.

இதுதவிர, ஒரு பகுதி நிலக்கரியை மற்ற தொழில் நிறுவனங்களுக்கு, எரிபொருள் பயன்பாட்டுக்காக விற்பனை செய்து வருகிறது. அதைத்தாண்டி சில தொழில் நுட்ப ஆலோசனைப் பணிகள் மூலமும் வருமானம் பார்த்து வருகிறது. இந்த நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகள் (93%-க்கும் மேல்) மத்திய அரசிடம் உள்ளன. சுமார் 5% இந்திய நிதி நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்ட்களிடம் உள்ளன. மீதிதான் பொதுமக்களிடம். இதனாலேயே இந்நிறுவனப் பங்குகளுக்கு பெரிய கவர்ச்சி இல்லாத நிலை.

மத்திய அரசு தன்னிடம் இருக்கும் இந்தப் பங்குகளில் ஒரு பகுதியை இப்போது சந்தையில் விற்க ஆர்வமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இதுபற்றிய பேச்சுகள் இருந்தாலும் சில அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. ஆனால், இப்போது வரும் தகவல்கள் இந்த முயற்சி விரைவில் திருவினையாகும் என்ற நம்பிக்கையை அதிகரிக்கிறது. அந்த எதிர்பார்ப்பில்தான் இந்தப் பங்கின் விலை கடந்த ஒரு மாத காலத்தில் ஆண்டின் மிக உச்ச விலையாக ரூபாய் 95-ஐத் தொட்டது. ஆனால் அண்மையில் சந்தையில் ஏற்பட்ட சரிவு, இதை 70 ரூபாய்க்கு அருகில் கொண்டுவந்துள்ளது.

இந்நிறுவனத்துக்குச் சாதகமான சில விஷயங்கள் சமீபத்தில் நடந்துள்ளன. 4.5 மில்லியன் டன் நிலக்கரி கிடைக்க வாய்ப்புள்ள இதன் இரண்டாவது சுரங்கம் மற்றும் அதையட்டிய அனல் மின் உற்பத்தி விரிவாக்கத் திட்டங்கள் அனுமதி பெறும் கட்டத்தை நெருங்கிக் கொண்டுள்ளன. அதேபோல ராஜஸ்தானில் ஒரு இடத்திலும் நிலக்கரி சுரங்கம் வெட்ட இந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இத்திட்டங்கள் செயலாக்கப்படும்போது நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தின் வருமானம், லாபமும் கணிசமாக உயரும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் சேர்ந்து தூத்துக்குடியில் 1000 மெகாவாட் அனல்மின் உற்பத்தியில் ஈடுபட தனியாக ஒரு கூட்டு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது நெய்வேலி லிக்னைட். அதோடு, ஒரிசாவிலும் 2000 மெகாவாட் மின் உற்பத்தி கூட்டு திட்டம் ஒன்று பரிசீலனையில் உள்ளது.

2005 டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 570 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து, அதில் 137 கோடி ரூபாயை நிகர லாபமாகப் பெற்றுள்ளது. கடந்த ஓராண்டில் இந்த நிறுவனம் பெற்ற வருமானத்தைக்கொண்டு கணக்கிட்டால், இதன் ஒரு பங்கு வருமானம் 7 ரூபாய் அளவில் உள்ளது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக 20 சதவிகித டிவிடெண்ட் வழங்கி வருகிறது. இதன் பி/இ விகிதம் 11.54.

இந்தத் துறையில் செயல்படும் மற்ற நிறுவனங்களையும் கணக்கில் கொண்டால் இத்துறையின் சராசரி பி/இ விகிதம் 17.5. கடந்த ஓராண்டில் அதிகபட்சமாக ரூ100.20-க்கும், குறைந்தபட்சமாக 63.10-க்கும் கைமாறி வருகிறது.

இன்றைக்கு நாட்டில் பெருகி வரும் மின்சாரத் தேவை, 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்நிறுவனத்தின் செயல் வேகம் போன்றவை நம்பிக்கைத் தருவதால், நீண்டகால அடிப்படையில் இந்தப் பங்குகள் சிறப்பான வருமானம் தரும்.

கனரா பேங்க்

( CANBK ) ரூ. 226.15

பங்குப் பரிந்துரை

பொ துத்துறை வங்கியான கனரா வங்கி, நூறு வருடங்கள் முன்பு கர்நாடகாவில் உள்ள மங்களூரில் பெனிஃபிட் ஃபண்டாகத் தொடங்கப்பட்டது. 1910-ல் கனரா வங்கி என உருமாற்றம் பெற்றது. அதன்பின், மெள்ள வேகம் பிடிக்கத் தொடங்கிய இதன் வளர்ச்சி, இன்று 2,500 கிளைகளைத் தாண்டி வேகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் பன்னாட்டு கிளைகளும் அடக்கம். வீட்டுக் கடன் வசதி வழங்க, பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஆலோசனை சொல்ல என பல சேவைகளில் ஈடுபடும் பல துணை நிறுவனங்களையும் கொண்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து மாஸ்கோவில் கமர்ஷியல் பேங்க் ஆஃப் இந்தியா என்ற இன்னொரு அமைப்பையும் தொடங்கியுள்ளது.

2003-ல் முதன்முறையாக தனது பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்தது. தனது வருமானத்தைப் பெருக்கும் இன்னொரு முயற்சியாக மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள் விற்பனையிலும் ஈடுபட்டது. தொடர்ந்த வளர்ச்சியால் ஒரு கட்டத்தில் இதன் மூலதனத்தை இன்னும் அதிகரிக்க வேண்டியிருந்ததால் 2005-ல் பாண்ட்கள் விற்பதன் மூலம் அதைச் சாதித்தது.

நவீன தொழில் நுட்ப முன்னேற்றங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறிக் கொண்டு இருந்த, இவ்வங்கி கடந்த ஆண்டு இறுதியில் ‘கோர் பேங்கிங்’ வசதியையும் பெரும்பாலான கிளைகளில் அறிமுகம் செய்தது.

2006 மார்ச்சுடன் முடிந்த நிதியாண்டில் மொத்த வருமானமாக 10,216.20 கோடியைப் பெற்று, அதில் நிகர லாபமாக 1345.61 கோடியைப் பெற்றது. இதன்படி இவ்வங்கிக்கான ஒரு பங்கு வருமானம் 33.65 ரூபாய். இதனடிப்படையில் இப்பங்கின் பி/இ விகிதம் 6.72. பொதுத்துறை வங்கிகளுக்கான சராசரி பி/இ விகிதம் 9. கடந்த ஓராண்டில் அதிகபட்சமாக 299 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 180 ரூபாய்க்கும் கைமாறி வருகிறது.

சிறுவங்கிகளை ஒருங்கிணைத்து பெரிய வங்கிகளாக மாற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் திட்டங்களிலும் கனரா வங்கி முக்கிய பங்காற்றும் வலு பெற்றுள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்தப் பங்கு அடுத்த ஓராண்டுக்குள் மிகச்சிறந்த வளர்ச்சியைக் காணும் எனச் சொல்லலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism