பங்குகள் |

சிக்கிக்கொண்ட சிறு முதலீட்டாளர்கள்... போட்ட
முதல் போகாது... பொறுமை காக்கும் நேரமிது! |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


கா லையில் வீட்டில் பேப்பர் போடும் பையனில் ஆரம்பித்து, பீச்சில் மாலை ரெகுலராக கடலை விற்பவர் வரை அனைவரும் துக்கம் விசாரிக்காத குறைதான். ‘மார்க்கெட் இப்படி ஆகிடுச்சே..!’ தொலைக்காட்சியை திறந்தால் ஆளாளுக்குப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பணத்தைப் போட்டுவிட்டு நொந்துபோயிருக்கும் சிறு முதலீட்டாளர்களை மேலும் வெறுப்பேற்றுவதுபோல ‘சென்செக்ஸ் 8000 வரை இறங்கும்னு சொல்றாங்களே... உண்மையா?’ என எந்தவித ஆதாரமும் இல்லாமல் கொத்திவிட்டுப் போகிறார்கள். மற்ற ஊடகங்களும் சளைக்கவில்லை. இன்னும் ஒருபடி மேலே போய், ‘7000 புள்ளிகளை நோக்கி விழுந்தால்கூட வியப்பதற்கில்லை’ என்று கொளுத்திப்போடுகிறார்கள். இவர்களின் வார்த்தைகளை நம்பிவிடும் மனநிலையில் இருக்கும் சிறு முதலீட்டாளர்களே... இதே அறிவாளிகள்தான் சென்செக்ஸ் ஏறிக்கொண்டே போனபோது, ஒவ்வொருமுறையும் ஆயிரம் புள்ளிகளைக் கூட்டி, ‘அதுதான் அடுத்த இலக்கு!’ என்று உறுதி கூறினார்கள். இனி அடுத்தகட்டம் 20000 தான் என்று அதிரடி பண்ணியவர்களும் உண்டு. இவர்கள் அப்போதும் வலுவான காரணங்கள் எதையும் சொல்லவில்லை, இப்போது விழுவதற்கும் காரணங்கள் எதையும் சொல்லவில்லை. அதனால், சந்தை நிலவரங்களை நீங்களே அலசி ஒரு முடிவுக்கு வாருங்கள். அந்த அலசலுக்கு உதவியாக நாங்கள் சில குறிப்புகளைத் தருகிறோம். ‘நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்ட சி.பி.டி.டி சர்க்குலர்தான் பங்குச் சந்தையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சிக்குக் காரணம்’ என்று ஆரம்ப நாட்களில் சொல்லப்பட்டது. ‘மாதிரி முன்வடிவுதான் அந்த சர்க்குலர். அதுவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சம்பந்தமில்லாதது’ என விளக்கம் கொடுக்கப்பட்டது. உலகச் சந்தையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிதான் இப்போதைய உள்நாட்டுச் சந்தையிலும் பிரதிபலித்திருக்கிறது என்பது மெல்ல புரிய ஆரம்பித்தாலும் காட்சி மாறவில்லை. இந்தக் கட்டுரையை எழுதும் 13-ம் தேதி வரை வீழ்ச்சி தொடர்கிறது. சொல்லப்போனால், வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள பங்குச் சந்தைகளிலேயே அதிக அளவு வீழ்ச்சியைச் சந்தித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிகரித்துவரும் வட்டி விகிதமும், பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றமும், அதன் பின்னணியில் வரவிருக்கும் விலைவாசி ஏற்றமும் பணவீக்கமும்கூட இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்கள். ஆனால், இவையெல்லாம் திடீரென இன்று நேற்று வந்தவை அல்ல என்பதைக் கவனிக்கவேண்டும். |

இவையெல்லாம்போக, முக்கியமாக காதில் விழுந்த மற்றொரு பரபரப்பான விஷயம் ஒன்று உண்டு. அமெரிக்க பரஸ்பர நிதி நிறுவனங்களில் பல, இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளன. ‘நிதி நிர்வாகம் செய்துவரும் அந்த ஃபண்ட் மேனேஜர்களுக்குக் கொடுக்கப்படும் மொத்தக் கட்டணத்தில், 40 சதவிகிதத்தை வரியாகப் பிடித்துக்கொண்டு, மீதத்தைத்தான் கொடுக்கவேண்டும்’ என சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அதற்கு ஐ.சி.ஐ ( Investment Company Institute ) எனப்படும் அமெரிக்க அமைப்பின் மூலம் அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாகவும் சில பத்திரிகைகளில் செய்தி வெளியானது. 1940\ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில், அமெரிக்காவில் உள்ள சுமார் 9,500-க்கும் மேற்பட்ட பரஸ்பர நிதி நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. ‘ஏற்கெனவே அதிருப்தியில் இருந்த அந்த நிறுவனங்கள்தான், உலகச் சந்தையின் வீழ்ச்சியைப் பயன்படுத்திக்கொண்டு, அதிவேகத்தில் பங்குகளை விற்று தங்கள் கோபத்தைக் காட்டுகின்றன’ என்று சொல்லப்படுகிறது. ‘ ஃபண்ட் மேனேஜர்களுக்குக் கொடுக்கப்படும் கட்டணத்தை ‘டெக்னிக்கல் ஃபீஸ்’ அடிப்படையில் கணக்கெடுத்து, அதற்கு வரி வசூலிப்பது தவறு. இதில் எந்தவிதமான டெக்னிக்கல் சமாசாரமோ, தொழில்நுட்பப் பரிமாற்றமோ இல்லை. ஒருவேளை, ‘டெக்னிக்கல் ஃபீஸ்’ என வைத்துக்கொண்டாலும் டபுள் டேக்சேஷன் அவாய்டன்ஸ் அக்ரிமென்ட் _ டி.டி.ஏ.ஏ. ( D.T.A.A - Double Taxation Avoidance Agreement ) என்னும் ஒப்பந்தத்தின் கீழ், இந்த இரு நாடுகளுக்கிடையே ஏதாவது ஓரிடத்தில் வரி விதிக்கப் பட்டால், அது மற்றொரு நாட்டில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அங்கு வரிச்சலுகை கிடைக்கும். மேலே சொன்ன சூழலில் இந்த விதி மீறப்பட்டுள்ளது ’ எனும் வாதம் ஐ.சி.ஐ-யினால் நம் அரசிடம் எடுத்து வைக்கப் பட்டதாகவும் தெரிகிறது. |

அதேபோல, அமெரிக்கா வைச் சேர்ந்த மிகப்பெரிய பென்ஷன் ஃபண்ட்களில் ஒன்றான ‘ஜி..ஈ. பென்ஷன் ட்ரஸ்ட்’, நம்நாட்டில் சுமார் 80 மில்லியன் அமெரிக்க டாலர் களை முதலீடு செய்துள்ளது. இந்த நிறுவனம் ஒரு ட்ரஸ்ட்டாக இருப்பதால், அது ஈட்டும் லாபத்துக்கு அமெரிக்காவில் வரி கட்டத் தேவையில்லை. ஆனால், இந்தியாவில் உச்சகட்ட வரி கட்டச் சொல்லி Authority for Advance Ruling (A.A.R) மூலம் கோரப்பட்டதாகவும், இதனால், இதுபோன்ற நிறுவனங்கள் அப்செட் ஆகியுள்ளதாகவும் தகவல். இதே நடைமுறை, மற்ற வெளிநாட்டு நிறுவனங் களுக்கும் பின்பற்றப் படக்கூடும் என்ற அச்சமும் ஒரு காரணம். இப்படியெல்லாம் தகவல்கள் உலவினாலும், இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால், நம்நாட்டில் செய்த முதலீடுகளின் மூலம் கொழுத்த லாபம் பார்த்த வெளிநாட்டு நிறுவனங்கள், அதில் ஒரு பகுதியையாவது வரியாக நமக்குத் திருப்பித்தர வேண்டும் என அரசு நினைத்தால் தப்பில்லை. அதேசமயம், நாம் முன்பே ஒப்புக்கொண்ட சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கவேண்டும். இல்லையேல், சர்வதேசச் சந்தையில் நம்நாட்டின் நம்பகத்தன்மை சீர்குலைய வாய்ப்புள்ளது. பங்குச் சந்தையின் வீழ்ச்சிக் கான காரணங்களைப் பலர் விரிவாக அலசிவிட்டார்கள். இனி என்ன என்பதுதான் பலருக்கும் விடை தெரியாத கேள்வி! இப்போது, நடந்திருக்கிற சறுக்கலை உற்றுக் கவனித்தால், இது கடந்த ஆறேழு மாதங்களில் எழுந்த பங்குச் சந்தையின் வீழ்ச்சிதான் என்பது தெளிவாகப் புரியும். பங்குகளின் இன்றைய விலை கடந்த நவம்பரில் இருந்த விலைக்கு வந்திருக்கிறது. இதிலிருந்து தெரிவது என்ன... இப்போது பங்குச் சந்தை வீழ்ச்சியில் பாதிக்கப்பட்டிருப்பது இந்த கால கட்டத்தில் உள்ளே வந்தவர்கள் மட்டும்தான்.
|

க டந்த காலத்தைக் கவனமாக ஆராய்ந்தாலே இதற்கு ஓரளவு விடை கிடைக்கும். கடந்த பதினைந்து ஆண்டுகளில் பங்குச் சந்தை பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருந்தாலும், அந்தச் சூழ்நிலைகளைக் கொஞ்சம் உன்னிப்பாகப் பார்த்தால், ஓர் ஒற்றுமை புலப்படும். ஒவ்வொரு முறையும் பங்குச் சந்தை எவ்வளவு வேகமாக ஏறுகிறதோ, அதே நேரத்தில் வேகமாக கீழே இறங்குகிறது. மற்ற நியாயமான காரணங் களோடு முதலீட்டாளர்களின் பீதி கலந்த மனோபாவமும் இதற்கு முக்கியக் காரணம். என்னதான் கீழே வந்தாலும், ஒருசில ஆண்டுகளில் முன்னைவிட அதிக உச்சத்தைத் தொடுகிறது. இதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமாகத் தொடரும் நம் தொழில் வளர்ச்சி. இ ன்றைய நிலையில் சர்வதேச நிகழ்வுகள் கட்டுக்குள் வரும் அறிகுறிகள் மெல்லத் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. பங்குச் சந்தை இனி நல்ல நிலையில் தொடர சில விஷயங்கள் தேவை: நல்ல வேகத்தில் போய்க்கொண்டிருந்த பொருளா தாரச் சீர்திருத்தம் சமீபகாலமாக சற்றே தேங்கி இருக்கிறது என்பது சர்வதேச முதலீட்டாளர்களின் எண்ணம். இது உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டுமானால், சில துறைகளில் ‘எஃப்.டி.ஐ’ எனப்படும் அந்நிய முதலீடுகள் விரைவாக வருவதற்கான அரசு நடவடிக்கைகள் தேவை. |

நெடுநாட்களாகப் பேசப்பட்டுவரும் பென்ஷன் சீரமைப்பு, வங்கிகள் இணைப்பு, சர்வதேச விமானத் தளங்களின் தரத்தை உயர்த்துதல், உள்கட்டுமான வளர்ச்சி, அதிகரித்து வரும் பற்றாக்குறையைக் கட்டுப் படுத்துதல் போன்றவற்றில் அதிக கவனம் தேவை. இது பொதுவாக ஒட்டுமொத்த சந்தையின் நிலைமை. தனிப்பட்ட பங்குகள் நிலை எப்படி என சமீபத்திய உதாரணத்துடன் பார்ப்போம். 2001-ல் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்தபோது அதற்கு டெக் மெல்ட் டவுன் எனப் பெயரிட்டார்கள். இருந்தபோதிலும், மற்ற பங்குகளின் விலையும் கணிசமாகக் குறைந்தது. ஏற்றமும் இறக்கமும் சகஜம் என்பதே இந்தப் பட்டியல் சொல்லும் பாடம்! இந்த சாம்பிளில் மூன்று அல்லது நான்கே ஆண்டுகளில் சில நல்ல பங்குகளின் விலை பத்து மடங்குகூட அதிகரித்துள்ளதைப் பார்க்க முடிகிறதல்லவா..! குறுகியகாலத்தில் பார்க்கையில் மனதைப் பயப்படுத்தும் சூழல்கூட, தொலைநோக்குடன் பார்த்தால் ஒரு நல்ல வாய்ப்பாகத் தோன்றும் என்பதுதான் உண்மை. சுருக்கமாகச் சொன்னால் ‘இதுவும் கடந்து போகும்’ என்ற மனநிலை தேவை. அப்படியானால், இப்போது நாம் ஒரு ‘கரடி மார்க்கெட்டில் உள்ளோமா?’ எனக் கேள்வி எழலாம். சரியாகச் சொல்ல வேண்டுமானால் 92-க்குப் பின் இந்தியாவில் ‘கரடி ராஜ்ஜியமே’ இல்லை. ஒரு நீண்டகால காளைச் சந்தையில்தான் பயணித்துக் கொண்டிருக் கிறோம். அதில் இடையிடையே வரும் தடைக்கற்களை மதில் சுவர்களாக நினைக்கக்கூடாது. நீங்கள் சந்தையில் போட்ட முதல் கைவிட்டுப் போகாது. அதைக் கரன்ஸியாகப் பார்க்கும் வரை தேவை கொஞ்சம் பொறுமை!
|

|

|