Published:Updated:

இனியும் குழம்பாதீர்!

இனியும் குழம்பாதீர்!

இனியும் குழம்பாதீர்!

இனியும் குழம்பாதீர்!

Published:Updated:
மியூ. ஃபண்ட்
இனியும் குழம்பாதீர்!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனியும் குழம்பாதீர்!

மி யூச்சுவல் ஃபண்ட் காட்டில் கனமழை கொட்டுகிறது, கடந்த ஓராண்டாகவே! தொலைக்காட்சி, ஹோர்டிங்குகள் என்று எங்கும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் கவர்ச்சி விளம்பரங்கள்... காரணம், இந்தியப் பங்குச் சந்தையின் அபார வளர்ச்சி!

இந்த வளர்ச்சி மத்தியதர மக்களின் நெஞ்சில் பெரும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டிருக்கிறது. இன் னொரு பக்கம் வட்டி விகிதத்தைக் குறைத்துவிட்ட வங்கிகள்... சுவாரஸ்யம், கவர்ச்சியை இழந்துவிட்ட தேசிய சேமிப்பு, கிசான் விகாஸ் பத்திரங்கள்... எட்டு சதவிகிதத்துக்குள் முடக்கப்பட்டுவிட்ட அஞ்சல்துறை முதலீடு...

இவையெல்லாமே, மக்களை பங்குச் சந்தையை நோக்கித் தள்ளின. அதேசமயம், ‘பங்குச் சந்தை அளவுக்கு லாபமும் வேண்டும், ரிஸ்க்கும் கூடாது’ என்று ‘கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை’ ஆசாமிகள் மியூச்சுவல் ஃபண்டைத் தேடி வரத் துவங்கினார்கள். இந்த நிலையில் தான், புதிய ஃபண்ட் ஆஃபர்களின் முக்கியத்துவம் அதிகமாகி இருக்கிறது.

‘எங்கள் ஃபண்ட்களில் முதலீடு செய்தால், உங்கள் லாபத்தைப் பன்மடங்காகத் திரும்பப் பெற முடியும்!’ என்றெல்லாம் தொலைக்காட்சி, ரேடியோ விளம்பரங்களால் நம்மை மூளைச்சலவை செய்வது போதாதென்று, பல ஏஜென்ட்கள் பேசிப் பேசியே, யூனிட்களை வாங்க வைத்து விடுகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் நியூ ஃபண்ட் ஆஃபர் (என்.எஃப்.ஓ) பற்றி சில உண்மைகளைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். விளம்பரங்களையோ, ஏஜென்ட்களையோ நம்புவதைவிட, உண்மைகளை நம்புவது நல்லதுதானே!

இனியும் குழம்பாதீர்!

பத்து ரூபாய் ஜாலம்!

ந்த ஃபண்ட் விளம்பரமானாலும், ‘என்.எஃப்.ஓ. சமயத்தில் இந்த யூனிட்களின் விலை அவற்றின் முகமதிப்பான 10 ரூபாய்தான்’ என்பதாகவே இருக்கிறது. இது ஏதோ கிடைப்பதற்கு அரியது போல மிகக் கவர்ச்சிகரமான விஷயமாக முன் வைக்கிறார்கள். அதாவது, ‘அது மிகவும் குறைவான தொகை! உடனே வாங்கிவிடுங்கள். நாளைக்கே அது எக்கச்சக்கமாக வளர்ந்து, கைநிறைய நீங்கள் லாபம் சம்பாதிக்கப் போகிறீர்கள்!’ என்ற ஆசை வார்த்தைகளைச் சொல்லாமல் சொல்கின்றன.

மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்களும் இந்தப் பத்து ரூபாய் கவர்ச்சி வலையை நம் முன் அவிழ்ப்பதைப் பார்க்க முடியும். அதாவது, ‘விலை குறைவு’ என்ற மாயத் தோற்றத்தை விதைத்துக்கொண்டே இருப்பார் கள். உண்மையிலேயே 10 ரூபாய் நிகர சொத்து மதிப்பு என்பது விலை குறைவா?

10 ரூபாய் என்பது, பொதுவாக பங்குச் சந்தையில் ஒரு பங்கின் துவக்க விலையாக இருப்பது. ஐ.பி.ஓ சமயத்தில் அதை வாங்கிப்போட்டுவிட்டால், பின்னர் லாபம்தான் என்பது ஒரு கணக்கு. இதே கணக்கில்தான் இப்போது மியூச்சுவல் ஃபண்ட் ஆரம்ப வெளியீடு பற்றியும் பேசுகிறார்கள்.ஆனால், மியூச்சுவல் ஃபண்ட்டும், பங்கு வர்த்தகமும் வேறுவேறு துறைகள். இரண்டின் செயல்பாடுகளும் வெவ்வேறு.

ஆக, பங்குச் சந்தையில் ஐ.பி.ஓ சமயத்தில் 10 ரூபாய் கொடுத்து வாங்குவதற்கும் மியூச்சுவல் ஃபண்டில் என்.எஃப்.ஓ சமயத்தில் 10 ரூபாய் கொடுத்து வாங்குவதும் ஒரேமாதிரியான விஷயமில்லை. எப்படி?

இரண்டும் ஒன்றல்ல..!

தாரணமாக,2004\ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட ஒரு புது ஃபண்ட் திட்டம், பத்து லட்சம் யூனிட்களை 10 ரூபாய்க்கு வெளியிட்டு, ஒரு கோடி ரூபாய் பணம் திரட்டியதாகக் கொள்வோம். அந்தத் தொகையை சந்தையில் முன்னணியில் இருக்கும் நான்கு பங்குகளில் அது சரிசமமாக முதலீடு செய்ததன் மூலம், அடுத்த ஓராண்டில், இந்த மூலதனம் 1.49 கோடி ரூபாயாக உயர்ந்துவிடுவதாகக் கொள்வோம். இப்போது இந்த ஃபண்ட்டின் என்.ஏ.வி 14.90 ரூபாய்.

இப்போது 2005\ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மற்றொரு புது ஃபண்ட் திட்டம் தொடங்கப்பட்டது. அதுவும் 10 ரூபாய் விலையுள்ள 10 லட்சம் யூனிட்களை விற்று, 1 கோடி ரூபாய் திரட்டியது. அதுவும் மேலே சொன்ன அதே நான்கு பங்குகளில் சரிசமமாக முதலீடு செய்தது.

இப்போது நீங்கள் 2005\ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இரண்டு ஃபண்ட்களிலும் தலா 10,000 ரூபாயை முதலீடு செய்யுங்கள். பழைய ஃபண்டில் உங்களுக்கு 671.14 யூனிட்கள் கிடைக்கும். புதிய ஃபண்டில் உங்களுக்கு 1,000 யூனிட்கள் கிடைக் கும்.

செப்டம்பர் 2006. பங்குச் சந்தை மென்மேலும் எழுச்சி பெற்றுக்கொண்டே போக, பழைய ஃபண்டின் மூலதனம் இப்போது 1.74 கோடி ரூபாயாக உயர்ந்தது. அதன் என்.ஏ.வி 17.40 ரூபாயாக உயர்ந்திருக்கும். புது ஃபண்டின் மூலதனமும் வளர்ந்திருக்குமல்லவா? அது இப்போது 1.16 கோடி ரூபாயாக உயர்ந்து, அதன் என்.ஏ.வி 11.60 ரூபாயாக உயர்ந்திருக்கும். இப்போது இரண்டுமே ஒரே வளர்ச்சியைத்தான் பெற்றிருக்கிறது. அதன் மதிப்பு 11,600 ரூபாய் என்ற அளவுக்குதான் உயர்ந்திருக்கிறது.

பழைய ஃபண்ட்டில் உங்கள் முதலீடு 17.40 ரூபாய் என்ற என்.ஏ.வி-யில் 668.414 யூனிட்களுக்கு 11,675 ரூபாயாக இருக்கும். புது ஃபண்ட்டில் 11.60 ரூபாய் என்ற என்.ஏ.வி-யில் 1000 யூனிட்களுக்கு 11,600 ரூபாயாக இருக்கும். ஏறத்தாழ இரண்டுமே சம அளவில்தான் இருக்கிறது. அந்த 75 ரூபாய் வித்தியாசம்கூட தசமஸ்தான மாறுபாட்டால் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

ஆக, இரண்டிலும் வளர்ச்சி ஒன்றுதான். அதனால், புது ஃபண்டின் யூனிட் 10 ரூபாய்க்குக் கிடைக்கிறது, அது மிகவும் மலிவு என்றெல்லாம் யாராவது சொன் னால் இனி நம்பாதீர்கள். என்.ஏ.வி மாறுவதால் நமக்கு ஒன்றும் லாபம் இல்லை. ஆனால், அது வளர்வதால் நமக்குச் சில பலன்கள் உண்டு. ஃபண்டின் செயல்திறன் பற்றிய அளவுகோலாக இந்த வளர்ச்சியைப் புரிந்து கொள்ளலாம்.

அந்த ஃபண்ட்களை நடத்தித்தரும் ஃபண்ட் மேனேஜரின் சாமர்த்தியம், செயல்திறனைப் பொறுத்து, இந்த வளர்ச்சி அமைந்திருக்கிறது. என்.ஏ.வி அதிகமாக இருந்தால், அந்த ஃபண்ட் திறமையாக நடத்தப்படுகிறது என்று புரிந்துகொள்ளுங்கள். அந்தத் திறன்தான் எதிர் காலத்திலும் பிரதிபலிக்க வாய்ப்பு என்பதால், அத்தகைய ஃபண்ட்களில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம். விலை குறைவு என்று புதிய வெளியீடுகளை நோக்கிப் போவதை சாமர்த்தியம் என்று சொல்லிக்கொள்ள முடியாது.

நம்பிக்கை பொய்க்கலாமல்லவா?

இனியும் குழம்பாதீர்!

பு திய ஃபண்ட் என்பது பிறக்கப்போகும் குழந்தை மாதிரி. அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை நாம் முன்னரே கணிக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட கருத்தை முன்வைத்து, பணத்தைத் திரட்டி, அதன் குறிக்கோளுக்கு ஏற்ப முதலீடு செய்து திறமையாக நடத்தி லாபம் ஈட்டவேண்டும். இது எல்லாமே ஃபண்ட் மேனேஜர் என்ற சூத்திரதாரியின் கையில்தான் இருக்கிறது. அவர் சரியாக இருந்தால், ஃபண்ட் திறமையாகச் செயல்படும்; மூலதனம் பெருகும்; ஃபண்டில் முதலீடு செய்தவர்களுக்கு லாபம் கிடைக்கும்; அந்த ஃபண்டின் என்.ஏ.வி. உயரும். அவர் சரியாக இல்லையென்றால், பங்குச் சந்தை படு வேகமாக ஏறினாலும் நம் நிதியைக் காப்பாற்றாது. ஏற்கெனவே மார்க்கெட்டில் உள்ள ஃபண்ட்களுக்கே இந்தக் கதி என்றால், புதிய ஃபண்ட் பற்றி என்ன சொல்ல...?

புது ஃபண்ட் ஆஃபர்களில் முதலீடு செய்வதில் உள்ள ஓர் அபாயம் இதுதான். இன்று பங்குச் சந்தை மிக நன்றாக இருக்கிறது, அதனால், பங்குச் சந்தை சார்ந்த எந்த புது ஃபண்ட்டும் சிறப்பாகவே வருமானம் ஈட்டும் என்பது பொதுவான கணிப்பு... நம்பிக்கை! அது எல்லா நேரங்களிலும் சரியாக இருக்காது. அதனால், புது ஃபண்ட்களில் முதலீடு செய்யும்முன், இந்த அபாயத்தையும் மனத்தில் வைத்துக்கொண்டே செயல்படுங்கள்.

லாபத்தைத் தள்ளிப்போடும் விளம்பரம்!

புதிய ஃபண்ட் வெளியீட்டின்போது திரும்பின பக்கமெல்லாம் விளம்பரங்களாக இருக்கிறதே... இதற்கெல்லாம் அந்த கம்பெனி எவ்வளவு செலவழிக்க வேண்டியிருக்கும்? என்ற எண்ணம் உங்களுக்கு வருகிறதா... இதற்கெல்லாம் பணம் செலவழிப்பது ஃபண்டில் முதலீடு செய்பவர்கள்தான்! தூக்கி வாரிப் போடுகிறதா... உண்மை அதுதான்!

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் செபி சில சட்டதிட்டங்களை வரையறை செய்திருக் கிறது. அதில் ஒன்று, புது ஃபண்ட் திட்டங்கள் தொடர்பானது. ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், புது ஃபண்ட் திட்டத்தைச் சந்தையில் வெளியிடும்போது, செபியின் அனுமதியோடுதான் வெளியிட வேண்டும். அந்த புது ஃபண்ட் திட்டத்தை விளம்பரம் செய்ய, திரட்டப்படும் மொத்தத் தொகையில் 6% வரை செலவு செய்யலாம் என்று செபி அனுமதி அளித்திருக்கிறது. அந்தச் செலவை ஐந்தாண்டுகளுக்குப் பிரித்து, மொத்தச் செலவுகளோடு சேர்த்துக்கொள்ள அனுமதித்திருக்கிறது.

1,000 கோடி ரூபாய்க்குக் குறைவில்லாமல் முதலீட்டைத் திரட்டும் ஃபண்ட் நிறுவனங்கள் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்பட்ட அளவு 60 கோடி. அதை ஐந்தாண்டுகள் பிரித்தால், ஆண்டுக்கு 12 கோடி ரூபாய். அந்த ஃபண்டை நடத்துவதற்கான மேனேஜ்மென்ட் ஃபீஸ் போன்ற மற்ற செலவு களோடு இந்த 12 கோடி ரூபாயும் சேர்ந்துகொள்ளும். அதாவது, உங்கள் முதலீட்டில்தான் அந்தப் பணம் எடுக்கப்படும். அதனால், ஐந்தாண்டுகள் வரை, உங்கள் ஃபண்ட் பெறும் லாபம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும்.

ஆனால், விரைவில் இந்த விஷயத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு நல்லகாலம் பிறக்கும்போல! சமீபத்தில் செபியின் உயர்மட்ட கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது இதுபோன்ற செலவுகளை அந்தந்த திட்டத்தின் ‘என்ட்ரி லோட்’ எனப்படும் நுழைவுக் கட்டணத்தோடு சேர்த்துவிட வேண்டும்... அல்லது மியூச்சுவல் ஃபண்ட் நடத்தும் தாய் நிறுவனமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கும் யோசனையை முன்வைத்திருக்கிறார்கள். அப்படி ஒருநிலை வந்தால் தற்போது நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும் 2.25% கட்டணத்தோடு முதலீட்டாளர்கள் தப்பிவிடலாம்.

இன்சென்ட்டிவ்க்கு மயங்காதீர்கள்!

இனியும் குழம்பாதீர்!

டைசியாக, முக்கியமான ஒன்று. புதிய ஃபண்ட்கள் மார்க்கெட்டில் கொட்டத் தொடங்கிய வுடன், இரண்டு விஷயங்கள் நடக்கத் தொடங்கிவிட்டன.

ஒன்று, இதுவரை முதலீடே செய்யாத புதியவர்கள் எல்லாம் முதலீடு செய்ய வந்துவிட்டார்கள். இது வளர்ச்சி. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் சிறப்பைப் புரிந்துகொண்டு, அதே சமயம் பழைய முதலீட்டுத் திட்டங்களில் உள்ள குறைகள் காரணமாக, உள்ளே வந்திருக்கும் இவர்கள்தான் இன்று பல புதிய ஃபண்ட் திட்டங்களுக்கு முதுகெலும்பாக இருக்கிறார்கள். அவர்களது நம்பிக்கையே மூலதனம்.

இரண்டு, ஏற்கெனவே பல்வேறு பண்ட் திட்டங்களில் முதலீடு செய்துள்ள விவரமானவர்களை, இந்த புதிய ஃபண்ட் ஏஜென்ட்டுகள், தவறாக வழிகாட்டி மீண்டும் புதிய ஃபண்ட்களில் முதலீடு செய்ய வைக்கிறார்கள். தேவைப்பட்டால் பழைய ஃபண்ட் திட்டத்தின் யூனிட்களை விற்றுவிட்டு வெளியேறி வந்து அந்தப் பணத்தை புதிய திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்றும் சொல்கிறார்கள். அதாவது, ‘புதிய ஃபண்ட் திட்டங்கள், அவர்கள் ஏற்கெனவே வைத்துள்ள ஃபண்ட்களைவிடச் சிறப்பானவை, விலையும் குறைவானவை என்று சொல்லி மயக்குகிறார்கள். ஃபண்ட் ஏஜென்ட்டுகளுக்கு புதிய ஃபண்ட்களில் முதலீட்டைச் சேர்ப்பதால் கிடைக்கும் கூடுதல் கமிஷன் ஆசையால் முதலீட் டாளர்களைக் குழப்புகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டும் இப்போது பரவலாக எழுந்துள்ளது.

ஏற்கெனவே உள்ள ஃபண்ட் திட்டங் களில் யூனிட்களை வைத்திருப்பவர்கள், ஏஜென்ட் சொன்னார் என்றோ அல்லது அவர் தரும் இன்சென்ட்டிவ்க்கு ஆசைப்பட்டோ புதிய ஃபண்ட்களுக்கு பணத்தை மாற்றவேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

புதிய ஃபண்டின் குறிக்கோள் மேல் நம்பிக்கை கொண்டு, பழைய ஃபண்டில் இருந்து பணத்தை எடுத்து புது ஃபண்டில் முதலீடு செய்வீர்களானால், அது உங்கள் விருப்பம். ஆனால், மற்றவர்களின் தூண்டுதலால் இதைச் செய்ய வேண்டியது இல்லை.

புதிய ஃபண்ட் திட்டங்கள் மார்க்கெட் டுக்கு வரட்டும்... நிறைய வரட்டும். வந்து தங்கள் லாபம் ஈட்டும் திறனை நிரூபிக்கட்டும். தங்கள் செலவுகளைக் குறைத்துக்கொள்ளட்டும். அதுதான் புத்திசாலித்தனமான அணுகுமுறை!

வெளிநாட்டுப் பங்குகளிலும்...

பு திய ஃபண்ட் வெளியீடாக ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட், அறிமுகம் செய்துள்ள ‘டெம்பிள்டன் இந்தியா ஈக்விட்டி இன்கம் ஃபண்ட்’ திட்டத்தில் ஏப்ரல் 20-ம் தேதி வரை 10 ரூபாய் முகமதிப்பில் முதலீடு செய்யமுடியும். இதில் திரளும் பணத்தில் 70% முதல் 100% வரை பங்குகளில் முதலீடு செய்யப்படுமாம். அதிலும் 20-75% வரை லார்ஜ் கேப் கம்பெனிகள் எனப்படும் நன்கு வளர்ந்த பெரிய கம்பெனி பங்கு களிலும் மீத தொகை, நடுத்தர மற்றும் சிறிய கம்பெனி பங்குகளிலும் முதலீடு செய்ய இருக்கிறார்கள். ஒருவேளை, பங்குச் சந்தையில் மந்தநிலை வந்தால் இத்திட்டத்தில் திரண்ட தொகையில் 30% வரை கடன் பத்திரங்களிலும், பணச் சந்தையிலும் முதலீடு செய்யமுடியும். இந்தத் திட்டத்தின் பணத்தை இந்திய நிறுவனப் பங்குகள் தவிர, வெளிநாட்டு நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்யமுடியும். இதில் முக மதிப்பில் முதலீடு செய்ய வாய்ப்புள்ள ஆரம்ப காலத்தில் நுழைவு கட்டணமாக 2.25% செலுத்த வேண்டியிருக்கும். பணத்தைத் திரும்பப் பெறும்போது 0.50% கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும்.

மாதத் தவணையிலும் கட்டலாம்!

சு ந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் அண்மையில் ‘சுந்தரம் ரூரல் இந்தியா ஃபண்ட்’ என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இத்திட்டம் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்ய ஏற்ற ‘ஓபன் எண்டட்’ வகையிலானது. இதில் ரூபாய் 10 மதிப்பில் மார்ச் 20-ம் தேதி முதல் ஏப்ரல் 19 வரை முதலீடு செய்யலாம். அறிமுகச் சலுகையாக, இப்போது நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லாமல், முதலீடு செய்யும் மொத்தத் தொகைக்கும் யூனிட்கள் வழங்கப்படுகின்றன.

நகரங்களுக்குப் போட்டியாக பணத்திலும், வளத்திலும் இப்போது முன்னேறி வரும் கிராமப்புற மக்களின் வளர்ச்சியில் பங்கேற்கும் எல்லா நிறுவனங்களிலும் முதலீடு செய்யப் போகிறார்கள்.

குறிப்பாகச் சொல்வதானால், கிராமப்புற சாலை அமைப்பு, பாசன வளர்ச்சித் திட்டங்கள், மற்றவகை அடிப் படை கட்டமைப்புப் பணிகள், மின் உற்பத்தி மற்றும் விநி யோகம், வாகன உற்பத்தி, விவசாய விளைபொருட்கள் என கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையில் பங்குபெறும் பல தொழில் நிறுவனங்களில் 70% - 100% முதலீடு செய்யப் போகிறார்கள். 30% வரை மற்ற தொழில் நிறுவனங்களிலும் முதலீடு செய்யப்படுமாம். தவிர, 15% வரை பணச்சந்தையில் முதலீடு செய்யவும் திட்டம் உள்ளதாம். இதில் குறைந்தபட்ச முதலீடாக 5,000 ரூபாய் செலுத்தலாம். அதற்கு மேல் 500 ரூபாயின் மடங்குகளில் முதலீடு செய்யலாம். மாதம் 500 ரூபாய் என்ற அளவில் சிறு தொகையாக முதலீடு செய்யும் எஸ்.ஐ.பி வசதியும் இத்திட்டத்தில் உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism