##~## |
பொருளை விளைய வைக்கிற விவசாயிக்கு திண்டாட்டம்! ஆனால், அதை விற்கிற வியாபாரிக்கு கொண்டாட்டம் என்கிற கதையாகிவிட்டது மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்களின் நிலைமை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் பல முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை. ஆனால், இந்தியாவில் உள்ள 44 மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களில் 20 மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் நல்ல லாபம் சம்பாதித்திருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் அடைந்திருக்கும் இந்த லாபம், முதலீட்டாளர்களின் மனதில் பல கேள்விகளை உருவாக்கியுள்ளது. 'மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்த நாங்கள் கடுமையான நஷ்டத்தில் இருக்கிறோம். கடந்த மூன்று வருடங்களில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் சராசரியாக ஒரு சதவிகிதத்துக்கு கீழேதான் வருமானம் தந்துள்ளன. ஆனால், அந்த ஃபண்டை நிர்வகிக்கும் நிறுவனங்கள் லாபத்தில் இருக்கின்றன. இந்த லாபத்தை முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து கொண்டாலே எங்களுக்கு நஷ்டம் வராதே!’ என்று முதலீட்டாளர்கள் கேட்கிறார்கள். முதலீட்டாளர்கள் இப்படி கேட்பது சரியா? என ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் இயக்குநர் சொக்கலிங்கம் பழனியப்பனிடம் கேட்டோம்.

''மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு வருமானம் என்பது நிர்வாகக் கட்டணம் மூலமாக கிடைக்கிறது. இந்தச் செலவினங்களுக்கான தொகை என்பது ஒவ்வொரு ஃபண்டுக்கும் வித்தியாசப்படும். அதாவது, லிக்விட் ஃபண்டுக்கு ஒருவிதமாகவும், ஈக்விட்டி ஃபண்டுக்கு ஒரு விதமாகவும் நிர்வாகக் கட்டணங்கள் இருக்கும். நிர்வகிக்கும் சொத்து மதிப்பு குறைவாக வைத்துள்ள மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்துக்கு குறைவான லாபம்தான் கிடைக்கும். அதாவது, ஒரு சிறிய மியூச்சுவல் ஃபண்டு நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 5 கோடி ரூபாய் என வைத்துக்கொள்வோம். அதனுடைய ஃபண்ட் நிர்வாகக் கட்டணம் 2% எனில், அதன் வருமானம் 10 லட்சம் ரூபாயாக இருக்கும். அதே 1,000 கோடி ரூபாயை நிர்வகிக்கிறது என்றால், அதனுடைய நிர்வாகச் செலவு என்பது அதிகபட்சம் 1.8% ஆகும். இப்படி பார்க்கும் போது 18 கோடி ரூபாய் அந்த நிறுவனத்துக்கு வருமானம் கிடைக்கும். ஆனால், இரண்டு நிறுவனங்களிலும் பெரும்பாலான செலவுகள் ஒரே மாதிரிதான் இருக்கும்.
இந்தத் தொகையில்தான் அந்த மியூச்சுவல் ஃபண்டு நிறுவனம் அனைத்துவகையான செலவுகளையும் செய்யவேண்டும். அவர்களின் மிகப் பெரிய செலவே ஊழியர்களின் சம்பளம்தான். சில நிறுவனங்கள் சின்னச் சின்ன செலவுகளைக் குறைத்து தங்களுடைய வருமானத்தை அதிகரிக்கும். அதாவது, முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்டு அறிக்கையை மெயிலில் அனுப்புவது. அதிகமாக பிசினஸ் இல்லாத ஊர்களுக்கு ஒருவரை மட்டும் விற்பனை மேலாளராக நியமிப்பது. இதனால் அந்த ஊரில் அலுவலகச் செலவு என்பது இருக்காது. அதேபோல, சில மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் தங்களுடைய ஃபண்டு மேனேஜர் குழுவை தலைமை அலுவலகத்திலே வைத்திருப்பது என பல சிக்கன நடவடிக்கைகளைச் செய்யும்.
மேலும், சில மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள், நிறுவனம் சார்ந்த தொகையை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைத்து அதன் மூலமாக வருமானத்தை ஈட்டும். இதுபோல லாபம் எல்லாம் பல ஆண்டுகளாக இயங்கிவரும் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களுக்கு மட்டும்தான் கிடைத்துள்ளது.

புதிய நிறுவனங்களுக்கு இப்படி லாபம் கிடைக்க வாய்ப்பில்லை. அதாவது, ஹெச்.டி.எஃப்.சி. மியூச்சுவல் ஃபண்டு, ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டு எல்லாம் ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆரம்ப காலத்தில் லாபம் என்பது பெரிய அளவில் இருந்திருக்காது. செலவுகள்தான் அதிகம் ஏற்பட்டிருக்கும். குறைந்தபட்சம் ஒரு மியூச்சுவல் ஃபண்டு நிறுவனம் ஆரம்பித்து 5, 6 ஆண்டுகள் கழித்து தான் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மேலும், கடந்த மூன்று வருடத்தில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்தான் குறைவான வருமானம் தந்திருக்கிறது. ஆனால், கடன் சார்ந்த ஃபண்டு நல்ல நிலையிலே இருந்து வந்தன. ஃபண்டின் என்.ஏ.வி. மதிப்பு உயர உயர மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களின் வருமானமும் உயரும். அதேபோல, ஃபண்டு நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கும் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து தரமுடியாது. ஏனெனில், ஏதாவது பிரச்னையால் நிறுவனங்களுக்கு நஷ்டம் வரும்போது அதையும் அந்த நிறுவனம்தானே ஏற்றுக் கொள்ளும். அப்படி இருக்க லாபத்தை மட்டும் பிரித்துத் தரவேண்டும் என்று எப்படி கேட்க முடியும்? என்றார்.

கடந்த வருடம் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களுக்கு செபி சில விதிமுறைகளை விதித்தது. இதுகுறித்து ஃபண்ட்ஸ் இந்தியா டாட் காமின் துணைத் தலைவர் ஸ்ரீகாந்த் மீனாட்சியிடம் கேட்டோம். ''நிர்வாகக் கட்டணத்தை T (Top) 15 நகரங்கள் எனவும், B (Beyond Top)15 நகரங்கள் என பிரித்துள்ளது செபி. T 15-ல் சென்னை, மும்பை போன்ற பெருநகரங்கள் அடங்கும். இந்நகரங்களில் குறைவான நிர்வாகக் கட்டணம் வசூலிக்க வேண்டும். B 15 நகரங்கள் என்பது வேலூர், விழுப்புரம் போன்ற நகரங்களைக் குறிக்கும். இதிலிருந்து வரும் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் அங்குள்ள ஏஜென்ட்களுக்கு அதிக கமிஷன் தரப்படுகிறது. இதன்மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிகரித்துள்ளது'' என்றார்.
ஆக, நிறுவனங்களுக்கு என்ன கிடைக்கிறது என்று பார்க்காமல், தங்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதைத்தான் முதலீட்டாளர்கள் பார்க்க வேண்டும்!
- இரா.ரூபாவதி.