Published:Updated:

கம்பெனி ஸ்கேன் - பஜாஜ் ஃபைனான்ஸ்!

கம்பெனி ஸ்கேன் - பஜாஜ் ஃபைனான்ஸ்!

##~##

புதிதாக வங்கித் தொடங்க உரிமம் கேட்டு விண்ணப்பித்திருக்கும் பல நிறுவனங்களில் பஜாஜ் குழுமமும் ஒன்று!

1987-ல் தொடங்கப்பட்டு, இன்று வரை முன்னணியில் இருக்கும் பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்டின் துணை நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட்டைத்தான் இந்த வார ஸ்கேனிங் பகுதியில் நாம் அலசப் போகிறோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆரம்பக் காலத்தில் பஜாஜ் ஆட்டோவின் தயாரிப்புகளான மூன்றுசக்கர மற்றும் இரண்டுசக்கர வாகனங்களுக்கு மட்டுமே கடன் உதவி செய்துவந்த இந்த நிறுவனம் சமீபகாலமாக வீட்டு உபயோகப் பொருட்கள், தனிநபர்க் கடன்கள், வீடு கட்டக் கடன், கட்டுமான நிறுவனங்களுக்கான கடன் என  எல்லாவிதமான கடன்களையும் தர ஆரம்பித்து ஒரு முழுமையான நிதி நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. பஜாஜ் குழுமத்தைச் சார்ந்த நிறுவனம் என்பதால் நிர்வாகத் திறமை மற்றும் நேர்மை குறித்துக் குறைவாக மதிப்பீடு செய்ய முடியாது.

தொழில் எப்படி?

வங்கிகளானாலும் சரி, வங்கியல்லாத நிதி நிறுவனங்களானாலும் சரி, நாட்டின் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்றாற்போல்தான் இந்த நிறுவனங்களின் லாபம் இருக்கும். தற்போதிருக்கும் மந்தமான பொருளாதாரச் சூழ்நிலையில் குறைந்த கடன்களே தரப்பட்டு வருகிறது. இந்த மந்தநிலை மாறி மீண்டும் உற்சாகத்துடன் பொருளாதாரம் செயல்பட ஆரம்பிக்கும்போது, முதலில் பயன்பெறப்போவது நிதி நிறுவனங்கள்தான் என்று சொல்லலாம்.

கம்பெனி ஸ்கேன் - பஜாஜ் ஃபைனான்ஸ்!

ஓரளவு நல்ல முதலீட்டைக் கொண்டிருக்கும் நிறுவனங்களே வங்கி சார்ந்த துறைகளில் வெற்றி பெறமுடியும். ஏனென்றால், கடன் தரக்கூடிய திறனே இந்த நிறுவனங்களின் லாபத்தை நிர்ணயிக்கும். முதலீட்டாளர்களிடம் இருந்து டெபாசிட்களைப் பெற்று கடன் தரலாம் என்றாலும், இதற்கும் கம்பெனியின் பங்கு முதலீடே அளவீடாக எடுத்துக்கொள்ளப்படுவதால் ஓரளவுக்கு நல்ல கேப்பிட்டலைக் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே பொருளாதார வளர்ச்சியில் பங்கெடுத்து லாபம் பார்க்க முடியும்.

அரசுடைமையாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் முழுவீச்சில் போட்டிப் போடும் தொழில் இது. எனவே, நிர்வாகத் திறனும், நீண்ட நாட்களாகச் செயல்பட்டுவரும் நிறுவனங்களுமே இந்தத் தொழிலில் தொடர்ந்து வெற்றிபெற முடியும்.

கம்பெனி எப்படி?

பஜாஜ் ஆட்டோவின் தயாரிப்பு களுக்குக் கடனுதவிச் செய்வதற் காகவென்றே நிறுவப்பட்ட நிறுவனம் இது. வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் 2008-க்குப் பிறகு தங்களுடைய கடன் போர்ட்ஃபோலியோவைச் சுருக்க ஆரம்பித்தன. அந்த இக்கட்டான நிலைமையிலும்கூட பஜாஜ் ஃபைனான்ஸ் கொஞ்சம் கொஞ்சமாகத் தனது கடன் போர்ட்ஃபோலியோவை விரிவாக்க ஆரம்பித்தது.

வாராக்கடன்களும் வட்டிவிகித மாறுதல்களும் இதுபோன்ற நிதி நிறுவனங்களின் செயல்பாட்டைச் சீர்குலைக்க வாய்ப்பிருக்கிறது. என்றாலும், பஜாஜ் ஃபைனான்ஸ் இதுபோன்ற நஷ்டங்களுக்காகத் தனது லாபத்தில் சட்டரீதியாகத் தேவையான அளவுக்கு ஒதுக்கீடுகளைச் செய்துகொண்டே வருவதால் பெரிய அளவில் பாதிப்பு வந்துவிட வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கலாம்.

மீண்டும் வேகமான பொருளாதார வளர்ச்சியைச் சந்திக்க வாய்ப்பிருக்கும் இந்தியாவில், புதிதாக வங்கித் தொடங்குவதற்கான உரிமம் கேட்டு 26 நிறுவனங்களே விண்ணப்பித்துள்ளன. இதில் பஜாஜ் குழுமமும் ஒன்று. இந்தக் குழுமத்துக்கு வங்கித் தொடங்குவதற்கான  உரிமம் கிடைத்தால் வியாபாரம் பெரிய அளவில் விரிவாக வாய்ப்பு இருக்கிறது.

கம்பெனி ஸ்கேன் - பஜாஜ் ஃபைனான்ஸ்!

வங்கிக்கான உரிமம் கிடைத்த சில ஆண்டுகளிலேயே உரிமம் பெற்ற நிறுவனங்களின் செயல்பாட்டிலும் லாபத்திலும் பெரிய மாறுதல்கள் நிச்சயமாக வந்துவிடாது என்றபோதிலும், ஒரு நீண்டகாலத்துக்கு முதலீடு செய்யும் முதலீட்டாளராக, வங்கிக்கான உரிமம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கும் குழுமங்களின் பங்குகளை நிச்சயமாக நாம் ஸ்கேன் செய்து சரியான சமயத்தில் முதலீடு செய்வதற்காகத் தெளிவு செய்து வைத்துக்கொள்ளலாம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

வங்கிக்கான உரிமம் கிடைப்பதில் சில சிக்கல்களும் இந்த நிறுவனத்துக்கு உண்டு. இதுவரை பஜாஜ் ஆட்டோவின் தயாரிப்புகளுக்கு மட்டுமே கடன் அளித்துவரும் இந்த நிறுவனம் வங்கிக்கான உரிமத்தைப் பெற்றால் எல்லா ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் கடன் தரவேண்டியிருக்கும் என்பதை நீங்கள் நினைவில்கொள்ள வேண்டும்.

ரிஸ்க்குகள் என்னென்ன?

வங்கிச் சார்ந்த துறைகளைப் பொறுத்தவரை, சட்டதிட்டங்கள் கடுமையாக மாறிக்கொண்டே இருக்கும். எதிர்காலத்தில் வரக்கூடிய சட்டதிட்டங்களையும் மனதில் வைத்தே தற்போதைய வியாபாரத்தை இவர்கள் மிகவும் கன்சர்வேட்டிவ் அப்ரோச்சுடன் எப்போதுமே செய்ய வேண்டியிருக்கும்.

கடுமையான கடன் வழங்கும் கொள்கைகளை வைத்திருந்தால் வியாபாரம் செய்யமுடியாது. அதே நேரம் சுலபமான கடன் தரும் கொள்கைகளைக் கொண்டிருந்தாலோ வாராக்கடன் அதிகமாகிவிடும். எனவே, இந்த இரண்டுக்கும் நடுவே சீராகச் சமன் செய்தே தொழிலை நடத்தவேண்டிய கட்டாயத்தில் இந்த நிறுவனம் இருக்கிறது.

கம்பெனி ஸ்கேன் - பஜாஜ் ஃபைனான்ஸ்!

அதேபோல், பொருளாதார மந்தநிலை சிறிதுகாலத்தில் மாறிவிடும் என்பது ஓர் எதிர்பார்ப்புதான். மந்தநிலை இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் தொடர்ந்தால், அதனால் ஏற்படும் வியாபாரத் தொய்வு நிலை லாபத்தைக் கணிசமாகக் குறைத்துவிடலாம். கடன் வழங்கும் தொழிலில் போட்டியும் அதிகமாகவே இருக்கிறது. எனவே, கடுமையான சட்டதிட்டங்களுக்கு நடுவே போட்டியையும் இந்த நிறுவனம் தொடர்ந்து எதிர்கொண்டு சமாளிக்க வேண்டியிருக்கும்.

சமீப காலத்தில் இந்த நிறுவனத்தின் புரமோட்டர்களின் ஷேர்கள் எதுவும் அடமானத்தில் இல்லை. எனவே, இதனால் ஏற்படும் விலை தடுமாற்றங்களுக்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்று நாம்

கம்பெனி ஸ்கேன் - பஜாஜ் ஃபைனான்ஸ்!

வைத்துக்கொள்ளலாம்.

ஏற்கெனவே சொன்னதைப்போல் சமீப காலத்தில்தான் தனி ஒரு கம்பெனியின் தயாரிப்புகளுக்குப் ஃபைனான்ஸ் செய்யும் நிறுவனம் என்ற நிலையிலிருந்து, எல்லாவகையான புராடக்ட்களையும் கொண்ட நிறுவனமாகக் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிகரமாக மாறிவந்துள்ளது இந்த நிறுவனம்.

இந்த மாறுதலுக்கான குணத்தையும் வேகத்தையும் தொடர்ந்து இன்னும் நீண்டநாட்களுக்குத் தன்னுள்ளே கொண்டே செயல்படவேண்டும். ஏதாவது ஒரு காரணத்தால் இந்த நிலையைத் தொடரமுடியாமல் போனால், இந்த நிறுவனத்தின் மதிப்பீடுகள் குறைய வாய்ப்புள்ளது.

பொருளாதார மேம்பாடு, வங்கி களுக்கான உரிமம் பெறுதல் என நிறைய எதிர்பார்ப்புகளுடனேயே நாம் இந்தப் பங்கை மனதில்கொள்ள வேண்டியுள்ளது. இருப்பினும் பழைய டிராக் ரெக்கார்டும், பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாகத் திறமையும்  வைத்துப் பார்க்கும்போது, நீண்டகால முதலீட்டுக்காக இந்த நிறுவனத்தின் பங்குகளை டிராக் செய்வதில் தவறேதும் இல்லை!

- நாணயம் ஸ்கேனர்

(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்கவேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)