Published:Updated:

கம்பெனி ஸ்கேன் - டிவிஎஸ் மோட்டார்!

கம்பெனி ஸ்கேன் - டிவிஎஸ் மோட்டார்!

இந்த வாரம் நாம் ஸ்கேன் செய்யப்போகும் கம்பெனி நம்ம ஊரு வண்டி என்று செல்லமாக விளம்பரம் செய்யப்பட்டு வந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தினைதான். ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனம் தனித்து இயங்க ஆரம்பிக்கும் வரையிலும் இந்தியாவில் மூன்றாவது பெரிய மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையைத் தக்கவைத்துக்கொண்டிருந்தது இந்த நிறுவனம்.

1980-ம் வருடம் டிவிஎஸ்50 மொபட்டை தயாரித்து விற்பதில் ஆரம்பித்த இந்த நிறுவனம், 1984-ம் ஆண்டு ஜப்பானிய சுஸ¨கி நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து 100 சிசி மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது. 2002-ம் ஆண்டு சுஸ¨கி நிறுவனம் தனியாகப் பிரிந்து சென்றது. சுஸ¨கி பிரிந்து சென்றபின்னரும்கூடத் தன்னந்தனியே நின்று தொழில்நுட்ப ரீதியாகப் பல சிக்கலான விஷயங்களையெல்லாம் வென்று இன்றுவரை போட்டியில் நிலைத்து நிற்கிறது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம். இதுவே இந்த நிறுவனத்தின் தனிச்சிறப்பு.

தொழில் எப்படி?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இருசக்கர வாகனத் தொழில் கடந்த பத்து ஆண்டுகளில் வேகமான முன்னேற்றத்தைச் சந்தித்த தொழில் என்பது அனைவருக்கும் தெரியும். தனிநபர் வருமானத்தின் அளவுக்கும் விற்பனைக்கும் நேரடித் தொடர்பு உள்ள ஒரு தொழில் இது. தனிநபர் வருமானம் அதிகரிக்க அதிகரிக்க வாகனங்களின் தேவையும் அதிகரிக்கும். தனிநபர் வருமானமோ, பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்றாற்போல் மாறுபடக்கூடியது. தற்போது நாடு கடந்துவருகிற பொருளாதாரச் சுணக்கநிலையை மனத்தில்கொள்ளாமல், நீண்ட நாள் அடிப்படையில் தொழில் எவ்வாறு போகும் என்று பார்த்தால் நல்லதொரு பிரகாசமான எதிர்காலமே இந்தத் தொழிலில் இருக்கிறது எனலாம்.

கம்பெனி ஸ்கேன்  -  டிவிஎஸ் மோட்டார்!

இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை நிரம்பி இருப்பது, நகரத்தை நோக்கி குடிபெயரும் மக்கள் கூட்டம் எனப் பல விஷயங்கள் இந்தத் துறைக்கு பாசிட்டிவ்வான விஷயமாக இருக்கின்றன.  இந்தத் துறையில் கியர்லெஸ் ஸ்கூட்டர் பிரிவு பெரிய விரிவாக்கத்துக்கான வாய்ப்பைத் தந்து கொண்டிருக்கிறது.

மெக்கானிக்கல் விஷயம் என்பதால், முதல்முதலாக இருசக்கர வாகனம் வாங்குபவர்களையும் தாண்டி, ஏற்கெனவே இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் பழைய வண்டியை மாற்றி புதிய வண்டி வாங்க நினைக்கும் போதும் வியாபாரத்துக்கான வாய்ப்பு இந்தத் துறையில் இருக்கவே செய்கிறது. தற்சமயம் ஏறக்குறைய 35% இருந்தபோதிலும், நீண்ட நாள் அடிப்படையில் இந்த வாகன மாறுதல் சந்தையின் பங்களிப்பு 50% வரையிலும் செல்லலாம் என்று எதிர்பார்க்கலாம்.

கம்பெனி எப்படி?

டிவிஎஸ்-ன் வியாபாரத்தைப் பொறுத்தவரை, விற்பனை எண்ணிக்கையை தென் இந்தியா மற்றும் வட இந்தியா என இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்க முடியும். தென் இந்தியாவில் டிவிஎஸ் மோட்டார் செய்யும் வியாபாரத்தின் அளவு, அதன் மொத்த விற்பனையில் ஏறக்குறைய 50 சதவிகிதத்தைத் தாண்டி இருக்கிறது.

கம்பெனி ஸ்கேன்  -  டிவிஎஸ் மோட்டார்!

இந்திய டூவீலர் சந்தையில் கியர்லெஸ் ஸ்கூட்டர்களின் விற்பனையில் ஏற்படும் வளர்ச்சி பைக்குகளைவிட ஏறக்குறைய 18% அதிகமாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜுபிடர் என்ற கியர்லெஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியதுதான் இந்த நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகம். புத்தம் புதிய வாகனமானாலும் இந்த வாகனத்தின் விற்பனை சற்றே சூடுபிடித்திருக்கிறது. அதிலும் தென் இந்தியா தவிர, மற்ற சந்தைகளிலும் ஜுபிடரின் விற்பனை நன்றாகவே உள்ளது. இதனால் ஸ்கூட்டர் சந்தையில் டிவிஎஸ்-ன் பங்களிப்பு 21.3 சதவிகிதத்திலிருந்து 23.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

மொபட் வாகனங்களின் விற்பனை வளர்ச்சி/டிமாண்ட் ஏறக்குறைய 15% வரையிலான அளவில் உள்ளது. வேகமாக வளர்ந்துவரும் வட இந்திய வியாபாரத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஏறக்குறைய 20 சதவிகித அளவு விற்பனை வளர்ச்சி நடந்துவருகிறது. மொபட் சந்தையில் பங்கெடுக்கும் ஒரே நிறுவனம் டிவிஎஸ் என்பதால் இந்த செக்மென்டில் டிவிஎஸ் மோட்டார் கணிசமானதொரு லாபத்தைப் பார்த்துவருகிறது.

தென் இந்தியாவில் மொபட் விற்பனை பெருமளவு குறைந்திருப்பது மட்டுமே சற்று கவலை தருவதாக இருக்கிறது. இருப்பினும் மொபட்களின் விற்பனை மீண்டும் உயர ஆரம்பிக்கும்போது அதைத் தயாரித்து விற்கும் ஒரே நிறுவனமான டிவிஎஸ் நல்ல லாபம் பார்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.

என்ன இருந்தாலும் பொருளாதாரத்தையட்டிய வியாபாரமாயிற்றே என்று நினைத்து ஆராய்ந்தால், பிப்ரவரியுடன் முடிவடைந்த ஐந்து மாத காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் விற்பனை வளர்ச்சி நன்றாகவே அதிகரித்து வருகிறது.

எதிர்காலத் திட்டம் எனப் பார்த்தால், டிவிஎஸ் மோட்டார் அடுத்த 12 - 18 மாதங்களில் புதிய பல மாடல்களை அறிமுகப்படுத்தவும் வாய்ப்புள்ளதைப்போலவே தெரிகிறது. அடுத்து வெளிவர இருக்கும் 110 சிசி இன்ஜின் கெப்பாசிட்டி உள்ள ஸ்கூட்டி செஸ்ட் என்ற மாடலும் நல்ல விற்பனை அளவினை எட்டும் என்றே எதிர்பார்க்கலாம். இதுதவிர, இரண்டு எக்ஸிக்யூட்டிவ் அல்லாதவர்கள் ஓட்டும் (ஸ்போர்ட்ஸ் மாடல் போன்ற) பைக்குகளையும், டீசலில் ஓடும் ஆட்டோ ரிக்ஷாவையும் எதிர்வரும் காலத்தில் அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கலாம்.

இருசக்கர வாகன விற்பனைக்கு மிக மிக முக்கியமான விஷயம், டீலர் நெட்வொர்க். பட்டிதொட்டியெல்லாம் டீலர்கள் இருந்தால் மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும். இந்திய சந்தையில் ஹீரோ மோட்டோ (900) கம்பெனிக்கு அடுத்தபடியாக டிவிஎஸ் மோட்டாரே (845) அதிக அளவிலான டீலர்களைக் கொண்டுள்ளது.

மேனேஜ்மென்ட் எப்படி?

மோட்டார் துறையில் பல ஆண்டுகால அனுபவத்தைக் கொண்ட கம்பெனி இது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில், மேனேஜ்மென்ட் ஏறக்குறைய 55 சதவிகிதத்துக்கும் மேலான பங்குகளைத் தன்வசம் வைத்துக்கொண்டுள்ளது எதிர்காலத்தில் இந்தத் தொழிலுக்கு இருக்கப்போகும் தேவையையே காட்டுகிறது.

ரிஸ்க் எதுவும் உண்டா?

சில ஆண்டுகளுக்குமுன் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மாடல்களின் எண்ணிக்கையைக் குறைவாகவே கொண்டிருந்தது. வேகமாக வளரும் இருசக்கர வாகன சந்தையில் நிறைய மாடல்கள் இருப்பதே அதிக விற்பனைக்கு வழிவகுப்பதாக இருந்துவருகிறது. தற்போது இந்தக் குறையைப்போக்கி ஒவ்வொரு காலாண்டிலும் புதிய மாடல்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளது டிவிஎஸ் மோட்டார். மேலும், பொருளாதார ஓட்டமே டிவிஎஸ் மோட்டார் வியாபாரத்தின் அளவினை நிர்ணயிப்பதாக அமையும். எனவே, தேர்தல் முடிந்தபின் பொருளாதாரச் சுணக்கம் தீர்ந்தபாடில்லை என்கிற நிலை உருவானால், டிவிஎஸ் மோட்டார் பெரிய அளவில் பலன்பெற முடியாது.

இவ்வளவு சிறப்புகளையும்கொண்ட டிவிஎஸ் மோட்டார் பங்குகளை, முதலீட்டாளர்கள் மூன்று முதல் ஐந்து வருடங்கள் வரையிலான முதலீட்டுக்காக ஓர் அசாதாரண விலை இறக்கத்தினை இந்தப் பங்கு சந்திக்கும்போது வாங்கிப்போடலாம்.

- நாணயம் ஸ்கேனர்.

(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்கவேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)