Published:Updated:

கம்பெனி ஸ்கேன் : ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்!

கம்பெனி ஸ்கேன் : ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்!

கம்பெனி ஸ்கேன் : ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்!

கம்பெனி ஸ்கேன் : ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்!

Published:Updated:

இந்த வாரம் நாம் ஸ்கேன் செய்யப்போகும் கம்பெனி 2000 வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டதும் ரெப்கோ பேங்கின் துணை நிறுவனமுமாகிய ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸைத்தான். வீட்டுக் கடன் தருவதை முழுமுதற் தொழிலாகக் கொண்டிருக்கும் நிறுவனம் இது.

தொழில் எப்படி?

இந்தியாவின் மக்கள்தொகைக்கும் வீட்டுவசதிக்கும் இடையே உள்ள இடைவெளிதான் இந்தத் தொழிலின்  மொத்த மார்க்கெட். ஆனாலும், பப்ளிக் செக்டார் வங்கிகள், ஹெச்டிஎஃப்சி போன்ற தனியார் கடன் நிறுவனங்கள் எனப் பல நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு கடனை வழங்கும் தொழிலாயிற்றே என முதலீட்டாளர்கள் ஆச்சர்யப்படலாம். இந்த இடத்தில்தான் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸின் தனித்துவத்தை நாம் பார்க்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரசுப் பணியில் இருப்பவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் எனப் பல்வேறுவிதமான, ஓரளவுக்கு ஸ்திரமான வருமானம் உள்ளவர் களுக்குக் கடன் தரவே இந்த நிறுவனத்தின் போட்டியாளர்கள் முன்வருவார்கள். அன்றாட வேலை பார்த்து சம்பாதிப்பவராக, சிறுதொழில் புரிந்து சம்பாதிப்பவராக சாமான்யனாக இருக்கும் மனிதர்களுக்குக் கடன் தருவதற்குப் பெரும்பாலான நிறுவனங்கள் முன்வருவதில்லை. கடன் தருவதில் போதிய அளவு அனுபவமின்மை, சிறிய ஊர்களில் இந்த நிறுவனங்கள் தொழில் செயல்படுவதில்லை என்பதே இதற்கு காரணம்.

கம்பெனி ஸ்கேன் : ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்!

இதுபோன்ற சீரான/நிலையான வருமானம் இல்லாதவர்களுக்கு முன்னுரிமை அளித்து கடன் அளிப்பதில் முன்னணி நிறுவனமாக இருப்பதுதான் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம். அரசாங்கத்தின் வேலைவாய்ப்புத் திட்டங்கள், உணவு தானிய விலையேற்றம், சாலைப் போக்குவரத்து வசதி அதிகரித்தல் போன்ற விஷயங்களினால் இது போன்ற சிற்றூர்களில் பணப்புழக்கமும் அதிகரித்து அதனால் வியாபார அளவும் அதிகரித்துக்கொண்டேபோகிறது. இந்தவிதமான வேகமான வளர்ச்சி சுயதொழில் செய்பவர்களுக்கும், அன்றாட வேலைவாய்ப்புகளில் இருப்பவர்களுக்கும் வீடு என்ற அத்தியாவசியத் தேவையை உண்டாக்குகிறது.

என்னதான் இருந்தாலும், கடன் வாங்குபவர்களுக்கு நிரந்தர வருமானம் இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம். நேரடியாகக் கடன் வாங்குபவர்களின் பின்புலத்தைத் தெரிந்துகொள்வதன் மூலமும், ஏஜென்ட்கள் இல்லாமல் நேரடியாக பிராஞ்சுகளின் மூலம் கடன் தொகையை வழங்குவதாலும் ஒவ்வொரு கடனாளியைப் பற்றியும் விவரமாகப் புரிந்துகொண்டு கடன் வழங்கவேண்டியது இந்தத் தொழிலில் அவசியமாகிறது.

  கம்பெனி எப்படி?

நிரந்தர வருமானமில்லாத மற்றும் சுயதொழில் செய்துவருபவர்களுக்குக் கடனளித்தல் என்பதில் கணிசமான தொரு அனுபவத்தைப் பெற்றிருக்கும் இந்த நிறுவனம், இந்தத் தொழிலுக்குத் தேவையான அத்தனை உத்திகளையும் சரிவர கடைப்பிடிக்கிறது எனலாம். குறைந்த செலவில் கிளைகளை நிறுவுவதிலும் சரி, ஏஜென்ட்கள் இல்லாமல் நேரடியாகக் கடனாளிகளைக் கண்டறிந்து கடன் வழங்குவதிலும் சரி, சரியானதொரு இடத்தில் கிளையை நிறுவி நிறைய சிற்றூர்களுக்குத் தனது சர்வீஸை வழங்குவதிலும் சரி ரெப்கோ ஃபைனான்ஸ் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.

கம்பெனி ஸ்கேன் : ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்!

இந்தவகை வீட்டுக் கடன் வழங்குவதில் ரெப்கோ ஃபைனான்ஸ் வேகமாகப் பெற்றுவரும் அனுபவமே இந்தத் தொழிலில் நீண்டகால அடிப்படையில் இந்த நிறுவனம் மிளிரும் என்பதை உறுதிசெய்வதாக இருக்கிறது. குறைந்த வட்டியில் கிடைக்கும் பணத்தை சந்தை நிர்ணயிப்பதைவிட சற்றே அதிக வட்டிக்குத் தருவதன் மூலமும், நிர்வாகச் செலவை மிகவும் குறைவாகக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலமும்  ஏறக்குறைய 3.5 சதவிகித அளவுக்கு  நிகர வட்டியைத் தனது லாப சம்பாத்தியமாகக் கொண்டுள்ளது ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்.

முதலீட்டாளர்கள் மனத்தில் தோன்றும் மற்றுமொரு கவலையாகிய வாராக்கடனை ஆராய்ந்தால், ஆரம்ப காலத்தில் இருந்தே வாராக்கடனாக எழுதப்பட்ட தொகை கிட்டத்தட்ட 0.08 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணம், கடன் தொகைக்கும் சொத்து மதிப்புக்கும் இடையே உள்ள கணிசமான இடைவெளியேயாகும். வாராக்கடன் பிரச்னை வங்கிகளை ஆட்டிப்படைக்கும் காலகட்டத்தில் இப்படி தெளிவான ஒரு பிசினஸ் மாடலில் இருப்பது ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸின் தனிச் சிறப்பு எனலாம்.

தமிழகத்தில் ஏறக்குறைய 52 சதவிகித பிராஞ்சுகளையும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் முறையே 15 சதவிகித பிராஞ்சுகளையும், ஏனைய பிராஞ்சுகளை கேரளா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்ட்ராவிலும் கொண்டுள்ளது இந்த நிறுவனம். தமிழகத்தில் 58 இடங்களில் பிராஞ்சுகளுடன் 218 தாலுகாக்களில் வியாபாரம் செய்வதன் மூலம் மொத்த கடன் வியாபாரத்தில் தமிழ்நாடு கிட்டத்தட்ட 64 சதவிகித பங்களிப்பைத் தருகிறது. வருடத்துக்கு 15 பிராஞ்சுகள் எனத் தன்னுடைய விரிவாக்கத்துக்கான திட்டத்தையும் தீட்டிவைத்துள்ளது இந்த நிறுவனம். வங்கித் துறை மற்றும் நிர்வாகத்தில் அனுபவமிக்க நபர்களை வைத்து இந்த நிறுவனம் நிர்வாகம் செய்யப்படுகிறது.

கம்பெனி ஸ்கேன் : ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்!

  ரிஸ்க் ஏதும் உண்டா?

வங்கிசாரா துறையில் சட்டரீதியான மாறுதல்கள் எதுவும் கொண்டுவரப்பட்டால் இந்த நிறுவனமும் அதனால் பாதிப்படையலாம். பொதுவாக, வீட்டுக் கடன் என்பது பொருளாதார ஓட்டத்தைப் பொறுத்தே பெறப்படுவது. ஏதாவதொரு காரணத்தால் பெரிய அளவிலான பொருளாதாரச் சுணக்கம் ஏற்பட்டால் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது.

  ஏன் முதலீட்டுக்காகக் கண்காணிக்கலாம்?

இந்த நிறுவனத்தின் கிளைகள் அனைத்தும் பெரிய நகரங்களைவிட்டு வெளியேயும், மத்திய மற்றும் சிறு நகரங்களிலுமே இருக்கிறது. மத்திய மற்றும் சிறு நகரங்களில் பெரும்பான்மையினர் சுயதொழில் செய்பவராகவே இருக்கின்றனர். இதனால் பிசினஸுக்குப் பஞ்சமில்லை எனலாம். இந்தவகை ஊர்கள் பெரிய ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களால் கவனிக்கப்படுவதில்லை. இதனால் போட்டி ஓரளவுக்கு குறைவாகவே இருக்கிறது.

இந்த நிறுவனம் தந்துள்ள மொத்த வீட்டுக் கடனில் ஏறக்குறைய 54%, சுயதொழில் செய்பவர்களுக்கும், 46%  சம்பளதாரர்களுக்கும் தரப்பட்டுள்ளது. நேரடியாகக் கடன் பெறுபவரை அணுகுவதால் விளம்பரச் செலவும் பெரிய அளவில் அதிகரிப்பதில்லை. ஒவ்வொரு கிளையிலும் மூன்று அல்லது நான்கு பேரே பணியில் அமர்த்தப்பட்டிருப்பதால் செலவினங் களும் மிகவும் குறைவு எனலாம்.

ஏற்கெனவே சொன்னதைப்போல் வாராக்கடனை தவிர்ப்பதற்கான ரிஸ்க் மேனேஜ்மென்டிலும் இந்த நிறுவனம் தலைசிறந்ததாக இருக்கிறது. கடன் வழங்குவதற்கான தகுதி பரிசீலனை, இன்டர்னல் ஆடிட்கள், பிராஞ்ச் ஆடிட்கள் என நல்லதொரு நிர்வாக இயந்திரத்தைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.  கடந்த வருடத்தில் ஏறக்குறைய 2 சதவிகித அளவே என்பிஏ அளவைக்கொண்டிருந்ததே இதற்குச் சான்று.

வீட்டுவசதிக் கடன் வழங்கும் நிறுவனத்துக்குத் தொடர்ந்து பணம் தேவைப்பட்டுக்கொண்டேயிருக்கும். வங்கிகள், நேஷனல் ஹவுஸிங் வங்கி மற்றும் இந்த நிறுவனத்தின் புரமோட்டரான ரெப்கோ வங்கி யிலிருந்தும் கடன் தொடர்ந்து இந்த நிறுவனத்துக்குத் தங்குதடையின்றிக் கிடைக்க வாய்ப்புள்ளது எனலாம். கேப்பிட்டல் அடிக்குவசி என்பதும் சரியான விகிதத்தில் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.

சவாலான தொழிலில் கண்ணும் கருத்துமாகத் தொழில் செய்துவரும் இந்த நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளர்கள் சந்தை இறங்கும்போது மூன்று ஆண்டுகால முதலீட்டுக்காக வாங்கிப்போடலாம்.

- நாணயம் ஸ்கேனர்.

(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்கவேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism